கதைக் களமான மஸ்ஜித்கள்!
[ தமிழகத்தில் மதரஸா, பள்ளிவாசல் திறந்து கொண்டேயிருக்கின்றனர். விஸ்தீரணப் படுத்துதல், பிரம்மாண்டப்படுத்தல் நடக்கிறது. நிதி கேட்டு அலைதல் ஒரு புறம்.
அனைத்துக்கும் பேஸ் குர்ஆன். அதைப் புறக்கணித்துவிட்டு அனைத்து வேலைகளும் நடத்தப்படுகிறது.
குர்ஆன் செவிமடுப்பதில் வெறுப்பு காட்டுகின்றனர்.
நன்நோக்கத்தோடு மஸ்ஜித் நிர்வாகம் ஏற்பாடு செய்வது விழலுக்கு இறைத்த நீராகிறது.
ஷரிஅத் அடிப்படையில் குர்ஆன் அறியவேண்டும் ஆர்வமில்லை.
கடுமையாகப் புறக்கணிக்கின்றனர்.
விளைவு?! குர்ஆனும், மஸ்ஜித்தும் மனிதர்களைப் புறக்கணிக்கும்.]
தென் சென்னையின் பிரதானப் பகுதியில் 15 மஸ்ஜித்கள் அமைந்துள்ளன. பழைமையானவை. 3,000ம் முதல் 100 பேர் வரை கொள்ளளவு விஸ்தீரணமுடையவை.
15 மஸ்ஜித்களிலும் பிரதான நெடுஞ்சாலை மஸ்ஜித் தவிர வேறு 14 மஸ்ஜித்களிலும் வியாழக்கிழமைகளில் குர்ஆன் தஃப்ஸீர் நடைபெறுவதில்லை. சில பள்ளிகளில் ஞாயிறுகளில் நடைபெறுவதுண்டு.
பிரதான நெடுஞ்சாலையில் அமைந்துள்ள குறிப்பிட்ட மஸ்ஜித்தில் வியாழக்கிழமை தோறும் தவறாது குர்ஆன் தப்ஸீர் நடைபெறுகிறது. மஃரிபுக்குப் பின்.
தோல் விற்பனைக்குப் பெயர் பெற்ற பகுதி மஸ்ஜித்தில் நீண்டகாலம் இமாமத் பணிசெய்தவர். ஊர்ப் பெயருடன் இணைத்து அழைக்கப்பட்டு பெயர் விளங்கியவர். குர்ஆன் நிபுணர். கைச்சீட்டு இல்லாது நினைவு வழியே அத்தியாயம், வசனம் எண் குறிப்பிட்டு சரளமாக விளக்கமளிக்கும் ஆற்றலுடையவர், தப்ஸீர் வழங்குவார்.
தப்ஸீர் நடைபெறப் போவதை முஅதீன் தொழுகையில் அறிவிப்பார். மஸ்ஜித் தலைவாசல் கதவில் அறிவிப்பு பேனர் தொங்கும்.
மஃரிபு தொழுகைக்கு 8 வரிசை நிரம்பும். வரிசைக்கு 50 பேர். 400 பேர் தொழுவர். தொழுகை முடிந்ததும் 370 பேர் புட்டம், முட்டி தூசியை தட்டிவிட்டு வெளியேறிவிடுவர். பள்ளி நிர்வாகிகள், தொழுகையாளி முதியோர் மொத்தம் 30 பேர் அமர்ந்திருப்பர்.
மஸ்ஜித் உள் கட்டமைப்பில் தப்ஸீர் நடைபெறும் அதே வேளை வெளி வராண்டாவில் 20 பேர் ஊர்க்கதை, வீட்டுக்கதை பேசிக் கொண்டிருப்பர். அருகில் சென்று ஏன் குர்ஆனை செவிமடுக்க மறுக்கிறீர்கள்? வினாவுக்கு ”அவங்க உருதில் பேசுறாங்க நமக்குப் புரியாதுங்க”. விடை.
நன்மையற்ற புறம் பேசுதலில் செலவழியும் நேரத்தை நன்மைக்கான வழியில் செலவிட்டு புரியவில்லையென்றாலும் செவிமடுக்கலாம். ”இறப்பு வரை அறிவைத்தேடு” அல்லாஹ் சொன்னதை ஏற்கமாட்டேன். வெறுப்பேன். வேற்று மொழி ஒரு சொல் புரிவதற்கும் முயற்சிக்க மாட்டேன். பதில் செயல் வழியே வெளிப்படுகிறது. இருபுறமும் மொழி வெறி ஆழமாகப் பதிந்திருக்கிறது.
”இவர்கள் துலுக்கன் என்று அவர்களைப் பார்த்து கூறினால், அவர்கள் லெப்பை என்று இவர்களைப் பார்த்து கூறுகின்றனர்.” தப்ஸீர் நடக்கும் மொழிக்குச் சொந்தக்காரர்கள் சுற்றிலும் 40 ஆயிரம் பேர் வாழ்ந்தும் குர்ஆனை அறவே புறக்கணிக்கின்றனர். பான்பராக், உற்சாகமூட்டும் இன்னும் பல தூள்களைக் கசக்கி மென்று மக்கள் நடக்கும் வீதிகளில் உமிழ்நீரை உமிழ்ந்து 8 பேர், 10 பேராக நின்று கதை பேசுகின்றனர்.
குர்ஆன் செவிமடுப்பதில் வெறுப்பு காட்டுகின்றனர். நன்நோக்கத்தோடு மஸ்ஜித் நிர்வாகம் ஏற்பாடு செய்வது விழலுக்கு இறைத்த நீராகிறது. ஷரிஅத் அடிப்படையில் குர்ஆன் அறியவேண்டும் ஆர்வமில்லை. கடுமையாகப் புறக்கணிக்கின்றனர். விளைவு குர்ஆனும், மஸ்ஜித்தும் மனிதர்களைப் புறக்கணிக்கும்.
தமிழகத்தில் மதரஸா, பள்ளிவாசல் திறந்து கொண்டேயிருக்கின்றனர். விஸ்தீரணப் படுத்துதல், பிரம்மாண்டப்படுத்தல் நடக்கிறது. நிதி கேட்டு அலைதல் ஒரு புறம். அனைத்துக்கும் பேஸ் குர்ஆன். அதைப் புறக்கணித்துவிட்டு அனைத்து வேலைகளும் நடத்தப்படுகிறது.
– ஜெ. ஜஹாங்கீர் (முஸ்லிம் முரசு ஜூன் 2012)