மரணம் வரை உங்களை விரும்பும் ஒரே உறவு (1)
பெற்றோரைப் பேணவேண்டும் என்பது தொடர்பில் பல்வேறு உரைகள் ஆற்றப்பட்டிருந்தாலும் பெற்றோரைப் பேணுதல் என்ற அத்தியாயம் என்றைக்குமே பேசப்பட வேண்டியதொன்றாகவே இருந்து வருகின்றது.
பெற்றோரைக் கவனிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டதுமே நம்மில் பலருக்கு நினைவில் வருவதெல்லாம் ‘நான் என் தாய் தந்தையருக்கு மாதாந்தம் 5000 ரூபாய் பணம் கொடுத்து வருகிறேன். எனது மனைவிக்குக் கொடுக்காவிட்டாலும் அவர்களுக்குக் கொடுக்க நான் தவறுவதில்லை. அவர்களின் மருந்துச் செலவீனங்களை நானே பொறுப்பேற்றுள்ளேன்’ என்பதுதான்.
‘பெருநாள் தினமானால் தாய்க்குச் சேலை எடுத்துக் கொடுப்பதும், தந்தைக்கு சாரம், சட்டை வாங்கிக் கொடுப்பதும் பெற்றோரைக் கவனித்தலுக்கு அடையாளமாகப் பலராலும் பார்க்கப்படுகின்றது. பெற்றோரைக் கவனித்தல் பற்றிய அல்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் முன்வைக்கும் போதெல்லாம் மேற்செல்லப்பட்ட சில விடயங்களை வைத்து தம் பெற்றோரைத் தாம் கவனித்து விட்டதாக பலரும் திருப்தி கண்டு விட்டதால் பெற்றோரைக் கவனித்தல் என்றால் என்ன என்பது பற்றி இஸ்லாம் கூறும் பெரும் பகுதியொன்று மறைந்து போயுள்ளது. அதைத் தெளிவுபடுத்த வேண்டிய தேவையும் ஏற்பட்டு விட்டது.
அல்குர்ஆனையும், ஹதீஸையும் ஆராய்ந்து பார்க்கும்போது ‘பெற்றோருக்கு உணவு, உடை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும் என்று எங்கும் கூறப்படவில்லை. மனைவிக்கு உணவு கொடுக்க வேண்டும், உடை கொடுக்க வேண்டும், இருப்பிடம் கொடுக்க வேண்டும், என்றுதான் அல்குர்ஆன் கூறுகின்றது. எனவே உணவு, உடை, வீடு கொடுப்பதுதான் ‘கவனித்தல்’ என்பதற்கு அடையாளம் என்றால் மனைவியைத்தான் அல்லாஹ் கூடுதலாகக் கவனிக்கச் சொல்லியுள்ளான் என்று நாம் கூறவேண்டியாகிவிடும். எந்தளவுக்கென்றால் ஒருவர் தன் மனைவியை விவாகரத்துச் செய்து விட்டால் இத்தாக்காலம் முடியும் வரை உணவு, உடை ஆகியவற்றுக்கு அவரே பொறுப்பென்று இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.
விவாகரத்து என்பது கணவன் மனைவிக்கிடையிலான அன்புப் பாலம் உடைவதால் ஏற்படுவதாகும். கணவன், மனைவிக்கிடையிலான அன்பு தகர்ந்த பின்னாலும் மனைவிக்கு உணவு, உடை கொடுக்கச் சொல்லி இஸ்லாம் பணிக்கின்றது என்றால் அன்பிற்கும் உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றை வழங்குவதற்கும் அடிப்படையில் சம்பந்தம் கிடையாதென்பது தெளிவாகின்றது. ஆனால் அதிகமானோர் பெற்றோரைக் கவனித்தல் என்றால் இதைத்தான் விளங்கி வைத்துள்ளனர்.
