மார்க்கக் கல்வி மகத்தானதே! (2)
நூ. அப்துல் ஹாதி பாகவி
அரபிமொழி
திருக்குர்ஆனின் மொழியான அரபிமொழி போதிக்கப்படுவது அரபிக் கல்லூரிகளில்தான் என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். இந்த அரபிமொழியின் முக்கியத்துவத்தையாவது நாம் உணர்ந்துள்ளோமா? அதன் வளர்ச்சிக்காக நாம் பாடுபட்டுள்ளோமா? ஐக்கிய நாடுகளின் சபையில் அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் ஆறு. அவற்றுள் ஒன்று அரபிமொழி. நம் நாட்டின் தேசிய மொழிகள் 22 ஆகும். அவற்றுள் அரபியும் ஒன்று.
பத்து, பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் மொழிப் பாடங்கள் உள்ளன. அதில் மாணவர்கள் தாம் விரும்பும் ஏதேனும் ஒரு மொழியைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஆக, அங்கும் அரபிமொழிக்கு ஓர் இடமுண்டு. அது மட்டுமின்றி, ஐ.ஏ.எஸ்., ஐ.பீ.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளிலும் அரபியை ஒரு விருப்பப் பாடமாகத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இவ்வளவு வாய்ப்புகள் இருந்தும் மிகச் சிலரைத் தவிர யாரும் அரபிமொழிக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லையே ஏன்?
“மூன்று காரணங்களுக்காக அரபிமொழியைக் கற்றுக்கொள்ளுங்கள்; குர்ஆன் அரபி; என்னுடைய அறவுரைகள் அரபி; சொர்க்கத்தின் மொழி அரபி” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல்: பைஹகீ)
உலகப் பொதுமறையான திருக்குர்ஆனும் இறுதி இறைத்தூதரின் பொய்யாமொழிகளும் அரபி மொழிக்குள் அடங்கியுள்ளன. எனவே அவற்றின் விளக்கவுரைகளும் அரபிமொழியிலேயே எழுதப்பட்டுள்ளன. ஆகவே, அரபிமொழி தெரியாதவர்கள் தம்முடைய இஸ்லாமிய மார்க்கத்தின் பெரும்பகுதியை அறியாமலேயே இருந்துவருகின்றனர்.
நாம் நாள்தோறும் ஐவேளைத் தொழுகையில் ஓதுகின்ற திருக்குர்ஆன் வசனங்கள் அரபிமொழிதான். நாம் நாள்தோறும் ஓதுகின்ற வேதம் அரபிமொழிதான். ஆக, இவ்வுலகில் எங்கெல்லாம் முஸ்லிம்கள் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்களோ அங்கெல்லாம் அரபிமொழி வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஆனால், வாசிக்க மட்டுமே கற்றுள்ள பலர் அதன் அர்த்தங்கள் பற்றி யோசிக்கவே இல்லை. அதனால்தான் அரபிமொழியின் தேடலில் தொய்வு ஏற்பட்டுவிட்டது.
கால் நூற்றாண்டுக்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் பலர், அரபி எழுத்தில் எழுதப்பட்ட எதையும் வாசிக்கத் தெரிந்திருந்தார்கள். தமிழைக்கூட அரபியில் எழுதி செய்திப் பரிமாற்றம்செய்து கொண்டார்கள்; இஸ்லாமியச் சட்டங்களைத் தெரிந்துகொண்டார்கள். இதனால் நூல் எழுதியவர்களும் அரபுத் தமிழில் எழுதினார்கள். அது சங்கேத மொழியாகவும் பயன்பட்டிருக்கிறது. இதனால்தான்
`அரபுத் தமிழ்’ எனும் சொல்வழக்கு பயன்பாட்டில் இருந்தது. ஆனால், இன்று அது தலைகீழாக மாறி, அரபியையும் தமிழில் எழுதி வாசிக்க வேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரபியைப் பார்த்து வாசிக்கத் தெரியாத நிலையில் பலர் இருப்பது வேதனையிலும் வேதனையாகும்.
நம் பிள்ளைகள் மழலை வகுப்புக்குச் சென்று, அங்குக் கற்றுக் கொண்ட ஆங்கில வார்த்தைகளைத் தட்டுத் தடுமாறி, திக்கித் திக்கிப் பேசுவதைக் கண்டு மகிழ்ச்சியடைகின்ற நாம், அருகிலுள்ள பள்ளிவாசலில் போதிக்கப்படுகின்ற அரபிமொழி வகுப்புக்கு அவர்களை அனுப்புவதில்லையே ஏன்?
