உலுல் அல்பாப் (அறிவார்ந்த மக்கள்) யார்?
தமிழில்: மவ்லவி, ஹாஃபிள் அஹ்மது ஜஃபருல்லாஹ் நத்வி, எம்.ஏ.பி.எட்.
[ தற்கால முஸ்லிம்களில் பலர் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றை செயல்படுத்துவதில் மட்டும் கவனமாக உள்ளார்கள். அது மட்டுமே திருக்குர்ஆனின் கட்டளை என நம்புகிறார்கள். அவ்விஷயங்களிலும் சில சுன்னத்தான கடமைகளிலும் கருத்து வேற்பாடும் கொள்கிறார்கள். ஆனால், திருக்குர்ஆன் கூறும் அல்-உம்ரூத் தக்வீனிய்யாவில் ஜீரோவாக உள்ளார்கள். அதன் காரணமாக பிறரால் ஆளப்பட்டு வருகிறார்கள்.]
திருக்குர்ஆனில் காணப்படும் 6000-க்கும் மேற்பட்ட வசனங்களில் அல்-உமூருத் தஷ்ரீயிய்யா (மார்க்க விஷயங்கள்), அல்-உம்ரூத் தக்வீனிய்யா (உலக விஷயங்கள்) என இருவித விஷயங்கள் காணப்படுகின்றன.
அல்-அகீதா (கொள்கை), இபாதத் (வணக்க வழிபாடுகள்), முஆமலாத் (கொடுக்கல் வாங்கல்), முஆஷராத் (குடும்ப வாழ்க்கை), அக்லாக் (ஒழுக்க மான்புகள்), போன்றவை அல்-உமூருத் தஷ்ரீயிய்யா எனப்படும். வானம் பூமியில் காணப்படும் பொருட்கள் சம்பந்தமான விஷயங்கள் அல்-உமூருத் தக்வீனிய்யா எனப்படும்.
திருக்குர்ஆனின் 6000 -க்கும் மேற்பட்ட வசனக்களில் அல்-உமூருத் தஷ்ரியிய்யா (அதாவது கொள்கை, தொழுகை, நோன்பு போன்ற வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல், குடும்ப வாழ்வின் நெறிகள் மற்றும் ஒழுக்க மாண்புகள்) போன்றவற்றைப் பற்றிக் கூறும் வசனக்கள் 1,000-க்கும் சற்று அதிகம் மட்டுமே! மீதமுள்ள 5,000 வசனங்கள் அல்-உமூருத் தக்வீனியிய்யாவை (அதாவது உலகம், உலகம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பற்றி) கூறும் வசனங்களாகும்.
உலகப் பொருட்களைப் பற்றி ஆய்வு செய்து தனது வாழ்க்கைக்கு அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், மனிதர்களின் வாழ்க்கையை எளிதாக்குமாறும் அதன் மூலம் இறைநம்பிக்கையை, இறைபக்தியை வளர்த்துக் கொள்ளுமாறும் அவை கூறுகின்றன. உதாரணமாக, திருக் குர் ஆனின் 88 ஆவது அத்தியாயத்தின் 17-20 வரையிலான வசனங்கள் பின்வருமாறு உள்ளன.
“(நபியே! இவர்கள் தங்களிடமுள்ள) ஒட்டகத்தையும் அது எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்பதையும் கவனிக்க வேண்டாமா? அவர்களுக்கு மேலுள்ள வானத்தையும் அது எவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா? (அவர்கள் தன் முன் தோன்றும்) மலைகளையும், அவை எவ்வாறு நட்டப்பட்டுள்ளன என்பதையும் (அவர்கள் வசிக்கும்) பூமியையும் அது எவ்வாறு விரிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர்கள் கவனிக்க வேண்டாமா?”
இவ்வசனங்களில் ஒட்டகத்தைப் பற்றிக் கூறும் 17-வது வசனத்தில் விலங்கியல் கற்குமாறும், 18-வது வசனத்தின் மூலம் வான சாஸ்திரம் கற்குமாறும், 19-20 வரையிலான வசனங்களில் பூகோளவியல் கற்குமாறும் அறிவுறுத்தப்படுகிறது.
19-வது அத்தியாயத்தின் முதல் வசனம் சூரியனையும் அதனால் ஏற்படும் பிரகாசத்தை பற்றியும், 92-வது அத்தியாயத்தின் முதல் வசனம் இரவையும் அதனால் ஏற்படும் இருளை பற்றியும், 86-வது வசனத்தின் முதல் வசனம் வானம் அதில் காணப்படும் நட்சத்திரங்கள் பற்றியும் ஆராயுமாறு அறிவுறுத்துகின்றன. இதுபோன்ற வசனங்கள் திருக்குர்ஆனில் சுமார் 5,000 உள்ளன.
