AN EXCELLENT ARTICLE
உடலுறவு – மனித வாழ்வின் ஆரம்பப் புள்ளி (3)
அறிவுப்பூர்வமான கூடல்
[ உங்களது உடலுறவின் இயல்பு, உங்கள் இருவருக்கும் இடையிலான உறவின் உண்மையான கண்ணாடிப் பிரதிபலிப்பாக விளங்குகிறது. பரஸ்பரக் கருத்துப் பரிமாற்றம் மாதிரி உள்வாங்கிக் கொள்வதுடன் கொடுக்கவும் செய்கிற ஒரு செயல்தான் உடலுறவு.
“குழந்தைங்க தூங்கிட்டாங்க, ம்… திரும்பிப் படு!” என்ற முன்னுரையுடன் துவங்க வேண்டிய செயல் அல்ல இந்த உடலுறவு. அன்புப் பின்னணியில் எப்போதாவது கணவன் – மனைவியின் உடல்களும் மனமும் ஒன்றிணையும் நிமிடங்கள் அல்லவா அது?
உங்களுக்கு சாக்லெட் ஒன்று கிடைத்தால், அதை உடனே வாயில் போட்டு மென்று தின்று விடுவீர்களா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக சப்பி… ருசித்துச் சாப்பிடுவீர்களா? உங்கள் மனைவியை அல்லது கணவரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைத்து உணர வேண்டும்.
விருப்பமான காரியத்தை, விருப்பப்படி செயல்படுத்திக் கொள்ளும் சுதந்திரத்தை மனைவி கணவனுக்கும், கணவன் மனைவிக்கும் வழங்கும்போதுதான் தாம்பத்யம் இனிக்கும்.
நீங்கள் ஆணாக இருந்தால் பெண்ணை(மனைவியை)ப் படியுங்கள். பெண்ணாக இருந்தால் ஆணை(கணவனை)ப் படியுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள். காலையில் தொடங்கும் அன்பு வெளிப்பாடுகளின் இறுதிப் பயனான உடலுறவு, கணவன் மனைவிக்கு முழுமையான திருப்தியை அளிக்கும்.
கல்விக்கும் கலவிக்கும் எழுத்தில் ஒரு புள்ளிதான் வித்தியாசம். ஆனால் நிச்சயம் தொடர்புண்டு. கலவியைக்குறித்த கல்வியறிவு இல்லையெனில் “சிறந்த இல்லற ஜோடி” எனும் பட்டம் வாங்குவது எப்படி?]
உடலுறவு – மனித வாழ்வின் ஆரம்பப் புள்ளி (3)
அறிவுப்பூர்வமான கூடல்
அன்பை வளர்க்க பரஸ்பரக் கருத்துப் பரிமாற்றம் பயனுள்ளதாக நடைபெற வேண்டும். கணவன் மனைவி இருவருக்கிடையிலான நட்புறவை ஊட்டம் மிக்கதாக மாறவும் பயன்படக் கூடிய மற்றொரு வழி ஆண் – பெண் இணைந்து செயல்படும் உடலுறவு. உங்களது உடலுறவின் தன்மை, உங்களுக்கிடையிலான உறவைப் பிரதிபலிக்கும் கண்ணாடி எனலாம். நுட்பமாக ஊன்றிக்கவனித்தால், சாதாரண உறவின் குறைகளைக் கண்டறிந்து சீர்படுத்த இது உதவவும் செய்யும்.
உங்களுக்கு சாக்லெட் ஒன்று கிடைத்தால், அதை உடனே வாயில் போட்டு மென்று தின்று விடுவீர்களா? அல்லது கொஞ்சம் கொஞ்சமாக சப்பி… ருசித்துச் சாப்பிடுவீர்களா? உங்கள் மனைவியை அல்லது கணவரைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சுவைத்து உணர வேண்டும்.
