மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு (2)
முதல் அம்சம்
நாமனைவரும் மறுமையை நம்பியவர்கள். அந்த மறுமையில் நம் நன்மைத் தட்டுப் பாரமானதாகவும், தீமைத் தட்டுப் பாரம் குறைந்ததுமாகவும் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். எவ்வளவுதான் பணத்தை வாரி இரைத்தாலும் நன்மை, தீமை தாராசுகளில் எவ்வித மாற்றத்தையும் செய்ய முடியாது என நம்புகிறோம். ஆகவே இவ்வுலகில் ‘அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டுமென்ற ஏகத்துவத்துக்கு அடுத்ததாக மிகச் சிறந்த நட்காரியமொன்று இருக்குமானால் அது தாய், தந்தையரைப் பேணுதலே. பின்வரும் ஹதீஸை அவதானியுங்கள்.
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் கேட்டபோது, ‘தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழுவதாகும்’ என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘பெற்றோருக்கு நன்மை செய்தல்’ என்றார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். ‘இறைவழியில் அறப்போர் புரிதல்’ என்றனர். எனக்கு இவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிவித்தார்கள். (கேள்வியை) மேலும் நான் அதிகப்படுத்தியிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மேலும் சொல்லியிருப்பார்கள். (அறிவிப்பவர் : அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி) 527)
அல்லாஹ்வின் பாதையில் போராடல், தர்மம் செய்தல் போன்ற நற்காரியங்களை விடவும் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் எனும் நற்காரியம், நன்மைத் தட்டில் பாரமானதாகும். மற்றைய நற்கருமங்களைச் செய்து தேடும் நன்மைகளைக் காட்டிலும் அதனால் ஏற்படும் நன்மைகள் பன்மடங்காகும்.ஈஸா நபியவர்களைப் பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை. (மர்யம் : 31- 32)
தாய்க்கு உபகாரம் செய்வதன் சிறப்பை சூசகமாக இவ்வசனம் சுட்டிக்காட்டுகின்றது. நமது நன்மைத்தட்டில் பாரம் அதிகரிக்க இதைப் போன்று வேறெதுவும் இல்லையெனலாம்.
ஒருவர் ஒரு முஃமினைக் கொலை செய்து, ஆட்சியாளர்களை விட்டும் மறைந்த நிலையில் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடினால் அவருக்கு மன்னிப்புண்டு ஆனால் நபித்தோழர் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இதில் முரண்பட்டிருந்தார்கள். இவ்வாறு கொலை செய்தவருக்கு இம்மையிலும், மறுமையிலும் மன்னிப்பில்லை என்ற நிலைப்பாட்டிலிருந்தார்கள். ஆனாலும் பிற்காலத்தில் இக்கருத்தை பிழை கண்டார்.
ஒரு முறை ஒரு நபர் இப்னு அப்பாஸ் அன்ஹு ரளியல்லாஹு அவர்களிடம் வந்து ‘நான் ஒருவரைக் கொலை செய்து விட்டேன். எனக்குப் பாவமன்னிப்புண்டா? எனக் கேட்டார். இப்னு அப்பாஸ் அன்ஹு ரளியல்லாஹு அவர்கள் ‘உமக்குப் பாவமன்னிப்பில்லை’ என்று அவரிடம் கூறினார். அதைக் கேட்டதும் அந்நபர் சென்று விடுகிறார். என்றாலும் இப்னு அப்பாஸ் அன்ஹு ரளியல்லாஹு அவர்கள் மீண்டும் அந்நபரையழைத்து ‘உம் பெற்றோர் உயிருடனுள்ளனரா?’ என விசாரித்தார்கள். அதற்கவர் ‘ஆம்’ எனக் கூறினார். அதற்கு இப்னு அப்பாஸ் அன்ஹு ரளியல்லாஹு அவர்கள் ‘உம் பெற்றோருக்கு நீர் நன்மை செய்யும் சில வேளை அதனால் உன் பாவம் மன்னிக்கப்படலாம்’ என்று அவரிடம் கூறினார்கள். ஒரு முஃமினைக் கொலை செய்தவனுக்கு பாவ மன்னிப்பில்லை என்ற தனது நிலைப்பாட்டிலிருந்து இப்னு அப்பாஸ் அன்ஹு ரளியல்லாஹு அவர்கள் மாறுவதற்குக் காரணமே பெற்றோருக்கு உபகாரம் செய்வதில் காணப்படும் அளவிட முடியாத நன்மைகள்தான்.
குகைவாசிகளின் செய்தியிலும் பெற்றோருக்கு உபகாரம் செய்தல் என்பதுவே முதலாவதாக இடம் பெறுகின்றது. அதை வைத்தே அம்மூவரில் முதலாமவர் தன் பிராத்தனையைத் துவங்குகிறார்.
அந்த செய்தி கீழ் வருமாறு இடம் பெற்றுள்ளது.
