காலமாற்றம் (சிறுகதை)
ஹுஸைனம்மா
வீட்டுக்கு முதன்முறையாக அந்தத் தோழியை அழைத்து வந்திருந்தேன். வீட்டுக்குப் பக்கத்திலுள்ள பார்க்கில் தினமும் நடைபயிற்சிக்குச் சென்றதில், அறிமுகமான புதுமுகம். புன்னகையில் ஆரம்பித்து, சேர்ந்து நடப்பதில் வந்து, வீட்டுக்கு வருமளவு ஆகியிருக்கிறது தற்போதைக்கு.
நடக்கும்போது பேசியதில், குடும்பம், கணவர், குழந்தைகள், சொந்த ஊர் என்று பலதும் பேசியிருந்தோம். என்றாலும், இன்னும் பேசவா விஷயம் இருக்காது? பலதும் பேசிப்பேசி, இந்த ஊர்த் தோழிகள், சொந்த ஊர்த் தோழிகள், கல்லூரித் தோழிகள், பள்ளித் தோழிகள் என்று வந்தபோது, அவரின் ‘நான் கல்லூரி சென்றதில்லை’ என்ற கூற்றில் கொஞ்சம் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் ஆகி, “அப்படியா?” என வாய்பிளந்தேன்.
ஏனெனில், அவரது உடை எளிமை என்றாலும், அதிலுள்ள நேர்த்தியும்; பேச்சின் அதிகப்படியில்லாத நளினமும், இடையிடையே சரளமாய்க் கலந்துவரும் ஆங்கிலச் சொற்களும், அவர் கல்லூரிக்குச் செல்லவில்லை என்பதை எனக்கு நம்ப முடியாமலாக்கியது.
இன்னமும் அதிர்ச்சியானதைச் சொன்னார், படித்ததும் ஏழாவது வரைதானாம்!! கணவரும் பெரிய வேலையில் இருக்கிறார்; குழந்தைகளும், வசதியானவர்கள் படிக்கும் பள்ளிகல்லூரிகளில் படிக்கின்றனர். இருந்தும், இவர்..
அவரே சொன்னார், “எங்க ஊர்ல, பெண்களுக்கு சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிடுவாங்க. அதேபோல எனக்கும் ஆனது.” என்றார்.
“ஆனாலும், படிப்பை நிறுத்தும்போது உங்களுக்கு கஷ்டமாயில்லியா?”
“ம்… அப்போதைய காலத்தில் பள்ளிப் படிப்பு என்பதும், வெறும் ஏட்டுப் படிப்பாய், தினப்படி வாழ்க்கைக்கு எந்தவித பயனும் அதனால் இல்லாத வண்ணமாய்த்தான் இருந்தது. தற்போது போல கடினமான உழைப்பு தேவைப்படும் பாடத்திட்டமும் இல்லை. எழுதப் படிக்க தெரிந்து கொண்டதுதான் பள்ளி சென்றதன் பயன். மேலும், பாடப் புத்தகங்களைவிட, கதைப் புத்தகங்கள்தான் சுவாரஸ்யமாய் இருந்தது எனக்கு. ஆனால், ஆசிரியர்கள் அருமையானவர்கள். புத்தகம்தான் வாழ்க்கைக்கு உதவவில்லையே தவிர, ஆசிரியர்கள் செய்யும் போதனைகள் வாழ்க்கைக்கு மிக அவசியமானதாய் இருந்தன. இன்னொரு விஷயம் சொல்லணும். என்னன்னா, வீட்டில அம்மா, அப்பா, பாட்டினு பெரியவங்க அறிவுரைன்னு சொன்னதைத்தான் ஆசிரியைகளும் சொல்லித் தந்தாங்க!! அதனால, படிப்பை நிறுத்துவது எனக்கு பெரிய விஷயமாய்த் தெரியலை. தோழிகளைப் பிரிவதுதான் எனக்கு கஷ்டமா இருந்தது!!” புன்னகையோடு சொன்னார்.
“இருந்தாலும், பதிமூணு, பதினாலு வயசுல கல்யாணம்கிறது எனக்கு ஆச்சர்யமா இருக்கு. அந்த வயசுல உடம்புல என்ன தெம்பு இருக்கும் குடும்பம் நடத்தவும், பிள்ளைபெறவும்?”