இதைக் கூறும்போது உங்கள் மனத்தில் ஒரு குறும்புச் சிந்தனை ஏற்பட்டிருக்கும். ஆனால், வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. “நான் அவளைச் சுவைப்பதுண்டு. அவள் உதடுகளில் வழங்கும் முத்தங்களின் நினைவுகள்தான் உங்கள் மனதில் எழுந்தது. பரவாயில்லை. அது ஒரு வகையில் அதிகப்படியான – உடல் ரீதியான ருசியறிதல் தான். அதுவும் தேவைதான். ஆனால், மனைவியின் உதடுகளினூடாக – கணவனின் உதடுகளினூடாக இதயத்துக்குள் நீங்கள் ஒருவரையொருவர் ஊடுருவ முடியவில்லையெனில், வாழ்க்கைத் துணைவர் அல்லது வாழ்க்கைத் துணைவியை சரியாகச் சுவைத்து அறிவதில் நீங்கள் தோல்வியடைந்து விட்டீர்கள் என்பதே பொருள்.
உதடுகளை வெறுமனே ஒட்ட வைத்துவிட்டு, “தொட்டு விட்டேன் நான்” என்பது வெறும் குழந்தைத்தனமான விளையாட்டுதான். ஆத்மார்த்தமான முத்தமிடல் என்றொரு வகையுண்டு. அதில் உங்களது நாக்குகள் பரஸ்பரம் சந்தித்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கையின் பங்காளியின் வாய்க்குள் உங்களது நாக்கு எவ்வளவு தூரம் செல்ல முடியுமோ… அவ்வளவு தூரம் சென்று ஒரு விசாரணை நடத்த வேண்டும். ஆத்மாவைக் கண்டுபிடிப்பதற்காக ஆழத்தில் இறங்கிச் செல்லும் தீவிரமான முயற்சியாக அது இருக்க வேண்டும்.
ஆழத்தில்… இன்னும் ஆழத்தில்! அப்போது நீங்கள் உணரும் ஆத்மார்த்தமான சுகத்துக்கு, சன்னமான தசைத் துணுக்குகள் பட்டு உரசுவதால் அதிகப்படியான சுகம் கிடைக்கும். மனைவி கணவனதும், கணவன் மனைவியினதும் கீழுதடுகளை கவர்ந்திழுக்க ஒரு போட்டி நடத்தினால், அது மேலும் சுவாரஸ்யமானதாக இருக்கும். மனைவியின் தனித்தன்மைகளையும், சிறப்புகளையும் வாசித்தறிவதற்காக கணவனும், கணவனின் அதே விஷயங்களை வாசித்து அறிவதற்காக மனைவியும் இதுபோல் ஆழத்துக்குப் பயணப்பட்டு அன்புடன் போட்டி போட்டால், அது எப்படிப்பட்டதாக இருக்கும்?
நிச்சயமாக வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். வாழ்வதற்குத் தகுந்ததுதான் இந்த வாழ்க்கை என்று தோன்றும்.
மன ரீதியிலான மற்றும் வெளிப்படையான எத்தனையோ காரணங்கள் ஆத்மார்த்தமான முத்தங்களை ரசித்துச் சுவைப்பதிலிருந்து நம்மைத் தடுக்கும். உடலுறவில் ஈடுபடும் தம்பதிகள் உடற்தூய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும். வாயை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் முத்தத்திற்கு அது இடைஞ்சல்.
ஆண் – பெண் இணைப்புக்கான உடலுறவுச் செயலின்போது மனைவியின் உள்ளத்துக்குள் – வாழ்க்கைக்குள் நுழைய முற்படுகிறோம் என்ற உணர்வு கணவருக்கு ஏற்பட வேண்டும். அதுபோல கணவனை, தான் உட்கொள்கிறோம் என்ற உணர்வு மனைவிக்கு ஏற்பட வேண்டும். உடலுறவின்போது நிகழும் ஒவ்வோர் அசைவும் “உள்வாங்குதல்” மற்றும் “வழங்குதலின்” அடையாளமென்பதை தம்பதிகள் உணர வேண்டும். இந்த நடைமுறை அன்றாட வாழ்க்கையிலும் தேவை.
