வருங்கால கணவர் – ஒரு கனவு!
வருங்கால கணவரைப் பற்றிய கனவு எல்லா பெண்களுக்கும் இருக்கவேண்டும். வயதுக்கு வந்த சில வருடங்களில் அந்த கனவு தானாகவே வந்துவிடும்.
இருபது வயதைத் தொட்ட பின்பும் அப்படி ஒரு கனவு வரவில்லை என்றால் அதை மனநிலை, உடல் நிலை கோளாறு என்கிறார்கள் மருத்துவர்கள். அந்தந்த வயதுக்கேற்ற கனவுகள் அவ்வப்போது வரவேண்டும். அந்த கனவுகள் பெண்களை திருமணம் செய்து கொள்ள பக்குவப்படுத்தும்.
ஒரு பெண் வாழும் சூழ்நிலைக்கேற்ப அவள் கனவுகள் வித்தியாசப்படும். ஏழ்மையான சூழ்நிலையில் வாழும் ஒரு பெண் பணக்கார கணவர் வேண்டும் என கனவு காணலாம். கொடுமை யான சூழ்நிலையில் வாழும் பெண் தனக்கு அன்பான, ஆதரவான கண வர் கிடைப்பதுபோல் கனவு காணலாம். இப்படி பெண்கள் காணும் கனவுகள் பலவிதம்.
அந்த கனவுகள் ஒருபோதும் எல்லை மீறியதாக இருந்துவிடக்கூடாது. ஏன் என்றால் எல்லோருடைய வாழ்க்கையிலும், எல்லா கனவுகளும் நிறை வேறும் என்று சொல்வதற்கில்லை.
எவ்வளவு கனவுகள், கற்பனைகள் இருந்தாலும் திருமணம் ஆன பின்பு, உடனடியாக நிஜ உலகத்திற்கு வந்து விடவேண்டும். நிஜம் கண் முன் வரும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் பெண்களுக்கு கட்டாயம் வேண்டும். நிஜங்களை கனவுகளோடு ஒப்பிட்டு பார்த்து மனம் பேதலித்து நிற்பது வாழ்க்கைக்கு உதவாது. நிஜங்களை ஏற்றுக்கொண்டு வாழும்போதுதான் பெண்கள் வெற்றிகரமானவர்களாக மாறுகிறார்கள்.
கனவு வேறு வாழ்க்கை வேறு என்ற உண்மையை சிலர் உணர்ந்துகொள்ளும்போது வாழ்க்கை கசக்கிறது. அந்த கசப்பில் இருந்து விடுபட்டு வாழ்க்கையை இனிமையாக்கி கொள்வதில் தான் வாழ்க்கையின் சுவாரசியம் அடங்கி இருக்கிறது. கனவை நினைத்து நிஜத்தை அழித்து கொள்ள நினைப்பவர்களுக்கு வாழ்க்கையே கனவாகி விடுகிறது.
இன்றைய பெண்களுக்கு அவர்களது வாழ்க்கையை தீர்மானித்துக்கொள்ளும் உரிமை தரப்பட்டிருக்கிறது. அதை அவர்கள் முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அவர்கள் காணும் கனவுகள் ஓரளவுதான் பயன்படும். அவர்களது அறிவும், அனுபவங்களும், பக்குவப்பட்டவர்களின் அறிவுரைகளுமே முழுமையாக பயன்படும்.
இந்த உலகம் மிகப் பெரியது. அதனால் சில பெண்கள் தங்களது கனவு கதாநாயகனை தேடித்தேடி களைத்துப்போகிறார்கள். அப்படியே காலத்தையும் கடத்தி வாழ்க்கையையும் தொலைத்து விடுகிறார்கள். அப்படிப்பட்டவர்கள் கனவுகளுக்கு கொடுக்கும் முக்கியத் துவத்தை குறைக்கவேண்டும். நிஜவாழ்க்கைக்குள் தங்களை முன்நிறுத்தி, தங்கள் நிஜ கதாநாயகனை தேடத் தொடங்கவேண்டும்.
