மது அருந்துபவனுக்கு மணமுடித்து வைக்காதீர்கள்.
அவன் நோயுற்றால் நோய் வினவச்செல்ல வேண்டாம்.
அவன் இறந்துவிட்டால் ஜனாசா தொழுகை தொழ வேண்டாம்.
என்னை நபியாக அனுப்பியவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். மது அருந்துபவன் தவ்ராத், சபூர், இன்ஜீல் குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களாலும் சபிக்கப்பட்டவனாவான்.
அவனுக்கு உதவி செய்வது இஸ்லாத்தையே இடிப்பதற்கொப்பாகும்”
என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற இந்த அருள் மொழியை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மதுவால் வரும் கேடு :
மது ஓர் உணவு அல்ல. போதைப் பொருள். பதார்த்தங்கள் கெடுவதிலிருந்து தயாரிக்கப்படும் பொருள். மிகக் கொடிய விஷம். மதுவினால் குடிகள் பல கெட்டன என்பதை நாம் அறிவோம். அகால மரணம், கொலை, திருடு, விபச்சாரம் எல்லாம் மதுவினாலேயே உண்டாகின்றன. ஞாபகசக்தியும் சிந்தனை ஆற்றலும் சிதைந்து போகும். புத்தி, நிதானம் குலைந்து மன ஒழுங்கையும் அடக்கத்தையும் சீரழித்து விடுவது மதுபானம். மதுவால் இரைப்பை, கல்லீரல், இரத்தக் குழாய்கள், சிறுநீரகம், நரம்பு மண்டலம் இவற்றிற்குப் பெரும் கேடு உண்டாகிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து விடும். பஞ்சமாதபாதங்களில் மது குடிப்பதும் ஒன்று. மதுவால் வரும் கேடு பற்றி நமது தமிழ் நூல்கள் பலவும் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளதுடன் அப்பழக்கத்தைக் கைவிடுவதே மேலானது என்பதையும் சிறப்பாக வலியுறுத்தியுள்ளன.
மதுபானமானது பாவங்களை சேகரிக்கும் மிகப்பெரும் கருவியாகும். மதுபானம் அருந்துபவர் சிலைகளை வணங்குபவர் போல் ஆவார். மதுபானம் அருந்துபவரை இறைவன் சபிக்கிறான். மேலும் அவன் மீது இறைவனின் சாபமும் ஏற்படுகிறது. மது பானம் அருந்துபவரின் ஈமான் பரிக்கப்பட்டுவிடும். ஏனெனில் மதுபானமும் ஈமானும் ஒன்று சேராது. எவராகிலும் மதுபானம் அருந்தினவருக்கு ஸலாம் சொன்னாலும் அவனை அனைத்துப்பிடித்தாலும் அவரின் 40 நாடளின் நன்மைகள் அழிக்கப்படும்.
மது அருந்துபவரின் நிலை இப்படியென்றால் மதுக்கடைகளை வைத்துக்கொண்டு பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு கொடுக்கிறார்களே அவர்களின் நிலை என்னவாகும்? அகிலத்தை படைத்து ஆட்சி செய்யும் ஏக அல்லாஹ்வின் ஆணை பெரிதல்லவா? சில முஸ்லீம்கள் ஐங்காலமும் தொழுது வருகிறார்கள். ஆயினும் மது வியாபாரத்தொழிலை செய்து வருகிறார்கள். ஏன் இப்படி செய்கிறீர்கள் என கேட்டால் நாங்களென்ன குடிக்கவா செய்கிறோம். வியாபாரம்தானே செய்கிறோம் என்று கூருகிறார்கள். அவர்கள் கொடுக்கின்ற மது பாட்டில்கள் எத்தனை குடும்பங்களை குட்டிச்சுவராக்கியுள்ளன. எத்தனை மானங்கெட்ட ஈன பிறவிகளை எல்லாம் உருவாக்கியுள்ளன? மதுபானம் குடிப்பவன்,விற்பவன்,அதற்கு உதவி செய்பவன் அனைவருக்கும் ஒரே தண்டனைதான் என்று நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருப்பதை அவர்கள் எண்ணிப்பர்க்க வேண்டும்.