”(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையில் உள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றனர். அவர்களில் ஒருவர், ‘இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர்; நான் ஆடு மேய்க்க வெளியே சென்றுவிட்டுப் பிறகு வந்து, பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன். ஓர் இரவு தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தை பசியால் என் காலடியில் அழுதனர். விடியும்வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானதைப் பார்க்கும் வகையில் ஓரிடை வெளியை ஏற்படுத்து’ எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகும்) இடைவெளி உண்டானது.
மற்றொருவர், ‘இறைவா! என்னுடைய தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும்வரை தன்னை அடையமுடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே! என்று அவள் கூறினாள். உடனே அவளைவிட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தைவிட்டு நீக்கு’ எனக் கூறினார். அல்லாஹ் அவர்களைவிட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்.
மற்றொருவர், ‘இறைவா நான் மூன்று ஸாவு கேழ்வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்தபோது அதை அவர் மறுத்துவிட்டார். அந்தக் கேழ்வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, அல்லாஹ்வின் அடிமையே! என்னுடைய கூலியைக் கொடு! என்றார். இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை; எடுத்துச் செல்லும் என்று கூறினேன். அதற்கவர் என்னைக் கேலி செய்கிறீரா? என்று கேட்டார். நான் உம்மைக் கேலி செய்யவில்லை; இவை உமக்குரியவைதான் எனக் கூறினேன். இறைவா! இதை நான் உன்னுடைய திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களைவிட்டு இந்தச் சிரமத்தை நீக்கு’ எனக் கூறினார். முழுமையாகச் சிரமம் விலகியது.’ (அறிவிப்பவர் : இப்னு உமர் அன்ஹு ரளியல்லாஹு, ஆதாரம் : புகாரி 2215)
எனவே தாய், தந்தைக்குத் தான் செய்த நலவை வைத்து அல்லாஹ்விடம் பிராத்தித்த போது கற்பாறை விலகியது என்பதிலிருந்து பெற்றோரைப் பேணுவதின் சிறப்பும், அவசியமும் தெளிவாய் தெரிகின்றது.
நமது வாழ்வில் இவ்வாறான ஒரு கஷ்டமான நிலை ஏற்பட்டாலும் இக்குகை வாசியைப் போன்று நாமும் நம் பெற்றோருக்கு நன்மைகள் பல செய்திருப்போமாயின் அவற்றை வைத்து நமக்கேற்பட்டுள்ள கஷ்டத்தை நீக்கக் கோரி அல்லாஹ்விடம் துஆச் செய்வோமாயின் நமது கஷ்டங்கள் நீங்குவதற்கான வாய்ப்புக்களுள்ளன.
தன் தாய், தந்தையர் உயிருடனிருந்தும் அவர்களுக்கு நன்மைகள் செய்வதன் மூலம் ஒருவன் சுவனம் செல்லவில்லையாயின் அவனுக்கு நாசம் உண்டாகட்டும் என நபியவர்கள் கூறினார்கள்.
மற்றொரு செய்தி :
”ஒருவர் ஒரு பாதையில் சென்று கொண்டிருந்தபோது அவருக்குக் கடும் தாகம் ஏற்பட்டது. (வழியில்) அவர் ஒரு கிணற்றைக் கண்டு அதில் இறங்கினார். (அதிலிருந்து) தண்ணீர் குடித்தார். பிறகு வெளியே வந்தார். அப்போது, தன் எதிரே நாய் ஒன்று தாகத்தால் (தவித்து) ஈரமண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதைப் பார்த்தார். ‘எனக்கு ஏற்பட்டது போன்ற (கடும்) தாகம் இந்த நாய்க்கும் ஏற்பட்டுள்ளது போலும்’ என்று (தன் மனத்திற்குள்) கூறினார். பிறகு கிணற்றில் இறங்கி, தன் காலுறையைத் தண்ணீரால் நிரப்பி (மேலே கொண்டு வந்து) அந்த நாய்க்குப் புகட்டினார். அல்லாஹ், அவரின் இந்த நற்செயலை அங்கீகரித்து அவருக்கு மன்னிப்பளித்தான்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். இதைச் செவியுற்ற மக்கள், ‘இறைத்தூதர் அவர்களே! கால்நடைகள் (மற்றுமுள்ள பிராணிகள்) விஷயத்திலுமா எங்களுக்குப் பிரதிபலன் உண்டு?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘உயிருள்ள பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்குக் கருணை காட்டினால்) உங்களுக்குப் பிரதிபலன் உண்டு’ என்று பதிலளித்தார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரர் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் : புகாரி 2466)
”தாய், தந்தையரின் பொருத்தமே அல்லாஹ்வின் பொருத்தமாகும். அல்லாஹ்வின் கோபம் அவர்களிருவரின் கோபத்திலுள்ளது.” (திர்மிதி)
எனவே நம் பெற்றோருக்கு நாம் செய்கின்ற ஓர் அற்ப காரியத்திலும் இமாலயக் கூலி நமக்கிருக்கின்றது என்பதை நாம் இதயத்தில் பதிந்து கொள்ள வேண்டும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.