உங்களுக்கு நேசிக்கத் தெரியுமா?
அன்பு செலுத்துவது ஒரு கலை. இதில் தேர்ச்சி பெற வேண்டுமானால், அறிவும் பயிற்சியும் தேவை. பலவந்தமாகப் பிடுங்குவது அல்ல; பங்கு வைக்கும்போதுதான் அன்பு வளர்கிறது. வெளிபடுத்தப்படாத அன்பு பயனளிக்காது. ஒவ்வொரு புலன்களின் வழியாகவும் வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் அன்பை வெளிப்படுத்துவது அவசியம்.
“உங்களுக்கு என்னிடம் அன்பு இருக்கிறதா?” ஒவ்வொரு தம்பதியும் பரஸ்பரம் கேட்டுக்கொள்ளும் சாதாரணமான கேள்வி இது.
பதிலை பெரும்பாலும் நேரடியாகச் சொல்ல மாட்டார்கள்.
“பிறகு எதற்காக நான் இவ்வளவு கஷ்டப்பட்டு உன்னையும் பிள்ளைகளையும் காப்பாற்றுகிறேன்?”
“ஒரு விஷயம் உண்மை. நான் உங்களை நேசிப்பது மாதிரி, நீங்கள் என்னை நேசிப்பது இல்லை!
“உங்களுக்கு என் மீது அன்பு இருக்கிறதா?” என்று கேட்பவர்கள், சுயமாகத் தங்களிடம் தாங்களே கேட்டுப்பாருங்கள்.
“உங்களுக்கு மற்றவர்களிடம் அன்பு இருக்கிறதா? நீங்கள் அன்பை வெளிக்காட்டுவது உண்டா?
நீங்கள் கோருவதைப் போல, உங்களை நேசிப்பதற்கான அருகதை உங்களுக்கு உண்டா?
அதற்கான சிறப்பியல்புகள் உங்களிடம் ஏதேனும் உள்ளனவா?”
மாமருந்து
அன்பை வளர்க்கும் மாமருந்து ஒன்று உங்களுக்கு கிடைத்திருப்பதாக வைத்துக் கொள்வோம். அதன் ஒரே ஒரு டோஸ் மட்டும் தான் கிடைத்திருக்கிறது. நீங்கள் உடனடியாக அதை அருந்திவிட்டு, முன்பைவிட அன்பு நிறைந்தவராக மாறுவீர்களா? அல்லது அதை உங்கள் மனைவியிடம் கொடுப்பீர்களா?
யாருக்கும் எதையும் கொடுக்க விரும்பாத ஒரு கருமியாக இருந்தாலும் அதை, வழக்கத்துக்கு விரோதமாக உங்கள் மனைவிக்கு கொடுப்பீர்கள். ஏனெனில், அவளுக்குள் அன்பை அதிகரிக்கச் செய்து, நீங்கள் எதிர்பார்க்கும் அன்பை அவளிடமிருந்து பெறுவதற்காக! இந்த மாமருந்து அவளுக்கு கிடைத்தாலும் இதுவேதான் நடக்கும். அதை அவள் அருந்துவதற்கு பதிலாக உங்களுக்குகொடுத்து, உங்களை முன்பைவிட அதிகமாக அன்புள்ளவராக அவளிடம்நடந்துகொள்ள வைப்பதற்காக! இதற்கெல்லாம் என்ன காரணம்? நம்மால் பிறரை நேசிக்க முடியும் என்று நடிப்பதுதான்.
பிறர் மீது அன்பு செலுத்தும் வல்லமை நம்மிடம் எவ்வளவு இருக்கிறது என்பதைக் கண்டறிய நாம் முற்பட மாட்டோம். அவளிடம் அல்லது அவரிடம் அந்த அளவுகோலைப் பயன்படுத்துவோம்.
அன்பு செலுத்த சற்று மெனக்கிட வேண்டும். சிரமப்படக்கூட நேரும். ஆனால், அதன் பிறகு நேசிக்கப்படும்போது மிகவும் சுகமாக இருக்கும். அந்த சுகம் உங்களுக்குக் கிடைப்பதற்காக அவரை அல்லது அவளை நேசிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா?
நேசிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்
அன்பு, இயல்பாகவே ஏற்பட வேண்டும் என்பதில்லை. நேசிப்பது ஒரு கலை. இதில் தேர்ச்சி பெற அறிவும் பயிற்சியும் நிச்சயமாகத் தேவை.
