( மிக முக்கியமான கட்டுரை )
‘மனித இனம்’ என்று சொல்வதில் உள்ள ‘ஆண் சார்புத் தன்மை’ பொருளற்றதாகி வருகிறதா…?!
[ ”இனப்பெருக்கத்துக்கு ஆண்களின் சரீர ஒத்தாசை இன்றியமையாதது அல்ல” என்று அறிவியலார்கள் அறிவித்திருப்பது ஆண்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம்.
கருத்தரிப்பதிலும் பிள்ளை பெறுவதிலும் அதைப் பேணி வளர்த்து ஆளாக்குவதிலும் ஆண்களின் பங்குபணி வரவரக் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. பெண்கள் எல்லா விதங்களிலும் ஆண்களுக்குச் சமானமானவர்களாகவும் சில விதங்களில் ஆண்களைவிட மேம்பட்டவர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள்.
“மனித’ இனம் என்று சொல்வதில் உள்ள ஆண் சார்புத் தன்மை பொருளற்றதாகி வருகிறது. அதை “மனிதி’ இனம் என மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிற அளவுக்கு ஓர் இடைவெளியற்றதும், நெருக்கமானதும் இன்றியமையாததுமான தாயினப் பிணைப்பு மனிதச் சிற்றினத்தின் அடையாள வரையறையாக அமைந்திருப்பது வெளிப்பட்டு வருகிறது.
ஆண்களின் அலட்டலும் அலம்பலும் அளவுக்கு மீறி அதிகமாகிக் கொண்டே போனால் கலவியில்லாக் கருத்தரிப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும் ஆபத்து இருக்கிறது அல்லது காரியமானதும் கணவனைக் கழற்றிவிடுகிற போக்கு அதிகரிக்கலாம். ]
ஆண்களுக்கோர் எச்சரிக்கை!
விலங்குகளில் பாலூட்டிகள் என ஒரு பிரிவு உண்டு. பெயரைப் பார்த்தாலே அதற்கான காரணம் விளங்கிவிடும். அவற்றின் பெண் குலத்துக்கு மட்டுமே தனித்துவம் வாய்ந்த பால் சுரப்பிகள் உள்ளன.
குட்டி பிறந்த பின் அது பல மாதங்களுக்கு உயிர்வாழத் தே \வையான அமுதபானத்தை அவை வழங்கி உயிரினம் உலகில் நீடித்து நிலைக்க உதவுகின்றன.
இன்றுவரை பாலூட்டி விலங்குகள் உலகில் நீடித்து வருகின்றன எனில் அவற்றின் தாய்க்குலமே அதற்கு முழு முதற்காரணம். தாயில்லாமல் நானில்லை, நீயில்லை ஏன் உலகில் உயிரினமேயில்லை!
நிலைமை அவ்வாறிருக்க மனிதம் என்ற பேரினத்துக்கு ஆண் என்று பொருள்படுகிற “ஹோமோ’ என்ற லத்தீன் பெயரை இட்டது அக்காலத்திய ஆணாதிக்க மனப்பான்மையின் வெளிப்பாடு என இன்றையப் பெண்ணுரிமைவாதிகள் பொருமுகிறார்கள்.
“ஆணவம்’ என்பது பெண்களுக்கும் இருக்க முடியும் என்கிறபோது அதை ஆண்களுடன் தொடர்புபடுத்திக் குறிப்பது என்ன நியாயம்? ஆனாலும் இன்றைய உலகில் ஆணாதிக்கம் கலகலத்துத் தகர்ந்து கொண்டிருக்கிறது எனவும் அது முற்றாயழிந்து போகிற காலம் தொலைவில் இல்லை எனவும் பெண்ணுரிமைவாதிகள் வெளிப்படையாக இல்லாவிட்டாலும், மறைமுகமாகச் சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
கருத்தரிப்பதிலும் பிள்ளை பெறுவதிலும் அதைப் பேணி வளர்த்து ஆளாக்குவதிலும் ஆண்களின் பங்குபணி வரவரக் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. பெண்கள் எல்லா விதங்களிலும் ஆண்களுக்குச் சமானமானவர்களாகவும் சில விதங்களில் ஆண்களைவிட மேம்பட்டவர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள்.
“மனித’ இனம் என்று சொல்வதில் உள்ள ஆண் சார்புத் தன்மை பொருளற்றதாகி வருகிறது. அதை “மனிதி’ இனம் என மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்படுகிற அளவுக்கு ஓர் இடைவெளியற்றதும், நெருக்கமானதும் இன்றியமையாததுமான தாயினப் பிணைப்பு மனிதச் சிற்றினத்தின் அடையாள வரையறையாக அமைந்திருப்பது வெளிப்பட்டு வருகிறது.
