o என்னுடைய சமுதாயத்தில் 70.000 பேர் கேள்விக் கணக்கின்றி சொர்க்கத்தில் நுழைவார்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் யார்? என (நபித்தோழர்கள்) கேட்டனர். அதற்கவர்கள், அவர்கள் பிறரிடம் ஓதிப் பார்க்கச் செல்லாதவர்கள், சகுனம் பார்க்காதவர்கள், நெருப்பினால் கூடிட்டு மருத்தும் பார்க்கச் செல்லாதவர்கள், தங்களின் இரட்சகனின் மீதே தவக்குல் வைத்திருப்பவர்கள் என்றார்கள். (அறிவிப்பவர் : இப்ரான் இப்னு ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரீ, முஸ்லிம் 321)
o சொர்க்கமும் நரகமும் உரையாடிக் கொண்டன. ஆணவக்காரர்களும் பெருமையடித்துக் கொண்டிருந்தவர்களும் என்னிடத்தில் நுழைவார்கள் என்று நரகம் கூறியது. பலவீனர்களும் ஏழைகளும் என்னிடத்தில் நுழைவார்கள் என்று சொர்க்கம் கூறியது. அப்போது, நீ என்னுடைய தண்டனையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் தண்டனை வழங்குவேன்! நீ என்னுடைய கிருபையாவாய்! நான் நாடியவர்களுக்கு உன் மூலம் கிருபை செய்வேன்! மேலும் நீங்கள் இருவரும் -மக்களால்- நிரப்பப்பட்டு விடுவீர்கள்! என்று நரகத்திற்கும் சொர்க்கத்திற்கும் அல்லாஹ் கூறியதாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரீ, முஸ்லிம் 5081)
o சொர்க்கவாதிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? (உடலாலும் பொருளாலும்) பலவீனமானவர், அதனால் சமுதாயத்தில் புறக்கணிக்கப்பட்டவர் ஒவ்வொருவரும் சொர்க்கவாதிகளே! அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்தால் அதனை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். நரகவாதிகளை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? கடின மனம் கொண்ட, பருமனான உடலுடன் ஆணவத்துடன் நடக்கும், பெருமை பிடித்த ஒவ்வொருவனும் நரகவாதியே! என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : ஹாரிஸா இப்னு வஹப் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : புகாரீ 4537, முஸ்லிம்)
o முஸ்லிம் சமுதாயக் கூட்டமைப்பைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிவினையை விட்டும் உங்களை நான் எச்சரிக்கை செய்கின்றேன்! தனியாக இருப்பவனிடம் நிச்சயமாக ஷைத்தான் இருக்கின்றான், அவன் இருவராக இருப்பவர்களை விட்டும் வெகுதூரம் சென்று விடுகிறான். எவர் சொர்க்கத்தில் நடுப்பகுதியில் இருக்க விரும்புகிறாரோ அவர் முஸ்லிம் சமுதாய ஜமாஅத்தை (முஸ்லிம் ஆட்சித் தலைமையை)ப் பற்றிப் பிடித்துக் கொள்ளட்டும்! என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதீ 2091)
o உடமையை பாதுகாப்பதற்காக (போரிட்டு) அநீதமாக கொலை செய்யப்பட்டவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : நஸாயீ 4018) தன் உடமையைக் காப்பதற்காக -போரிட்டு- கொலை செய்யப்பட்டவர் ஷஹீத் (தியாகி) ஆவார் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ 2300, முஸ்லிம்)
o மக்களிடம் எதனையும் (யாசகம்) கேட்கமாட்டேன் என எனக்கு உத்திரவாதம் தருபவர் யார்? அவருக்கு சொர்க்கத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள். உடனே ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நான்! என்று கூறினார்கள். அவர்கள் எவரிடமும் எந்த உதவியும் கேட்காதவராக இருந்தார்கள். (அறிவிப்பவர் : ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : அபூதாவூத் 1400, அஹ்மத், நஸாயீ)
o உரிமையிருந்தும் தர்க்கம் செய்வதை விட்டுவிட்டவனுக்கு சொர்க்கத்தின் ஓரத்தில் ஒரு வீட்டை பெற்றுத் தரவும், கேலியாகக் கூட பொய் பேசாதவனுக்கு சொர்க்கத்தின் நடுப்பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும,; நற்குணம் உடையவனுக்கு சொர்க்கத்தின் உயர்ந்த பகுதியில் ஒரு வீட்டைப் பெற்றுத் தரவும் நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் 4167)