எல்லோராலும் எல்லோரையும் நேசிப்பது சாத்தியமல்ல. அதற்கெல்லாம் எவ்வளவோ காரணங்கள் உள்ளன. பிற மனித உறவுகளிடம் அன்பு செலுத்த முடியவில்லை என்றால் “குட்பை” சொல்லிப் பிருந்து விடலாம். ஆனால், திருமண உறவுகளில் அது, அவ்வளவு சுலபமல்ல. குறிப்பாக நமது நாட்டில் அது பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். பெரும்பாலானவர்கள் விருப்பப்பட்டு திருமணம் செய்து
கொண்டவர்களாக இருக்க மாட்டார்கள். விரும்பாவிட்டாலும் இணைந்தே வாழ வேண்டியிருக்கிறது. ஏனெனில், திருமணம் என்பது ஒப்பந்தம் என்பதோடு மட்டுமல்லாமல், சமூகமும், குடும்பமும், உறவினர்களும் நம் மீது திணிக்கும் கடமைகளால் தம்பதி, பரஸ்பரம் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
திருமணம் செய்து விட்டால் இணைந்து வாழ்ந்தே தீர வேண்டும். அதுதான் இவ்விஷயத்தில் நிபந்தனை. பிரிந்துவிட்டால், சில நேரம் சமூகம் ஒதுக்கி வைக்கவும் செய்யலாம். விமர்சனத்துக்கும், பிறரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும், ஆத்ம நிந்தனைக்கும் இரையாக வேண்டி வரும். அதற்குப் பிந்தய வாழ்க்கை பாலைவனத்தில் பயணம் செய்யும் ஆதரவற்ற பயணி போலாகிவிடும். அப்படி இல்லையென்று நாம் நடிப்போம். ஆனால், திருப்தியின்மையும், துயரச் சிந்தனைகளும் மனதுக்குள்ள் தாண்டவமாடும்.
ஒரே வீட்டில் வசித்தாலும், ஒரே படுக்கையில் படுத்து உறங்கினாலும், பல தம்பதியர் தனிமைப்பட்டவர்கள் தான். அவர்கள் ஒருவருக்கொருவர் முது காட்டிக்கொண்டு உறங்குவார்கள். காலையில் கண் விழிக்கிறார்கள். அவரவர் பாதைப்படியே சிந்தித்துச் செயல்பட்டுப் பயணம் செய்கிறார்கள். வாழ்க்கையினெதிர்த்திசைகளை நோக்கி பயணம் செய்பவர்களுக்கு நடுவே அன்பு கிடையாது. ஏராளமானவர்கள் கடமைகள் மற்றும் நன்றிகளின் பெயராலும், குழந்தைகளின் பாதுகாப்புக்காக வேண்டியும், ஊராருக்கு நிரூபிப்பதற்காக வேண்டியும் வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துகிறார்கள். “நான் இந்தப் பிள்ளைகளுக்காகத்தான் உயிர் வாழ்கிறேன்!” என்று ஒரு தடவையாவது நினைக்காத தம்பதிகள் இருக்கிறார்களா?
உடலுறவு என்பது தரையிலிருந்து கிழங்கைக்கைப் பறித்தெடுப்பது மாதிரி…. சர்க்கரை வள்ளிக் கிழங்கைக் கொத்தாகப் பறித்து எடுப்பது மாதிரியான ஓர் அனுபவம்தான் என் கணவருக்கு. இதைப்பற்றி அவரிடம் பேசப்போனால் அவர் சொல்வார்; “உனக்கு என்ன ஆகிவிட்டது? உனக்கு வேறெவருடனாவது படுத்துப் பழக்கம் இருக்கிறதா என்ன?” என்று கேட்பார் என்கிறார் ஒரு இல்லத்தலைவி.
அன்புப் பின்னணியில் எப்போதாவது கணவன் மனைவியின் உடல்களும் மனமும் ஒன்றிணையும் நிமிடங்கள் அல்லவா அது?
கோபமும் பயமும் ஏற்படும்போது அதன் அடையாளங்கள் ஓரளவுக்காவது வெளிப்படும் என்பது அனைவரும் அறிந்ததே. அப்படியானால் “அன்பு” என்ற உணர்வு ஒருவரிடம் ஏற்படும்போது, வெளிப்படையான அடையாளங்கள் ஓரளவுக்காவது தென்படுமில்லையா? அன்பு என்பது இளஞ்சூடான ஓர் உணர்வு அல்லவா? குறிப்பக முதுமை அடையாதவர்களுக்கு மத்தியில், கண்களில் பளபளப்பு, உணர்ச்சி மிகுந்த அமைதியான குரல், வார்த்தைகளைத் தேடும் திணறல் – இவையெல்லாம் கூட ஓரளவுக்குத் தென்படுமில்லையா?
வெவ்வேறு மனிதர்களிடம் வெவ்வேறு வகையாக வெளிப்படுகிறது அன்பு. எனவே, விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் இணைந்து வாழ்ந்தே தீர வேண்டும் என்கிற நிலை ஏற்படும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் முடிந்த அளவுக்கு மகிழ்ச்சியாக வாழ்வதற்குரிய வழியை அமைத்துக் கொள்வதுதானே புத்திசாலித்தனம்?
விவேகம் சுட்டிக்காட்டும் வழியில் பயணம் செய்யலாமே! கொஞ்சம் சிரமப்பட்டாலும், நேசிக்கக் கற்றுக் கொள்வதுதான் அதற்குரிய வழி. விருப்பமில்லாத பாடமாக இருந்தாலும்,, சிரமப்பட்டு படித்தால் பாஸ் மார்க்காவது வாங்கலாம் தானே! பரஸ்பரம் நேசிக்க முடிகிற தம்பதியர் இருக்கிறார்களா? அப்படியானால் அவர்களுக்கு சொர்க்க வாசலின் கதவுகள் எப்போதும் திறந்தே இருக்கும்.