இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாகம் ஏன்?
[ இஸ்லாம் முன்வைக்கும் வாரிசுரிமைச் சட்டங்களுள் ஆண் பெறும் பங்கில் அரைப் பங்கைப் பெண் பெறுகின்றாள் என்பது பொதுவான ஒர் அம்சமாகும் (சொத்துப் பங்கீட்டில், ஓர் ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்’ (சூறா அந்நிஸா-11) என்ற மறைவாக்கியம் இதனை விளக்குகின்றது. இதனடிப்படையில் பெண் பெறுகின்ற பாகத்தின் இரு மடங்கை ஆண் பெறுகின்றான்.
இந்தக் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக இன்று பல கேள்விக்கணைகள் தொடுக்கப்படுகின்றன. ஆண் – பெண் சமத்துவம் தொடர்பாக பெரிதும் உரையாற்றப்படுகின்ற இக் காலப்பகுதியில் இந்தப் பங்கீட்டின் ஊடாக முஸ்லிம் பெண் அநீதியிழைக்கப் பட்டிருக்கின்றாள் எனவும் இந்தச் சட்டங்கள் இன்றைய காலத்திற்குப் பொருத்தமற்றவை எனவும் இது ஆணாதிக்க சிந்தனையினூடாக உருவானது எனவும் சொத்துக்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் எனவும் கோஷங்களும் கூக்குரல்களும் எழுந்த வண்ணமுள்ளன.
மேற்கத்தைய நாட்டவர்களால் முன்வைக்கப்பட்ட இந்த விமர்சனங்களை தற்காலத்தில் நம் நாட்டவர்களும் முஸ்லிம் பெண்ணிலைவாதிகளும் முன் வைக்கத் தலைப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விமர்சனங்களும் கருத்துக்களும் சரியானவையா? என ஆராய்ந்து, விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.]
இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாகம் ஏன்?
இஸ்லாம் மனித வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் ஒழுங்குபடுத்தி, சீர்படுத்த வந்த மார்க்கமாகும். அந்த வகையில் மிகவும் சிக்கலானதும் பல குழப்பங்களை தோற்றுவிப்பதுமான பொருளாதார நடவடிக்கைகளையும் இஸ்லாம் செப்பனிட்டு வழிகாட்டியுள்ளது.
அதிலும் மிகமுக்கியமாக ஒரு மனிதன் இவ்வுலகில் பொருளாதார வளத்துடன் வாழ்ந்து, மரணித்ததன் பின்னர் அவனுடைய அந்த சொத்துக்களும் செல்வமும் குடும்பத்தினர் மத்தியில் எவ்வாறு பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்பதை இஸ்லாம் தெட்டத்தெளிவாக விளக்கியுள்ளது.
குறிப்பாக பாகப்பிரிவினை தொடர்பான சட்டங்களுள் பெரும்பாலானவற்றை அல்லாஹ்தஆலாவே தெளிவாக விளக்கியிருப்பதை நாம் அவதானிக்கலாம். ”சூறா அந்நிஸாவின் 11,12” ஆம் வசனங்கள் இதனை தெளிவாக விளக்கும் இறை வசனங்களாகும்.
“உங்கள் மக்களில் ஓர் ஆணுக்கு இரண்டு பெண்களுக்குக் கிடைக்கும் பங்குபோன்றது கிடைக்கும் என்று அல்லாஹ் உங்களுக்கு உபதேசிக்கின்றான்; பெண்கள் மட்டும் இருந்து அவர்கள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டிருந்தால் அவர்களுக்கு இறந்து போனவர்விட்டுச் சென்றதில் மூன்றில் இரண்டு பாகம் கிடைக்கும். ஆனால் ஒரே பெண்ணாக இருந்தால் அவள் பங்கு பாதியாகும்; இறந்தவருக்கு குழந்தை இருக்குமானால் இறந்தவர் விட்டுச் சென்றதில் ஆறில் ஒரு பாகம் (அவரது) பெற்றோர் ஒவ்வொருவருக்கும் உண்டு. ஆனால் இறந்தவருக்கு குழந்தை இல்லாதிருந்து பெற்றோர் மாத்திரமே வாரிசாக இருந்தால் அவர் தாய்க்கு மூன்றில் ஒரு பாகம் (மீதி தந்தைக்கு உரியதாகும்); இறந்தவருக்கு