பிறந்ததுமே அழாத குழந்தைகளுக்கு மருத்துவத் தீர்வு!
பிறந்ததுமே அழாத குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்கான மருத்துவத் தீர்வைக் கண்டுபிடித்துள்ளார் சென்னை டாக்டர்
.பிறந்தவுடனேயே குழந்தை நன்றாக அழ வேண்டும். அப்படி அழாத குழந்தைக்கு பல உடல் கோளாறுகள் வரலாம். அவற்றைக் குணப்படுத்துவதற்கான மருத்துவத் தீர்வை கண்டுபிடித்துள்ள சென்னை டாக்டர். தீபா ஹரிஹரன், அதுபற்றி விவரிக்கிறார்:
“இந்தப் பிரச்சினைக்கு பிறவி அஸ்பிக்சியா (birth asphyxia) என்று பெயர். பிறந்தவுடன் அழாத குழந்தைகளின் மூளைக்குப் போதிய அளவு ரத்தம் போகாது. இதனால் குழந்தைக்கு உடல் குறைபாடு ஏற்படவோ அல்லது கற்றலில் குறைபாடும், மன வளர்ச்சி இல்லாமல் போவதற்கான வாய்ப்புகளும் அதிகம்.
பிறந்தவுடன் குழந்தை வாய்விட்டு அழுதால்தான் ஆக்சிஜனை நன்றாக உள்ளிழுக்கும். இதன்மூலம் இதயம், நுரையீரல் மற்றும் மூளையில் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். பிரசவத்தில் ஏற்படும் பனிக்குடம் வற்றுவது, தொப்புள் கொடி சுற்றியிருப்பது, தலை வெளியில் வர அதிக நேரம் ஆவது போன்ற பல சிக்கல்கள், குழந்தை அழாமல் பிறப்பதற்கான காரணங்கள். இதை இப்படியே விட்டால் பின்னாளில் அதுவே நிரந்தரப் பிரச்சினையாகிவிடும்.
இந்தப் பிரச்சினையை எப்படி சரி செய்வது என்று ஆராய்ந்து ஒரு புதிய முறையை செயல்படுத்தி வெற்றி பெற்றுள்ளோம். இதற்கு தெராப்யூடிக் ஹைபோ தெர்மியா என்று பெயர். பொதுவாக, குழந்தைக்கு, கர்ப்பத்தில் இருப்பதைப் போல கதகதப்பாக இருக்க வேண்டும். ஆனால் அழாமல் பிறந்த குழந்தைகளை 36 முதல் 37 டிகிரி உறைநிலையில் குளிர்ச்சியாக வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் ரத்த ஓட்டம் குறைந்து மூளை செல்களை சிதைக்கும் ரசாயன மாற்றம் மெதுவாக நடக்கும் அல்லது நடக்காது என்பதோடு மூளைக்கான ஆக்சிஜன் தேவையும் குறைவாக இருக்கும். இந்த சிகிச்சையின்போது குழந்தையின் தலையைச் சுற்றி குளிர்ந்த நீர் ஓடுவதற்காக, ஹெல்மெட் போல ஒரு தொப்பியை மாட்டுவோம்.
குழந்தையை இதுபோல குளிர்ந்த சூழலில் 3 நாட்கள் வைத்திருந்து அதன் பின் இயல்பான வெப்பநிலைக்குக் கொண்டு வருவோம். இதுவரையிலும் 100க்கும் அதிகமான குழந்தைகளுக்கு இந்த சிகிச்சையை அளித்துள்ளோம். இந்தக் குழந்தைகள் வளர்ந்த பின், வருவதற்கான சாத்தியமுள்ள 70 சதவிகித உடல் கோளாறுகளை இதில் சரிசெய்து விடமுடியும். மனச் சிதைவைக் குறைக்கும் என்பது 100 குழந்தைகளுக்கு இதுவரை செய்த சிகிச்சையில் உறுதியாகியுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது டாக்டரின் கண்காணிப்பில் மட்டுமே இதைச் செய்ய வேண்டும்” என்று விளக்கினார்.