இது திருப்திகரமாக நடைபேற வேண்டுமென்றால், வெறும் உடல் ரீதியான தொடர்பு மட்டும் போதாது. மனோவியல் ரீதியான, அறிவுப்பூர்வமான, கொடுக்கல் – வாங்கலும் நிகழ வேண்டும். உடலுறவு கொள்ளும் வேட்கை, கணவன் – மனைவியிடம் படுக்கப்போகும்போது மட்டும் எழுந்தால் போதாது. பகல் முழுவதும் சண்டையும் சச்சரவுமாகக் கழித்துவிட்டு, பாய் விரிக்கும்போது தலையைச் சொறிந்து கொண்டு மெதுவாக நெருங்கி வரும் கணவரை, பெரும்பாலான மனைவியர் வெறுக்கவே செய்கின்றனர்.
“என்னை நேசிக்காத, என்னிடம் அன்பை வெளிக்காட்டாத ஒருவனுடன் இந்த விஷயத்தில் ஒத்துழைக்க என்னல் முடியாது. அவருக்கு வேண்டுமானல் அது ஓர் இன்பமாக இருக்கலாம். ஆனால் எனக்கு எப்படி இருக்கிறது தெரியுமா? என் உடம்பின்மீது பாம்பு ஒன்று ஊர்ந்து போவது மாதிரியான அருவருப்புதான். அதிருப்திதான்!” தனது தாம்பத்ய வாழ்க்கை குறித்த மனைவி ஒருவரின் வார்த்தைகள்தான் இவை.
“குழந்தைங்க தூங்கிட்டாங்க, ம்… திரும்பிப் படு!” என்ற முன்னுரையுடன் துவங்க வேண்டிய செயல் அல்ல இந்த உடலுறவு.
ஒன்றாகப் படுத்து உறங்கும் தம்பதி காலையில் கண் விழிக்கும் வேளையிலிருந்து அவ்வப்போது அதைக் குறித்து யோசிக்க வேண்டும். இதென்ன கூத்து… அப்படியானால் பகல் வேளையில் வேறு எந்த வேலையும் செய்ய நேரம் கிடைக்காதே!” என்றுதானே கேட்கிறீர்கள்?
இது அப்படியல்ல. காலையில் கண் விழிக்கும்போது நெற்றி அல்லது பரஸ்பரம் முத்தமிட்டுக் கொள்ள முடியாதா? இது ஒரு நல்ல தொடக்கம். காலையில் மனைவி காபியுடன் வரும்போது, அவள் கையை ஒரு தடவை மென்மையாக பிடித்து இழுக்கலாம் தானே! இப்படி நம்மால் முடிந்த போதெல்லாம் பரஸ்பரம் தொட்டுக் கொள்வதை வழக்கமாக்கிக்கொண்டால் போதும், அன்பு தானாக வெளிப்படத் தொடங்கும்.
பெண்களில் பெரும்பாலானவர்களுக்கு உடலுறவில் ஈடுபடுவதற்கு முன்பு நிறையப் பேசுவது பிடிக்கும். மனம் திறந்து பேசுவது என்பது இதில் ஒரு பகுதிதான். எத்தனையோ விஷயங்களை மனம் திறந்து பேசுபவர்கள்தான் வாழ்க்கைத் துணைவர் அல்லது வாழ்க்கைத்துணைவி. அவளுக்கு அல்லது அவருக்கு தன் துணையிடம் மட்டுமே சொல்வதற்குரிய சில விஷயங்கள் உண்டு. அவற்றைச் சொல்லியே தீர வேண்டும். பெரிய விஷயங்களாக கூட அது இல்லாமலிருக்கலாம். ”தி ஸ்வீட் நத்திங்”. ஆனால் இதன் பின்னணியில் மற்றோர் உண்மை உள்ளது.
