மார்க்கமின்மைதான் நம்முடைய முதல் பிரச்னை
அதிய்யா சித்தீக்கா
மார்க்கமின்மைதான் நம்முடைய முதல் பிரச்னை. குர்ஆன், ஹதீஸ் ஆகியவற்றின் போதனையிலிருந்து நாம் விலகிச் சென்று கொண்டிருக்கிறோம். அறிவியல் தொழில் நுட்பம் இன்று பெரிதும் வளர்ந்துள்ளது. இந்த வானளாவிய வளர்ச்சி மனிதனுக்கு ஒரு பக்கம் அருட்கொடையாய் இருக்கிறது. இன்னொரு பக்கம் சாபமாகவும் இருக்கிறது. இதில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.
அறிவியலைப் பயன்படுத்தி தாயின் கருவறையில் இருக்கும்போதே சிசு கொல்லப்படுகிறது. இதன் விளைவை இன்று பார்க்கிறோம். இந்தியாவின் பல மாநிலங்களில் ஆண் பெண் சதவிகிதம் 1000 : 875 என்றும், 1000 : 825 என்றும் சுருங்கிவிட்டது.
அறிவியலிலும் நாகரிகத்திலும் மிகவும் முன்னேறியுள்ள இன்றைய உலகில் பெண் குழந்தைகளுக்கு வாழ்வுரிமை மறுக்கப்படுகிறது. இந்த நோய் இன்று முஸ்லிம்களையும் பிடித்தாட்டுகிறது. இதுதான் முதல் பிரச்னை.
இரண்டாவது பிரச்னை சமத்துவம் பற்றியது. இதுவும் இன்று பெரும் சிக்கலாக இருக்கிறது. மேற்கத்திய நாகரிகத்தில் “பெண் விடுதலை’ எனும் முழக்கத்தால் பெண்கள் கவரப்பட்டது ஏன் தெரியுமா? பல நூற்றாண்டுகளாக சுதந்திரமே இல்லாமல் அடக்கப்பட்ட பெண்கள் இதனால் கவரப்பட்டார்கள்.
அந்தப் பெண்களுக்கு இந்த முழக்கம் பெரும் மகிழ்ச்சியை அளித்தது. அவர்களின் இதயத்தை ஈர்த்தது. வீட்டைப் புறக்கணித்து வெளியே சென்று வேலை பார்ப்பதைத் தன் உரிமையாகக் கருதினாள். அவள் செய்ய வேண்டி அடிப்படைப் பணிகளைக் குறைவாகவும் இழிவாகவும் கருதினாள். இதன் விளைவு என்ன ஆயிற்று தெரியுமா? சமுதாயத்தின் அடிப்படையான குடும்பம் இதனால் சீர்குலைந்தது.
மூன்றாவது பிரச்னை தலாக். தலாக் தொடர்பாக நம் சமுதாயத்தில் முஸ்லிம்களிடம் காணப்படும் குறைவான மார்க்க அறிவின் காரணமாக குர்ஆன், ஹதீஸிலிருந்து விலகி, இது குறித்துத் தவறான சித்திரத்தை நாட்டு மக்கள் முன் சமர்ப்பிக்கிறார்கள்.
“இஸ்லாத்தில் பெண்ணுக்கு எந்த மதிப்பும் உரிமையும் இல்லை. மூன்று தடவை “தலாக் தலாக் தலாக்’ என்று சொல்லி அவளை வீட்டை விட்டுத் துரத்தி விடுகிறார்கள்’ என்று இதர மக்கள் தவறாக நினைக்கும் அளவுக்கு முஸ்லிம்களின் நடத்தை இருக்கிறது. நம்முடைய குறைந்த மார்க்க அறிவின் காரணமாகத்தான் இவையெல்லாம் நடைபெறுகின்றன.