மதியை போக்கும் மதுவே போ…….. போ…………..
மது அருந்துபவனுக்கு மணமுடித்து வைக்காதீர்கள். அவன் நோயுற்றால் நோய் வினவச்செல்ல வேண்டாம். அவன் இறந்துவிட்டால் ஜனாசா தொழுகை தொழ வேண்டாம். என்னை நபியாக அனுப்பியவன் மீது ஆணையிட்டு கூறுகிறேன். மது அருந்துபவன் தவ்ராத், சபூர், இன்ஜீல் குர்ஆன் ஆகிய நான்கு வேதங்களாலும் சபிக்கப்பட்டவனாவான். அவனுக்கு உதவி செய்வது இஸ்லாத்தையே இடிப்பதற்கொப்பாகும் ” என அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்ற இந்த அருள் மொழியை அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
மது அருந்துவது மா பாதகச்செயல். அது மதியை மங்க வைத்துவிடும். புனிதமிகு மனிதனை கொடிய மிருகமாக்கி விடும் என்பதை மதியுடையோர் அனைவரும் நன்குணர்வர். மது அருந்துவதை சர்வ சாதாரண செயலாகக்கொண்டு நாள்தோரும் பல முறை குடித்து குடித்து கும்மாளமிட்ட அரேபியர்களிடையே மதுவின் தீமைகளை படிப்படியாக துணிந்துரைத்து, இறுதியில் மதுவிலக்கை அமுல் நடத்தி வெற்றி கண்ட பெருமை வேந்தர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களேயே சாரும்.
யார் அல்லாஹ்வையும் ம்றுமை நாளையும் விசுவாசம் கொண்டுள்ளாரோ அவர் மதுக்குவலையின் அருகில் கூட அமர வேண்டாம் என அருமை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்தார்கள். அவர்களது அறிவுரையை கேட்ட அரேபிய முஸ்லீம்கள் தங்கள் இல்லங்களிலிருந்த மதுக்குவலையை உடைத்து நொருக்கிய போது மதீனாவின் வீதிகளில் அம்மதுவானது ஆறென பெருக்கெடுத்து ஓடியது. மது அருந்துபவன் இஸ்லாத்தின் துரோகி மட்டுமல்லாமல் நாட்டின் துரோகியுமாவான். மது அருந்துவதனால் பல வகையான இழி தன்மைகள் ஏற்படுகின்றன. எனவே அதை விட்டு நீங்கி கொள்ளுமாறு உம்மை எச்சரிக்கிறேன் என அறிஞர் பகீஹ் அபூலைத் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பார் அறிவிக்கிறார்.
தீயோரின் வேதனை அனைவருக்கும் :
நபிகள் நாயகம் அவர்கள் சொல்கிறார்கள். என் சமுதாயம் கீழ் காணும் பதினைந்து வஷயங்களை செய்தால் சிகப்பு காற்று பூகம்பம், உருமாற்றம், கல்மாரி எனத்தொடர்ச்சியான பல வேதனைகள் நிகழும். அதில் மது அருந்துவதும் இடம் பெறுகிறது. (நூல் : மிஷ்காத்).
ஒரு வீட்டில் தீ பிடித்துவிட்டால் அதன் அருகிலுள்ளோர் அனைக்க வேண்டும். இல்லையெனில் சுற்றியுள்ள பற்பல வீட்டையும் நாசமாக்கிவிடும். இதேபோன்று தீச்செயல்களைத் தடுக்க வேண்டும். யார் எக்கேடு கெட்டுபோனால் நமக்கென்ன என்று இருந்தால் வேதனை சுடும்.