இன்று தெருவிற்கு தெரு திருமணத்தகவல் மையங்கள் உருவாகிவிட்டன. அங்கெல்லாம் சென்று, பெண்கள் தங்கள் கனவு கதாநாயகனை தேடிக்கொண்டிருக்கிறார்கள். சில திருமண தகவல் மையங்களோ, பெண்களின் எல்லைமீறிய கனவுகளை தெரிந்துகொண்டு, அதற்கு தக்கபடி பொய் முகம் கொண்ட இளைஞர்களை அறிமுகப் படுத்துகிறார்கள். மிகைப்படுத்தப்பட்ட பொய்களைக்கூறி அவர்களுடைய கனவு கதாநாயகன்போல் `மேக்கப்’ போட்டு அந்த பெண்கள் முன்பு நிறுத்துகிறார்கள்.
அந்த பெண்களும் `ஆஹா.. இவர்தான் நம் கனவு நாயகன்’ என்று முடிவு செய்து, அவசர கதியில் திருமணத்தை முடித்துக்கொள்கிறார்கள்.
சிறிது காலத்தில் உண்மையை உணரும்போது பெருத்த ஏமாற்றம் அடைகிறார்கள். அந்த ஏமாற்றம் அவர்களை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி, விவாகரத்து வரை கொண்டு சென்றுவிடுகிறது.
சமீபத்தில் பட்ட மேற்படிப்பு படித்த முஸ்லிம் பெண்ணுக்கு நான்காம் வகுப்புவரை படித்த ஒருவரை திருமணம் செய்து வைத்தனர். சில நாட்களுக்குள்ளேயே விவாகரத்துக்கு இரு குடும்பத்தாரும் வந்து நின்றனர். ”பொருத்தம் பார்க்காமல் ஏன் நிகாஹ் செய்து வைத்தீர்கள்?” என்று வினா எழுப்பினால், “ஏஜண்டு சொல் கேட்டு ஏமாந்து விட்டோம்” என்கின்றனர். நன்கு படித்த அந்த பெண்ணின் எதிர்காலம் கேள்விக்குறியாகிப் போனதுதான் மிச்சம்.
இன்றைய பல விவாகரத்துகளுக்கு இந்த கனவுகளே காரணமாக இருக்கிறது. நிறை வேறாத ஆசைகள் நெஞ்சின் அடித்தளத்தில் பாரமாக அழுத்தும்போது நிஜங்களின் உயர்வை மனம் ஏற்க மறுக்கிறது. விளைவு கருத்து வேற்றுமை ஆகிறது. இருமனம் ஒரு மனமானால் கருத்துகள் ஒன்றுபடும். ஆனால் அதற்கு இந்த கனவுகள் ஒத்துழைப் பதில்லை!
கனவுகள் தேவைதான். ஆனால் அந்த கனவுகளுக்கு, நிஜங்களை ஏற்றுக்கொள்ள மறுக்கும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடாது. கனவுகளுக்கு கற்பனைகள் மட்டும் போதுமானது. ஆனால் நிஜங்களுக்கு அனுபவ அறிவும், ஆன்ம பலமும் தேவை. நிஜங்கள் நம் கண் முன்னே நிற்கும்போது கனவுகள் எங்கிருந்தோ எட்டிப்பார்த்து நம்மை கேலி செய்யும். இதனால் ஏற்படும் ஏமாற்றம் மனதில் வெறுப்பையும், சோர்வையும் உண்டாக்கும்.
சில பெண்கள் நிழலை நிஜமாக்கி தங்கள் கனவு இலக்கை அடைய முற்படுவார்கள். வருங்காலத்தை வளமாக்குவதும் கனவுதான். வாழ்க்கையை கேள்வி குறியாக்குவதும் கனவுதான்.
சிந்தித்து செயல்படவும், வாழ்க்கையை திட்டமிடவும் கனவுகள் கைகொடுக்கின்றன. லட்சியங்களை உருவாக்கும் கனவு நம்முடன் வருபவர்களை வளப்படுத்தி எதிர்காலத்தை ஒளிமயமாக்குகிறது. வருங்கால கணவரை பற்றிய கனவு காண்பது தவறில்லை. அது இருவரின் வருங்காலத்தையும் வளமாக்கும் விதமான கனவாக இருத்தல் வேண்டும். சுயநலமான கனவுகள் பெரும் சுமையாகவும், பகையாகவும் உருவெடுத்து விடும்.