ஒரு பெண்ணுக்கு செக்ஸ் இன்பம் என்பது உடலுறவோ, அல்லது ஏற்படும் உச்சக்கட்டமோ மட்டும் அல்ல. இவற்றைத் தாண்டியும் வேறு சில விஷயங்கள் உள்ளன. அவளின் குழந்தைகள், சினேகிதிகள், கணவன் என்று இவர்களின் ஒவ்வொருவரின் உடல் நெருக்கமும் அவளின் உடலில் ஏற்படுத்தும் அனுபவங்களும் கூட அந்த இன்பத்தில் உட்படும். இது நேசித்தல், நேசிக்கப்படுதல் போன்றவற்றின் அளவையொட்டியே அமைகிறது. உடலுறவு என்பது செழுமையான இந்த அனுபவத்தின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. உடலுறவின் ஊடாகப் பல முறை உச்சக்கட்டம் ஏற்படுவதால் மட்டும், ஒரு பெண்ணுக்கு உணர்வு ரீதியான திருப்தி ஏற்பட வேண்டும் என்பதில்லை!
பெண்ணின் காம உணர்வின் தன்மையைப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ஆண்கள் சரியானபடி புரிந்து கொள்வது இல்லை. படிப்படியாக உணர்ச்சி பெறுகிறவர்கள் பெண்கள். அதேபோல் படிப்படியாக உணர்ச்சியை இழக்கிறார்கள். கடலுக்கு ஒப்பானது பெண்களின் உணர்ச்சி என்பது ஆடவர்களின் பொதுவான கருத்து. ஆனால், உங்கள் மனைவி எப்படி இதிலிருந்து வேறுபடுகிறாள் என்பதை நீங்கள் பரிசோதிப்பது நல்லதுதான். மனைவியுடன் இதைப்பற்றி கலந்துறையாடல் நடத்தலாம். திடுமென்று உணர்ச்சி வசப்படுகிற, சட்டென்று உணர்ச்சி வடிந்து விடுகிற பூமியின் இயல்புதான் புருஷனுக்கு. மனைவிக்கு முதலில் மனமும் பிறகு உடம்பும் உணர்ச்சி பெற்று வருவதற்கு கொஞ்சம் நேரமாகலாம். அதற்காக கொஞ்சம எதையாவது பேசத்தான் வேண்டும். இங்கு பேச்சு என்பது வாயால் பேசுவதல்ல; உடல் மூலமாகப் பேசுவது என்பது பொருள். அதற்குத்தான் முக்கியத்துவம். தோசைக்கல் சூடானால் தான், தோசை வார்க்க முடியும். எல்லா நாட்களிலும் இப்படி நீட்டி முழங்கிப் பேச வேண்டிய அவசியமில்லை.
பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய்க்கு முந்தைய ஐந்து நாட்களும், அதற்குப் பிந்தைய ஐந்து நாட்களும் உடலுறவு வேட்கை அதிகமாக இருக்கும். (மாதவிடாய் காலத்தில் உடலுறவை தவிர்ப்பது அவசியம்) இதைத்தவிர மற்ற நாட்களில் உடலுறவு வேட்கை குறைவாக இருக்கும். அந்தச் சூழ்நிலையில் கணவருக்குககூட வேண்டுமென்று தோன்றினால், மனைவியை அதற்குத் தயாராவதற்கு அதிக நேரத்தை செலவழிக்க வேண்டி வரும்.
அதிக ஆர்வமும், அதிகப்பிரசங்கித்தனமும் கொண்ட ஒரு ஆடவர் கேட்ட கேள்வி இது; “மனைவி என்றால், மட்ட மல்லாக்க விழுந்து கிடந்தால் போதாதா? ஆண்கள் அப்படியா…? தனது அவயத்தை தயார் செய்ய வேண்டும். அதை அப்படியே நிலை நிறுத்த வேண்டும். அவசர உச்சக்கட்டம் கூடாது. தொடர்ந்து செயல்பட வேண்டும். மனைவியை திருப்தி படுத்த முடியுமா என்ற பீதி, மனம் முழுக்க கொழுந்து விட்டு எரியும். இந்தச் சூழ்நிலையில் அவர் – ஆண் கொஞ்சம் அவசரப்படுவதில் என்ன தவறு?”