சகோதரர்கள் இருந்தால் அவர் தாய்க்கு ஆறில் ஒரு பாகம் தான் (மீதி தந்தைக்கு சேரும்). இவ்வாறு பிரித்துக் கொடுப்பது அவர் செய்துள்ள மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான்; உங்கள் பெற்றோர்களும், குழந்தைகளும் – இவர்களில் யார் நன்மை பயப்பதில் உங்களுக்கு நெருக்கமாக இருப்பவர்கள் என்று நீங்கள் அறிய மாட்டீர்கள்; ஆகையினால் (இந்த பாகப்பிரிவினை) அல்லாஹ்விடமிருந்து வந்த கட்டளையாகும்; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.” (அல்குர்ஆன் 4:11)
“இன்னும் உங்கள் மனைவியர் விட்டுச் சென்றதில் – அவர்களுக்குப் பிள்ளை இல்லாதிருந்தால் உங்களுக்குப் பாதி பாகம் உண்டு; அவர்களுக்குப் பிள்ளை இருந்தால் அவர்கள் விட்டுச் சென்றவற்றிலிருந்து உங்களுக்கு கால் பாகம்தான் – (இதுவும்) அவர்கள் செய்திருக்கிற மரண சாஸனத்தையும், கடனையும் நிறைவேற்றிய பின்னர்தான் – தவிர உங்களுக்குப் பிள்ளையில்லாதிருப்பின் நீங்கள் விட்டுச் சென்றதிலிருந்து அவர்களுக்குக் கால் பாகம்தான்; உங்களுக்குப் பிள்ளை இருந்தால், அப்போது அவர்களுக்கு நீங்கள் விட்டுச் சென்றதில் எட்டில் ஒரு பாகம்தான்; (இதுவும்) நீங்கள் செய்திருக்கும் மரண சாஸனத்தையும் கடனையும் நிறைவேற்றிய பின்னரேதான்; தந்தை, பாட்டன் போன்ற முன் வாரிசுகளோ அல்லது பிள்ளை, பேரன் போன்ற பின் வாரிசுகளோ இல்லாத ஓர் ஆணோ அல்லது பெண்ணோ – இவர்களுக்கு ஒரு சகோதரனோ அல்லது சகோதரியோ இருந்தால் – அவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறில் ஒரு பாகம் உண்டு; ஆனால் இதற்கு அதிகமாக இருந்தால் அவர்கள் மூன்றில் ஒரு பாகத்தில் சமமாகப் பங்கிட்டுக் கொள்ளவேண்டும் – (இதுவும்) அவர்களின் மரண சாஸனமும் கடனும் நிறைவேற்றிய பின்னர்தான்; ஆனால் (மரண சாஸனத்தைக் கொண்டு வாரிசுகள்) எவருக்கும் நஷ்டம் ஏற்படக் கூடாது (இது) அல்லாஹ்வினால் விதிக்கப்பட்டதாகும்; இன்னும் அல்லாஹ் (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும், மிக்க பொறுமையுடையோனுமாகவும் இருக்கின்றான். (அல்குர்ஆன் 4:12)
இஸ்லாம் முன்வைக்கும் வாரிசுரிமைச் சட்டங்களுள் ஆண் பெறும் பங்கில் அரைப் பங்கைப் பெண் பெறுகின்றாள் என்பது பொதுவான ஒர் அம்சமாகும் (சொத்துப் பங்கீட்டில், ஓர் ஆணுக்கு இரு பெண்களுக்குரியது போன்ற பாகம் உண்டென்று அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகின்றான்’ (சூறா அந்நிஸா-11) என்ற மறைவாக்கியம் இதனை விளக்குகின்றது. இதனடிப்படையில் பெண் பெறுகின்ற பாகத்தின் இரு மடங்கை ஆண் பெறுகின்றான்.
இந்தக் குறிப்பிட்ட விடயம் தொடர்பாக இன்று பல கேள்விக்கணைகள் தொடுக்கப்படுகின்றன. ஆண் – பெண் சமத்துவம் தொடர்பாக பெரிதும் உரையாற்றப்படுகின்ற இக் காலப்பகுதியில் இந்தப் பங்கீட்டின் ஊடாக முஸ்லிம் பெண் அநீதியிழைக்கப் பட்டிருக்கின்றாள் எனவும் இந்தச் சட்டங்கள் இன்றைய காலத்திற்குப் பொருத்தமற்றவை எனவும் இது ஆணாதிக்க சிந்தனையினூடாக உருவானது எனவும் சொத்துக்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமாகவே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் எனவும் கோஷங்களும் கூக்குரல்களும் எழுந்த வண்ணமுள்ளன.
