கொள்கை – அறிவு – கருத்து – மதம்!
தாய், தந்தை வழியே முஸ்லிமாகப் பிறந்திருந்தும் பெற்றோர் சூட்டிய பெயரை மறைத்து ரெண்டுங்கெட்டான் பெயரை அடையாளப்படுத்தி இயங்கும் தன்மை தமிழகத்திலிருக்கிறது.
இந்துக்களிடம் பொது மனிதர். ஊர், உறவுகளுக்குள் முஸ்லிம். இரண்டு வரவும் விடமாட்டோம். மதப்பெயரை வெளிக்கூறமாட்டோம். இப்போக்கு தங்களுக்கு பாதுகாப்பளிக்கும். இழப்பை ஏற்படுத்தாது, இலாபமளிக்கும். கற்பனைக் கணக்குகள். இந்து சமூகம் மதத்துடன் இணைத்தே பார்க்கும். அனுபவம் கூறும் உண்மை.
முஸ்லிம்கள் எதிராளியாகப் பார்ப்பர் இருபுறமும் ஏற்காத நிலையை ஏற்படுத்தும். இரு நூறு பேர் கூடிய திறந்தவெளி அவை கருத்தரங்கில் ஒரு இதழாசிரியர். பிறப்பு வழி முஸ்லிம். பொதுப் பெயரால் தன்னைக் காட்டிக் கொள்பவர். சமீப நாட்களாக தொலைக்காட்சிகளில் அதிகம் காணப்படுபவர் உரை தந்தார். நிகழ்ச்சி நடத்திய முக்கியஸ்தர் உரையாளரிடம் உன் மதத்தில் இருக்கிறாயா? கூறுவென்றார்.
அடுத்த நொடி, தான் முஸ்லிமல்லவென கூட்டத்தினரிடம் அறிவித்தாரவர்.
மதத்தை மறைத்து வேற்று வடிவங்கள் காட்டியதும், நம்பியதும் கடந்த காலச் செயல். எம் மதத்தையும் சாராதவராகக் காட்டிக் கொள்வோரின் நிஜமுகங்கள் அவர்களது உரையாடல்கள் வாயிலாக ஊடகங்களில் காட்டப்படுகின்றன. எந்த மதத்திலிருக்கிறார்? உடனிருப்போரை வைத்து அறிய முடிகிறது.
‘மதம்’ – சொல்லுக்குப் பொருள்; கொள்கை – அறிவு – கருத்து. எந்த கொள்கை குணம் உடையவராக இருக்கின்றனர்? அறிவு எதை நோக்கி பயணிக்கிறது? கருத்து விருப்பம் எந்த தத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறது? மூன்று கேள்விகளையும் உள்ளடக்கி மூன்றெழுத்தில் கேட்கப்படுகிறது உன் மதமென்ன? தமிழகத்தில் வாழும் ஒவ்வொரு மனிதரும் கூறியே ஆகவேண்டும். தப்பியோட முடியாது.
டெல்லியை ஆளும் மன்னரானலும் அவரது பள்ளிச் சான்றிதழில், கல்லூரிச் சான்றிதழில் மதம் – சாதி எழுதியாக வேண்டும். கூற மறுத்தால் சட்டம் மூலம் தண்டனை பாயும்.
நாட்டிலுள்ள குடிமகன்களுக்கு அத்தியாவசியமாகக் கருதப்படும் பிறப்புச் சான்று. இறப்புச் சான்று. பள்ளிச் சான்றிதழ். சாதிச் சான்றிதழ். உணவு அட்டை. அடையாள அட்டைகளில் மதம், சாதி குறிப்பிட்டாகணும். சரியான முகவரியளிக்காத வாடிக்கையாளரிடம் முழு முகவரி கேட்டுப் பெறும்படி வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ. சமீபத்தில் கட்டளை பிறப்பித்துள்ளது.
கே.ஒய்.சி. என்ற பாரத்தை வங்கிகள் வழங்குகின்றன. அதன் முதல் பக்கத்திலேயே மதம் குறித்து கேட்கப்பட்டுள்ளது.மதமும், சாதியும் விலக்க முடியாததாக மக்களிடம் பிணைக்கப்பட்டுள்ளது.
மதத்துக்கு அப்பாற்பட்டவராக, சாதிகளை ஏற்காதவராகக் காட்டிக் கொள்வது இன்றைய நிலையில் நகைச்சுவையாகவே கருதப்படும். மதத்தைவிட்டு தனித்து செயல்படவியலாது. ஒவ்வொருவரும் எங்கோ ஓர் இடத்தில் மதத்துடன் தான் இயங்குகின்றனர். இல்லையென மறுப்பது போலித்தனம்.
– சதாம்
(முஸ்லிம் முரசு செப்டம்பர் 2012)