பால்குடி உறவால் தடை செய்யப்படும் திருமணங்கள் பற்றிய ஹதீஸ்கள்
O “நிச்சயமாக அல்லாஹ் இரத்த கலப்பு உறவினர்களில் எவர்களை மணமுடிக்கத் தடை செய்திருக்கிறானோ அத்தகைய பால்குடி உறவினர்களையும் மணமுடிக்கத் தடை செய்துள்ளான்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
O ஒருமுறை அல்லது இருமுறை பாலை சப்பி ஊறிஞ்சி விடுவதால் (மணமுடிக்க) ஹராமாகி விடாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: முஸ்லிம், அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ)
O “குறிப்பிட்ட பத்துத் தடவைகளில் பால் குடிப்பது தான் திருமணத்தை ஹராமாக்கி விடுகிறது என (முதலில்) திருக்குர்ஆனில் கட்டளையிடப்பட்டிருந்தது. பின்னர் குறிப்பிட்ட ஐந்து தடவைகளில் என்று மாற்றப்பட்டு விட்டது. அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இறந்து விட்டார்கள். ஐந்து குறிப்பிட்ட தடவைகளில் பால் குடிக்கும் கட்டளை திருக்குர்ஆனில் ஓதப்பட்டு வந்தது.” (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: முஸ்லிம், முஅத்தா, அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ)
O பெரியவர்கள் பால்குடிப்பது பற்றி ஒருவர் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் வினவினார். அதற்கு அவர்கள், “உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வந்து, ‘என்னிடம் ஓர் அடிமைப்பெண் இருந்து வந்தாள். நான் அவளோடு உடலுறவு கொண்டு வந்தேன். என் மனைவி அவளுக்கு வேண்டுமென்றே பாலூட்டி விட்டுப் பின்னர் என்னிடம் வந்து “நிச்சயமாக, இறைவன்மீது ஆணையாக நான் அவளுக்குப் பாலூட்டிவிட்டேன். (இனி) நீங்கள் அவளை அடைய முடியாது’ என்று கூறினாள் என்று தெரிவித்தார். அதற்கு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரை நோக்கி “நீர் அவளை அடித்து வருந்துமாறு செய்யும். அன்றி உமது அடிமைப்பெண்ணோடு உடலுறவு கொண்டுவாரும். பால்குடிப்பது (தடுக்கப்பட்டது) ஹராமாகி விடுவது சின்னஞ்சிறு வயதில்தான்(அதாவது இரண்டு வயதிற்குள்தான்) என்று கூறினார்கள். என்று விடையளித்தார்கள். (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு தீனார், நூல்: முஅத்தா)
O “நிச்சயமாக நான் என் மனைவியின் மார்பகத்தில் பாலைக் குடித்து அது வயிற்றினுள்ளும் சென்றுவிட்டது” என்று ஒருவர் அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கூறினார். அதற்கு அவர்கள், “என் கருத்துப்படி அவள் உமக்கு ஹராமாகி விட்டாள்” என்று கூறினார்கள். அப்பொழுது இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “அந்த மனிதருக்கு நீர் என்ன தீர்ப்பு வழங்கினீர் என்பதை சிந்தித்துப்பாரும்” என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?” என்று வினவினார். அப்பொழுது இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “இரண்டு வயதுக்குள் பால்குடிப்பதுதான்(தடை செய்யப்பட்டிருக்கும்) பால்குடிப்பாகும்” என்று கூறினார்கள். அதற்குப் பின் (மற்றவர்களை நோக்கி) இந்த ஆலிம் (இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு) உங்களிடையே இருக்கும்வரையில் நீங்கள் என்னிடம் எதைப் பற்றியும் கேட்காதீர்கள்” என்று அபூ மூஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: யஹ்யா இப்னு ஸஈது, நூல்: முஅத்தா, அபூதாவூத்)
O “முலைப்பால் வயிற்றை அடைந்து விடுவதுடன் அதுவும் பால்குடியை நிறுத்துவதற்கு முன்னதாக இருந்தாலேயன்றி வேறுவிதமான பால்குடி திருமணத்தை ஹராமாக்க மாட்டாது” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;” (அறிவிப்பவர்: உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள், நூல்: திர்மிதீ)