மேற்கத்தைய நாட்டவர்களால் முன்வைக்கப்பட்ட இந்த விமர்சனங்களை தற்காலத்தில் நம் நாட்டவர்களும் முஸ்லிம் பெண்ணிலைவாதிகளும் முன் வைக்கத் தலைப்பட்டுள்ளனர்.
எனவே, இந்த விமர்சனங்களும் கருத்துக்களும் சரியானவையா? என ஆராய்ந்து, விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.
இஸ்லாம் குடும்ப வாழ்வை இரு பெரும் பிரிவுகளாக பிரித்துள்ளது. குடும்பத்தின் முழுச் செலவினங்களையும் உள்ளடக்கிய பொருளாதாரப் பொறுப்பை இஸ்லாம் ஆணுக்கு வழங்கியுள்ளது. குழந்தை உருவாக்கம், பிள்ளை வளர்ப்பு, வீட்டு நிர்வாகம் போன்றவற்றை உள்ளடக்கிய வீடு சார்ந்த பொறுப்புக்களை இஸ்லாம் பெண்ணுக்கு வழங்கியுள்ளது.
இந்தப் பிரிவினை ஒருவர் மற்றவரின் பொறுப்புக்களில் உதவக் கூடாது என்ற வகையிலான நிரந்தரப் பிரிவன்று. இது ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து ஒத்துழைப்பு வழங்கும் வகையிலான ஒரு பொறுப்பாகும். ஆண் – பெண்ணுடைய உடலமைப்பு, பலம், பலவீனம், இயல்பூக்கம், உளப்பாங்கு போன்றவற்றை கருத்திற்கொண்டே இவ்வாறு பொறுப்புக்கள் பிரிக்கப்பட்டுள்ளன.
மேற்குறிப்பிடப்பட்டவாறு குடும்பத்தின் முழுமையான பொருளாதாரச் சுமைகளையும் ஆண் எவ்வாறு சுமக்கின்றான் என்பதைக் கீழ்வரும் அம்சங்கள் விளக்குகின்றன.
ஆண் அவன் எந்த நிலையில் இருந்தாலும் பிறருக்குச் செலவழிக்கக் கடமைப் பட்டுள்ளான். அவன் தந்தை, கணவன், சகோதரன், மகன் என்ற நிலைமைகளின் போது அவனது குடும்பத்திற்கு செலவழிக்கும் பொறுப்பை ஏற்றுள்ளான்.
ஆண் தனது மனைவி, பிள்ளைகள், பெற்றோர் சிலபோது தமக்குத் தாமே செல வழித்துக் கொள்ள முடியாத வேறு உறவினர்கள் ஆகியோருக்கு உணவு, உடை, உரையுள் (நபகா) போன்ற அத்தியவசியச் செலவினங்களைச் செய் வது கடமையாகும்.
தனது பிள்ளைகளுக்குரிய கல்விக்கான செலவுகள், மனைவி, பிள்ளைகள், பெற்றோருக்கான வைத்தியச் செலவினங்களும் ஆணையேசாரும்.
திருமணத்தின் போது பெண்ணுக்குரிய மஹர், வீடு, உடை, ஆபரணச் செலவினங் களையும் ஆணே ஏற்க வேண்டும்.
சுருங்கக் கூறின் தனிமனித, திருமண, குடும்பச் செலவினங்களை முழுமையாக ஆண்தான் சுமக்கக் கடமைப்பட்டுள்ளான்.
இதே வேளை பொருளாதாரரீதியாக பெண் எந்த வகையான பொறுப்பையும் ஏற்க வேண்டியதில்லை என்பதை பின்வரும் அம்சங்கள் தெளிவுபடுத்துகின்றன.
பெண் அவளுக்கான செலவினங்களை அவள் எந்த நிலையிலிருப்பினும் ஓர் ஆணிடமிருந்து பெற்றுக்கொள்கின்ற உரிமை கொண்டவள். மகளாயின் தந்தையிடமிருந்தும் மனைவியாயின் கணவனிடமிருந்தும் சகோதரியாயின் சகோதரனிடமிருந்தும் தாயாயின் மகனிட மிருந்தும் அவளுக்கான முழுச் செலவினங்களையும் (நபகா) பெற்றுக் கொள்வாள்.
பெண் குடும்பத்தில் யார் மீதும் செலவு செய்யக் கடமைப்பட்டவளள்ளள். தனக்கோ தனது கணவன், பிள்ளைகளுக்கோ அவள் செலவு செய்யத் தேவையில்லை. சில அறிஞர்களின் கருத்துப்படி, ஒரு பெண் வசதியானவளாக இருக்கும் சந்தர்ப்பத்தில் அவளது கணவன் ஏழையாக இருந்து, அவள் தனக்கும் தனது கணவன், பிள்ளைகளுக்கும் செலவழித்தால், அவளது கணவன் வசதியுள்ளவனாக மாறிய பின்னர் செலவழித்த தொகையை அவள் மீள வசூல் செய்து கொள்ள முடியும். அது ஒரு கடன் போன்று கருதப்படும்.