எனவே, நாம் அரபி மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமென்றால், பாலர் வகுப்பு முதல் அதற்கெனத் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இல்லையேல் நம் பிள்ளைகளும் திருக்குர் ஆனைப் பார்த்து வாசிக்கத் தெரியாத இழிநிலைக்குத் தள்ளப்படு வார்கள் என்பது திண்ணம்.
பெற்றோருக்கு என்ன பயன்?
இஸ்லாமியக் கல்வியைக் கற்றுக்கொள்கின்ற உங்கள் பிள்ளை, அத்துடன் இஸ்லாமியப் பண்பாடுகளையும் ஒழுக்கத்தையும் இறையச்சத்தையும் கற்றுக்கொள்கிறான். இதனால் உங்கள் பிள்ளை பெற்றோரை மதிக்கின்ற பிள்ளையாக, உங்களின் முதுமையில் உங்களைக் கைவிட்டுவிடாத பிள்ளையாக, அனைவராலும் மதிக்கப்படுகின்ற பிள்ளையாக, அல்லாஹ்வின் அன்பைப் பெற்ற பிள்ளையாக உருவாகும். பெற்ற உங்களுக்கு இதைவிட வேறு பெருமை என்ன வேண்டும்? யோசியுங்கள்; பலமுறை யோசியுங்கள். மார்க்கக் கல்வியை உங்கள் பிள்ளைக்குக் கொடுப்பதால் தீமை ஏதும் உண்டா? இனியும் ஏன் தாமதம்? உங்கள் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்த்து ஈருலகிலும் பயன்மிக்க பிள்ளைகளாக உருவாக்குங்கள்!
மறுமைப் பயனைப் பற்றி நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளதாவது: (உங்களுள்) திருக்குர்ஆனைக் கற்று, அதன்படி செயல்பட்டவரின் பெற்றோருக்கு மறுமையில் ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அது, உலகில் ஒருவரின் வீட்டில் சூரியன் இருந்தால் எவ்வாறு அவ்வீடு ஒளி இலங்குமோ அதைவிட ஒளிமிக்கதாக இருக்கும். அப்படியென்றால், அதன்படி செயல்பட்டவருக்கு என்ன (கிடைக்கும்) என்பதை நீங்களே முடிவுசெய்து கொள்ளுங்கள். (நூல்: அபூதாவூத்)
இஸ்லாமியச் சகோதரர்களே!
உங்கள் வீட்டில் நான்கு பிள்ளைகள் இருந்தால் ஒருவனை மருத்துவராகவும், மற்றொருவனை வழக்கறிஞராகவும், வேறொரு வனைப் பொறியாளராகவும் ஆக்கிக்கொள்ளுங்கள். அவர்களுள் ஒருவரையாவது ஆலிமாக ஆக்குங்கள். அப்போதுதான் நம் சமுதாயத் தில் இஸ்லாமியக் கல்விமீது ஆர்வமும் அக்கறையும் ஏற்படும். இஸ்லாமியக் கல்வியை எடுத்துச்சொல்ல ஆள் பற்றாக்குறை ஏற் படாது. செல்வந்தர்களும் தம் பிள்ளைகளை அரபிக் கல்லூரிகளில் சேர்க்க முன்வந்துவிட்டால் அக்கல்விமீது பொதுவாக இருக்கின்ற குறுகிய கண்ணோட்டம் மாறும். அதனால் சமுதாயம் மிகப்பெரும் நன்மைகளை அடையும் என்பது திண்ணம். ஒவ்வோர் ஊரிலும் ஆலிம்கள் இருக்க வேண்டும். அதற்கு அவ்வூரிலுள்ள ஜமாஅத்தார்கள் ஒன்றிணைந்து தம் ஊரிலுள்ள தகுதியான மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அரபிக் கல்லூரிகளில் சேர்த்து, அவர்களுக்கான செலவையும் ஏற்றுக்கொண்டால் ஒவ்வோர் ஊரிலும் ஆலிம்கள் உருவாகிவிடுவார்கள்.
புதுமைக் கல்லூரிகள்
உங்கள் பிள்ளைகளை ஆலிம்களாகவும் பட்டதாரிகளாகவும் உருவாக்க, குறிப்பிட்ட சில கல்லூரிகளை மட்டும் இங்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். இவை தவிர இன்னும் பல்வேறு கல்லூரிகள் ஆங்காங்கே உள்ளன என்பதையும் நினைவில்கொள்க!
1. பிலாலிய்யா அரபிக் கல்லூரி- நெமிலி, சென்னை.
2. புகாரி ஆலிம் அரபிக் கல்லூரி – வண்டலூர், சென்னை.
