முஸ்லிம்களும் மூன்றாம் உலகப் போரும்!
நபிகளாரை களங்கப்படுத்தும் வீடியோ – மூன்றாம் உலகப் போருக்கான முஸ்தீபே..!
உலகில் வாழும் 160 கோடி முஸ்லிம்களினதும் உணர்வுகளை சீண்டி, கொதி நிலைக்குக் கொண்டு சென்ற ஒரு நிகழ்வே நபிகளாருக்கு எதிரான அண்மைய திரைப்பட வெளியீடு. முஸ்லிமாய் அவதரித்த ஒவ்வொருவரும் தம் உயிரினும் உயர்வாய் மதிக்கும் மா மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அப்பழுக்கற்ற ஆன்மீக, ஒழுக்க, சமுதாய வாழ்வினை கலங்கப் படுத்தும் விதமாய் ‘மர்மக் கும்பல்’ ஒன்றினால் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டதே ‘INNOCENCE OF MUSLIMS’ – முஸ்லிம்களின் அப்பாவித்தனம் எனும் திரைப்படமாகும்.
You Tube இணைய தளத்தில் வெளியிடப்பட்ட இத்திரைப்படத்தின் 14 நிமிட முன்னோட்ட காணொளி நபிகளாரின் நற்குணங்களுக்கு இழுக்கை ஏற்படுத்தி, அவர்களின் தூய சரிதத்தை அவதூறுகள் மூலம் அசிங்கப்படுத்திக் காட்ட முனைந்துள்ளமை பட்டவர்த்தனமாகும். அவர் தோற்றுவித்த மார்க்கம் இஸ்லாம் இழிவானது. அவரை பின்பற்றும் முஸ்லிம்கள் அப்பாவித்தனமானவர்கள்’ என்ற போலித் தோற்றத்தை உலக அரங்கில் துளிர்விடச் செய்வதற்காய் எடுக்கப்பட்ட ஒரு காடைத்தன முயற்சியின் முன்னெடுப்புகளில் ஒன்றே இதுவுமாகும்.
முஸ்லிம்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கும் இது போன்ற பல்வேறு எத்தனங்கள் கிட்டிய காலத்தில் பல விடுத்தம் உலக அரங்கில் அரங்கேற்றப்பட்டுள்ளமையை எம்மால் காண முடியும்.
முஸ்லிம்களை தீவிரவாதியாய் சித்தரிக்கும் விதமாய் திட்டமிட்டு நடாத்தப்பட்ட 2001 செப்டம்பர் 11 உலக வர்த்தக கட்டடத் தாக்குதல், தலைப்பாகைக்குள் குண்டு வைத்த நிலையில் ஒரு பயங்கர வாதியாக நபிகளாரை காட்சிப்படுத்தி டென்மார்க் பத்திரிகை Jyllands – posten மற்றும் நோர்வே பத்திரிகையில் 2005 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட கேலிச்சித்திரம், திருக்குர்ஆன் தீவிரவாதத்தை விதைக்கும் புத்தகம் என்பதை விபரிக்கும் வண்ணம் நெதர்லாந்து அரசியல் வாதியொருவரினால் வெளியிடப்பட்ட ‘பித்னா’ எனும் ஆவணப்படம், நபிகளாரை கேலிச்சித்திரமாய் வரைந்து போட்டி வைக்க முனைந்த face book சமூக வலைப்பின்னல் இணையதளத்தின் நரித்தனம், குவாந்தனாமோ தடுப்பு முகாம் கழிவறைக்குள் வீசப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகள், ஆப்கான் பாக்ராம் முகாமில் தீக்கிரையாக்கப்பட்ட திருக்குர்ஆன் பிரதிகள், Terry Jones என்ற கிறிஸ்தவ மதவெறி பிடித்த பாதிரியினால் பிரகடனப் படுத்தப்பட்ட குர்ஆன் எரிப்புக்கான அறைகூவல், பிரான்ஸ் மஸ்ஜித் நுழைவாயிலில் இரத்தம் சொட்டச் சொட்ட பன்றியின் தலையை அறுத்துக் கொழுவிய ஈனத்தனம், ‘குருடனாய் இருந்தேன் விழித்துக் கொண்டேன்’ என்ற பெயரில் குர்ஆனையும் நபியையும் இழிவு படுத்தும் விதமாய் எகிப்தில் மேடையேற்றப்பட்ட நாடகம், முஸ்லிம்களையும் இஸ்லாத்தையும் இம்சிக்கும் விதமாய் எடுக்கப்படும் ஹொலிவுட் மற்றும் பொலிவுட் திரைப்படங்கள் உள்ளிட்ட சர்வதேச ரீதியில் இஸ்லாத்தின் எதிரிகளால் முன்னெடுக்கப்படும் இலத்திரணியல் ஊடான இஸ்லாம் விரோத செயற்பாடுகளை பட்டியல் இட்டுக்கொண்டே செல்லலாம். இவைகளுக்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல் அமைந்ததே ‘INNOCENCE OF MUSLIMS’ என்ற காணொளிக் காட்சிகள்.