அவள் திருமணம் செய்யும் போது அவளுக்கு எந்தப் பொருளாதாரப் பொறுப்பும் கிடையாது. அவளுக்குரிய வீடு, உடை ,ஆபரணம் என்பவையும் திருமண விருந்தும் (வலீமா) கணவன் மீதுள்ள பொறுப்புக்களாகும். அத்தோடு அவளுக்கு மஹர் என்ற வருமானமும் அதன் போது கிடைக்கும். இம் மஹர்த் தொகை சிலபோது பெருந்தொகைப் பணமாகவும் அமைந்து விடுவதும் உண்டு.
எனவே மேலே சுட்டிக்காட்டிய விடயங்களின் படி, இஸ்லாமிய குடும்பச் சட்டங்களின் அடிப்படையில் ஆணுக்குரிய செலவினங்கள் மிகஅதிகம். பொருளாதாரப் பொறுப்புக்களும் மிகப்பாரியது. அதனால் செல்வமும் சொத்துக்களும் அவனுக்கே கூடுதலாக வழங்கப்படுதல் வேண்டும். பொறுப்புக்களின் அடிப்படையில் இவ்வாறு ஏற்றத்தாழ்வோடு வழங்குவதே மிகவும் நியாயமானதாகும்.
உண்மையில் பெண்ணுக்கு வழங்கப்படுகின்ற அரைப்பாகம் கூட அவளுக்கு மேலதிகமாகக் கிடைக்கின்ற தொகையாகும். அவள் செலவுப் பொறுப்புக்கள் எதுவுமின்றி, அதனைக் கையாளலாம். இதனைக் கீழ்வரும் உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ள முடியும்.
ஒரு தந்தை தனது ஒரு மகனையும் ஒரு மகளையும் மாத்திரம் வாரிசுதாரராகவும் 30 இலட்சம் ரூபா பெறுமதியான சொத்தையும் விட்டுச் செல்கின்றார் என வைத்துக்கொள்வோம். இப்போது வாரிசுரிமைச் சட்டப்படி, மகனுக்கு இருபது இலட்சம் ரூபாயும் மகளுக்கு 10 இலட்சம் ரூபாயும் வாரிசுத் சொத்தாக கிடைக்கும். இவர்கள் இருவரும் திருமணம் முடிக்கும் நிலை வந்தால் அவர்களுடைய வரவு – செலவுகளை கீழ்வரும் அட்டவணை காட்டுகின்றது.
இந்த அட்டவணையின் படி மகனின் மீதி 1,50,000.00 ரூபாவும் தொடர்ந்து கையிருப் பாக இருக்க முடியாது. வேறு வருமானங்கள் எதுவுமில்லாவிட்டால் அவன் அதனை தனது மனைவி, குடும்பத்தின் செலவினங்களுக்காகச் செலவிடுவான்.
மகள் தனது உடை, அணிகலன்களுக் காகச் செலவிட்ட 100,000.00 ரூபாவும் அவள் கட்டாயமாகச் செலவழிக்க வேண்டிய தொகையன்று. அவ்வாறு செலவழித்ததாக எடுத்துக் கொண்டு பார்த்தாலும் அவளுக்கு மீதமாக 950,000.00 ரூபா காணப்படுகின்றது. அத்தோடு அவளுக்கு உடை, அணிகலன்கள் அவனது கணவனிடமிருந்தும் கிடைக்கும். இத்தொகையும் காலப்போக்கில் ஆணைப்போன்று கரைந்துவிடாது. அதனை அவள் தனது நிரந்தரமான சொத்தாக வைத்திருக்கவோ முதலீடுகளில் ஈடுபடுத்தி அதனைப் பெருக்கவோ முடியும். வேறு பொறுப்பான செலவினங்கள் அவளுக்குக் கிடையாது.
இந்த வகையில் அவதானிக்கும் போது பெண் ஆணின் பங்கைவிட அரைப்பாகம் பெறுவதானது அவளுக்கு மேலதிகமாக வழங்கப்படுகின்ற ஒரு சொத்தாகும். அந்தக் கோணத்தில் இருந்து பார்க்கும் போது பெண் அநீதியிழைக்கப்பட்டுள்ளாள் என்ற கதையை விடுத்து, அவள் ஆணை விட கௌரவப் படுத்தப்பட்டிருக்கின்றாள் என்ற முடிவுக்கு எம்மால் வர முடியும்.