பிள்ளை பெறுவதுடன் நின்றுவிடாமல் அதை வளர்த்து ஆளாக்குவது பாலூட்டிகளின் தனிச் சிறப்பியல்பு. அந்த வகையில் பாலூட்டிகளிலேயே தலைசிறந்த பெற்றோர்களாகப் பெண்கள் விளங்குகிறார்கள். வேறெந்த உயிரினமும் அந்த வகையில் மனிதப் பெண்களுக்கு ஈடானதோ இணையானதோ அல்ல.
தம் பிள்ளைகள் பெரியவர்களாகிக் கல்யாணம் செய்துகொண்டு பேரப்பிள்ளைகளைப் பெற்றுக்கொடுத்த பிறகும் பிள்ளைகளைக் கண்டிக்கவும் கட்டுப்படுத்தவும், வழிநடத்தவும் உள்ள உரிமையைப் பெண்கள் கைவிட எளிதில் விரும்புவதில்லை. ஆண்களுக்கும் அந்த நாட்டம் உண்டெனினும் “தோளுக்கு மிஞ்சினால் தோழன்’ என்று தத்துவம் பேசி அமர்ந்து விடுவார்கள்.
இனப்பெருக்கத்துக்கு ஆண்களின் சரீர ஒத்தாசை இன்றியமையாதது அல்ல என்று அறிவியலார்கள் அறிவித்திருப்பது ஆண்களுக்கு அதிர்ச்சியைத் தரலாம்.
மேதைகள், சாதனையாளர்கள், விளையாட்டு வீரர்கள் என முன்மாதிரி ஆண்களாக மதிக்கப்படுகிறவர்களின் விந்தணுக்களைச் சேகரித்து அவற்றை உறைய வைத்துப் பாதுகாப்பது பல நாடுகளில் நடக்கிறது. ஒரு பெண் தனக்கு விருப்பமான ஆணின் விந்தணுவைப்பெற்றுத் தன் கருப்பைக்குள் செலுத்திக்கொண்டு கருத்தரிக்கலாம்.
அடுத்து “குளோனிங்’ என்ற முறையில் பெண்ணின் உடலிலிருந்தே ஒரு வ்ஸல்லை எடுத்து அதனுள்ளிருக்கிற கூறுகளை அவளுடைய முட்டைக்குள் புகுத்தி அந்த முட்டையை அவளுடைய கருப்பையில் நட்டுவிட்டால் அது ஒன்பது மாதங்களில் முழுக்குழந்தையாக வளர்ந்துவிடும். இந்த உத்தி ஆடு, மாடு, குதிரை போன்ற விலங்குகளை இனப்பெருக்கம் செய்வதில் வெற்றியடைந்திருக்கிறது.
தகப்பனின் தயவின்றித் தாயால் மட்டுமே வளர்க்கப்பட்ட பல சிசுக்கள் நல்ல விதமாக வளர்ந்து வாழ்க்கையில் முன்னேறிச் சிறப்பெய்தியிருக்கிறார்கள்.
பிள்ளைகள் கெட்டுப் போவதற்கு வறுமைதான் முக்கியமான காரணி; ஆண் வளர்ப்பதோ, பெண் வளர்ப்பதோ அல்ல என்று சாரா மக்லநாகன் என்ற அமெரிக்கச் சமூகவியல் ஆய்வர் கூறுகிறார்.
ஆண்களின் அலட்டலும் அலம்பலும் அளவுக்கு மீறி அதிகமாகிக் கொண்டே போனால் கலவியில்லாக் கருத்தரிப்பைத் தேர்ந்தெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகும் ஆபத்து இருக்கிறது அல்லது காரியமானதும் கணவனைக் கழற்றிவிடுகிற போக்கு அதிகரிக்கலாம்.
ஓர் உயிரினத்தின் வாழ்க்கை உண்மையில் அதன் தாய் வழிப் பாட்டியின் கருப்பையிலேயே தொடங்கி விடுகிறது. ஒரு சிசுவின் தாய் அவளுடைய தாயின் கருப்பையில் உருவாகிக் கொண்டிருக்கிறபோதே அவளுடைய உடலில் முட்டையகம் தோன்றி முட்டைகளும் தோன்றி விடுகின்றன.
பாட்டி பிரசவிக்கிறபோது அவையும் தாயின் உடலுக்குள் இருந்தவாறே வெளியாகும். தாய் பருவமெய்தும் வரை அவை முட்டையகத்தில் பாதுகாப்பாக இருக்கும். தாய் வயதுக்கு வந்தவுடன் மாதந்தோறும் ஒரு முட்டை முதிர்ச்சியடையும். அது சுருக்குத் தசைகளால் ஃபாலோபியன் நாளத்திற்குள் உறிஞ்சி இழுக்கப்படும். அதிலுள்ள ஊட்டச்சத்துகளும் மரபியல் பதிவுகளும் முட்டையைப் போஷித்துப் பராமரிக்கும்.