அடுத்த மிகப் பெரும் பிரச்னை வரதட்சணை. இந்தக் கொடுமையினால் எத்தனையோ பெண்கள் மணம் முடிக்க முடியாமல் வீட்டில் முடங்கி இருக்கிறார்கள். இஸ்லாம் குறைந்த செலவில் திருமணத்தை நடத்தச் சொல்கிறது. தேவையற்ற வீண் சடங்குகளைச் செய்து தேவையில்லாத சுமைகளை நாம் தாங்கிக் கொண்டிருக்கிறோம்.
குர்ஆன் இந்தச் சிக்கல்கள் அனைத்துக்கும் அழகான தீர்வுகளை வழங்கியிருக்கிறது. குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான். உயிரோடு புதைக்கப்பட்ட சிறுமியை நோக்கி, மறுமை நாளன்று இறைவன், “”நீ எந்தக் குற்றத்திற்காகக் கொல்லப்பட்டாய்?” என்று கேட்பான். பெற்றோர்களிடம் கேட்க மாட்டான். நேராகப் பாதிக்கப்பட்டவர்களிடமே விசாரணை நடத்துவான். இதிலிருந்து இந்தத் தீச்செயலை இஸ்லாம் எவ்வளவு கடுமையாகப் பார்க்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
பெண் குழந்தைகளை வளர்த்து ஆளாக்குவதற்கு இஸ்லாம் பெரிதும் முக்கியத்துவம் அளிக்கிறது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். “”எவர் ஒருவர் இரண்டு பெண் குழந்தைகளை ஒழுக்கமும் கல்விப் பயிற்சியும் அளித்து, வளர்த்து ஆளாக்கி திருமணமும் முடித்து வைக்கிறாரோ அவருக்கு சொர்க்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.”
பார்த்தீர்களா பெண்களின் அந்தஸ்தை..! குர்ஆன், ஹதீஸ் வழிகாட்டலின்படி பெண்களுக்கு அவர்களின் உரிமையை நாம் முழுமையாக அளித்தால் இறைத்தூதரின் நற்செய்திக்கு நாமும் தகுதியாகி விடுவோம்.
அதேபோல் தலாக் பிரச்னைக்கும், வரதட்சணைச் சிக்கலுக்கும் இஸ்லாம் சரியான தீர்வுகளை வழங்குகிறது. கணவன் மனைவிக்கிடையே பிரச்னை தோன்றினால் அதைத் தீர்க்கும் வழிகளை ஒவ்வொன்றாகக் குர்ஆன் எடுத்துரைக்கிறது. சிக்கலைத் தீர்க்க முதலில் இப்படிச் செய்யுங்கள், அடுத்து இப்படிச் செய்யுங்கள் என்று அழகாகச் சொல்லித் தருகிறது. எதுவுமே சரியாக அமையாதபோது, வேறு வழியே இல்லாதபோதுதான் தலாக் பற்றி யோசிக்க வேண்டுமே தவிர, எடுத்த எடுப்பிலேயே அதைப் பயன்படுத்தக் கூடாது.
வரதட்சணையைப் பொறுத்த வரைக்கும் நமக்குக் கிடைக்கும் இஸ்லாமிய வழிகாட்டல் என்னவென்றால், வரதட்சணை என்பது இஸ்லாமிய வழக்கமே அல்ல. ஆடம்பரமில்லாத, எளிய முறையில், குறைந்த செலவில் நடைபெறும் திருமணத்தில்தான் இறையருள் பொதிந்திருக்கிறது என்று அது தெளிவாகச் சொல்கிறது. ஒரு பெண் குலச் சிறப்பு, செல்வம், அழகு, மார்க்கப் பற்று ஆகிய நான்கு காரணங்களுக்காகத் திருமணம் முடிக்கப்படுகிறாள். நீங்கள் மார்க்கப் பற்றுள்ள பெண்ணுக்கே முன்னுரிமை கொடுங்கள் என்பது அண்ணலாரின் வழிகாட்டல். குர்ஆனும் ஹதீசும் கூறும் வழிமுறைகளை நாம் முழுமையாகப் பின்பற்றினால் இந்தத் தீமைகளை நாம் முற்றாகத் தவிர்த்துவிடலாம்.
சமரசம்