ஆணுக்கும், பெண்ணுக்கும் சமமான பொருளாதாரப் பொறுப்புக்களைச் சுமத்தி, சொத்துப் பங்கீட்டை ஏற்றத் தாழ்வாகப் பிரிக்கும் போது தான் அங்கு அநீதி என்ற விடயத்தைப் பயன்படுத்தலாம். இங்கு ஆணுக்கு முழுப் பொருளாதாரச் சுமை களும் வழங்கப்பட்டு, பெண் முழுமையாகவே பொருளாதாரச் சுமைகளிலிருந்து விடுவிக்கப் பட்டு, வாரிசுச் சொத்துக்கள் இரு சாராருக்கு மிடையில் சமமாகப் பிரிக்கப்படுவது ஆணுக்குச் செய்யும் அநியாயமாகும்.. இதனால்தான் இஸ்லாம் இத்தகைய சொத்துப் பங்கீட்டை உருவாக்கியுள்ளது.
இந்தப் பின்னணியில் பார்க்கும் போது, பொருளாதாரப் பொறுப்புக்கள் சுமத்தப்படாத பெண்ணுக்கு ஏன் அரைப்பாகம் வழங்கப்படுகின்றது? என்ற கேள்வியும் எழ முடியும். ஆணுக்கு பணம், சொத்து என்பவற்றினால் அதிகமான நன்மைகளைப் பெறக் கூடிய வாய்ப்பு இருக்கின்றது. ஸகாத், ஸதகா, வஸிய்யத், வக்ப் போன்ற நற்கருமங்களின் மூலம் அவன் கணிசமான நன்மைகளைச் சம்பாதித்துக்கொள்வான். நன்மைகளைப் பெற்றுக் கொள்வதென்பது பெண்ணுக்கும் தேவையான ஒன்றாகும். எனவே, அவளிடம் சொத்துக்களும் செல்வமும் சொந்தமாக இருக்கும் பட்சத்திலேயே மேலே குறிப்பிட்ட நற்கருமங்களில் ஈடுபட வாய்ப்பேற்படும்.
அதேவேளை விவாகரத்து, கணவனின் திடீர் மரணம் போன்ற விரும்பத்தகாத, நிர்க்கதியான நிலைமைகளின் போது பிறரிடம் கையேந்தாது, அவளுக்கு உறுதுணையாக இருப்பதற்கு இத்தகைய சொத்துக்கள் அவசியப்படுகின்றன.
அத்தோடு, இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்களை நுணுக்கமாக ஆராயும் போது ஏழு சந்தர்ப்பங்களில் பெண் ஆணுக்கு சமனான பங்கையும் பத்து சந்தர்ப்பங்களில் ஆணை விட அதிகமான பங்கையும் நான்கு சந்தர்ப்பங்களில் பெண் வாரிசுரிமை பெறும் அதேவேளை அவளுடைய தரத்திலுள்ள ஆண் வாரிசுரிமை பெறாதிருப்பதையும் கண்டு கொள்ளலாம். எனவே, இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில் ஆணுக்கு வழங்கப்படுகின்ற பாகத்தில் அரைப்பாகம் பெண்ணுக்கு வழங்கப்படுவதால் அவள் அநீதியிழைக்கப்படவில்லை என்பதையும் அவளுக்கு வழங்கப்படும் பாகம் மேலதிகமான சொத்தாகும் என்பதையும் அவளை கண்ணியப்படுத்து முகமாகவே இத்தகைய பங்கீடு அவளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் அவளுக்குரிய சொத்தும் செல்வமும் நன்மைகளின் பால் அவள் ஈடுபாடு காட்டுவதற்கு அவளைத் தூண்டுகின்றது என்பதையும் மிகவும் பிரத்தியட்சமாக எம்மால் புரிந்து கொள்ள முடியும்.
உசாத்துணைகள் :
01. அலி ஹஸ்புல்லாஹ் (1981) அல் மீராஸ், பிஷ் ஷரீஅத்தில் இஸ்லாமிய்யா.
02. முஹம்மத் அலி அஸ்ஸாபூனி (2007),
அல் மவாரீஸ் பிஷ் ஷரீஅத்தில் இஸ்லாமிய்யா, பெய்ரூத் : அல்மக்தபதுல் அஸ்ரிய்யா
source: www.usthazmansoor.com