பூரண மது ஒழிப்பு சாத்தியமே!
எம்.பஹ்ஜத் குபுரா, கீழக்கரை
அவன் குடித்தான்.. தள்ளாடியது… அவன் குடும்பம்! என்று சொல்லுவார்கள். ஒரு மனிதனை இந்த குடிப்பழக்கம் அவல பாதாளத்தில் தள்ளி, எட்ட நின்று எள்ளி நகையாடும், மகா கொடிய மிருகம் என்றால் அது மிகையாகாது. புஜங்கள் திமிரும் பலம் பொருந்திய,அறிவு பொதிந்த, ஆட்சி அதிகாரங்கள் கொண்ட அரசனாக இருந்தாலும், இந்த குடியில் வீழ்ந்தால்.. எழுவது வீதியில் தான் என்பதில் யாவருக்கும் மாற்றுக் கருத்தில்லை.
இறைவனின் முதல் கட்டளை செய் என்பதல்ல. செய்யாதே.. என்பதுதான். இறைவன் ஆதாம் ஏவாலை படைத்தபின் அவர்களிடம் கூறும் முதல் கட்டளை ஒருகுறிப்பிட்ட மரத்தில், அதாவது அறிதலைத் தருக்கூடிய மரத்தில் உள்ள கனியை உண்ணக்கூடாது என்பதுதான். இதில் ஒரு கோட்பாட்டு உள்ளடக்கப் பட்டுள்ளது. அது மனிதமனம் எதிர்மறையில்தான் கட்டமைக்கப்படுகிறது எனபது தான். இந்த சோதனைக் களத்தில் வெற்றி பெறுபருக்குத் தான் ஈருலக வாழ்க்கையும் வளம் பெறும்.
இன்றும் ஆங்கிலத்தில் சாராயத்தை குறிக்க அரபி மூலத்திலிருந்து பெறப்பட்ட அராக் (arrack) என்கிற சொல்லே பயன்பட்டு வருகிறது. ஆல்கஹால் என்ற சொல் அரேபிய மொழியில் வழங்கப்பட்ட அல்-கோஹல் (al-kuhul) என்ற சொல்லின் மூலத்திலிருந்து தான் வந்ததாகவும், அரேபியாவிலிந்து ஆல்கஹால் மத்தியதரைக்கடல் நாடுகள் முதல் ஐரோப்பியா வரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அராபிய பாலைவனத்தில் ‘ஜாஹிலியா’ என்று சொல்லக் கூடிய அறியாமை காலத்தில் பெண் பிள்ளைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்த மகா பாதக கொடுமைகளை அரங்கேற்றிய காட்டரபிகள் விபச்சாரம்,கொலை, கொள்ளை மட்டுமல்லாமல், குடம் குடமாக மது அருந்திய ஒரு சமுதாயம், தங்களை முழுவதுமாக மாற்றிக் கொண்டு மதுக் குடங்களை தெருவில் போட்டு உடைத்து, திருந்திந்திய வரலாற்றுப் பதிவுகள், இந்த பூவுலகை இன்றும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. ஆகவே இந்த அறிவை மழுக்கும் மதுவை இன்றைய சமுதாயம் முழுமையாக விலக்குவது சாத்தியமா? என்பதை சமூகத்தின் பார்வையிலும், இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் மூலமும் ஆராய்ந்து பார்ப்போம்.
பாவத்தின் தலைவாசல் மது :
இஸ்லாமிய ஆரம்ப காலத்தில் முஸ்லீம்கள் மது அருந்திக்கொண்டிருந்தனர். அப்போது அது பற்றி எத்தகைய சட்டமும் இல்லாதிருந்ததால், அது அனுமதிக்கப்பட்டதாகவே கருதப்பட்டு வந்தது. முஸ்லீம்கள் திருமதீனா வந்த பின்னர் ஹஜ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் சில அன்சாரித்தோழர்களும் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கூறினார்கள் : ‘அல்லாஹ்வின் தூதரே ! மதுவையும் சூதாட்டத்தையும் பற்றி எங்களுக்கு ஒரு தீர்ப்பு வழங்குவீர்களாக. அவை அறிவை கெடுக்கின்றன. பொருளை நாசம் செய்கின்றன என்று கூறினார்கள்’ அப்போதுதான் அல்லாஹுத்தாஆலா குர்ஆனில் இந்த வசனத்தை இறக்கி வைத்தான்.
