மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு (3)
இரண்டாவது அம்சம்
தாய், தந்தையரைப் பேணுவதில் அடுத்த படியாக நாம் கவனிக்க வேண்டிய மற்றோர் அத்தியாயம் எதுவெனில், அவர்களிருவரையும் நாம் மதிக்க வேண்டிய விதமும், முறையுமாகும். ஒரு நபருடன் நாம் பழகுவதால் துர்நடைத்துக்கு நாம் ஆட்பட்டுவிவோம், மார்க்கத்தை விட்டு வழிதவறி விடுவோம், நடத்தை பிறழ்வில் விழுந்து விடுவோம் போன்ற நிலைகள் ஏற்பட வாய்ப்பிருக்குமாயின் அந்நபரை மார்க்கத்துக்காக வெறுக்கலாம்.
அவரிடம் நல்ல மாற்றங்கள் ஏற்படும் வரையில் நமக்கும், அவருக்குமிடையிலுள்ள இடைவெளி தொடரலாம். ஆனால் உலக விடயங்களில் ஒருவரோடு நாம் கோபித்துக் கொண்டால் மூன்று நாட்களுக்கு மேலாக பகை தொடரக் கூடாது. இவை ஏனையவர்களோடு நாம் பழகுவதில் கைக்கொள்ள வேண்டிய பொதுவான சில விதிகளாகும்.
(ஆனால் நம் பெற்றோர்களைப் பொறுத்த மட்டில் உலக விடயங்களுக்காக மட்டுமன்றி மார்க்க விடயங்களுக்காகக் கூட அவர்களை நாம் பகைக்க முடியாது.)
அவர்கள் கொண்டுள்ள கொள்கை தவறானது என்றால் ‘நீங்கள் கொண்டுள்ள கொள்கை தவறானது; என்னால் இதை ஏற்க முடியாது. எனது கொள்கைதான் சரியானது’ என்று முறையாக உண்மையை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால் அவர்களைப் பகைக்க முடியாது. அல்லாஹ் இதை நேரடியாகவே கூறிக்காட்டுகின்றான்.
”உனக்கு அறிவில்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விருவரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்.” (அல்குர்ஆன் – லுக்மான் : 15)
பாவங்களில் மிகப் பெரியது அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பதாகும். அதையே ஒருவர் கட்டாயப்படுத்தினால் அது அதைவிடக் கொடியதாகும். இத்தகையதை நம் பெற்றோர் செய்தாலும் அவர்களை வெறுக்காது, அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்ளுமாறு அல்லாஹ் பணித்துள்ளான்.
பெற்றோருக்கு தாம் செய்யும் செலவைக் குறைப்பதற்காக கொள்கையைக் காரணம் காட்டிப் பெற்றோரைப் பகைத்தவர்கள் நம்மில் பலருண்டு. இதற்குக் ‘கொள்கை உறுதி’ என்று இவர்கள் நினைக்கின்றனர். ஆனால் இதே வெறுப்பை தவறான கொள்கையிலிருக்கும் தம் நண்பர்களிடம் காட்டமாட்டார்கள். இன்னும் சிலர், தாம் பெற்றோரை மதிக்கின்றோம் என்று கூறி, பெற்றோர் செய்யும் தவறுகளையெல்லாம் ஆமோதித்துக் கொண்டு வாழ்கின்றனர்.
தாயைப் புண்படுத்தக் கூடாது எனக் கூறி தாய் சொன்னதற்காக சீதனம் வாங்குகின்றனர். இவர்களிடம் கேட்டால் ‘என்னதான் செய்யலாம்? என் பெற்றோருக்கு நான் மட்டுமே பிள்ளை. அவர்களின் மனங்களை நான் புண்படுத்தலாமா?’ என்று விளக்கம் சொல்கின்றனர். தமக்கு விருப்பமில்லாத ஒரு பெண்ணைத் தம் பெற்றோர் திருமணம் செய்யச் சொன்னால் இவர்கள் அவ்வாறு செய்வார்களா? என்பதை ஒரு கனம் நாம் சிந்திக்க வேண்டும். தாயும், தந்தையும் வழிகேட்டிலிருந்தால் அவர்களைத் திருத்த வேண்டும். அவர்களுக்கு நேர்வழியைக் காட்ட வேண்டும் என்ற கவலையே உண்மையில் இச்சந்தர்ப்பத்தில் ஒரு முஃமினுக்கு ஏற்பட வேண்டும்.