முஸ்லிம் அல்லாதவர்கள் ஜீரோ :
தற்காலத்தில் முஸ்லிம் அல்லாதவர்கள் குறிப்பாக, மேல்நாட்டு அறிஞர்கள் திருக்குர்ஆன் கூறும் அல்-உம்ரூத் தக்வீனிய்யா என்பதில் ஆர்ரய்ச்சி செய்வதில் ஹீரோக்களாக உள்ளார்கள். எனினும், அல்-உமூருத் தஷ்ரீயிய்யாவில் ஜீரோவாக இருக்கிறார்கள். உலகிலுள்ள ஒரு பொருளைப் பற்றி அவர்கள் ஆய்வு செய்யும்போது இது என்ன பொருள்? இதனால் என்ன பயன் உள்ளது? என்றுதான் ஆராய்ச்சி செய்கிறார்களே தவிர, இதனை படைத்தவன் யார்? அவன் நம்மையும் இவ்வுலகப் பொருட்களையும் படைத்ததன் நோக்கம் என்ன? என்பது பற்றியும் ஆராய்ச்சி செய்வதில்லை.
தற்கால முஸ்லிம்கள் ஜீரோ :
தற்கால முஸ்லிம்களில் பலர் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்றவற்றை செயல்படுத்துவதில் மட்டும் கவனமாக உள்ளார்கள். அது மட்டுமே திருக்குர்ஆனின் கட்டளை என நம்புகிறார்கள். அவ்விஷயங்களிலும் சில சுன்னத்தான கடமைகளிலும் கருத்து வேற்பாடும் கொள்கிறார்கள். ஆனால், திருக்குர்ஆன் கூறும் அல்-உம்ரூத் தக்வீனிய்யாவில் ஜீரோவாக உள்ளார்கள். அதன் காரணமாக பிறரால் ஆளப்பட்டு வருகிறார்கள்.
ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் ஆசிரியராக அமைந்தான் எனத் திருக்குர்ஆனின் பின்வரும் வசனம் (ஆதமைப் படைத்து) அவருக்கு எல்லாப் (பொருட்களின்) பெயர்களையும் (அவற்றின் தன்மைகளையும்) இறைவன் கற்றுக் கொடுத்தான். (அல் குர் ஆன் 2 : 31)
பின்பு மனிதன் வானவர்கள் எனும் பிரதானப் படைப்புக்கு ஆசிரியராக ஆக்கப்பட்டான். இக்கருத்தை பின்வரும் திருக்குர்ஆன் வசனத்தில் காணலாம்.
(பின்னர் இறைவன்) ஆதமே! நீங்கள் அவற்றின் பெயர்களை அவர்களுக்கு (வானவர்களுக்கு) அறிவியுங்கள் எனக் கூறினான். அல்குர்ஆன் 2 : 33)
மேற்கண்ட 2 : 31, 2 : 33 ஆகிய திருக்குர்ஆன் வசனங்களில் அவர்களுக்கு கற்றுக் கொடுத்ததும், பிஉன்பு மலக்குகளுக்கு கற்றுக்கொடுக்குமாறு ஆதம் அலைஹிஸ்ஸலாமுக்கு இறைவன் கட்டளையிட்டதும் தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற கல்வியல்ல! உலகம் மற்றும் பூமியுடைய பொருள்களின் பெயர்கள். அவற்றின் தன்மைகள் மற்றும் பயன்பாடுகள் அக்கும். காரணம், தனது பிரதிநிதியாக இருந்து உலகை நிர்மானித்து அதனை ஆளுவதற்காகவும், தனது கட்டளைகளை அங்கு நிறைவேற்றுவதற்காகவும் ஆத அலைஹிஸ்ஸலாம் பூமிக்கு அனுப்பப்பட்டு உள்ளார்கள் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட விஷயமாகும்.
அறிவார்ந்த மக்கள் :
திருக்குர்ஆன் கூறுகிறது: வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும் அறிவுடையவர்களுக்கு நிச்சயமாகப் பல அத்தாட்சிகள் உள்ளன. அவர்கள் நின்ற நிலையிலும் இருப்பிலும் படுக்கையிலும் அல்லா ஹ்வையே நினைவில் கொள்வார்கள். மேலும் வானங்களையும் பூமியையும் அவன் படைத்திருப்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்வார்கள். மேலும், “எங்கள் இறைவனே! நீ இவற்றை வீணாகப் படைக்கவில்லை, நீ மிகத் தூய்மையானவன், நரக நெருப்பின் வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக!” என்று கூறுவார்கள். (அல் குர் ஆன் 3 : 190-191)
மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்பவர்கள் வானம் பூமியையும் அவற்றுக்கிடையே காணப்படும் அல்லா ஹ்வின் இதர படைப்புகளில் ஆய்வு செய்ய வேண்டுமென்பதும், அவ்வாறே, அறிவியல் ரீதியில் முயற்சிகளை மேற்கொள்ப்வர்கள் இறை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமென்பதும் இந்த இருவித முயற்சிகளையும் மேற்கொள்பவர்களே அறிவார்ந்த மக்கள் என்பதும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மத்திய நூற்றாண்டு முஸ்லிம்கள் :
மேற்கண்ட வசனம் கூறும் இருவித முயற்சிகளையும் மேற்கொண்டவர்கள் முற்கால முஸ்லிம்கள். குறிப்பாக மத்திய நூற்றாண்டு முஸ்லிம்கள் ஆவர். எனவே தான் அவர்கள் அனைத்துத் துறைகளிலும் திறன் பெற்றிருந்தார்கள். அதன் காரணமாக உலகை ஆளும் ஆற்றலையும் பெற்றார்கள். இது வரலாறு கூறும் உண்மையாகும்.
நன்றி: ரஹ்மத் மாத இதழ் அக்டோபர் 2012