நாஇலா என்றொரு நங்கை!
சுமைய்யாஹ்
[ “உனது ஹிஜாபை அணிந்து கொள். அவர்கள் என்னை கொல்வதைவிட அவர்கள் முன் நீ முடி அவிழ்ந்து நிற்பது எனக்குக் குற்றமாகத் தெரிகிறது” ]
நாஇலா ரளியல்லாஹு அன்ஹா உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் கண்ணியமாக வாழ்ந்த நயமிகு நங்கை. அவருடன் தூய்மையாக குடும்பம் நடத்தியவர். எல்லாச் சூழ்நிலைகளிலும் அவருக்கு பக்க பலமாக நின்றவர். அவருக்காக தன் உயிரையே துச்சமென எண்ணி அர்ப்பணிக்க முன் வந்தவர்.
உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சிக்காலத்தில் அவர்களுக்கு சோதனை அதிகரித்து, அவர்கள் தனது சொந்த வீட்டிலேயே சிறை வைக்கப்பட்டபோது அவர்களுடன் உறுதியாக நின்றவர் நாஇலா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். வாள்வீச்சுக்கள் தன் கணவர் மீது விழாது தன் கைகள் மீது வாங்கிக்கொண்டவர் இந்த வீர மங்கை.
கிளர்ச்சியாளர்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வீட்டு சுவர்மீது கயிறுகளை வீசி ஏறிக்குதித்து வீட்டினுள் வந்தபோது, நாஇலா ரளியல்லாஹு அன்ஹா தனது கூந்தல் அவிழ்ந்து, விரிந்து தொங்கியதைக்கூட உணராமல் அவர்களை எதிர்கொள்ள விரைந்தார். அப்போது உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “உனது ஹிஜாபை அணிந்து கொள். அவர்கள் என்னை கொல்வதைவிட அவர்கள் முன் நீ முடி அவிழ்ந்து நிற்பது எனக்குக் குற்றமாகத் தெரிகிறது” என்றார்கள்.
கிளர்ச்சியாளர்களில் ஒருவன் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை வாளால் தாக்க முற்படுகிறான். பாய்ந்து வந்த நாஇலா ரளியல்லாஹு அன்ஹா தன் கைகளால் வாளைப்பற்றிக் கொள்கிறார். அதன் காரணமாக அவரது ஒரு விரல் துண்டிக்கப்பட்டு விடுகிறது.
விரலை இழந்தபோதும் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கொலையை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை. எதிரியின் வாள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் வயிற்றைத் துளைத்து அவர்களது உயிரை உடலைவிட்டும் பிரித்து விடுகிறது.
நகர் முழுவதும் கொலைச்செய்தி பரவிய போது மக்களின் முகங்களில் கவலையும், கலக்கமும் தொற்றிக்கொண்டன. கிளர்ச்சியாளர்களுக்குப் பயந்து கலீஃபா உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் உடல் அடக்கம் செய்யப்படாமல் இருந்தது. இவ்வளவு பெரிய நெருக்கடியான கட்டத்திலும் நாஇலா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தனியாகவே இரவோடிரவாக மக்களை ஒன்றுதிரட்டி விளக்கொளியில் அவர்களை அழைத்து வருகிறார். கலக்கமோ, பயமோ சிறிதுமின்றி அவர்களை கஃபனிட்டு தொழ வைக்கப்படுவது, அடக்கம் செய்வது உட்பட அனைத்தையும் நிறைவு செய்கிறார்.
அவரது மீதமுள்ள நாட்கள் உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவிலேயே கழிந்தன. அழகு மங்கையாக இருந்தும், அவர் இன்னொரு திருமணம் பற்றி சிந்திக்கவும் இல்லை. அவரைத் தேடிவந்த வரன்கள் அனைத்தையும் மறுத்துவிட்டார்.
ஒரு தடவை முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அவரைத் திருமணம் பேச, அதனையும் மறுத்து விட்டார். தூது வந்த பெண்களைப்பார்த்து “திருமணப் பேச்சுக்கள் என்னை சந்தோஷப்படுத்துபவையல்ல” என்றார். அவர்கள் விடாமல், உனது பற்கள் அழகானவை என்று வர்ணித்த போது, உடனே தனது முன் பற்கள் இரண்டையும் பிடுங்கி அவர்கள் கையில் கொடுத்து விட்டார். வந்த பெண்கள் அதனை முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் எடுத்துச்சென்றனர்.”
உமது அழகிய முகத்தை இதன் மூலம் கோரப்படுத்தி விட்டாயே! ஏன் இவ்வாறு செய்தாய்?” என அவர்களிடம் வினவப்பட்டபோது, “உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்குப் பிறகு எந்த ஆணும் என்மீது ஆசைப்படக்கூடாது” என்பதையே தனது பதிலாக மொழிந்தார் அந்த மாதரசி.