முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் வாழ்வில் 9 சண்டைகளை சந்தித்தார் என்பதை படிக்கிற நியாயவான்கள். அந்த சண்டைகளின் போது அவர் போட்ட உத்தரவுகளையும் அது கடைபிடிக்கப் பட்ட ஒழுங்கையும் கூர்ந்து கவனிக்க வேண்டும்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஆயுதங்களின் வழியே சமயத்தை பரப்பினார் என்று புலம்புவோரைப் பார்த்து திலாஸி ஒலேரி கூறுகிறார். “ஆயுத பலத்தால் மக்களை இஸ்லாமை ஏற்க முஹம்மது நிர்பந்தித்தர் என்பது சுத்தமான கற்பனையாகும். சிரிப்பை வரவழைக்க கூடியது. அது உணமையிலிருந்து வெகு தூரம் விலகிய ஆரோக்கியமற்ற வாதமாகும்.” (islam at the cross road By De Lacy O’Leary- london – 1923 )
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றை நியாயமாக எடை போடுகிற யாரும், ஓளிவு மறைவோ, சூதுவாதோ அற்ற அந்த மகத்தான வாழ்வை மதிப்பாகவே கருதுவர். அதில் பிரமிக்கவே செய்வர். இது போல தூய வாழ்வு இன்னொன்று இல்லை என்று தாமாகவே கூறுவர். – ஜி.ஜி. கெல்லட் – கூறுவதை கேளுங்கள்!
“இஸ்லாத்தின் நிறுவனருடையதைக் காட்டிலும் அதிக ஆச்சரியம் தரக்கூடிய வாழ்க்கை முறை வரலாற்றிலே வேறெங்கும் இல்லை. அவரைப்போல் உலகத்தின் தலைவிதியில் ஆழ்ந்த விளைவுகளை ஏற்படுத்திய மனிதர்களைக் காணுதலும் அரிது.”
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரலாற்றை அவர் யார் என்ற எதார்த்தமான கேள்வியோடு வாசிக்கும் எவருக்கும் இந்த அனுபவச் சிலிர்ப்பு ஏற்படவே செய்யும். ஏனென்றால் அந்த வாழ்வில்
o கருணைக்கு எதிரான ஒரு பார்வையில்லை
o நீதிக்கு எதிரான் ஒரு செயல் இல்லை
o ஒழுக்கத்திற்கு எதிரான ஒரு அசைவில்லை
o பெண்களுக்கு எதிரான ஒரு ஒரு வசை இல்லை
o சிறுவர்களுக்கு எதிரான் ஒரு கடுப்பில்லை
o நேர்மைக்கு எதிரான ஒரு சூது இல்லை
o பொது நன்மைக்கு எதிரான ஒரு சிந்தனை இல்லை
o சமத்துவத்திற்கு எதிரான ஒரு சமிக்ஞை இல்லை
o சகிப்புத்தன்மைக்கு எதிரான ஒரு உத்தரவில்லை
o சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு சூழ்ச்சி இல்லை
o மொத்தமாக சொல்வதானால் சத்தியத்திற்கு எதிரான ஒரு சொல் இல்லை.
துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு இப்போது நிறுத்திக்கொள்கிறார்களே, அப்படியின்றி, அதற்கப்பால் சென்று அவர்களுடைய வாழ்க்கையை அணுகி ஆராய்ந்து மனிதத்துவத்தின் வரலாறு என்ற பொன்னேடுகளில் நபிகள் நாயகம் அவர்களுக்குரிய இடத்தை அளிப்பார்கள். என்றார் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் புகழ்பெற்ற நூலாசிரியரான – எஸ். எச். லீடர் (-S.H. Leeder – Modern Sons of the Pharaohs)
– கோவை அப்துல் அஜீஸ் பாகவி
நன்றி: ரீட் இஸ்லாம்