நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சத்தியத்தன்மையை எடுத்துக்காட்ட கார்லை அற்புதமான – உலக அனுபவத்தின் சத்தாக அமைந்த ஒரு நியதியை எடுத்துவைத்தார்.
“முஹம்மது ஒரு ஏமாற்றுக்காராக இருந்திருந்தால் 12 நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கிற – 18 கோடி மக்கள் நிழல் பெறுகிற ஒரு சமயத்தை அவரால நிறுவி இருக்க முடியாது. சரியான அடித்தளமில்லாத ஒரு கட்டிடம் சீக்கிரம் விழுந்து விடும். மோசடியை நீண்ட காலத்திற்கு மறைத்து வைக்க முடியாது. பொய் சீக்கிரமே வெளுத்து விடும்.” (Today 2000 A.D, more than 150 Crores from all part of the world, Japan to US and Newzland to UK, Russia to South Africa)
ஐரோப்பிய சமுதாயம் மட்டுமே இன்று வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது திருமணங்களை கொச்சைப் படுத்தி வருகிறது. அவரை பெண்ணாசை கொண்டவராக சித்தரிக்க முயல்கிறது. வெட்கங்கெட்ட வாழ்கையுடையோர் உயரிய ஒழுக்கம் சார்ந்த திருமண வாழ்வை குறைகூறுவது ஏற்புடையதல்ல.
இருப்பினும், தாமஸ் கார்லை ஐரோப்பியர்களுக்கு அன்றைய பாரசீக மன்னரான கிஸ்ராவின் ஆடம்பர வாழ்வையும் ரோமச் சக்ரவர்த்தியான கைஸைரின் டாம்பீகத்தையும் நினைவு படுத்திக் காட்டுகிறார். வானத்தோடு தொடர்பு கொண்டிருந்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பூமியின் மன்னர்கள் சூடிக்கொள்ளும் மகுடங்களில் அக்கறையிருக்கவில்லை என்பதை விவரிக்கிறார். சிற்றின்ப ஆசை அவரது திருமணங்களுக்கு காரணமல்ல என்பதை முஸ்லிம் அறிஞர்கள் பலவகையிலும் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
முதல் மனைவி கதீஜா ரளியல்லாஹு அன்ஹா இறந்த பிறகே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 10 திருமணங்களைச் செய்தார். அன்றைய அரபகத்தில் பல பெண்களை திருமணம் செய்வது சர்வசாதாரண வழக்கமாக, குறை காணப்படாததாக இருந்தது. அப்படி இருந்தபோதும் அதுவரை ஒரு மனைவியுடனேயே வாழ்ந்தார்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் 50 வயதுக்குப் பின்னரே இரண்டாவது திருமணம் நடைபெற்றது. மற்ற அதிகமான திருமணங்கள் ஹிஜ்ரி 5 க்குப்பின் நடைபெற்றன. அப்போது பெருமானார் 58 வயதை கடந்து விட்டிருந்தார். இத்தனை திருமணங்களுக்குப் பிறகும் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்த பல பெண்களை பெருமானார் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்க மறுத்ததை வரலாறு காட்டுகிறது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடைசி மனைவி மைமூனா ரளியல்லாஹு அன்ஹா அவரை திருமணம் செய்து கொண்டது முஸ்லிம்களுக்கு அரசியல் ரீதியாக பல நனமைகளை தந்தது. பிற்காலத்தில் இஸ்லாத்திற்கு மாபெரிய வெற்றிகளை வாரிக்குவித்த காலித் பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அத்திருமணத்திற்கு பின்னரே இஸ்லாமை தழுவினார். அவருடன் மற்றொரு பிரபலமான அம்ரு பின் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு இஸ்லாமைத் தழுவினர். அப்போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன்னுடைய தோழர்களிடம் மக்கா தன்னுடைய ஈரல்துண்டுகளை நம்மிடம் வீசி விட்டது என்று கூறினார். இதற்கு ஒருவகையில் காரணமாக இருந்த மைமூனா அம்மையார் காலித் பின் வலீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சித்தியாவார்.
தாமஸ் கார்லைல் மற்றவர்கள் யோசிக்காத புது வகையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் புனித்ததை நிரூபிக்கிறார்.
“முஹம்மது, அவர் மீது அக்கிரம்மாகவும் வரம்பு மீறியும் சொல்லப்படுவது போல சிற்றிண்ப ஆசை கொண்டவரல்ல. எளிய உணவு எளிய இருப்பிடம் மற்ற அனைத்திலும் எளியதை கொண்டு திருப்தி கொள்ளும் ஒரு துறவியாக அவர் இருந்தார். பல மாதங்கள் பசியால வாடிய வாழ்க்கை அவருடையது”
சத்தான உணவு, கவர்ச்சியான ஆடைகள், வசதியான தங்குமிடம், வளமான பொருளாதாரம், கவலையற்ற வாழ்க்கை ஆகியவை சிற்றின்ப உல்லாச வாழ்க்கைகு மனிதனை தூண்டுபவை. இவை எதுவும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் கிடைக்கவில்லை என்பது எதார்த்தம்.
முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது எதிரிகளை முழு வீரத்தோடு எதிர்த்துப் போராடி வெற்றி கண்டார்கள் என்பதை ஐரோப்பிய கிருத்துவர்களால தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல யுத்தங்களுக்கு காரணமாக இருந்தார். வாள் முனையில் சமயத்தை பரப்பினார் எனப் புகார் கிளப்பினர். அவர் கற்றுக் கொடுத்த ஜிஹாத் என்ற சொல் மனித சமூகத்தின் நிம்மதியை குலைத்து விட்டதாக இப்போதும் சிலர் புலம்புகின்றனர்.
உயிர்ப்பலியை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வளவு வெறுத்தார்கள், அதை தடுப்பதற்க்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சி என்ன? அவர்களது வரலாற்றை படித்தால் குறைந்த பட்சம் அவரது பொன்மொழித் தொகுப்பில் இருக்கிற ஜிஹாத் பற்றிய அத்தியாயத்தைப் படித்தால் புரிந்து கொள்ளலாம். நபிகள் நாயகத்தின் வாழ்வும் வாக்கும் திறந்த புத்தகமாக எங்கும் கிடைக்கிறது.
ஒரு அரசியல் தலைவரின் முழு வாழ்வும் அப்பட்டமாக திறந்து காட்டப்படும் அதிசயம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது வரலாறில் கிடைப்பது போல வேறு எங்கும் காணக்கிடைக்காது. அந்தப் புனித வாழ்வில் மர்மத் திட்டங்கள் இல்லை, இரகசிய உத்தரவுகள் இல்லை. பொறி பறக்கும் விஷம் தோய்ந்த வார்த்தைகள் இல்லை.
யுத்தம் என்பது ஒரு போராட்ட வாழ்வில் தவிர்க்க முடியாதது. சில சந்தர்ப்பங்களில் அது அவசியமானதும் கூட. அத்தகைய நிர்பந்த சந்தர்ப்பங்களிலேயே முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யுத்தம் செய்தார்.
போர்க்களத்தில் அகிம்சையை வலுயுறுத்தி முதல் வரலாற்றுத் தலைவர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருவராகத்தான் இருக்க முடியும். ஹிஜ்ரி 5ல் நடைபெற்ற முரைசிஃ களத்தில் தோழர்களுக்கு அவர் சொன்னார். எதிரிகளை சந்திக்க ஆசைப்படாதீர்கள்! இறைவனிடம் அமைதியை பிரார்த்தியுங்கள். எதிரிகளை சந்தித்தால் முந்திக் கொண்டு வாளை உயர்த்தாதீர்கள். ஒருவேளை நீங்கள் தாமதிக்க அவர்கள் உங்கள் மீது வாள் வீசி விட்டால். அறிந்துகொள்ளுங்கள்! அந்த வாட்களின் நிழ்லில் உங்களது சொர்க்க காத்திருக்கிறது.
இன்றைய முன்னேறிய உலகில் கூட போர் மரபுகள் கடை பிடிக்கப்படுவதில்லை. இராக்கில் நூற்றுக் கணக்கான பெணகளும் குழந்தைகளும் தங்கியிருந்த பதுங்கு குழியின் வாசலை குறி பார்த்து அமெரிக்கா ஏவுகணையை வீசியது. மற்றொரு தடவை ஈரான் நாட்டின் பயணிகள் விமானம் ஒன்றை ஏவுகணை வீசி அழித்தது.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே உலகில் முதன் முறையாக போர் மரபுகளை சட்டமாக்கி அமுல் படுத்தியவர் ஆவார்கள். பெண்கள், சிறுவர், முதியோர், சண்டைக்கு வராது ஆலயங்களிலிம், பதுங்கு குழுகளிலும் அடைக்கலம் தேடியிருப்பவர்களை கொல்லக் கூடாது. யாரிடமும் சண்டையிடுவதற்கு முன் அவர்களிடம் நியாயம் பேச வேண்டும் என்பது மட்டுமல்ல. மரங்களை வெட்டக் கூடாது. விலை நிலங்களுக்கு தீ வைக்க கூடாது என்பதும் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரைந்து கொடுத்த போர் நியதிகளாகும்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ ”கிளிக்” செய்யவும்.