“மதுவையும் சூதாட்டதையும் பற்றி (நபியே) உம்மிடம் அவர்கள் கேட்கிறார்கள். அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சில பிரயோஜனங்களும் இருக்கின்றன. ஆயினும் இவ்விரண்டின் மூலம் ஏற்படும் பாவம் அவற்றின் பிரயோஜனத்தைவிட மிகப் பெரியதாகும் என்று நீர் பதில் கூறும் (அல்குர்ஆன்)”
மேற்கண்ட இவ்வசனத்தின் மூலம் விடையும் கிடைத்தது. எனினும் கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்று இவ்வசனத்தின் மூலம் ஆரம்பத்தில் தடை விதிக்கப்படவில்லை. அவ்விரண்டிலும் பெரிய பாவமும் மனிதர்களுக்கு சில பிரயோஜனங்களும் இருக்கின்றன என்று மட்டும் கூறப்பட்டதால் பாவம் என்று கருதிய சிலர் அதை விட்டனர். அதில் சில பலன்கள் உண்டு என கருதியோர் அதை அருந்தினர்.ஆனால் அனைத்து பாவங்களுக்கும் தலையாயதாக, பாவங்கள் செய்ய தூண்டுகோலாக, தலைவாசலாக இந்த மதுப் பழக்கம் இருப்பதினை உணர்ந்த அரபியர்கள் குடிப்பழக்கத்திலிருந்து முழுவதுமாக விடுபட இறைவன் விரைவிலேயே நல் வழி காட்டினான்.
அரேபியாவும், ஆல்கஹாலும் :
மதுவருந்துதல் அரேபியர்களின் அன்றாட பழக்கமாக இருந்தது. அதனால் பலன்கள் அதிகமுண்டு எனக்கருதி அதனை விடாது அவர்கள் அருந்தி வந்தனர். முதல் தடவையிலேயே மது அருந்தக்கூடாது என கடுமையான தடை விதிக்கப்பட்டால் அதனை அமுல் நடத்துவது அவர்களுக்கு சிரமமாகிவிடும். அதனால் தான் சிற்கச்சிறுக பலவிதமாக அதன் கெடுதிகளை உணர்த்திக்கொண்டே வரப்பட்டது. இறுதியில் மது தீங்கு விளைவிப்பதே என அவர்கள் உணர்ந்ததும் பூரணமாக தடை விதிக்கப்பட்டது. அச்சமயம் அதை அமுல் அமுல்படுத்துவதற்கும் அவர்களுக்கு எளிதாகி விட்டது. கண்டிப்பாக மது அருந்தக்கூடாது என்ற சட்டம் வந்தது ஏன்? என்பதை பின் வரும் ஹதீஸ் விளக்குகிறது.
ஹஜ்ரத் அப்துல் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்து அதற்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் சிலரை அழைத்திருந்தார்கள். விருந்தினருக்கு உணவு பரிமாரப்பட்டது. அதில் பண்டைய வழக்கப்படி மதுவும் வைக்கப்பட்டிருந்ததால் விருந்தினர் அதையும் அருந்தினர். மஃரிப் தொழுகைக்கான நேரம் வந்துவிட்டதால் யாவரும் எழுந்தனர். அவர்களில் ஒருவர் இமாமாக முன் நின்று தொழ வைக்க சென்றார். போதை தலைக்கேறியிருந்த சமயம். அதனால் “காஃபிரூன் என்ற அத்தியாயத்தை ஓதிய அவர் காஃபிர்களே! நீங்கள் வணங்கிக்கொண்டிருப்பதை நான் வணங்க மாட்டேன் என்று இருக்கும் வசனத்தில் வணங்கமாட்டேன் என்பதை வணங்குவேன் என்று மாற்றி ஓதிவிட்டார். இதனை உத்தேசித்து உண்மை விசுவாசிகளே ! நீங்கள் போதையாக இருக்கும் நிலையில் தொழுகையின்பால் நெருங்காதீர்கள் (அல்குர்ஆன் 4:43) என்னும் வசனம் அடுத்து இறக்கப்பட்டது.
போதையாக இருக்கும் போது தொழக்கூடாது என்றுதான் தடை விதிக்கப்பட்டது. இதனால் மது அருந்துவோர் இரவின் பிற்பகுதி தொழுகையான இஷாவை முடித்துக்கொண்டு மது அருந்துவிட்டு தூங்கிவிடுவர். காலை எழுந்திரிக்கும் போது போதை தெளிந்திருக்கும். பஜ்ர் தொழுகையை நிறைவேற்றிவிட்டு பிறகு மது அருந்துவார்கள். மதியம் லுஹர் தொழுகையின் போது அது தெளிந்துவிடும். இந்நிலை சில நாட்கள் நீடித்தது. ஆனால் மது அருந்துவது அறவே தவிர்க்கப்படவில்லை .