கவனித்தல் என்பதற்கு அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுதல் என்பதே அர்த்தமென்றால், தன் மனைவிக்கே செலவு செய்ய சக்தியற்ற ஓர் ஏழை, தன் பெற்றோரைக் கவனிப்பது எவ்வாறு? என்ற கேள்வியெழுகிறது. எனவே கவனித்தல் என்ற விடயத்தை நாம் தவறாக விளங்கி வைத்துள்ளோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
‘வாழ்வில் சந்தோசம் ஏற்பட வேண்டுமென்றால் பொருளாதாரத்தைத் திரட்டவேண்டும்’ என நம்மில் பலர் நினைக்கின்றனர். பொருளாதாரமில்லாது வாழ்பவன் தன்னிடம் எதுவுமில்லை என்றுதான் நினைக்கின்றான். பொருளாதாரம் வாழ்க்கையில் அவசியம் என்பதற்காக பொருளாதாரம்தான் வாழ்க்கை என்றாகிவிட முடியாது. அவ்வாறானதொரு விதியை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. இவைகளைத் தாண்டி, ‘இவ்வுலகில் பெறுமதி மிக்கதும், விலைமதிப்பற்றதுமான ஒன்றிருக்குமாயின் ஒருவருக்கு இன்னொருவரிடமிருந்து கிடைக்கும் அன்புதான் எனக் கூறலாம்.
வசதி படைத்தவர் மீதும், தனக்கு உதவி செய்தவர் மீதும், கௌரவமாக இருக்கும் ஒருவர் மீதும் ஒருவருக்கு அன்பு ஏற்படலாம். இத்தகைய அன்பு இயல்பானதன்று, உள்நோக்கமுடையது, நோக்கம் நிறைவேறியதும் கானல் நீர் போன்று மறையக்கூடியது. வசதிபடைத்தவரைச் சுற்றி வட்டமிடும் சந்தர்ப்பவாத ரெயில் சினேகிதர்களைப் பார்க்கின்றோம். பணமும், பதவியும் அவரிடமிருந்து கரைந்து போகவே இவர்களும் மெல்ல மறைந்து விடுகின்றனர். ஆகவே இத்தகைய அன்பு எவ்வகையிலும் பெருமானமில்லாதது. ஆனால் ஒருவருக்கு இன்னொருவரிடமிருந்து கிடைக்கும் அன்பு என்பது மிகப்பெறுமதிவாய்ந்ததாகும். அதை அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.
وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنْفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ الأنفال : 63
அவர்களின் உள்ளங்களிடையே அவன் பிணைப்பை ஏற்படுத்தினான். பூமியில் உள்ளஅனைத்தையும் நீர் செலவிட்டாலும் அவர்களின் உள்ளங்களிடையே உம்மால் பிணைப்பை ஏற்படுத்தியிருக்க முடியாது. மாறாக அல்லாஹ்வே அவர்களிடையே பிணைப்பை ஏற்படுத்தினான். அவன் மிகைத்தவன் ஞானமிக்கவன். (அல்அன்ஃபால் : 63)
எனவே அன்பென்பது அல்லாஹ்வால் ஏற்படுத்தப்படுவதாகும். ஒருவர் இன்னொருவருக்கு மிகப்பெரும் அறியாயம் செய்து விட்டார் அதனால் அநியாயமிழைக்கப்பட்ட அம்மனிதரின் வாழ்வே இருண்டுவிடுகிறது. பின்னர் தான் செய்த தவறை வருந்தி அநியாயம் செய்த அம்மனிதர் அநியாயமிழைக்கப்பட்டவருக்கு பெரும் தொகைப் பணம் கொடுக்கின்றார். தனக்கேற்பட்டுள்ள வறுமைக்காக அவ்வுதவித்தொகையை அவர் பெற்றுக் கொண்டாலும் அவரின் உள்ளத்தில் அன்பு ஏற்படப்போவதில்லை.
