உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கை
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கைதான் வளைகுடா வாசிகளுக்கு சொந்தம். நேரமின்மையே அதற்கு முக்கிய காரணம். நமது நாட்டைப்போல வளைகுடா நாடுகளில் வேலைக்கு மட்டம் போட முடியாது. ஒரு நாள் லீவு கிடைக்கவே பெரும் பாடுதான். இந்நிலையில் அன்றாட வேலையை முடித்து விட்டு, உணவு தயாரித்து, துணிகளை கழுகி, வீட்டிற்கு போன் செய்யவே நேரம் சரியாக இருக்கும். இந்நிலையில் உடற்பயிற்சியைக் குறித்து சிந்திக்க முடியுமா? ஆகவே ரேஷன் போல் கிடைக்கும் நேரத்தில் அனைவரும் தவிர்க்க விரும்புவது உடற் பயிற்சியாகும்.
உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையும், கொழுப்பான உணவு வகைகளைக் கொண்ட வாழ்க்கை முறையும் இணையும் பொழுது இயல்பாகவே உடல் நோய்களின் இருப்பிடமாக மாறிவிடும்.நீரழிவு நோய்(சர்க்கரை வியாதி)போன்ற வாழ்க் கை முறையினால் உருவாகும் நோய்கள் ஏற்பட உடற்பயிற்சி இல்லாத வாழ்க்கையே காரணமாகும்.
ஓய்வில்லாத பணி!
பொதுவாகவே வளைகுடாவுக்கு வேலை தேடி வருவோருக்கு பணமே முக்கிய நோக்கம் ஆகும்.அதனால்தான் ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் தூக்கம் என்ற தத்துவம் எல்லாம் இவர்களைப் பொறுத்தவரை வெத்து வேட்டுதான். பணிகளுக்கு இடையே ஒய்வு என்பது செயல் திட்டத்திலேயே இல்லை. பெரும்பாலோர் 12-13 மணிநேரங்கள் உழைக்கின்றனர். இதன் பலனாக கிடைப்பது முதுகு வலி.
முதுகு வலிக்கு முக்கிய காரணி மன அழுத்தம் ஆகும். வளைகுடா வாசிகளைப் பொறுத்தவரை மன அழுத்தத்திற்கு எவ்வித பஞ்சமுமில்லை. இத்துடன் உடற்பயிற்சியும் இல்லை என்றால் முதுகுவலி ஏற்படுவது இயல்பே.
நமது சிந்தனைப் போக்கை மாற்றி நமது ஆரோக்கியத்தைக் குறித்து சற்று சிந்தித்து அதன் அடிப்படையில் வாழ்ந்தால் முதுகு வலி இல்லாத வாழ்க்கையை சொந்தமாக்கலாம்.
ஆஸ்துமாவை உருவாக்கும் மணல் காற்றும், புகையும்!
பாலைவன மண்ணை வீசியடிக்கும் காற்றில் பறந்து வரும் மண் துகள்கள் மூச்சுக் குழாய்க்குள் செல்கிறது. தாமதமில்லாமல் இவர்கள் ஆஸ்துமா நோயினால் பாதிப்படைகின்றனர். மேலும் பாலைவனப் பகுதிகளில் உருவாகும் மணல் காற்றும், புகையும் வெளியிடங்களில் வேலை பார்ப்போருக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இதனால் bronchitis என அழைக்கப்படும் மூச்சுக்குழாய் அழற்சி நோய் ஏற்படுகிறது.கடுமையான வெப்பம்
வளைகுடா வாசிகளால் தாங்க முடியாதது அங்கு கோடைகாலத்தில் நிலவும் கடுமையான வெப்பமும், குளிர்காலத்தில் நிலவும் கடுங் குளிருமாகும்.
கோடை காலத்தில் 50 டிகிரி வரை சூடு நிலவும். குளிர் காலத்திலோ மைனஸ் டிகிரியை அடையும். இவை இரண்டுமே அசெளகரியங்களை ஏற்படுத்தும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை.