வாய்விட்டுச் சிரித்தவர், “என்கிட்ட நிறைய பேர் இதத்தான் கேக்கிறாங்க. அந்தக் காலத்துப் பெண்பிள்ளைங்க இந்தக் காலத்து பிள்ளைங்க போல சோனியாய் இருக்க மாட்டாங்க. இப்பப் போல சத்துக்களைப் பிழிஞ்செடுத்த மிஷின் -பாலிஷ்ட் அரிசியோ, ரீ-ஃபைண்ட் எண்ணெயோ, அப்ப கிடையாது. ஃபாஸ்ட்-ஃபுட் வகையறாக்களும் கிடையாது. நாங்க சாப்பிட்டது எல்லாமே முழு போஷாக்கான உணவுகள்தான்; அதோட, சாப்பிடற சாப்பாடுக்கேத்த வேலைகளும் உண்டு. அப்ப எல்லாம் அம்மியும், உரலும், கிணறும்தானே? அதனால, சிறு வயசுலயே எங்க உடம்பு உரமாத்தான் இருக்கும். இதோ என் கல்யாண ஃபோட்டோ பாருங்க, நான் எப்படியிருக்கேன்னு?”
அவரது கைப்பையிலிருந்து எடுத்துத் தந்த அந்தப் புகைப்படத்துக்கும் தற்போதைக்கும் முகத்தில்தான் வயதுகூடியது தெரிந்ததே தவிர, உயரம், உடல் பூரிப்பு எல்லாம் இக்காலத்திய இரண்டு பிள்ளை பெற்ற ஒரு சராசரிப் பெண்ணின் வாகில் இருந்தது.
“சின்ன வயசுலயே கல்யாணம் பண்ணிகிட்டதுல வருத்தமில்லன்னு சொல்லி நியாயப்படுத்துறீங்க. தப்பா நினைக்காதீங்க. உங்க பொண்ணு, இப்ப காலேஜ் படிக்கிறாளே….” வென்று இழுத்தேன்.
“ஆமாம். இஞ்சினியரிங் முடிச்சுட்டு, இப்ப எம்.இ. படிக்கிறா. படிச்சு முடிச்சப்புறம்தான் கல்யாண பேச்சு ஆரம்பிக்கணும். நீங்க கேட்டது புரியுது. அந்தக் காலம் வேற. இந்தக் காலம் வேற. முதல்ல, நீங்க சொன்ன மாதிரி, இந்தக் காலத்து உணவுமுறைகளாலயும், “ஸ்லிம்” பைத்தியத்தாலயும், காலேஜ் படிக்கிற வயசு வந்தும்கூட, பொண்ணுங்க ஆரோக்கியமும், சத்தும் இல்லாம இருக்காங்க.”
“ரொம்ப கரெக்டுங்க. இந்த ‘ஸ்லிம்-மேனியா’ படுத்துற பாடு இருக்கே!!” நானும் புலம்பிக் கொண்டேன்.
“ஆமாங்க. இன்னும், என் காலத்தில, எனக்குப் படிப்பில ஆர்வமில்லை; அத்தோட பெண்களுக்கு சீக்கிரமே திருமணம் நடத்துவதும் அப்போதைய வழக்கம் என்று தெரிந்திருந்ததாலும் எனக்கு படிப்பில் நாட்டமில்லாமல் இருந்திருக்கலாம். அப்போவெல்லாம் திருமணமான பெண்களுக்கு எல்லாமே கணவர்தான். வீட்டுக்காரர்தான் எல்லாம்னு நினைச்ச எங்க நம்பிக்கைக்கு ஏத்த மாதிரியே, அவரது பாதுகாப்பு முழுசா இருந்துது. ஆனா, இப்போ, நிலைமை அப்படியில்லை. பெண்களும் படிப்புல ஆர்வமாருக்காங்க. இந்தக் காலத்து திருமணங்களும் நம்பிக்கையின் அடிப்படையில் அமையுற மாதிரி தெரியலை. சின்னச்சின்ன பிரச்னைக்கெல்லாம் ஈகோ தலையெடுக்குது. அதனால, பெண்கள், ஒரு டிகிரியாவது முடிச்சு, வேலையில் இருக்கிறதுதான் தனக்கு பாதுகாப்புனு நினைக்கிறாங்க. அதனால, மாறியிருக்கிற காலத்துக்கேத்த மாதிரி, நானும் மாறிக்கிட்டேன். மாறித்தான் ஆகவேண்டியிருக்கு.”
கடந்த கால பெருமையையும், நிகழ்கால நிதர்சனத்தையும் அழகாக அவர் எடுத்துரைத்ததில், வியந்து நின்றேன்.