“ஒருவரை பாரபட்சப்படுத்தக் கூடிய, பகைமையை அல்லது வன்முறைகளைத் தூண்டக் கூடிய, இன-மத-தேசிய ரீதியிலான தூண்டுதல்களாக அமையும் சகல நடவடிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட வேண்டும்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் சமவாயத்தின் 20 வது ஷரத்து தெளிவாக எடுத்துச் சொல்லியிருந்தும், But we don’t permit hate speech(speech which attacks or demeans a group based on race or ethnic origin, religion, disability, gender, age, veteran status, and sexual orientation/gender identity) “வெறுக்கத்தக்க பேச்சு, ஒரு மதத்தை தாக்கி அல்லது அவமதிக்கும் பேச்சை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று You Tube ன் community guideline இன் Don’t Cross the Line என்ற தலைப்பிற்கு கீழ் உள்ள 6 வது விதி குறிப்பிட்டிருந்தும், முழு புசனிக்காயை சோற்றில் மறைக்க எத்தனிக்கும் விதமாய் “இதை நீக்க முடியாது. இது Google விதிக்கமைவாகவே உள்ளது” என்று You Tube தளம் அறிக்கை விட்டிருப்பதும், “இது தனி மனித உரிமை. இதில் எமக்கு கைவைக்க முடியாது” என்று அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உள்ளிட்ட மேற்குலக நாடுகள் ‘கருத்துரிமை’ என்ற முகமூடி அணிந்து, நரியாட்டம் ஆடி உலகை ஏமாற்ற முனைவதிலிருந்தும் இச்செயற்பாடுகளின் பின்புலத்தில் வித்தியாசமானதோர் இலக்கு இவர்களால் குறிவைக்கப்படுகிறது என்பதை துலாம்பரமாய் புரிந்து கொள்ள முடிகிறது.
சமகால அரசியல், பொருளாதார, இராணுவ காய் நகர்த்தல்களை உன்னிப்பாய் பகுப்பாய்வு செய்யும் போது உலக அரங்கில் மேடையேற்றப்படும் நாடகங்களின் தலையாய நோக்கை பின்வருமாறு அடையாளப்படுத்த முடியும்.
1. ஸியோனிச சிந்தனைகளுக்கு ஏற்ப உலக ஒழுங்கை மாற்றியமைத்தல். உலகத்தின் இயங்கு திசையை தீர்மானிக்கும் சக்தியாக இன்று ஸியோனிசவாதிகள் திகழ்வதை காணலாம். உலகை ஆட்டிப்படைக்கும் சக்தி அமெரிக்கா என்றால், அமெரிக்காவை ஆட்டுவிக்கும் சக்தியாக ஸியோனிஸம் இருப்பதை அமெரிக்காவின் இஸ்ரேல் சார்புக் கொள்கையிலிருந்து இலகுவாய் புரிந்து கொள்ள முடியும். உலக மக்களின் கல்வி, கலை, கலாசாரம், அரசியல், பண்பாடு, பொருளாதாரம், சுகாதாரம் உள்ளிட்ட வாழ்வின் அனைத்துக் கோணங்களையும் ஸியோனிசக் கனவுகளுக்கும் சிந்தனைகளுக்கும் ஏற்ப வடிவமைப்பதன் மூலம் தமது உலகளாவிய ஆதிக்கத்தை ஸ்தீரப்படுத்தி, தனது அபிலாஷைகளை இதனூடாக அடைந்து கொள்வதே ஸியோனிச சக்திகளின் பிரதான இலக்கு. இவ்விலக்கை எய்துவதற்காக 1993ஆம் ஆண்டு ஜோர்ஜ் டபிள்யு புஷ்ஷினால் போர்த்தப்பட்ட கவர்ச்சியான சொல்லாடலே The New World Order என்ற கோஷமும், கிளிண்டன், புஷ், ஒபாமா போன்றோரால் முன்னெடுக்கப்படும் PNAC எனும் புதிய அமெரிக்க நூற்றாண்டுக்கான திட்டமுமாகும்.
2. மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் ஸியோனிஸ சார்பு பொம்மை அரசுகளை நிறுவுதல். உலகளாவிய ஆதிக்கத்தை தக்க வைக்கும் ஸியோனிஸக் கனவுக்கோட்டையை தவிடு பொடியாக்கும் தடைகல்லாக முஸ்லிம் நாடுகள் அமைந்துவிடக் கூடாது என்பதற்காக, முஸ்லிம் நாடுகளுக்குள் தம் ஏவலுக்கு ஏற்ப ஆட்டம் போடும் பொம்மை அரசுகளை தோற்றுவித்தல். இதற்கான களத்தை மூன்று வழிகளில் உருவாக்குதல்.
