கை கழுவும் பிரச்னை அல்ல!
ஆறு மாதங்களுக்குள் அனைத்துப் பள்ளிகளிலும் கழிப்பறை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ஒரு வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கியது
தமிழக அரசும் இது தொடர்பான தகவல் சேகரிக்கும் முயற்சியாக, ஒவ்வொரு பள்ளிக்கும் 32 பக்கங்களில் பல்வேறு கேள்விநிரல்களுடன் படிவங்களை அளித்துள்ளது.தமிழ்நாட்டைப் பொருத்தவரை, கழிப்பறைகள் இல்லாத பள்ளிகளே இல்லை என்று உறுதியாகக் கூறிவிட முடியும்.
ஆனால், இந்தக் கழிவறைகள் எண்ணிக்கை மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைக்கப்படவில்லை என்பதும், மாணவர்கள் பயன்படுத்த முடியாத வகையில் பூட்டி வைக்கப்படுகிறது என்பதும், இவை பெரும்பாலும் சுகாதாரமாக இருப்பதில்லை என்பதும்தான் தமிழக பள்ளிகளில் நிலவும் கழிப்பறைச் சிக்கல்கள்.
சில பள்ளிகளில் இத்தகைய கழிப்பறை வசதிகள் பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் மட்டுமே பயன்படுத்தும் வகையில் இருப்பதுடன், இவற்றைப் பூட்டி, தலைமையாசிரியர் அறையில் சாவியை வைத்துக்கொள்ளும் நடைமுறை உள்ளது.
பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்காக மட்டுமே தனி கழிப்பறை வசதிகள் தொடக்க காலம் முதலாகவே இருக்கின்றன. இந்தக் கழிப்பறைகளில் மட்டும் தண்ணீர் இருக்கும். இங்கு மட்டுமே துப்புரவுப் பணியாளர் தினமும் தூய்மை செய்வார். இந்தப் பாகுபாடு, பெரும்பாலான நேரங்களில், மாணவர்கள் எத்தகைய நிலையில் கழிப்பறை வசதிகளைப் பயன்படுத்துகிறார்கள் என்ற புரிதலோ, தேவையின் உணர்வோ இல்லாமல் தனித்து மரத்துப்போகும் நிலையை ஆசிரியர்களுக்கு உண்டாக்கிவிடுகிறது.
இடைவேளையின்போது, ஒரே நேரத்தில் கழிப்பறைகளைப் பயன்படுத்த அனைத்து மாணவர்களாலும் முடியாத நிலையில் அவர்கள் திறந்தவெளியில் சிறுநீர் கழிக்க நேர்கிறது என்கின்ற உண்மையைப் புரிந்துகொண்டுள்ள கல்வித் துறை, மாணவர்கள் விரும்பும் நேரத்தில் கழிவறையைப் பயன்படுத்தும் நடைமுறையை மேற்கொண்டால், மாணவர்கள் திறந்தவெளியைப் பயன்படுத்த மாட்டார்கள் என்ற ஆலோசனையை முன்வைத்துள்ளது வரவேற்கத்தக்கது.
இருப்பினும் இந்த நடைமுறை தற்போதும்கூட அமலில் இருக்கின்றது, ஆனால் பல ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு நேரத்தின்போது மாணவர்கள் வெளியே செல்வதை விரும்புவதில்லை, அனுமதிப்பதில்லை என்கின்ற உண்மையைப் பள்ளிக் கல்வித் துறை ஏனோ உணர்ந்திருக்கவில்லை. தன் வகுப்பிலிருந்து ஒரு மாணவன் வெளியே சென்றால், அது மாணவர் தன்னை ஏய்க்கும் உத்தியாகவும், தனது கட்டுப்பாடு குறைந்துவிடுவதாகவும் ஆசிரியர் நினைக்கும் அதிகார மனப்போக்குதான் இதற்குக் காரணம்.
வகுப்பு நேரத்தின்போது அத்தனை மாணவர்கள் மத்தியிலும் ஒரு மாணவன் எழுந்து ஆள்காட்டி விரலை நீட்டி, சமிக்ஞை மூலம் அனுமதி கேட்கும் நடைமுறை அந்த மாணவருக்கு மிகப்பெரும் கூச்சத்தைத் தரக்கூடியது. மேலும், ஒரு ஆசிரியர் வகுப்பு முடிந்து சென்று, இன்னொரு ஆசிரியர் வரும் இடைவெளிக்குள் ஓரிரு மாணவர்கள் கழிவறைக்கு ஒடிச்சென்று திரும்பினாலும், அடுத்த வகுப்புநேர ஆசிரியர் வந்துவிட்டார் என்றால், அவரது கோபத்துக்கு ஆளாக நேரிடுமே என்கிற தயக்கத்தில் மாணவர்கள் இடைவேளைவரை காத்திருப்பதுதான் அதிகம்.