ஒரு விதத்தில் பார்த்தால் இது சரிதானே! ஆண்களுக்கு இவ்வளவு சிரமம் உண்டு. ஆனால், மற்றொரு விதத்தில் சொன்னால், இப்படிப் பேசும் ஆண்கள், ஆண் – பெண் கூடுவதைப் பற்றித் தேவையான அளவுக்கு விஷயங்களைத் தெரிந்து கொள்வதில்லை என்பதுதான் உண்மை.
மனைவியின் பங்கும் மிக முக்கியம்
சும்மா கிடக்கும் பெரிய மரக்கட்டை மீது ஏறியமர்ந்து உளியையும், சுத்தியலையும் பயன்படுத்தி ஆசாரி வேலை செய்வது போன்றது ஒரு கணவனின் ஸ்தானம் என்பதுதான் இப்படிப்பட்டவர்களின் எண்ணம். மனைவியைத் திருப்தி படுத்த வேண்டியது கணவனுக்கு மட்டுமேயான கடமை என்று இவர்கள் நம்புகிறார்கள். இது சரிதா? என்றால், இல்லவே இல்லை என்பதுதான் அழுத்தமான பதில்.
மனைவியும் கணவனும் பரஸ்பரம் ஒருவருக்கு மற்றவர் உதவிக் கொண்டு, உணர்ச்சி என்ற நீர்நிலையில் நீந்தி ஒன்றாகக் கரையேற வேண்டியவர்கள். இதில் சுயநினைவிழந்து கிடக்கும் மனைவியைக் கரையேற்ற வேண்டிய வேலை உங்களுக்கு இல்லை. மாறாக, இருவரும் ஒன்றாக நீந்த வேண்டும். யாராவது ஒருவர் சோர்வடைந்தால், மற்றொருவர் சற்று ஓய்வு கொடுத்து உதவ வேண்டும். ஆறுதலாக ஒரு கை. ஒரு முத்தம் இங்கு அவசியம். நீங்கள் கெட்டிக்காரராக இருந்தால், உங்கள் மனைவிக்குத் தெரியாமல், அவளின் கையை, உங்கள் கையில் கோக்க வேண்டும். அப்போது உங்கள் இடக்கைக்கு மேல், அவளின் கழுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும்.
உங்கள் மனைவி கெட்டிக்காரியாக இருந்தால், உங்களுக்குத் தெரியாமல் அவள் கை உங்கள் முகத்திலும் உடலிலும் பயணம் செய்து கொண்டிருக்கும். சுயநினைவின்றி ஊர்ந்து நகரும் கைகள், உணர்ச்சியின் வெப்ப அலைகளாக மாறும். நீங்கள் உணர்ச்சிகளின் போதையில், உடையற்றவர்களாக மாறுவது உங்களுக்கே தெரியாது.
இந்தப் பயணத்தில் அவளுக்காக அல்லது அவருக்காக சற்று நேரம் காத்திருக்க வேண்டி வந்தால், காத்திருக்கத்தான் வேண்டும். மெதுவாக நடக்கும் பெண்ணும், விரைவாக நடக்கும் ஆணும் ஒரே மாதிரி பயணம் செய்ய வேண்டுமென்றால், ஒன்று மனைவி தனது நடையின் வேகத்தை அதிகப்படுத்த வேண்டும் அல்லது கணவன் தனது வேகத்தைக் அதற்கேற்றார் போல குறைத்துக் கொள்ள வேண்டும்.
“இன்னும் கொஞ்சம் மெதுவாக நடங்கள், என் கால் வலிக்கிறது!”
“இன்னும் கொஞ்சம் வேகமாக நடந்து வா. இப்படி நிதானமாக நடந்தால் எப்படி?” என்ற புகார் எழாமல் இருக்க வேண்டும். அதை உணர்ந்து செயல்பட வேண்டும்.
கேட்டுத்தெரிந்து கொள்ள வேண்டும். கவனித்துக் கண்டறிய வேண்டும். சொல்லித் தர வேண்டும். “எந்தக் கட்டையில் விரலை அழுத்த வேண்டும்? எந்தத் தந்தியை மீட்ட வேண்டும்?” என்பதை தெளிவாகத் தெரிந்து கொண்டால், அவற்றை இசைக்கும்போது ஆச்சரியத்துக்குறிய இசை – காதலிசை உயர்வதைக் கேட்கலாம். ரசிக்கலாம். சொல்வதற்குத் தயக்கமாக இருந்தாலும் அவரின் கைகள், உங்களுக்குத் தேவையான இடத்துக்கு அழைத்துச் செல்லும். இங்குதான் உடல் மொழி பயன்படுகிறது.