சமுதாயத்தில் பரவியிருக்கும் தீய செயல்களாம் வர தட்சணை. கொலை,கொள்ளை என்பன போன்றவையின் வேதனை, பாதிப்பு அனைத்து மக்களையும் துன்பத்திலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளன. அதேபோல் மது அருந்துவது சர்வ சாதாரணமாக கருதப்படுகிறது. மற்றவர்கள் குடித்தால் நமக்கென்ன? நாம் மட்டும் குடிக்காமல் இருந்தால் போதும் என்று இருந்து விட்டால் அவர்களை பிடிக்கும் வேதனை நம்மையும் செர்த்து பிடித்துக்கொள்ளும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆதலால் குடிப்பவர்களுக்கு உபதேசம் ஆதலால் குடிப்பவர்களுக்கு உபதேசம் செய்து குடியை தடுத்து நிறுத்துங்கள். அல்லாஹ் நம் அனைவரையும் அச்செய்கையை விட்டும் காப்பற்றுவானாக.. ஆமீன்.
மதுவின் போதையால் கொலையும், தற்கொலையும் :
கொலை, தற்கொலை ஆகிய குற்றங்களை புரிவோரில் அதிகமானோர் மது அருந்தியவர்களேயாவர்.வீடுகளில் ஏற்படும் சண்டை சச்சரவுகளுக்கும் மதுக்கடைகளில் ஏற்படும் கலகங்களுக்கும் மதுவே காரணமாகும், மது அல்லது போதை மருந்துகளின் மயக்கத்திலேயே பல தற்கொலைகள் நடக்கின்றன. நாட்டில் ஏற்படும் குற்றங்களில் 90 சதவிகிதம் மது அருந்தும் போது ஏற்படும் குற்றங்களேயாகும்.
மதிகெட்டு மிருக நிலைக்கு ஆளாகும் குடிகாரன் ஞாபகமிழந்து, உடல் தளர்ந்து, உள்ளம் சோர்ந்து, எண்ணும் திறனிழந்து பயனற்ற ஜடமாகி விடுகிறான். மூர்க்க தனமும், வெறிக்கூச்சலும் அவன் குடி போதையில் செய்யும் வேடிக்கைச்செயல்களும் நல்லொழுக்கத்திற்கு நேர்மாறாகி விடுகிறது. இனி எப்போதும் மதுவை தொடுவதில்லை என ஒவ்வொரு முறை குடிக்கும்போதும் சத்தியம் செய்யும் வார்த்தைகள் போல, மனோ நிலையும் எப்போதும் மாறிக்கொண்டேயிருக்கிறது. கோபமும் அதைத்தொடர்ந்து அழுகையும் உடனே வெடிச்சிரிப்பும் சிறிதும் வெட்கமின்றி வெளிப்படுத்துவான். அவனுக்காகவோ அல்லது குடி வெறியால் மற்றவர்களுக்கு விளையும் தொல்லைகளுக்காகவோ சிறிதும் கவலைப்படுவதில்லை. இதுவே இவர்களின் இழிநிலையாகும். இத்தகய மக்களால் சமுதாயத்திற்கும் நாட்டிற்கும் என்ன பயன் ஏற்பட்டுவிடும்?
மனிதனின் கௌரவத்தை குலைத்து அவனை நேர்மையற்றவனாக, வெட்க உணர்வு சிறிதுமற்றவனாக மது மாற்றுவதை நாம் காண்கிறோம். மது போதையில் எண்ணிப்பார்க்க முடியாத பல பயங்கர குற்றங்களை மனிதன் எல்லா நிலைகளிலும் எல்லாக்காரியங்களிலும் புரிகிறான். அதனால் அவனும் அவனது குடும்பத்தவரும் ஏன் சமுதாயமும் கூட வேதனைப்படுகிறது என்ற போதிலும் மகிழ்விக்கும் மது கோப்பையை மனிதன் கைவிட விரும்பவில்லை. இதை எதிர்த்து அனைத்து துறையினரும் முயல வேண்டும். எளிதில் திருத்த முடியாத உலகப்பிரச்சனையாக என்றும் போல இன்றும் இருந்து வருவது யாவரும் மறுக்க முடியாத உண்மை.