ஆசிரியர்கள், தலைமையாசிரியர் ஆகியோரின் பயன்பாட்டுக்காகக் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளை மாணவர்களுக்காகத் திறக்கப்படுவதும், மாணவர்கள் பயன்படுத்தும் அதே கழிவறைகளைத்தான் ஆசிரியர்களும் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயமும், கழிவறைகளின் தூய்மைக்கு வழிவகுக்கும். கழிப்பறையில் தண்ணீர் இருப்பதை ஆசிரியர்கள் உறுதி செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
அதேபோன்று, வகுப்பறையில் பாடம் நடக்கும் நேரத்தில், ஒரு மாணவன் ஆசிரியரின் அனுமதிக்காக காத்திருக்காமல், ஓசைப்படாமல் வெளியேறி கழிப்பறைக்குச் செல்லவும், மீண்டும் அமைதியாகத் திரும்புவதுமான கலாசாரத்தை தமிழகப் பள்ளிகளில் உருவாக்க வேண்டும். மாணவர்கள் இவ்வாறு வெளியேறுவதை ஆசிரியர்கள் அவமதிப்பாக அல்லது வகுப்புப் புறக்கணிப்பாகக் கருதும் மனநிலையில் மாற்றம் தேவை.
அக்டோபர் 15 உலக கைகழுவும் நாள். அந்த நேரத்தில் ஒரு வார காலத்துக்கு பள்ளி மாணவர்களிடையே “கைகளைச் சோப்பு போட்டு கழுவினால் நோய்கள் பலவற்றைத் தடுத்துவிடலாம்’ என்று விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஆனால் எந்தப் பள்ளியிலும், மாணவர்கள் கழிப்பறைக்குச் சென்று வந்த பின்னர் கைகழுவத் தண்ணீரே கிடையாது என்கின்றபோது, சோப்பு பற்றிச் சொல்ல வேண்டியதே இல்லை.
மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் புத்தகப் பைகளுடன் ஒரு சோப்பையும் கொண்டுவரச் செய்வது சரியான தீர்வு அல்ல. மிகக் குறைந்த விலையில் சோப்புநீர் தயாரித்து அளிக்க, கதர் கைத்தொழில் வாரியம் போன்ற நிறுவனங்களால் முடியும். மாணவர்களின் தேவைக்காக பொதுவானதொரு இடத்தில் இவற்றை வைத்து, மாணவர்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கலாம். ஒவ்வொரு வகுப்பறைக்கு வெளியேயும் ஒரு கைகழுவும் தொட்டி அமைத்து, தண்ணீர்க் குழாய் அமைத்தால் என்ன? சோப்பு நீரை அந்தந்த வகுப்பு மாணவர்களிடமே கொடுக்கவும், மாணவிகளுக்கான நேப்கின்களை அந்தந்த வகுப்பு மாணவிகளில் ஒருவரிடம் ஒப்படைப்பதும், தலைமைப்பண்பை ஏற்படுத்தும் சிறிய நடைமுறைகள்தானே!
பள்ளிக்கூடங்களில் கழிப்பறைகளை நிறுவுவதும், அதை முறையாகப் பராமரிப்பதும், அதற்குத் தேவையான தண்ணீர் உறுதிப்படுத்தப்படுவதும், நாகரிக வாழ்க்கை முறைக்கு நாளைய தலைமுறையைத் தயார்படுத்தும் முயற்சியின் ஒரு பங்காகத்தான் கருதப்பட வேண்டும்.
கிராமப்புறப் பள்ளிக்கூடங்களில், குறிப்பாக ஊராட்சி, ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட வேண்டுமானால், கழிப்பறைகளை நவீனப்படுத்துவது அவசியம். இதில் பழைய மாணவர்கள் பங்களிக்க முன்வருவது அவசியம்.ஒவ்வொரு வகுப்புக்குச் செல்லும்போதும் ஆசிரியர்கள் மட்டும் முகம் கழுவி, தெளிவாக வரும்போது, மாணவர்களின் முகம் மட்டும் சோர்வு வழிந்துகொண்டிருக்க வேண்டுமா என்ன? எல்லாவற்றையும் “சாட்டை’யைக் கொண்டா சொல்ல முடியும்?
நன்றி: தினமணி 12 10 2012