பேச: 044-22751280/82
3. மதீனத்துல் இல்ம் அரபிக் கல்லூரி, கானத்தூர், சென்னை.
பேச: 9444248460
4. நூருல் ஹிதாயா அரபிக் கல்லூரி, பனையூர், சென்னை.
பேச: 9443264097
5. கைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி, வீரசோழன்.
6. அன்வாருல் உலூம் அரபிக் கல்லூரி, திருச்சி.
7. இர்ஷாதுல் உலூம் அரபிக் கல்லூரி, பெரம்பலூர்.
பேச: 94438 05885
8. ஜாமிஆ அஸ்ஸய்யிதா ஹமீதா, அரபிக் கல்லூரி, கீழக்கரை
பேச: 04567-241957
9. உஸ்வத்துன் ஹசனா அரபிக் கல்லூரி, பள்ளப்பட்டி
பேச: 94860 58551
மரபுவழிக் கல்லூரிகள்
1. அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிப் பல்கலைக் கழகம், வேலூர்.
2. காஷிஃபுல் ஹுதா அரபிக் கல்லூரி, சென்னை.
3. ஜமாலிய்யா அரபிக் கல்லூரி, சென்னை.
4. தாவூதிய்யா அரபிக் கல்லூரி, ஈரோடு.
5. மன்பவுல் உலா அரபிக் கல்லூரி, கூத்தாநல்லூர்.
பேச: 04367-234450
6. மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி, லால்பேட்டை.
பேச: 04144-269079
7. மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி, நீடூர்.
பேச: 04364-250173
8. ரியாளுல் ஜினான் அரபிக் கல்லூரி, திருநெல்வேலி-பேட்டை
9.யூசுஃபிய்யா அரபிக் கல்லூரி- திண்டுக்கல்
10. இம்தாதுல் உலூம் அரபிக் கல்லூரி-கோவை
11. மன்பவுஸ் ஸலாஹ் அரபிக் கல்லூரி- தூத்துக்குடி
12. சிராஜுல் முனீர் அரபிக் கல்லூரி- புதுக்கோட்டை
13. ஸலாஹிய்யா அரபிக் கல்லூரி- அதிராம்பட்டினம்
ஆக, ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறப்பான அரபிக் கல்லூரிகள் பல செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. பலரும் அதன் பக்கம் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டால், அரபிக் கல்லூரிகளிலும் சமுதாயத் திலும் இன்னும் பற்பல முன்னேற்றங்களைக் கொண்டுவரலாம். ஒவ்வொரு கல்லூரியிலும் ஒரு Teleconference Hall ஏற்படுத்தி தமிழகத்தி லுள்ள மூத்த அறிஞர்களின் சொற்பொழிவுகளையும் அவர்கள் அரபிக் கல்லூரிகளில் நடத்துகின்ற பாடங்களையும் மாணவர்கள் அனைவரையும் கேட்கச் செய்யும் திட்டம் வருங்காலத்தில் செயல்படுத்தப்படும். இதனால் பல்வேறு பயன்கள் உண்டு. இதைச் செயல்படுத்துவதால் மூத்த அறிஞர்களிடம் பாடம் கற்றுக் கொண்ட திருப்தி மாணவர்களுக்கு ஏற்படுவதோடு, மாணவர்கள் தம் ஐயங்களையும் உடனுக்குடன் தீர்த்துக்கொள்ளலாம்.
ஆக, இந்தக் குறுநூலை உருவாக்கியுள்ள நோக்கம் நீங்கள் உங்கள் குடும்பத்தில் ஒருவரையாவது ஆலிமாக ஆக்க வேண்டும்; வீட்டுக்கு வீடு ஓர் ஆலிம் உருவாக வேண்டும் என்பதேயாகும். எனவே பழைய சிந்தனைகள் மறையட்டும்; மார்க்கக் கல்வியின்பால் புதிய சிந்தனையும் புதிய கண்ணோட்டமும் ஏற்படட்டும். பல்வேறு ஆலிம்களை உருவாக்கி இச்சமுதாயத்துக்கு அர்ப்பணிப்போம்; அவர்கள் எதிர்காலச் சமுதாயத்தைச் சீர்திருத்துவதோடு அவர்களும் நிம்மதியாக வாழப் பாதை அமைத்துக் கொடுப்போம் வாருங்கள்! உயர்ந்த உள்ளத்தையும் உயர்ந்த எண்ணத்தையும் நம் அனைவருக்கும் உயர்ந்தோன் அல்லாஹ் வழங்குவானாக!
source: www.hadi-baqavi.blogspot.in