பெற்றோர் தவறான வழியிலிருந்தாலும் அவர்களை நாம் மதிக்க வேண்டும் என்பதற்கான சில செய்திகளைத் கீழே அவதானியுங்கள்.
இஸ்லாத்தை ஏற்காது, இணை வைப்பவராகவிருந்த எனது தாய் நபியவர்கள் காலத்தில் என்னிடம் வந்தாள். (என்னோடு உறவாட) என் தாய் விரும்புகிறாள், அவளோடு நான் சேர்ந்து வாழவா என நபியவர்களிடம் நான் மார்க்கத் தீர்ப்புக் கேட்டேன். ‘ஆம் நீ அவளோடு நேர்ந்து நட’ என்று நபியவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர் : அஸமா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம் : புகாரி 2620)
ஒரு நபித் தோழர் இஸ்லாத்தை ஏற்றதும் அதை விரும்பாத அவருடைய தாய் ‘நீ இஸ்லாத்தை விடும் வரை நான் உண்ணவும் மாட்டேன். குடிக்கவும் மாட்டேன்’ என்று அவரிடம் சபதமிடுகிறார். தாயைப் பார்ப்பதற்காக அவர் வரும் போதெல்லாம் தன் தாயின் உடல் மென்மேலும் பலவீனமாவதைக் காண்கிறார். அப்போது அந்நபித் தோழர் தன் தாயிடம் ‘இவ்வாறு ஆயிரம் முறைதான் உங்களுக்கு நடந்தாலும் ஒரு போதும் நான் இஸ்லாத்தை விடமாட்டேன்’. என்று கூறினார்.தன் கொள்கையைத் தெளிவாகச் சொன்ன இந்நபித்தோழர் தன் தாயின் மீதான பாசத்தை விடவில்லை என்பதை இச்சம்பவத்தில் தெளிவாகக் காணலாம்.
நபியவர்களின் தாயார் இஸ்லாத்தை இணைவைப்பில் மரணித்தார்கள். நபியவர்களை இது பெரிதும் வருத்தியது. அந்த செய்தி கீழுள்ளவாறு இடம் பெறுகிறது.
”என் தாய்க்குக் பாவமன்னிப்புத் தேடுவதற்கு என் இறைவனிடம் அனுமதி கேட்டேன். எனக்கு அவன் அனுமதிக்கவில்லை. அவரின் கப்ரைத் தரிசிக்க அனுமதி கேட்டேன். எனக்கு அவன் அனுமதித்தான். (அறிவிப்பவர் : அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : முஸ்லிம் 2303)
ஆகவே மார்க்கத்துக்காகவேனும் பெற்றோரைப் பகைக்கக்கூடாது என்பதை நாம் சாரம்சமாக விளங்கவேண்டும்.
ஆனால் நம்மில் பலர் மார்க்கத்துக்காகப் பெற்றோரைப் பகைக்கமாட்டர். மார்க்க ரீதியாக தாயிடம் தவறு காணப்பட்டால் ‘நான் கூறி இதை அவர் கேட்கமாட்டார்’ என்று சாட்டுச் சொல்லி, கண்டும் காணாதது போல் இருப்பர். அதே நேரம் சொத்துப் பங்கீட்டில் தனக்கு ஏதாவது குறையேற்பட்டால் ‘இவரெல்லாம் ஒரு தந்தையா? நீதியாகவல்லவா பிரிக்க வேண்டும்?’ என்று போர்க் கொடி ஏந்தி விடுவர். ஆகவே எங்கெல்லாம் நாம் பெற்றோருடன் கொஞ்சம் கடுமையாக நடக்க வேண்டுமோ அங்கு மிதமாக, கவனயீனமாக இருக்கிறோம். எங்கெல்லாம் பெற்றோருடன் சாந்தமாக நடக்க வேண்டுமோ அங்கு சீரிப்பாய்கிறோம். சில போது அவர்களுடனான உறவையே முறித்துக் கொள்கிறோம். இரண்டு நிலையும் தவறானது. தவறில் இருந்தால் இதமாகச் சுட்டிக்காட்ட வேண்டும் பகைக்கக் கூடாது.