பின்பு உதுமான் பின் மாலிக் என்பவர் ஒரு விருந்து வைத்து முஸ்லீம்கள் சிலரை அதற்கு அழைத்தார். அழைக்கப்பட்டவர்களில் ஸஃதுபின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவர். அவ்விருந்தில் ஒட்டகத்தின் தலை பொரித்து வைக்கப்பட்டிருந்த்து. அதனை அனைவரும் ரசித்து புசித்துவிட்டு அதற்கு மேல் வேண்டிய மட்டும் மதுவை அருந்தினர். மிதமிஞ்சிய போதையால் ஆடலும் பாடலும், குடும்ப பெருமை பற்றிய புகழ்பாக்களும் கிளம்பிவிட்டன. ஸஃதுபின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒரு கவிதை புனைந்து அதில் தன் மரபினரை பெருமைபடுத்தியும் மதினா வாசிகளான அன்சாரிகளை இகழ்ந்தும் பாடினார்.
இது அன்சாரிகளில் ஒருவருக்கு ஆத்திரத்தை மூட்டியது. ஒட்டகத்தின் எழும்பொன்றை எடுத்து ஸஃது அவர்களின் தலையில் ஓங்கி அடித்து காயப்படுத்திவிட்டார். ஸஃது அவர்கள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று முறையிட்டார்கள். அப்பொழுது அங்கிருந்த ஹஜ்ரத் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இறைவா! மது விஷயத்தில் தெளிவான கட்டளையை தெரிவிப்பாயாக என்று வேண்டிக்கொண்டார்கள். இதன் பின்னர்தான் அறவே மது அருந்தக்கூடாது என்ற கட்டளை பிறந்தது. இதனை தாங்கிய வசனம் அல்மாயிதா என்ற அத்தியாயத்தில் வருகிறது. (ஆதாரம்: புகாரி, முஸ்லீம்)
மது அருந்துவோருக்கு எச்சரிக்கை :
மனிதனின் அறிவை மாற்றி மிருகத்திற்கு ஒப்பாக்கி வைக்கும் மதுவை அருந்துதல் கொடிய குற்றமாகும். கள்ளை தவிர்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில் அது கெடுதிகள் அனைத்திற்கும் தாயாகும். அல்லாஹ்வின் மீது பிரமாணமாக உண்மை விசுவாசமும் கள் குடித்தலும் ஒன்று சேராது. இரண்டில் ஒன்று மற்றொன்றை அப்புறப்படுத்திவிடும் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். (அறிவிப்பவர் : உதுமான் ரளியல்லாஹு அன்ஹு அவ்ர்கள். நூல்: நஸாஈ)
மது அருந்துவோர் குற்றவாளியாக இருப்பது போல அவர்களுக்கு உதவியாக இருப்போரும் குற்றவாளிகளே!.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மது சம்பந்தமாக 10 பேர்களை சபித்துள்ளார்கள்.
1) மதுவை காய்ச்சுபவர்,
2) அதனை காய்ச்சுவதற்கு உதவுபவர்,
3) அதை குடிப்பவர்,
4) அதனை புகட்டுபவர்,
5) அதனை சுமந்து செல்பவர்,
6) அதனை சுமந்து செல்ல ஏற்பாடு செய்பவர்,
7) அதனை விற்பனை செய்பவர்,
8) அதை வாங்குபவர்,
9) அதனை வெகுமதியாக கொடுப்பவர்,
10) அதனை விற்றுப் புசிப்பவர் ஆகியோர். (அறிவிப்பவர் : ஹஜ்ரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி)
எவருடைய வயிற்றில் மதுபானம் போய் நுழைந்ததோ, அவரின் ஏழு நாட்களின் தொழுகை ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. மதுபானம் அருந்தியதால் எவருடைய அறிவு போதையாகிவிட்டதோ அவரின் நாட்பது நாட்களின் நன்மைகளை இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான். இந்த நாற்பது நாட்கள் கழியுமுன் அவன் மரணமாகிவிட்டால் காபிராகவே (இறை நிராகரிப்பாளனாகவே) மரணிப்பான். ஆனால் பாவமன்னிப்பு கேட்டு மீண்டும் மது குடிப்பானேயானால் அவனுக்கு நரகில் ‘தின்யத்துல் கபால்’ என்னும் நீர் புகட்டப்படும். அப்போது சஹாபாக்கள் யா ரசூலுல்லாஹ்! தின்யத்துல் கபால் என்றால் என்ன ? என்று கேட்டார்கள். தின்யத்துல் கபால் என்பது நரகவாதிகளுடைய சீலும், சலமும், இரத்தமும் கலந்த கொதி தண்ணீர் என கூறினார்கள்.
