மதவாதி இலக்கியவாதி உட்பூசல்
மதம், இலக்கியம் இரண்டும் சமுதாயத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்கும். இரண்டு திசைகளாக வேறுபட்டு செயல் களம் அமைவது சமுதாய மேம்பாட்டை கடுமையாக பாதிக்கும்.
இரண்டு துறைகளும் ஒன்றையன்று தழுவி நிற்கும் போக்கை களப்பணியாளர்கள் ஆராயலாம். முன்னெடுத்துச் செல்லலாம். தேவையற்ற உட்பூசல், பகிரங்க விரோதம் தவிர்க்கப்பட வேண்டும்.
மிம்பர் மேடையை கைப்பற்றியிருப்போர், இலக்கியவாதிகளை துனியாவாதிகளாக பாவிக்கின்றனர். மத மாநாடுகளில் சம இருக்கை, ஆலோசனை, வழிகாட்டியுரை வழங்க அனுமதிப்பதில்லை.
ஜும்ஆ தொழுவது எவ்வளவு முக்கியமோ புனிதமோ, அதனைவிட சற்றும் இளைத்ததல்ல படைப்பிலக்கியம். நேர்த்தியாக, பெரும் உழைப்பில் எழுதப்படும் ஒரு பக்க கட்டுரை ஜும்ஆ புனித சடங்கின் சகல பரக்கத்துகளையும், இறை நெருக்கத்தையும் எழுத்தாளருக்கு நசீபாக்கும்.
சமூகம் கவுரமாக தலை நிமிர படைப்பாளி உழைக்கிறார். நள்ளிரவில் தூக்கம் கலைந்து மெய் வருந்தி சிந்தனைகளை எழுத்துருவில் வடிக்கிறார். தஹஜ்ஜத் தொழுதவருக்கு வழங்கப்படும் சவாபுகளனைத்தையும் அல்லாஹ் சிந்தனாவாதிக்கு வழங்குகிறான். வஞ்சிப்பதில்லை. பாரபட்சம் காட்டுவதுமில்லை.
ஒரு மணி நேர சிந்தனை எழுபதாண்டு அமல்களை விட மேலானது. காலை சுபுஹு தொழுகையை இமாம் ஜமாத்துடன் கோட்டைவிடுவதை எழுத்தாளர் வழமையாகக் கடைப்பிடிக்கக்கூடாது. இது பெரும் பாவம். மன்னிக்க இயலா சமூக துரோகம்.வாழ்நாளில் திருக்குர்ஆனை அரபி மொழியில் முழுமையாக ஓதுவதற்கு இலக்கியவாதிகள் பயிற்சி கொள்ளலாம். நபி மொழி கருத்தை ஆதாரப் பூர்வமாக, பூரண உச்சரிப்புடன் மனனமிடலாம்.
சஹாபாக்களின் பெயர்கள், சாதனைகள், வரலாற்று நிகழ்வுகளை மேற்கோள் காட்டலாம். இதனால் மதவிரும்பிகளின் நம்பிக்கையை பெறமுடியும். படைப்புகளை உருவாக்கும்போது அதன் அடி நாதமாக, மையக் கருத்தாக, நடு புள்ளியாக திருமறை வசனம், நபிமொழி இழையோட வேண்டும். நிரந்தர வழிகாட்டும் ஆக்கம் எழுத்தில் மின்னும். மனித குலம் மாண்புறும்.
மதவாதிகள் பலர் இன்று இதழியல் முத்திரை பதித்து வருகின்றனர். அளவிட முடியா ஆர்வம் தென்படுகிறது. ஆண்டுக்கு 50 ஜும்ஆ உரைகள். தலா இருபது நிமிடங்கள். போதாக்குறைக்கு ஷபேபராத், ஷபே மிஃராஜ், லைலத்துல் கத்ர், மீலாது இரவுகளில் மத போதனை வழங்கப்படுகிறது.
இரண்டு லட்சம் குர்ஆன் தமிழ் விரிவுரை, மொழி பெயர்ப்பு கிதாபுகள் முஹல்லாக்களில் நுழைந்துள்ளன. ஹதீஸ் தமிழ் மொழிபெயர்ப்பு வீடுகளில் காணக்கிடைக்கிறது. மத கட்டுரைகளில் இனி புதிதாக கருத்தை ஆலோசனையை விதைக்கும் திறமை அபாரமானது. ஒவ்வொரு வாசகரும் மத நிபுணராக வாழ்கிறார்.
ஏற்கெனவே, தமிழ் மொழிபெயர்ப்பு தரத்தை உயர்த்தியுள்ளது. இந்நிலையில் மதவாதி இலக்கியத்தில் பிரகாசிக்க அதிக உழைப்பு, தேவைப்படுகிறது. போகிற போக்கில் வாந்தியெடுக்கக் கூடாது. நாளிதழ், தனியார் தொலைக்காட்சி உளறல்களை ரிபீட் மறுபிரசுரம் செய்யக்கூடாது. மைதானம் காலி. உழைப்பு, நேர்மையுள்ளவர்கள் தூர நோக்குடன் முன்னேற முடியும். முஸ்லிம் சமூகம் கட்டித்தழுவும். ஆனந்தப்படும்.
– ஆ.மு. ரசூல் மொஹிதீன்,
முஸ்லிம் முரசு செப்டம்பர் 2012