சண்டையா? சீக்கிரம் சமாதானமாகி விடுங்களேன்!
[ சண்டை போடாத தம்பதியர் யாரும் இருக்கமாட்டார்கள். சண்டை இல்லாவிட்டால் வாழ்க்கையானது உப்புச் சப்பில்லாத உணவாகப் போய்விடும். ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், நன்றாக கத்தி சண்டை போடுங்கள், எந்த சமயத்திலும் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். சில மணிநேரம் கழித்து ஏதாவது சாக்கு வைத்து பேசி சமாதானத்திற்கு வழி தேடுங்கள். இதுதான் உண்மையான தாம்பத்திற்கு வெற்றி ]
சண்டை போடாத தம்பதியர் யாரும் இருக்கமாட்டார்கள். சண்டை இல்லாவிட்டால் வாழ்க்கையானது உப்புச் சப்பில்லாத உணவாகப் போய்விடும்.
தம்பதியரிடையே சண்டை வர பல காரணங்கள் இருக்கின்றன. பொருளாதாரப் பிரச்சினை, உறவினர்களை கவனிப்பது, ஈகோ, சந்தேகம் போன்ற காரணங்களினால் சண்டை ஏற்படும். தவிர்க்க முடியாத காரணங்களினால் சண்டை ஏற்பட்டால் பேசாமல் மட்டும் இருந்து விடாதீர்கள் அப்புறம் அதுவே விரிசலுக்கு காரணமாகிவிடும் என்கின்றனர் நிபுணர்கள்.
தகவல் தொடர்பு குறை
தம்பதியரிடையே பேச்சுவார்த்தை குறைந்தாலே ஏதோ சிக்கல் என்று அர்த்தம். இதுவே சண்டைக்கு முதல் விதையாக அமைகிறது. எனவே எதுவென்றாலும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள். பிரச்சினை ஏற்பட வாய்ப்பே இல்லை. தான் சொல்வதுதான் சரி என்று எப்போது நிற்காதீர்கள். வாழ்க்கைத் துணை என்ன சொல்ல வருகிறார் என்பதை காது கொடுத்துக் கேளுங்கள். சில விசயங்களை பேசுவதை கேளுங்கள் இணக்கம் அதிகமாகி சண்டை ஏற்படுவது தவிர்க்கப்படும்.
பொருளாதாரப் பிரச்சினைகள்
தம்பதியரிடையே சண்டை வர முக்கியகாரணியாக பணப்பிரச்சினை முன்நிற்கும். அதிகம் செலவு செய்வது யார் என்பதில் தொடங்கி, எதனால் செலவு ஏற்படுகிறது என்பது வரை அலசி ஆராய்ந்து சண்டை போடுவார்கள். எனவே பணத்தை வெளிப்படையாக கையாளுங்கள் சண்டை ஏற்பட வாய்ப்பே இல்லை.
உறவுகளை கவனிப்பது
மனைவி வீட்டு உறவுகளோ, கணவர் வீட்டு உறவுகளோ இருவரையும் சமமாக மதிக்கும் பட்சத்தில் எந்தவித பிரச்சினைகளும் எழ வாய்ப்பே இல்லை. தன் வீட்டு உறவுகளை மட்டும் மதித்துவிட்டு துணையின் வீட்டு உறவுகளை தவிர்த்தால் நிச்சயம் சண்டை ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
சமாதானமாகி விடுங்கள்
சண்டை வந்தால் அதை வெளிப்படுத்திவிடுங்கள். மவுனமாக இருந்துவிட்டால் அப்புறம் சிக்கல் அதிகமாகி அதுவே தீர்க்க முடியாத பிரச்சினையாகிவிடும். ஏனெனில், மவுனம் என்பது ஒரு கூர்மையான ஆயுதம். அதனை முறையான சரியான விஷயத்திற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். கணவன்-மனைவிக்குள் சண்டை வரும் சமயத்தில் இருவரும் மவுனமாகிவிடுவது பெரும் ஆபத்தாகும். தேவையற்ற எண்ணங்கள் மனதில் தோன்றி பின்னர் இருவருக்கும் இடையே எதிர்மறை எண்ணங்கள் குடியேற காரணமாகிவிடும்.
ஈகோ வேண்டாம்
தம்பதியர் இருவரும் மவுனமாக இருப்பதால் யார் முதலில் பேச்சைத் தொடங்குவது என்பதில் ஈகோ வளர்ந்து வெட்ட முடியாத பெரிய மரமாக மாறிவிடும். இருவரும் பேசாமல் இருக்கும் பொழுது, இனிமேல் அவராக வந்து பேசினாலும், பேசக்கூடாது என்ற நிலைமைக்குப் போய்விடுவார்கள். அதற்குப்பின் சமாதானம் என்பது மிகவும் கஷ்டப்பட்டு அடைய வேண்டிய விஷயமாகிவிடும்.
எனவே ஏதாவது பிரச்சனை என்றால் திட்டுங்கள், நன்றாக கத்தி சண்டை போடுங்கள், எந்த சமயத்திலும் பேசாமல் மட்டுமே இருக்கவே இருக்காதீர்கள். சில மணிநேரம் கழித்து ஏதாவது சாக்கு வைத்து பேசி சமாதானத்திற்கு வழி தேடுங்கள். இதுதான் உண்மையான தாம்பத்திற்கு வெற்றி என்கின்றனர் நிபுணர்கள்.