அல்லாஹ் என்னை மன்னிப்பானா?
கேள்வி : நான் ஒரு முஸ்லிமாக இருந்துகொண்டு சாராயம் குடிக்கிறேன்; விபச்சாரம் செய்கிறேன். எனக்கு அதிலிருந்து பாவமன்னிப்பு கிடைக்குமா? தயவுசெய்து சொல்லுங்களேன். அவற்றிலிருந்து விலக எனக்கு என்ன வழியுள்ளது? எல்லாம் வல்ல அல்லாஹ் என்னை மன்னிப்பானா?.
பதில் : பாவங்களைத் தொடர்ந்து செய்துகொண்டு, “கருணையாளானான அல்லாஹ் என்னை மன்னிப்பான்” என்ற அலட்சியமான போக்கைக் கைவிட்டு, “அல்லாஹ்வின் உதவியோடு பாவங்களிலிருந்து நான் மீளப்போகிறேன்” எனும் உறுதியான நிய்யத்தை உள்ளத்தின் பதித்துக்கொண்டு அயராது முயல்வீர்களாயின் பாவங்களிலிருந்து நீங்கள் மீள்வது திண்ணம் இன்ஷா அல்லாஹ்!
அல்லாஹ்வின் வசனங்களை முதலில் உங்கள் உள்ளத்தில் உறுதியுடன் பதித்துக் கொள்ளுங்கள்:
“மேலும், விபச்சாரத்தை நீங்கள் நெருங்காதீர். நிச்சயமாக அது மனக்கேடாதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது” (அல்குர்ஆன் 17:32).
அடுத்து, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறும் எச்சரிக்கையையும் கவனத்தில் கொள்ளுங்கள்:
“போதைப் பொருள் அனைத்தும் ஹராம்” (நபிமொழி).
இஸ்லாத்தின் பார்வையில் நீங்கள் செய்துகொண்டிருந்தவை பாவமான செயல்களாகும். அதோடு அல்லாஹ் விதித்த வரம்புகளை மீறி, நம்மைப் படைத்த இறைவனை அலட்சியப்படுத்துவதோடு, தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்வதுமாகும்!
o நீங்கள் திருமணம் ஆகாதவராக இருந்தால் மணமுடித்துக் கொள்ளுங்கள்; விபச்சாரத்திலிருந்து விடுதலை பெறுவீர்கள்.
o போதைப் பழக்கம் உள்ளவராக இருந்தால் போதைப் பொருளை இஸ்லாம் ஹராமாக்கியுள்ளது என்பதை இறையச்சத்துடன் நெஞ்சாரா ஏற்றுக்கொண்டால் குடிப்பழக்கத்திலிருந்தும் முற்றாக விலகிக்கொள்ளலாம்.
o உங்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரே தீர்வு, கறந்த பால் மீண்டும் மடிபுகாத ”தவ்பா”வாக இருக்கவேண்டும். அதாவது “நான் இதுவரை செய்துவந்த பாவங்களை மீண்டும் செய்யமாட்டேன்” எனும் அசையாத நம்பிக்கையுடன் கூடிய தவ்பா.
o அடுத்து, “நான் இதுவரை செய்த பாவங்களை, கருணையாளன் அல்லாஹ் மன்னிப்பான்” எனும் அல்லாஹ்வின் அருளின் மீது உறுதியான நம்பிக்கை. ஏனெனில், எல்லாம் வல்ல அல்லாஹ் தனக்கு இணைவைக்கும் பாவத்தைத் தவிர – (பிறருக்கு அநீதி இழைத்தப் பாவத்தையும் தவிர) அனைத்துப் பாவங்களையும் மன்னிக்கிறேன் என்று வாக்களித்திருக்கின்றான்.
அல்குர்ஆனில் இடம்பெற்றுள்ள கீழ்க்கண்ட துஆவை அதிகமாக ஓதிக்கொள்ளுங்கள்
رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
“எங்கள் இறைவனே! எங்களுக்கு நாங்களே தீங்கிழைத்துக் கொண்டோம் – நீ எங்களை மன்னித்துக் கிருபை செய்யாவிட்டால், நிச்சயமாக நாங்கள் நஷ்டமடைந்தவர்களாகி விடுவோம் “. (7:23)
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَأَنْتَ خَيْرُ الرَّاحِمِيْنَ
”என் இறைவனே! நீ என்னை மன்னித்துக் கிருபை செய்வாயாக! நீ தான் கிருபையாளர்களிலெல்லாம் மிக்க மேலானவன். (23:118)
رَبَّنَا لاَ تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
”எங்கள் இறைவனே! நீ எங்களுக்கு நேர் வழியைக் காட்டியபின் எங்கள் இதயங்களை (அதிலிருந்து) தவறுமாறு செய்து விடாதே! இன்னும் நீ உன் புறத்திலிருந்து எங்களுக்கு (ரஹ்மத் என்னும்) நல்லருளை அளிப்பாயாக! நிச்சயமாக நீயே பெருங் கொடையாளியாவாய்! (3:8)