தர்மத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என்பது இறைவன் விதித்த விதி!
தர்மத்தின் காவலரை ஏன் எதிர்க்கிறார்கள்?
தர்மத்தை நிலை நாட்டும் பணியில் நல்லோர்கள் ஈடுபடும்போது அது அதர்மத்தை முதலீடாக வைத்து மக்களை ஏய்த்துப் பிழைக்கும் தீயோரால் முழுமூச்சாக எதிர்க்கப்படும் என்பதை உலகறியும் அவர்களால் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்க முடியாது. ஏனெனில் தர்மம் வளர்ந்தால் மக்கள் விழிப்புணர்வு பெற்று விடுவார்கள்.
மக்கள் விழிப்புணர்வு பெற்றுவிட்டால் பிறகு தங்களின் மோசடித் தொழிலும் சுரண்டல் வியாபாரங்களும் பெரும் பாதிப்புக்குள்ளாகும் எனபதையும் தங்களின் ஏகாதிபத்தியம் ஆட்டம் காணும் என்பதையும் நன்றாகவே உணர்ந்துள்ளார்கள் அக்கொடியோர்கள்.
பூமியில் தர்மம் பரவும்போது என்ன நடக்கும்?
மக்கள் ஏக இறைவனை மட்டுமே தங்களுடைய வணக்கத்திற்கு உரியவனாக ஏற்றுக் கொள்வார்கள்.
அந்த இறைவனின் கட்டளைகளுக்கு உட்பட்டு பூமியில் நன்மையை ஏவவும் தீமையைத் தடுக்கவும் பாடுபடுவார்கள்.
பூமியில் மானிட சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் நிலைநாட்டவும் கலகங்களும் குழப்பங்களும் அற்ற அமைதிமிக்க வாழ்வை நிலைநிறுத்தவும் தன்னலம் கருதாது ஈடுபடுவார்கள்.
இம்முயற்சியில் தங்கள் உயிர்களையும் அர்ப்பணிக்கத் தயங்க மாட்டார்கள்.
தர்மம் பூமியில் நிலைநாட்டப் பட்டால்..
o அங்கு இனம் மொழி, நிறம் இவற்றின் அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் மறைந்து மனித சகோதரத்துவம் நிலைபெறும். இழந்து போன மனித உரிமைகள் மீட்டுக் கொடுக்கப்படும்.
o கொலை, கொள்ளை, திருட்டு, விபச்சாரம், மோசடி, இலஞ்சம், ஊழல், சூதாட்டங்கள் பதுக்கல். கலப்படம் போன்றவை ஒழியும். இவற்றை அடிப்படையாகக் கொண்டு இனி யாரும் பிழைப்பு நடத்த முடியாது.
o மது, போதை, விபச்சாரம், கள்ளக்காதல்கள், பெண்ணடிமைத்தனம் போன்றவை ஒழியும். ஒழுக்கம் நிறைந்த குடும்ப வாழ்வும் ஆரோக்கியமான மற்றும் அமைதியான சமூக வாழ்வுமுறையும் அங்கு உடலேடுக்கும்.
o கடவுளின் பெயரால் பாமரர்களைச் சுரண்டும் இடைத்தரகர்கள் ஒழிவார்கள். செலவற்ற எளிமையான இறைவழிபாட்டு முறை அமுலுக்கு வரும். மூடநம்பிக்கைகள் முற்றிலும் ஒழியும்.
o இடைத்தரகர்களும் நாடாள்வோரும் இணைந்து கடவுளின் பெயராலோ அல்லது மூடநம்பிக்கைகளின் பெயராலோ மக்களை கொள்ளையடிப்பதும் நாட்டு வளங்களை அபகரிப்பதும் வீண்விரயம் செய்வதும் நிற்கும். அவை ஆக்கபூர்வமான வழிகளில் செலவிடப்படும்.
o வல்லரசு நாடுகள் தங்கள் இராணுவ வல்லமையைக் காட்டி நலிந்த நாடுகளின் வளங்களைக் கொள்ளை அடித்து அவர்களை அடிமைகளாக நடத்தும் கொடுமை முற்றுப்பெறும். அரசு பயங்கரவாத அராஜகங்கள் அழிந்துவிடும்.
o இன்னும் அணுஆயுதம் அறிவியல், ஊடகங்கள் இவற்றின் மேன்மையை பயன்படுத்தி நலிந்த நாடுகளிக்கிடையே போர் மூட்டுவதும் உலகின் இயற்கை வளங்களில் நஞ்சூட்டி கொள்ளைகள் அடிப்பதும் இன்னும் இதுபோன்ற பல கொடுமைகள் முடிவுக்கு வரும்.
இப்போது நீங்களே கூறுங்கள், தர்மத்தை நிலைநாட்ட யாரேனும் பாடுபட்டால் அதை கொடுங்கோலர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா? அவர்கள் என்ன செய்வார்கள்? அவர்கள் இதை முழுமூச்சாக எதிர்ப்பார்கள். எப்படியெல்லாம் முடியுமோ அனைத்து வழிகளையும் தந்திரங்களையும் உபயோகித்து தர்மம் வளர்வதை முடக்கிப்போடும் முயற்சியில் ஈடுபடுவார்கள்.அதுதான் இன்று நடந்துகொண்டு இருக்கிறது. பூமியில் தர்மத்தை நிலைநாட்ட வந்த மாமனிதர் நபிகள் நாயகம் ஆபாசத் திரைப்படத்தின் மூலம் கொச்சைப் படுத்தப் பாடுகிறார்! இன்று உலகில், குறிப்பாக அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இறைவனின் மார்க்கத்தை மக்கள் அதிக அளவில் ஆராய்ந்தும் தழுவியும் வருகின்றனர். இதை முடக்கும் சூழ்ச்சிகளில் ஒன்றாக அதர்மத்தின் காவலர்கள் இந்தத் திரைப்படத்தை வெளியிட்டு இருக்கலாம். இறைவனே மிக அறிந்தவன். அவனே நம் பாதுகாவலனும் ஆவான்!
ஆனால் தர்மத்தின் முன்னேற்றத்தை தடுக்க முடியாது என்பது இறைவன் விதித்த விதி
அவர்கள் இறைவனின் ஒளியைத் தம் வாய்களைக் கொண்டு (ஊதி) அணைத்து விட நாடுகின்றனர், ஆனால் சத்தியத்தை மறுப்போர் வெறுத்த போதிலும், இறைவன் தன் ஒளியைப் பூரணமாக்கியே வைப்பான். இறைவனுக்கு இணை வைத்து வணங்குவோர் வெறுத்த போதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் மிகைக்கும் பொருட்டு, அவனே தன் தூதரை நேர்வழியுடனும், சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். (திருக்குர்ஆன் 61:8. –9)