A) முஸ்லிம் நாடுகளில் மனித உரிமை செத்துவிட்டன. நாம் ஜனநாயக ஆட்சியமைப்பை உருவாக்கப் போகின்றோம் என்ற ஜனநாயக முலாம் புசப்பட்ட பிரித்தாளும் காலனித்துவக் கொடியை சுமந்த வண்ணம் முஸ்லிம் நாடுகளுக்கெதிராய் போர் தொடுத்தல் அல்லது மக்கள் கிளர்ச்சியை தோற்றுவித்தல். ஈராக், ஆப்கான், துயுனீஸியா, எகிப்து, லிபியா உள்ளிட்ட நாடுகளின் யதார்த்த நிலை இது தான்.
B) முஸ்லிம் நாடுகளுக்குள் உள்நாட்டுக் கலவரங்களை உருவாக்கி, இரு சாராருக்கும் ஆயுத விநியோகத்தையும் தானே முன்னின்று செய்து, ஈற்றில் ஒரு பிரிவை பயங்கரவாதியாய் சித்தரித்து ‘சமாதானத்தை மலரச் செய்ய இதோ அமெரிக்க தலைமையிலான நேட்டோ படை வருகிறது’ என்று முழங்கிய வண்ணம் படையெடுத்து தனக்குத் தோதுவான ஆட்சியை ஸ்தாபித்தல். பற்றியெறியும் சிரியா, சோமாலியா, யெமன், சுடான் நைஜீரியா உள்ளிட்ட நாடுகள் இதற்கான சான்றுகளாகும். அத்தோடு, தம் நரித்தன ஆதிக்க சிந்தனையை லாவகமாய் அடைவதற்காக முஸ்லிம் நாடுகளுக்குள் யுத அடிவருடிகளான ஷீயாக்களை ஏவி விட்டு, உள்நாட்டு கலகங்களுக்கு தூபமிட்டு ஆட்சியை பலவீனப்படுத்த எத்தனித்தல். கடந்த ஒரு வருட காலமாய் ஷீயாக்களின் ஆர்ப்பாட்டங்கள் அதிகரித்து வரும் சவுதி அரேபியா, பஹ்ரைன், குவைத், லெபனான், பாகிஸ்தான் போன்ற நாடுகள் இதற்கான எடுத்துக் காட்டுகளாகும்.
C) உலக மோகத்தை காட்டி தனது அபிலாஷைகளுக்கான களத்தை உருவாக்கல். கடார், துபாய், குவைத், ஓமான் போன்றன இப்பிரிவுக்குள் வந்து விடும். இவ்வாறு ஸியோனிஸ சார்பாக உருவாக்கப்படும் மத்திய கிழக்கை தான் அமெரிக்காவின் முன்னால் இராஜாங்க செயலாளர் கொண்டலீஸா ரைஸ் ‘ஒரு புதிய மத்திய கிழக்கு’ என்ற சொல்லாடல் மூலம் உலகுக்கு அறிமுகப்படுத்தினார்.
3. இஸ்ரேலின் நீண்ட காலத் திட்டமான ‘மகா இஸ்ரேல்’ என்ற பரந்த ஆட்சிப்பரப்பை உருவாக்குதல். இஸ்ரேலில் ஆரம்பித்து பாலஸ்தீன், ஜோர்தான், லெபனான், எகிப்து, சிரியா என்று நீடித்து மத்திய கிழக்கின் அரபு நாடுகளை காவு கொண்டு மக்கா – மதீனா உள்ளிட்ட சவுதி அரேபியா வரை தனது இலட்சியக் கனவான மகா இஸ்ரேல் எனும் நாட்டை உருவாக்குதல். இவ்விலக்கை அடைவதற்காய் அரபு முஸ்லிம் நாடுகளை துண்டாடி, பலவீனப்படுத்தி, இறுதியில் போர் தொடுத்து ஆக்ரமித்தல். பலஸ்தீன், மேற்குக் கரை, ஜெரூஸலம்,1967 அரபு யுத்தத்தில் எகிப்து மற்றும் சிரியாவிடமிருந்து கைப்பற்றப்பட்ட பகுதிகள், இன்று லெபனானை சீண்டி வம்புக்கிழுக்க முனையும் முஸ்தீபுகள் யாவும் இப்பின்னணியில் நோக்கப்பட வேண்டியவையே.