அறிவை அடகு வைத்த அகம் – மது வெறி!
அலுவலகத்திலிருந்து கண்ணியமாக வரும் ஒருவன், மது அருந்தும் பாருக்கு சென்று திரும்பியவுடன் அலங்கோலமாகின்றான். இதில் பாமரன் படித்தவன் என்ற பேதமின்றி நடுத்தெருவில், சாக்கடைகளில் விழுந்து கிடப்பதை அன்றாடம் நாம் கண்டு வருகின்றோம். ஒருநாளைக்கு 100 ரூபாய் சம்பாதிக்கும் ஒருவன் தனது சம்பாத்தியத்தின் முக்கால் பகுதியான 75 ருபாயை டாஸ்மாக்கில் செலவு செய்கிறான். வீட்டில் பசியோடு காத்திருக்கும் மனைவியும் குழந்தைகளும் மீதமுள்ள 25 ரூபாயில் தான் மூன்று வேளை உணவு உண்டு, பிற செலவுகளையும் செய்ய வேண்டும். பணம் போதவில்லை என்று மனைவி கேட்டுவிட்டால் அடி, உதை தான்.
தள்ளாடும் தமிழகத்தை கரையேற்ற நினைப்பதற்தற்கு பதிலாக மூழ்கடிக்க நினைத்ததன் விளைவு இன்று பெண்களும் வெளிப்படையாக டாஸ்மாக் கடைக்கு சென்று மது அருந்தும் பழக்கம் பேஷனாகி வருகின்றது. வரிசையில் நின்று பாட்டில் வாங்குவது மக்களுக்கு சிரமம் என்பதால் டில்லி அரசு, ஓட்டல்களில் மது பரிமாற ஏற்பாடு செய்யப் போகிறதாம். இதுவரை நட்சத்திர ஹோட்டல்களில் மட்டும் பரிமாறப்பட்டு வந்த மதுவை தற்போது அனைத்து ஹோட்டல்களிலும் பரிமாறும் புதிய மதுக்கொள்கையை டில்லி அரசு ஏற்படுத்தியுள்ளதாம். இந்திய தேசத்தின் நன்மதிப்பு, கலாச்சாரம் அனைத்தும் குழிதோண்டி புதைக்கப்பட்டு வருகின்றன.
சாராயம் தரும் அரசியல் போதை :
தமிழகத்தில் மது விற்பனையை மாநில அரசு முழுமையாகத் தன் வசம் வைத்துள்ளது. அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில்தான் பல்வேறு நலத்திட்டங்களைச் செய்வதாகவும் கூறுகிறது. மது விற்பனையால் ஏழை மக்களுக்குக் கேடுதான் அதிகமே ஒழிய அந்த வருமானத்தைக் கொண்டு அவர்களுக்குச் செய்யப்படும் நன்மை மிக மிகக் குறைவே என்பது நிதர்சனம். குடிப்பதனால் குடும்பத்திற்கு வருமான இழப்பு மட்டுமின்றி பசி, பட்டினியால் குடும்பம் வாடுவது மட்மின்றி பிள்ளைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது. தற்போது இதுவெல்லாம் பற்றாக்குறையாக நம் தமிழக அரசு ‘எலைட்’ என்ற பெயரில் வெளிநாட்டு சரக்குகளை இறக்குமதி செய்து, குடிமக்களை குஷிப் படுத்த முனைந்திருப்பது கொடுமையிலும் கொடுமை. ஆல்கஹால் ஜீரண உறுப்புகள் மூலமாக மூளையை வேதிமாற்றத்தால் செயலிழக்கச் செய்துவிடும் நிலையைத்தான் போதை என்று கூறப்படுகிறது.