மூன்றாவது அம்சம்
பெற்றோரைப் பேணுவதில் மூன்றாவது அம்சம் எதுவென்றால், சிலர் தம் பெற்றோர் நற்பழக்கமுள்ள வணக்கசாலிகளாக இருந்தால்தான் அவர்களைக் கவனிக்க வேண்டும். அவ்வாறின்றி மார்க்க முறைப்படி வாழாதவர்களாக அவர்களிருந்தால் அவர்களைப் பேணத் தேவையில்லை என்று நினைக்கின்றனர். சில நேரங்களில் பெற்றோர்களுடன் சிலர் சச்சரவு செய்யும் போது, இவ்வாறு பெற்றோருடன் பேசக் கூடாது என்று தாயோ, தந்தையோ கூறினால், ‘தொழாத உங்களுக்கெல்லாம் மரியாதை செய்யத் தேவையில்லை’ என்று கூறி வாய் வெட்டுப் போடும் பலர் நம்மில் இருக்கின்றனர். இத்தகையோர் பெற்றோரைப் பேணுதல் பற்றி எவ்வளவுதான் உபதேசங்களைக் கேட்டாலும் ‘இது நம் பெற்றோருக்குப் பொறுத்தமில்லை’ என்று தம் பெற்றோரை அதோடு ஒப்பிட்டுப் பார்த்து அதைப் புறந்தள்ளி விடுவர்.
தாயோ, தந்தையோ நல்லவராக இருக்க வேண்டும். தொழ வேண்டும் என்பதெல்லாம் அல்லாஹ்வுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமைகளாகின்றன. தம் பிள்ளைகளுக்காகத் தொழ வேண்டும். அவ்வாறு செய்தால்தான் பிள்ளைகள் பெற்றோரை மதிக்க வேண்டும் என்று அல்லாஹ்வோ, தூதரோ கூறவில்லை. பெற்றோரை எவ்வாறு மதிக்க வேண்டும், எதற்காக மதிக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ள கீழ்வரும் செய்தியைக் கவனிப்போம்.
ஒரு தாய் தன் மகனுக்குச் செய்யும் பிராத்தனையில் எவ்வளவு வீரியமுள்ளது என்பதை இச்சம்பவம் மிகத் தெளிவாக உணர்த்துகின்றது. இது பற்றி நபியவர்கள் கூறும் போது ‘ஜுரைஜ் மார்க்க விளக்கமுள்ளவராயின் தன் தாயின் அழைப்பிற்கு பதிலளித்திருப்பார்’ என்றார்கள். அதாவது, தாயின் அழைப்பிற்கு நாம் எத்தகைய அதிமுக்கியத்துவத்தைக் கொடுக்க வேண்டும் என்பதை நபியவர்கள் இதில் சூசகமாகச் சொல்கிறார்கள். ஆகவே தாய், தந்தை எந்நிலையிலிருந்தாலும் அவர்களுக்கு நாம் செய்ய வேண்டிய பணிவிடைகளை செவ்வனே நிறைவேற்ற வேண்டும். அதுவே நாம் அவர்களுக்குச் செய்யும் கடமையாகும்.
ஆனால் நாம் இவ்வாறு நம் பெற்றோரைக் கவனிக்கின்றோமா என்பது கேள்விக்குறியாகவேயுள்ளது. சுன்னத்தான நோன்பு நோற்ற நிலையில் வீட்டுக்குப் போகின்றோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். நம் தாய், தான் விஷேடமாய் தயாரித்த உணவிலிருந்து அன்போடு நமக்கும் கொஞ்சம் தருகின்றார் என்றால் தாயை மகிழ்விக்கும் வகையில் சுன்னத்தான நோன்பை விட்டு அவ்வுணவை வாங்கி உண்பதே இஸ்லாம் நமக்குச் சொல்லித் தரும் அறிவுரையாகும். ஜுரைஜுடைய சம்பவத்திலிருந்து நாம் பெறும் பாடமும் அதுவே.
பெற்றோர் மீது நாம் ஏன் இந்தளவுக்கு நன்றி செலுத்த வேண்டுமென்றால் நம்மை அவர்கள் பெற்றெடுத்து, வளர்த்து, ஆளாக்கினார்கள் என்பதற்காகத்தான். நம்மை அவர்கள் தீயவர்களாக வளர்த்தார்களா? நல்லவர்களாக வளர்த்தார்களா? என்பது எவ்வாறிருப்பினும் நமது சிறுபராயத்தில் நம்மைக் கண்போலக் காத்து வளர்த்தெடுத்தார்கள். இதற்குத்தான் நாம் அவர்களுக்கு நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். கீழ்வரும் அல்குர்ஆன் வசனமும் இவ்வாறுதான் நம்மை அறிவுறுத்துகின்றது.
”சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக.” (அல்குர்ஆன் – இஸ்ரா : 24)
தாய்க்கு எதற்காக நன்றி செலுத்த வேண்டும் என்பது பற்றி அல்லாஹ் பின்வருமாறு கூறுகின்றான்
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.