தற்போது கருவிலேயே கோளாறுகளைக் கண்டுபிடித்து சரி செய்யும் முறையும் இந்தியாவில் பிரபலமடைந்து வருகிறது. இதில் முக்கியமானது intra uterine transfusion எனப்படும் கருவில் ரத்தம் ஏற்றும் முறை. இது குறித்தும் சொன்னார் டாக்டர் தீபா:
“கர்ப்பகாலத்தில் அம்மா, கரு இருவருக்கும் ரத்த வகை எப்படி உள்ளது என்று தெரிந்துகொள்ள வேண்டியது மிக முக்கியம். அம்மாவின் ரத்தம் ஆர்ஹெச் நெகடிவ்வாக இருந்து, கரு ஆர்ஹெச் பாசிடிவ் என்றால் கருவிலேயே ரத்த சோகை பிரச்சினை வரும். பிறந்த பிறகு மஞ்சள் காமாலை உட்பட பல உடல் கோளாறுகள் வரலாம். கர்ப்பத்தின் 14வது வாரத்தில் ஸ்கேன் செய்யும்போது கருவின் ரத்த ஓட்டம் வழக்கத்தைவிட வேகமாக இருந்தால், ஆர்ஹெச் பாசிடிவ் என்று ஊகிக்கலாம். தொடர்ந்து குறிப்பிட்ட இடைவெளியில் கருவின் ரத்த சிவப்பணுக்களை (Red Blood Cells) கண்காணிக்க வேண்டும். கருவில் ஆர்பிசியின் அளவு கணிசமாகக் குறைவது தெரிந்தால் கருவினுள் அம்மாவின் வகை ரத்தத்தை ஏற்ற வேண்டும்.பொதுவாக கர்ப்பத்தில் கருவின் ரத்தம் அம்மாவின் ரத்தத்தில் கசியும். ஆனால் மாறுபட்ட ரத்த வகை இருந்தால், ஏதோ வேண்டாத அந்நிய வஸ்து நமக்குள் வருகிறது என்று அம்மாவின் ரத்தத்திலுள்ள எதிர்ப்பு அணுக்கள் (
antibodies) நினைத்து, அதை வேகமாக அழிக்க ஆரம்பிக்கும். ஆன்டிபாடிஸ் உற்பத்தியும் அதிகமாகி கருவினுள் சென்று, கரு ரத்த செல்களை அழிக்க ஆரம்பிக்கும். இது அனைத்தும தற்செயலாக கருவைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக நடக்கும் செயல்.இதனால் கரு, ரத்தத்திலுள்ள ரத்த சிவப்பணுக்கள் வெகுவாகக் குறைந்து விடும். உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் ஆக்சிஜனை எடுத்துச் செல்வது ஆர்பிசியின் செயல். உயிர் வாழ எது அவசியமோ அது வேகமாக அழிகிறது. ஆர்பிசி அழியும்போது பிலிரூபின் என்ற நச்சு உற்பத்தியாகி, மஞ்சள் காமாலை வரும். ஆர்பிசியின் அளவு குறைவதால் கருவிலேயே ரத்த சோகையும், பிறந்த பிறகு இதயம், நுரையீரல் கோளாறு போன்ற பிரச்சினைகளும் வரலாம். மஞ்சள் காமாலையை உண்டாக்கும் பிலிரூபின் என்ற நிறமி 15 வரை இருந்தால் பிரச்சினை இல்லை. ஆனால் மாறுபட்ட ரத்த வகையால் 40 வரை கூட அளவு அதிகமாகும்.
மாறுபட்ட ரத்த வகையால் வாழ்நாள் முழுக்க உடல் கோளாறுகளுடன் இருப்பதை தவிர்க்க சிறப்பு சிகிச்சையின் மூலம் கருவிலேயே ஆர்ஹெச் நெகடிவ் ரத்தத்தை கருவின் தன்மையைப் பொறுத்து தேவைக்கேற்ப ஏற்றுவோம். இதனால் பல உடல் கோளாறுகளை கருவிலேயே தவிர்த்து விடலாம்” என்று நம்பிக்கை தருகிறார் டாக்டர். – டாக்டர். தீபா ஹரிஹரன்
தற்போது சென்னை சூர்யா மருத்துவமனையில் பச்சிளங்குழந்தைகள் சிகிச்சைப் பிரிவின் இயக்குநராக இருக்கும் இவர், சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் படித்தவர். அமெரிக்காவில் உள்ள ஷிகாகோ கூக்கவுன்டி (cookcounty) மருத்துவமனையில் குழந்தை சிறப்பு மருத்துவத்தையும், சர்வதேச சிறப்பு வாய்ந்த பிலடெல்பியா குழந்தைகள் நல மருத்துவ மனையில் பச்சிளங்குழந்தை சிறப்பு மருத்துவத்தை சிறப்பு ஊக்கத் தொகையுடன் படித்தவர். பிறந்த குழந்தைகளுக்கு வரும் தொற்று மற்றும் நோய் எதிர்ப்பு பற்றி ஆராய்ச்சியும் செய்துள்ள டாக்டர். தீபா, உயர் அழுத்த மூச்சுக் கருவியை (high frequency ventilation) சென்னையில் முதன்முதலில் அறிமுகம் செய்தவர்.
– கீதாங்கா
நன்றி: புதிய தலைமுறை