“யானை தும்பிக்கையால் அன்னாசிப்பழத்தைப் பிடுங்கி எடுப்பது மாதிரித் தான் அவள் என்னைப் பிடிக்கிறாள். அவள் ஒரு டாக்டர். அதற்காக என்னை “போஸ்ட் மார்ட்டம்” செய்வது மாதிரி அந்த நேரத்தில் நடந்து கொள்வது சரியாகுமா? இந்த அனுகுமுறை சரியா?”
“புலி கடித்துக் குதறுவதைபோல அவர் நடந்து கொள்கிறார்.. நான் ஒரு மனுஷி இல்லையா? என்னுடன் கொஞ்ச நேரம் பேசக்கூடாதா? அவர் வாயே திறக்க மாட்டார். துணியைக் கரையில் உருவிப்போட்டுத் தண்ணீரில் குதிப்பது மாதிரிதான் தாவிக் குதிப்பார். கண்மூடித்திறப்பதற்குள் விஷயம் முடிந்து விடும். அவ்வளவுதான்…. அதன் பிறகு திரும்பிப் படுத்துக் குறட்டை விடத் தொடங்குவார். ச்சே! இந்த மனிதரைக் காணும்போது எனக்கு எவ்வளவு வெறுப்பாக இருக்கிறது தெரியுமா? என்னை நடுக்கடலில் தவிகா விட்டுவிட்டுக் கரையேறிச் செல்லும் மனிதர் அவர். அவருக்கு என் மீது அன்பு இருக்கிறதென்று நான் எப்படி நம்புவது? நான் பிரார்த்தனை தொடங்குவதற்குள் அவர் ”ஆமீன்” சொல்லியிருப்பார்.
சில ஆண் – பெண்களின் மாறுபட்ட கருத்துக்கள்தான் இவை.
விருப்பமான காரியத்தை, விருப்பப்படி செயல்படுத்திக் கொள்ளும் சுதந்திரத்தை மனைவி கணவனுக்கும், கணவன் மனைவிக்கும் வழங்கும்போதுதான் தாம்பத்யம் இனிக்கும். பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொள்கிறவர்களுக்கு, தன் துணையை நம்ப வேண்டும் என்று கூடத் தோன்றாது. நம்பவும், அடைக்கலமாகவும் முடியாத துணை அல்லது துணைவியின் முன்பாக உடலையும், மனத்தையும் ஒளிவு மறைவின்றித் திறந்து காட்ட எந்த ஆடவராலுமோ, பெண்ணாலுமோ முடியாது!
உயர்ந்த கல்வியறிவு பெற்று விட்டால் மட்டுமே, உடலுறவுக் கலையில் வெற்றி பெற்று விடலாம் என்று சொல்லி விட முடியாது. எனவே நீங்கள் ஆணாக இருந்தால் பெண்ணை (மனைவியை)ப் படியுங்கள். பெண்ணாக இருந்தால் ஆணை(கணவனை)ப் படியுங்கள். அலட்சியமாக இருந்து விடாதீர்கள். கல்விக்கும் கலவிக்கும் எழுத்தில் ஒரு புள்ளிதான் வித்தியாசம். ஆனால் நிச்சயம் தொடர்புண்டு. கலவியைக்குறித்த கல்வியறிவு இல்லையெனில் “சிறந்த இல்லற ஜோடி” எனும் பட்டம் வாங்குவது எப்படி? (-டாக்டர் பி.எம். மாத்யூ வெல்லூர், நூல்: “தாம்பத்யம்: இணைப்பு – பிணைப்பு”)
இக்கட்டுரையின் முந்தைய பகுதிகளுக்கு கீழுள்ள “prev” ஐ “கிளிக்” செய்யவும்