4. உலக வழங்களை சுரையாடி பொருளாதார ஆதிக்கத்தை தக்க வைப்பது. சரிந்து விழும் மேற்குலகின் பொருளாதார பாதிப்பை ஈடு செய்வதற்காய் பிற நாடுகளின் கனிய வழங்களை கையகப்படுத்த எத்தனித்தல். போபியம் செடிகளின் வருவாயை சுரையாடுவதற்காய் தாக்கப்பட்ட ஆப்கான், பெற்றோலியத்துக்காய் எதிர்க்கப்பட்ட ஈராக், லிபியா இதற்கான நடை முறை ஆதாரங்களாகும்.
ஸியோனிஸ சக்திகளின் மேற்குறிப்பிட்ட இலக்குகளுடன் இன்னும் சில இலக்குகளையும் அடைந்து கொள்வதற்கு தடை கல்லாக இருக்கும் ஒரு சக்தி இஸ்லாம் என்ற கொள்கை ஒன்று தான்.
ஸியோனிஸத்தின் இருப்பை ஆட்டம் காணச் செய்யும் விதமாய் உலகலாவிய ரீதியில் இன்று இஸ்லாம் காட்டுத் தீயாய் வியாபித்து வருகின்றது. இவ்வளர்ச்சி தடுக்கப்பட வேண்டுமாயின் இஸ்லாத்துக்கெதிரான ஒரு சக்தி உருவாக்கப்பட்டு, அதன் மூலம் இஸ்லாம் சீண்டப்பட வேண்டும். இதனடியாக முஸ்லிம்களின் உணர்வுகள் தூண்டப்பட்டு, முஸ்லிம்கள் அராஜக செயற்பாடுகளில் களமிறங்க வேண்டும். இதை சாட்டாக வைத்து ஒட்டுமொத்த உலகத்தையும் முஸ்லிம்களுக்கெதிராய் திசை திருப்பி, மூன்றாவது உலகப் போரை ஆரம்பித்து, முஸ்லிம் நாடுகளை துவம்சம் செய்வதன் மூலம் தமது இலக்குகளை அடைந்து கொள்ள வேண்டும் என ஸியோனிஸம் போட்ட கணக்கின் ஆரம்ப தீப்பொறியே ‘INNOCENCE OF MUSLIMS’ என்ற ஆயுதம். ஸியோனிஸம் போட்ட கணக்குப்படி மொத்த முஸ்லிம் உலகும் உணர்வுக் கொந்தளிப்பின் உச்சத்தில் இருக்கிறது.
பல இடங்களில் அத்து மீறிய எதிர் நடவடிக்கைகள் நடந்தேறியுள்ளன. கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்குமிடையிலான வெறுப்புணர்வு எரிமலையாகியுள்ளது. இவ்வுணர்ச்சிகரமான தருணத்தை தான் இத்திரைப்படம் மூலம் ஸியோனிஸம் உருவாக்க எத்தனித்தது. இதன் எதிரொலியே, பெங்காஸியில் அமெரிக்க உதவித் தூதுவர் கொல்லப்பட்டவுடன் லிபிய கடற் பரப்பை நோக்கி நங்கூரமிடுமாறு ஒபாமாவினால் அனுப்பப்பட்ட இரு யுத்தக் கப்பல்கள். முஸ்லிம் உலகுக்கும் பிற சக்திகளுக்குமிடையிலான மூன்றாம் உலகப்போருக்கான சகல முஸ்தீபுகளும் தற்பொழுது அதிரடியாய் முன்னெடுக்கப்படுகின்றன.
மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பும், கடந்த 26-09-2012 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வில் UNO பொதுச் செயலாளர் அவர்கள் ‘சிரியாவில் அமைதியை தோற்றுவிப்பதற்கு சர்வதேச நடவடிக்கையே அவசியம்’ என்று தெரிவித்த கருத்தும், ‘தீவிரவாதத்திற்கு எதிராக உலகத் தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும்’ என்ற பராக் ஒபாமாவின் அறிவிப்பும் இப்படையெடுப்புக்கான எதிர்வு கூறல் என்றால் மிகையாக மாட்டாது.
பின்வரும் நபிகளாரின் முன்னறிவிப்பும் மேற்குறித்த கருத்துக்களை உண்மை படுத்தும் விதமாய் அமைவதை காணலாம்: “மஞ்சள் நிறத்தவர் (வெள்ளையர்)களுக்கும் உங்களுக்கும் யுத்தம் நடக்கும். அவர்கள் 80 அணிகளாக உங்களை நோக்கி வருவார்கள். ஒவ்வொரு அணிகளிலும் 12 ஆயிரம் பேர் இருப்பார்கள்.” (நூல் : புகாரி 3176.எனவே, ‘முஸ்லிம்களின் அப்பாவித்தனம்’ மூன்றாம் உலகப் போருக்கான முஸ்தீபே! என்பதை நாம் புரிந்து கொள்ளும் காலம் வெகு தொலைவில் இல்லை!
அழைப்பு இதழின் ஆசிரியர் தலையங்கம். – அக்டோபர்.
source: www.rasminmisc.com