ஏர்கண்டிசன் இல்லாத வாழ்க்கையை இங்கு சிந்திக்க கூட முடியாது. ஆனால் வெளியே வேலைப்பார்க்கும் தொழிலாளர்கள் வெப்பத்தையும், குளிரையும் சந்தித்தே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களும், நோயாளிகளும், ஆரோக்கியம் இல்லாதவர்களும் சூடு தாங்கமுடியாமல் sun stroke காரணமாக நினைவு இழந்து விழுவது வளைகுடா நாடுகளைப் பொறுத்தவரை வழக்கமாகிவிட்டது. இதன் மூலம் ஏற்படும் இழப்புகள் தங்களை பாதிக்காமலிருக்க ஒப்பந்தக்காரர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதிச் செய்துள்ளனர். இவையெல்லாம் உயிரை காப்பாற்றலாம், ஆனால் உடல்நலனை பாதுகாப்பதற்கு போதுமானது அல்ல.பெனடால் என்ற உற்றத்தோழன்
வளைகுடா வாசிகளுக்கு பெனடால் என பெயர் சூட்டிய பாரசிட்டாமோல் மாத்திரைதான் அவர்களின் பெரியதொரு பாதுகாவலன். தலைவலியா? காய்ச்சலா? ஜலதோஷமா? ஒரு பெனடாலில் அவர்கள் ஆறுதலை தேடிக்கொள்வார்கள்.
வளைகுடாவுக்கு வரும் தொழிலாளர்களுக்கு காலநிலையில் ஏற்படும் மாற்றத்தால் உடல்நிலை பாதிக்கப்படுவது வழக்கம். தலைவலியும், வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் உண்டு. இதற்கெல்லாம் மருத்துவமனைக்கு சென்று காண்பிக்கும் வழக்கம் இல்லை. காராணம், சாதாரண நபர்களால் வளைகுடா நாடுகளில் சிகிட்சை செலவை தாங்கமுடியாது. வேலைச்செய்து கிடைக்கும் சம்பாத்தியம் முழுவதும் ஒரேயடியாக செலவழிந்து விடுமே என அஞ்சி இவர்கள் எந்த நோய் வந்தாலும் உடனே பெனடாலை விழுங்குவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவ்வாறு பெனடால் வளைகுடா வாசிகளின் உற்றத் தோழனாக மாறிவிட்டது. இதன் எதிர்விளைவுகளை குறித்து சிந்திக்கவும் அவர்களுக்கு நேரமில்லை.
பல வருடங்களுக்கு பிறகு சொந்த ஊருக்கு திரும்பிய பிறகே பெனடாலின் பாதிப்புகள் குறித்து அவர்களுக்கு தெரியவருகிறது. பெனடாலை வழக்கமாக உபயோகிக்கும் பழக்கமுடையவர்களுக்கு சிறுநீரகத்தையும், இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கும் சாத்தியக் கூறுகளை உள்ளடக்கிய பாரசிட்டாமோல் மாத்திரையைத்தான் தாம் இதுவரை உற்றத் தோழனாக கருதினோம் என்பதை அவர்கள் புரிந்துகொள்வார்கள்.
தாயகத்தில் கிடைப்பதைவிட பல மடங்கு வருமானத்தை எதிர்பார்த்து இந்தியர்கள் வளைகுடாவுக்கு வேலைக்கு செல்கின்றனர். ஆனால், திடீரென மாறும் வாழ்க்கைச் சூழல் அவர்களை விரைவில் வாழ்க்கை முறை மாறுவதால் ஏற்படும் நோய்களில் பிடியில் சிக்கவைக்கிறது.
இக்கட்டுரையின் துவக்கத்தில் கூறியபடி ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பதை புரிந்துகொண்டால் நாம் இந்த துயரங்களை தவிர்க்கலாம்.
உணவு முறையிலும், உடற்பயிற்சியிலும் நாம் கவனம் செலுத்தினால் சம்பாதித்த பணத்துடன் தாயகம் திரும்பி சந்தோஷமாக வாழலாம். வளைகுடா வாழ் இந்தியர்கள் மத்தியில் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் தொடர்ந்து நடத்தப்படவேண்டும் என்பதை இதன் மூலம் நாம் புரிந்துகொண்டிருப்போம்.
இந்திய தூதரகமும், வளைகுடா நாடுகளில் இயங்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான நல அமைப்புகளும் இப்பிரச்சாரத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவேண்டும். பணத்தை மட்டும் சேமித்தால் போதாது அதனை அனுபவிக்க கூடிய ஆரோக்கியத்தையும் பாதுகாக்க வேண்டும் என்பதை வளைகுடா வாழ் இந்தியர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
திரைகடல் ஓடியும் திரவியம் தேடும் வேகத்தில் ஆரோக்கியத்தை தொலைத்துவிடாமல் எச்சரிக்கையாக இருப்போம்!