மேலும் மூளையின் செல்கள் பாதிப்படையச் செய்த அதன் வளர்ச்சியை தடைசெய்கிறது. தனால் நினைவாற்றல் குறைவதோடு, அந்த சமயத்தில் நாம் என்ன செய்கிறோம்? என்ற பிரக்ஞைகூட இருக்காது. நாட்டில் நடக்கும் பெரும்பாலான குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகளுக்கு மதுதான் காரணம் என்பதை அறிந்திருந்தும் அதை தடை செய்து மக்களை பாதுகாக்க வேண்டிய அரசே மதுக்கடைகளை நடத்துவது வேதனைக்குரிய செயலாகும்.
நாட்டு மக்களின் மீது ஆட்சியாளர்களுக்கு உண்மையிலேயே அக்கறை இருக்குமானால் பூரண மதுவிலக்கை, ரத்தத்தில் ஆல்கஹாலை பீய்ச்சும் அரசு இயந்திரங்கள் அமுல்படுத்த முனைய வேண்டும். அப்போது தான் ஏழைகளின் வறுமை ஒழியும், குழந்தைகளின் கல்வி வளரும், நாடும் ஒளிரும்.
முடிவுரை :
‘தீமைகளுக்கெல்லாம் தீமை மது’ என்று சொன்னால் மிகையல்ல. இதன் மோசமான கெடுதிகளை நாம் சிந்தித்தால் மது பாவத்தின் அன்னை என்பதில் எள்ளளவும் சந்தேகம் இருக்க முடியாது. மதுவினால் விளையும் தீமைகள் அனைத்து துறைகளையும் பாதிக்கக்கூடிய உடல் நலக்கேடு, சுகாதாரக்கேடு, பொருளாதார நஷ்டம்,சமூக சீர்குலைவு, அரசியல் அநாகரீகம் என சகல மட்டங்களிலும் மதுவின் தீமைகள் பரவி கிடக்கின்றது.
இத்தனை கொடுமை நிறைந்த பழக்கத்தை சிறைத் தண்டனையாலோ, அபராதம் விதிப்பதாலோ நிறுத்திவிட முடியாது. மனக் கட்டுப்பாட்டினால்தான் இதை ஒழிக்க முடியும். இவ்வுலகில் எந்த ஒரு சமயமும், மது அருந்துவதை நியாயப்படுத்தி போதனை செய்யவில்லை.
“மது அருந்துவதை விட்டு நீங்கி கொள்ளுங்கள். ஏனெனில் அதுவே பாவங்களின் தாயாக உள்ளது” என்ற நபிமணியின் பொன்மொழி நமது நெஞ்சில் என்றென்றும் ஒலித்துக்கோண்டிருக்கட்டும். மதுவினால் ஏற்படும் தீமைகளை கண்ட நாம் மதியை போக்கும் மதுவே போ……. போ…… என விடைபெறுவோமாக. குடி குடியை கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும். குடிமகன்கள் உணர்ந்திடாத வரை குடி ஒழிந்திடாது.
ஒவ்வொரு தனி மனிதனும், மதுவின் தீங்குகளை உணர்ந்து மனதளவில், இறைவன் மீது ஆணையிட்டு உறுதி மொழி பூணும் பொது பூரண மது ஒழிப்பு நிச்சயம் சாத்தியமே… சாத்தியமே…
வாழ்த்துக்கள் சகோதரி எம்.பஹ்ஜத் குபுரா அவர்களே! தொடரட்டும் தங்கள் சிந்தனைகள்.
(காயல்பட்டினத்தில் 29.04.2012 அன்று, ஐக்கிய சமாதானப் பேரவை நடத்திய மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற கட்டுரை.
எம்.பஹ்ஜத் குபுரா அவர்கள் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் வணிக மேம்பாட்டுவியல் (B.B.A.,) இரண்டாமாண்டு மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.)