பணம் சேர்க்க பதினோரு வழிகள்!
1. பணத்தின் மீது ஆசையை வளர்த்துக் கொள்ளுங்கள். பணமில்லாமல் உலகத்தில் எந்தக் காரியமும் நடப்பதில்லை. பணத்தின் மீது நீங்கள் ஆசையை வளர்த்துக் கொள்ளும்போது அதைத் தேடுகின்ற வேகமும் உங்களிடம் அதிகரிக்கும். திறமையை சும்மா வைத்துக் கொண்டிருக்கக் கூடாது என்கிற எண்ணம் பிறக்கும். அதை எப்படியும் விலை பேசவேண்டும் என்கிற முனைப்பு கொள்வீர்கள்.
2. பணம் என்பது மரத்தைப் போல சிறு விதையினின்றுதான் வளர்கிறது. நீ எத்தனைக்கெத்தனை அதைச் சரியாக மேலும் பணம் எனும் தண்ணீர் ஊற்றி உழைப்பெனும் உரமிட்டு வளர்கின்றாயோ அத்தனைக்கத்தனை நீ நிம்மதியாக அதன் நிழலில் ஓய்வெடுக்கலாம்.
3. எவ்வளவு பணம் சேர்க்க முடியுமோ, அவ்வளவு சேர்க்க வேண்டும். எவ்வளவு முறையாக செலவழிக்க முடியுமோ, அவ்வளவு செலவழிக்க வேண்டும். எவ்வளவு மிச்சம் பிடிக்க முடியுமோ அவ்வளவு மிச்சம் பிடித்துச் சேமிக்க வேண்டும். எவ்வளவு கொடுக்க வேண்டுமோ அவ்வளவு கொடுக்க வேண்டும்.
4. பெறுவது, செலவிடுவது, சேமிப்பது, கொடுப்பது என்ற நான்கு செயல்களும் பணம் சேர்த்தவர்கள் கைக்கண்ட வழிகள். இந்த நான்கையும் கைக்கொண்டால் பணம் நிறையக் குவியும்.
5. தன் குடும்பத்துக்காக, எதிர்காலத்துக்காக வருவாயில் பத்தில் ஒரு பாகத்திற்குக் குறையாமல் எவன் சேர்த்து வைக்கிறானோ, அவனிடம் பொன் எனும் தேவதை மேலும் மேலும் சேர்கிறாள்.
6. எந்த புத்திசாலி தன் பணத்திற்கு லாபகரமாக வளர இடம் கொடுக்கிறானோ அவனிடம் பொன் தேவதை, வயல் விளைச்சல் போல் பன் மடங்காகப் பெருகுகிறாள்.
7. எவன் அறிவாளிகளின் அறிவுறைப்படி பணத்தை வியாபாரத்தில் விதைக்கிறானோ அவனைப் பொன் தேவதை பற்றிக் கொள்கிறாள்.
8. உங்களுக்குரிய திறமை எதுவோ, அதைப் பயன்படுத்திப் பணம் சம்பாதிக்கும் முயற்சியைத் தொடங்குங்கள். எடுத்த எடுப்பிலேயே வெற்றி கிட்டவில்லையே என்று ஆயாசப்படாதீர்கள்.
9. ஒரு ரூபாயை இரண்டு ரூபாயாக்க நீங்கள் கடுமையாக போராட வேண்டி வரும். பத்து ரூபாயை இருபது ரூபாயாக்க நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டி வரும்.
10. ஆயிரம் ரூபாயை இரண்டாயிரமாக்க மிகுதியான முயற்சி தேவைப்படும். பத்தாயிரம் ரூபாயை இருபதாயிரம் ரூபாயாக்க நீங்கள் முயற்சித்தே ஆகவேண்டும்.
11. ஒரு லட்சத்தை இரண்டு லட்சமாக்க கவனமாக திட்டமிட்டால் போதும். பத்து லட்சத்தை இருபது லட்சமாக்க… நீங்கள் எதுவுமே செய்ய வேண்டாம். அதுவே ஆகிவிடும்.
இது பொருளாதாரத்தின் அடிப்படை உண்மை!