மேதையாக இருந்தாலும் போதையில் மிருகமே :
குடித்தவன் எவ்வளவு படித்தவனாக இருந்தாலும், எத்தகய ஈமான் கொண்ட சீமானாக இருந்தாலும், அவன் அல்லாஹ்வின் அன்புக்குறியவனாக ஆக முடியாது. அவன் இறக்கும் வரை ஈமானை இழக்காமல் இதயத்திலேயே வருத்தியிருந்தாலும் கூட எத்தகய சிறப்பும் பெற்றுவிட முடியாது. மதுமேல் அவன் கொண்ட மோகம் அவனின் ஈமானின் பாகத்தை பறித்துவிடும். மதுபானம் குடித்து மகிழ்ந்திருப்பவன், அதில் மயங்கியிருப்பவன் மாண்புடைய ஈமானையும் கொண்டிருப்பானாயின் அந்த ஈமான் அவனிடமிருந்து பறிக்கப்பட்டே தீரும். ஆகவே அவன் இறப்பதற்கு முன்னேயே அவனிடமுள்ள ஈமான் இறந்து விடும். இதற்கோர் எடுத்துக்காட்டு :
ஷைக் அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கிறார்கள், ஒரு சமயம் நான் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தேன். அப்போது வழியில் பெண்கள் கூட்டமாக அழுதுகொண்டிருந்தார்கள்.இதைக்கண்ட நான் அவர்களிடம் சென்று ஏன் அழுதுகொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அண்டை வீட்டில் ஒருவர் சக்ராத் நிலையில் கிடக்கிறார். அவர் வாயில் ஷஹாதத் கலிமா சொல்ல வரவில்லை. நாங்கள் பலமுறை சொல்லிக்கொடுத்தோம். அப்படியும் அவரால் அதை சொல்ல முடியவில்லை. ஆகவே நீங்கள் அதை சொல்லிக்கொடுத்தால் ஒரு வேலை அவர் சொன்னாலும் சொல்லக்கூடும் என்று என்னிடம் கேட்டுக்கொண்டார்கள்.நானும் சென்று அம் மனிதனுக்கு எத்தனையோ முறை கலிமா ஷஹாதத்தை சொல்லிக்கொடுத்தேன். அப்போதும் அவர் சொல்லவேயில்லை. இறுதியாக திடீர் என்று கண் விழித்தார். நான் சொன்ன கலிமாவை மட்டும் காதால் கேட்டார். கேட்ட உடனேயே நான் இஸ்லாத்தை வெறுக்கிறேன் என உரத்துச் சப்தமிட்டார். அந்த சப்தத்துடன் அவரது ஆவி பிரிந்தது.
உடனே நான் அப்பெண்களிடத்தில் இவர் காஃபிராக மரணித்துவிட்டார். ஆகவே இவருக்கு ஜனாசா தொழ வைப்பதோ முஸ்லீம்களின் அடக்க ஸ்தலங்களில் அடக்கம் செய்வதோ கூடாது என்று சொல்லிவிட்டு வந்து விட்டேன். பின் அந்த இறந்தவரின் உறவினர்களை அழைத்து இவர் தன் ஜீவியத்தில் என்ன செயல்களை செய்துகொண்டிருந்தார் என்று கேட்டேன். இதற்கவர்கள் இவர் தனது ஜீவியத்தில் ஒழுங்காக தொழுது இறைவனுக்கு பிரியமான பல காரியங்களும் செய்து வந்தார். ஆனால் மது அருந்துவதை மட்டும் தன் பழக்கமாக கொண்டிருந்தார் என கூறினார்கள். நான் உடனே இவர் மது அருந்துவதை பழக்கமாக கொண்டதால் இவரின் ஈமான் பறிக்கப்பட்டு விட்டது என்று கூறினேன். இவ்வாறு அப்துல் அஜீஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அறிவிக்கிறார்கள்.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ ”கிளிக்” செய்யவும்