தன்னை யாரவாவது விமர்சிக்கும் போது ‘எதை வேண்டுமானாலும் சொல்லட்டும் அது பற்றி எனக்குக் கணக்கில்லை’ என்று சிலர் கூறுவர். இவ்வாறு இவர்கள் கூறுவதற்கு காரணம் விமர்சிப்பவரிடம் இவர்களுக்கு எவ்விதத் தேவையுமில்லை என்பதுவே. அதேவேளை தனக்கு உதவி செய்யும் ஒருவர் தன்னைப் பற்றி விமர்சித்துள்ளதைக் கேட்டால் ‘ஏன் விமர்சித்தார்? எதற்காக விமர்சித்தார்? என்று இவர்கள் ஆதங்கத்தில் கேட்பார்கள். விமர்சித்தவரிடம் தாம் தேவையுடையோராக இருப்பதனாலேயே இவ்வாறு இவர்கள் நிலைமாறுகின்றனர்.
போலியான அன்பின் மாதிரிவடிவங்களுக்கு இது போன்றவற்றை உதாரணமாகக் கொள்ளலாம். ஆனால் இன்னொருவரிடமிருந்து நமக்குக் கிடைக்கும் அன்பானது அல்லாஹ் நமக்கேற்படுத்தியிருக்கும் அருட்கொடையெனலாம். நாம் கேட்காமல், எவ்வகையிலும் நாடாமல் இவ்வாறான அன்பு நமக்குக் கிடைக்குமென்றால் அது வார்த்தைகளால் அளவிடமுடியாததும், பெறுமானம் கணிக்க முடியாததுமாகும். அவ்வாறு தம் உயிரிலும் மேலாக நம்மை நேசிக்கும் ஓருறவு இவ்வுலகில் இருக்குமானால் அது நம் தாயும், தந்தையும்தான். வேறுயாருமில்லை.
நம்மிடமிருந்து கிடைக்கும் நலவுகளை, இலபாங்களைக் கணக்கிடாது நம் அன்பை மட்டுமே எதிர்பார்த்து தம் அன்பைச் சொரியும் ஓருறவிருக்குமானால் அது நம் தாய், தந்தை மட்டுமே. ஆனால் நம்மிடம் பெறுமானமிழந்து காணப்படுவதும் இந்த அன்புதான். இலவசமாய்க்கிடைப்பதற்கு நம்மிடம் மதிப்பில்லையென்பதால் இலவசமாகக் கிடைக்கும் தாய், தந்தை அன்புக்கும் நம்மிடம் மதிப்பில்லை. அதனால்தான் நம் மீது அன்பைச் சொரியும் அவர்களிருவரின் உணர்வுகளை நாம் மதிப்பதில்லை. நம் வர்த்தகப் பங்காளிகள் மீது நமக்கிருக்கும் சந்தர்ப்பவாத அன்பைப் பாதுகாப்பதில் நாம் கொள்ளும் கவனத்திற்கும், சுயலாபம் எதையும் எதிர்பார்க்காமல் உண்மையாகவே நம்மை நேசிக்கும் தாய், தந்தையினரின் அன்பைப் பாதுகாப்பதில் நாம் கொள்ளும் கவனத்திற்கும் பாரிய பாகுபாடுகள் காணப்படுகின்றன.
பெற்றோரின் அந்தஸ்தை முறையாகப் புரியாமைதான் இப்புறக்கணிப்புக்களுக்குக் காணரமாகின்றது. ஆகவே பெற்றோரின் பெறுமதியை முறையாகப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் முக்கியமான நான்கு அடிப்படைகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த நான்கு அம்சங்களுக்குள்ளும் பெற்றோரைக் கவனித்தல் என்பது முழுமையாக உள்ளடங்கியிருக்கின்றது. இவற்றை சரியாக விளங்கிக் கொள்ளும் பட்சத்தில் பெற்றோரைப் பேணல் என்ற அத்தியாயத்தை முறையாக விளங்கிக் கொள்ளலாம்.
கட்டுரையின் தொடர்ச்சிக்க்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்