O “நிச்சயமாக, நான் இஹாப் இப்னு அஜீஜுடைய மகளை மணமுடித்திருந்தேன். பின்னர் ஒரு பெண் என்னிடம் வந்து, “நிச்சயமாக, தான் உக்பாவுக்கும் இவர் மணமுடித்திருக்கும் பெண்ணுக்கும் பாலூட்டியிருப்பதாக கூறினாள். அப்பொழுது உக்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவளை நோக்கி, “நிச்சயமாக, நீர் எனக்கு பாலூட்டியதை நான் அறியேன். மேலும் நீரும் எனக்கு அறிவிக்கவில்லை” என்று கூறிவிட்டு வாகனத்தில் ஏறி அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மதீனாவுக்கு வந்தார். அப்பொழுது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இவ்விதம் கூறப்படும்பொழுது நீர் எவ்வாறு அவளோடு (திருமணத் தொடர்பு கொண்டு) இருக்க இயலும்?” என்று வினவினார்கள். எனவே அவர்களை உக்பா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் பிரிவினை செய்துவிட்டார்கள். அவளும் வேறொருவரை மணம் முடித்துக் கொண்டாள்.” (அறிவிப்பவர்: உகபதுப்னு ஹாரிஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்; புகாரி, அபூதாவூத், திர்மிதீ, நஸாஈ)
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் பால்குடியும்
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ‘தாங்கள் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் புதல்வியை மணந்துகொள்ளக் கூடாதா?’ என்று கேட்கப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘அவள் பால்குடி உறவு முறையினால் எனக்குச் சகோதரர் மகள் ஆவாள்” என்று கூறினார்கள. (நூல்: புகாரி 5100)
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கும் இன்னொரு நபிமொழியிலிருந்து… நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய மகளின் விஷயத்தில், “அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்படவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் ஹராம் (தடை செய்யப்பட்டதாக) ஆகுமோ அவையெல்லாம் (செவிலித் தாயிடம்) பால்குடிப்பதாலும் ஹராம் ஆகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள்” என்று கூறினார்கள். (நூல்: புகாரி, 2645, 2645, 5100)
விளக்கம் :
ஹம்ஸா பின் அப்துல் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பெரிய தந்தை ஆவார். இது இரத்த உறவு இதன்படி ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணப்பதில் தடையில்லை. எனினும் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே செவிலித் தாயிடம் சிறு வயதில் பால் அருந்தியுள்ளனர்.
அபூலஹபின் முன்னாள் அடிமைப் பெண்ணான ஸுவைபா ரளியல்லாஹு அன்ஹா அவர்களே அந்த செவிலித் தாய். இதன்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் சகோதரர்கள் ஆவர். எனவே ஹம்ஸாவின் மகளை தாம் மணந்து கொள்ள முடியாது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கினார்கள். (உம்தத்துல் காரீ)
பெரியப்பா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மா, மக்களை மணமுடிப்பதை இஸ்லாம் அனுமதிக்கிறது. இந்த உறவில் மணமுடிக்கும் இருவர் சிறு வயதில் ஒரு செவிலித் தாயிடம் பால்குடித்திருந்தால் இருவரும் சகோதரர், சகோதரியாகக் கருதப்படுவார்கள். அவர்களிடையே திருமணம் உறவு தடை செய்யப்பட்டது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இரத்த பந்த உறவு முறையில் பெரிய தந்தை, அதனால் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் மகளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மணமுடிப்பதில் தடையில்லை என்றாலும் ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரு செவித் தாயிடம் சிறு வயதில் பால்குடித்திருக்கிறார்கள் அதனால் இருவருக்கும் சகோதரர்கள். சகோதரரின் மகளை மணமுடிக்கக் கூடாது என்ற அடிப்படையில் பால்குடி சகோதரரின் மகளை மணமுடிப்பது ஆகுமானதல்ல.