o மறுமை நாளில் உங்களுடைய தந்தையின் பெயருடன் உங்ளது பெயரால் நீங்கள் அழைக்கப்படுவீர்கள். ஆகையால் உங்களது பெயர்களை அழகுபடுத்திக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அபூ தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அஹ்மத் 20704)
o ‘(இம்மையில் செல்வம்) அதிகம் உள்ளவர்களே மறுமை நாளில் (நற்பலன்) குறைந்தவர்கள் ஆவர்; ஒரு சிலரைத் தவிர, அவர்களுக்கு அல்லாஹ் செல்வத்தை வழங்கினான். அதை அவர்கள் தம் வலப் பக்கமும் இடப் பக்கமும் தம் முன் பக்கமும் பின் பக்கமும் வாரி வழங்கி அச்செல்வத்தால் நன்மை புரிகிறார்கள். (இவர்களைத் தவிர)’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூதர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி (நீண்ட ஹதீஸின் ஒரு பகுதி).
o “ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவரின் அந்தஸ்துகளை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வசாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்” என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹ¤ரைரா ரளியல்லாஹு, அன்ஹு ஆதாரம் : புகாரி)
o “(ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் (பின்வருமாறு) கூறினார்கள்: அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் (அவை இன்னின்னவை என நிர்ணயித்து) எழுதிவிட்டான். பிறகு அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்யவேண்டும் என (மனத்தில்) எண்ணிவிட்டாலே அதைச் செயல்படுத்தாவிட்டாலும் அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால், அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழு நூறு மடங்காக, இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான். ஆனால் ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி, (அல்லாஹ்வுக்கு அஞ்சி) அதைச் செய்யாமல் கைவிட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ, அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான்” (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி)
o ‘தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘தம் இரண்டு கைகளால் உழைத்துத் தாமும் பயனடைவார்; தர்மம் செய்(து பிறரையும் பயனடையச் செய்)வார்’ என்று கூறினார்கள். மக்கள், ‘அவருக்கு (உழைக்க உடலில்) தெம்பு இல்லையானால்’ அல்லது ‘அதை அவர் செய்யாவிட்டால்’ (என்ன செய்வது?)’ என்று கேட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘பாதிக்கப்பட்ட தேவையாளிக்கு அவர் உதவட்டும்’ என்றார்கள். மக்கள், ‘(இதை இயலாமையாலோ சோம்பலினாலோ) அவர் செய்யவில்லையானால் (என்ன செய்வது?)’ என்று கேட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அப்போது அவர் ‘நல்லதை’ அல்லது நற்செயலை'(ச் செய்யும்படி பிறரை) அவர் ஏவட்டும்’ என்றார்கள். ‘(இதையும்) அவர் செய்யாவிட்டால்?’ என்று கேட்டதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அவர் தீங்கு செய்யாமல் இருக்கட்டும். அதுவே அவருக்கு தர்மம் ஆகும்’ என்றார்கள். (அறிவிப்பவர் : அபூ மூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி)