புதுப்பெண்ணே புதுப்பெண்ணே, இதையும் பாரு…!
சமீபத்தில் தான் உங்களுக்கு திருமணமாகி புகுந்த வீடு வந்திருக்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்குத்தான்.
புதிய இடம், புதிய சூழல், கணவர் வீட்டில் அறிமுகம் இல்லாத மனிதர்கள் என்று பலருக்கும் நீங்கள் ஆரம்பத்தில் காட்சிப் பொருளாகத்தான் தெரிவீர்கள். உங்கள் சொல், செயல் எல்லாமே ஆரம்பத்தில் அவர்கள் பார்வைக்கு போகும். நீங்கள் அறிந்திராத நேரத்தில் உங்களைப் பற்றி அவர்கள் தெரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருப்பார்கள்.
இந்த இடத்தில் தான் உங்கள் புத்திசாலித்தனம் வெளிப்பட வேண்டும். புகுந்த வீட்டில் உங்கள் விஷயமாய் எந்த செய்தி உங்கள் காதுக்கு வந்தாலும் அதைப்பற்றி நீங்கள் தெரிந்ததாகவே காட்டிக்கொள்ளக் கூடாது. இதெல்லாமே நீங்கள் குடும்பத்தை அனுசரித்துப் போகிற பெண்ணா என்பதற்கான ரகசிய தேர்வாகக்கூட இருக்கும்.
உங்களை தங்கள் வீட்டுப் பெண்ணாக தேர்ந்தெடுத்தவர்கள் எடுத்த எடுப்பிலேயே வந்து திருமணத்துக்கு நாள் குறித்து விடவில்லையே..! உங்கள் குடும்பம் பற்றி விசாரித்து தெரிந்து கொண்ட பிறகு தான் உங்களைப் பெண் பார்க்கவே வந்தார்கள். பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்த்த எல்லா அம்சங்களும் உங்களிலும் உங்கள் குடும்பத்திலும் இருப்பதாக உணர்ந்ததால் மட்டுமே தங்கள் வீட்டுப் பெண்ணாக ஏற்றுக் கொண்டார்கள்.
இருக்கட்டும். அப்புறம் ஏன் இந்த மாதிரியான பரிசோதனை? அங்கே தான் விஷயமே இருக்கிறது.
பெற்றவர்களின் குணநலன்கள் பலவும் பிள்ளைகளிடம் அழையா விருந்தாளியாக ஒட்டிக் கொண்டிருக்கும். அதில் சந்தேகம் இல்லை.
‘தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை’ என்ற பழமொழி வந்த பின்னணியும் அதுதான். அதோடு அப்போதெல்லாம் பெண்கள் வயதுக்கு வந்து விட்ட அடுத்தகட்டமாய் திருமணம் பற்றிய சிந்தனை மட்டுமே பெற்றோர் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். அதுவரை தங்கள் பிள்ளைகளை கண்ணுக்குள் வைத்து பார்த்துக் கொள்வார்கள்.
இப்போது அப்படியா? பெண்கள் படிக்கிறார்கள். கல்லூரிக்குப் போகிறார்கள். படிப்பை முடித்ததும் வேலை கிடைத்து அதையும் செய்கிறார்கள். இந்த காலகட்டங்களில் அவர்கள் சந்திக்கும் மனிதர்கள், அவர்களின் குணநலன்கள் என பலவற்றையும் இவர்களும் எடுத்துக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது. சம்பாதிக்கும் பெண்கள் தங்கள் தொழில் நிமித்தமாய் நட்பு ரீதியில் ஆண்களுடனும் பேசிப்பழக வேண்டியிருக்கிறது. இப்படி அனுதினம் வழுக்குப்பாறை ஏறி ஏறி திருமணம் வரை ஒரு ரேஸ் வாழ்க்கையை தொடரும் பெண்களுக்கு பெற்றோரின் குணநலன் மட்டுமே பிரதானமாக இருக்குமா?
சமிபத்தில் ஒரு குடும்பத்தில் நடந்த சம்பவம் இது. அந்தப் பெண் தன் தோழியிடம் போனில் பேசும்போது எதிர்பாராமல் ஒரு புது வார்த்தையை பிரயோகித்து இருக்கிறாள். அந்த வார்த்தை அவர்கள் குடும்பத்தில் யாரும் அறிந்திராதது. அது நல்ல வார்த்தையா அல்லது கெட்ட வார்த்தையா என்பது கூட அவர்களுக்குத் தெரியாது.
மகள் பேசி முடித்ததும் குற்றச்சாட்டு மாதிரி இல்லாமல் இயல்பாக பேசுவதுபோலவே மகளிடம் அந்த வார்த்தைக்கான அர்த்தம் கேட்டார் அம்மா. மகளோ சிரித்தபடி, ‘அது எங்கள் நட்பு வட்டத்தில் உபயோகிக்கும் ஒரு கெட்ட வார்த்தை. அதன் அர்த்தம் வேண்டாமே’ என்று சொல்லி சிரித்திருக்கிறாள்.
தங்களைத் தாண்டிய ஒரு வெளிவட்டம், இன்னொரு உலகத்தை அவர்களிடம் அறிமுகப்படுத்தி விடுகிறது. இதனால் பலர் அல்ல, சிலராவது தங்கள் குடும்பத்தின் பாரம்பரியத்தில் இருந்து விலகிப் போகும் வாய்ப்பும் இருக்கிறது. இதனால் தான் குடும்பம் பார்த்து பெண் எடுத்தாலும் புது மருமகளின் வெளிநட்பு எந்த அளவுக்கு அவளை பற்றிப் பிடித்திருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் விதமாய் அந்த புது மருமகள் கவனிக்கப்படுகிறாள்.
இதுபற்றித் தெரிந்தாலும் புது மருமகள் அதைப்பற்றிக் கண்டு கொள்ளாமல் தனது புதிய குடும்பத்தின்மீது தனது அக்கறையையும் ஆர்வத்தையும் ஏற்படுத்திக்கொண்டாலே இந்த மாதிரியான சந்தேகச் சாயல்கள் தோன்றி வேகத்திலேயே மறைந்து போகும் மின்னல் போல் ஓடிவிடும் என்பது நிச்சயம்.