தந்தை கலவிசெய்து தமது விந்தணுக்களைக் கருப்பை வாயினருகில் செலுத்துவதோடு அவருடைய பங்குப்பணி முடிந்து போகிறது. அவற்றில் ஏதாவது ஒன்று முட்டையின் உறையைத் துளைத்துச் சில “டிஎன்ஏ’ மரபணுச் சரங்களைப் புகுத்தும். அத்துடன் அதன் பணியும் முடிவுறும்.
அடுத்த ஒன்பது மாதங்களில் கரு வளர்ந்து தாயின் உடலிலிருந்தே கனிமங்களையும் ஊட்டச்சத்துகளையும் ஆக்சிஜனையும் உறிஞ்சிக் குழந்தையாகப் பரிணமிக்கிறது. தாயின் உடலிலிருந்தே அதற்குச் சக்தியும் நோயெதிர்ப்புத் திறனும் கைமாற்றப்படுகின்றன.
சிசு வெளிவரும்போது அதன் எடையான 3 -5 கிலோகிராம் முழுவதுமே தாய் தரும் கொடைதான். அதோடு ஒப்பிடுகையில் தந்தை தந்த டிஎன்ஏ சரங்களின் எடை 3.3 பிக்கோ கிராம் மட்டுமே (ஒரு பிக்கோ கிராம் என்பது ஒரு கிராமில் லட்சம் கோடியில் ஒரு பங்கு)
குழந்தை கருப்பையிலிருந்து புறப்பட்டு வெளிவரும்போது தாயின் இடுப்பிலும் பனிக்குடத்திலும் பிறப்புறுப்பிலும் உள்ள திரவங்களால் முழுக்காட்டப்படும். அத்திரவங்களிலுள்ள பல கோடி நுண்ணுயிரிகள் சிசுவின் உடலுக்குள் ஊடுருவி அதன் சருமத்தையும் ஜீரண மண்டலத்தையும் பொதுவான உடல் நலத்தையும் பாதுகாக்கும்.
பிறப்பின்போது தாயுடனான தொப்புள்கொடி இணைப்பு துண்டிக்கப்பட்டாலும் உடனடியாக வேறு வகையான இணைப்பு உருவாகிறது. தாயின் பால் சிசுவுக்குத் தேவைப்படுகிற நீர், புரதம், சர்க்கரை, கொழுப்புகள், நோயெதிர்ப்புத்திறன் ஆகிய எல்லாவற்றையும் முழு அளவில் அளிக்கிறது.
தாய் சிசுவைத் தழுவியணைத்து முத்தமிட்டுக் கொஞ்சும் போதெல்லாம் அதனுடைய உடலில் பரவியிருக்கக்கூடிய கிருமிகளை உட்கவர்கிறாள். உடனே அவளுடைய உடலில் அவற்றை அழிக்கும் நோயெதிர்ப்பு வ்ஸல்கள் உருவாகின்றன. அவள் அவற்றைத் தன் முலைப்பாலின் மூலம் சிசுவுக்குப் புகட்டி விடுகிறாள்.
இதையெல்லாம் பார்க்கிறபோது மனித இனம் தப்பிப்பிழைப்பதும் நீடித்து நிலைத்திருப்பதும் பெண்ணினத்தின் கையில் தானிருக்கிறது என்பது தெளிவாகிறது. இந்தக் கணமே உலகிலுள்ள அத்துணை ஆண்களும் மாயமாக மறைந்து போனால்கூட அஞ்சத் தேவையில்லை.
உறைய வைக்கப்பட்டிருக்கிற விந்தணுக்களைப் பயன்படுத்தியோ, குளோனிங் முறையிலோ மீண்டும் புதிய ஆண்களையும் பெண்களையும் உருவாக்கிக் கொள்ளலாம். ஆனால், அதுபோலப் பெண்கள் மறைந்துவிட்டால் அத்துடன் மனித இனத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விடும்.
அண்மையில் கிரெய்க் வெண்டர் என்கிற மரபணு விஞ்ஞானி மனித வ்ஸல்களுக்குள்ளிருக்கிற எல்லாக் கூறுகளையும் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக உருவாக்கிச் செயற்கை வ்ஸல்களைப் படைக்க முடியும் என நிரூபித்திருக்கிறார். ஆனால், அவரேகூடப் பெண்ணின் முட்டை வ்ஸல்லைச் செயற்கையாக உருவாக்க முடியாது என ஒப்புக் கொள்கிறார்.
ஆணுக்குப் பெண் எந்தவிதத்திலும் இளைத்தவளோ, சளைத்தவளோ அல்ல என்பது கடந்த முப்பது ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வருகிறது. பெண்களும் உயர்கல்வி பெற்று உயர் பதவிகளில் அமர்ந்து, உயர்வான ஊதியங்களையும் பெறத் தொடங்கிவிட்டார்கள்.
ஓர் ஆணின் சம்பாத்தியமோ, பாதுகாப்போ தேவையில்லை என நினைக்கிற பெண்களின் எண்ணிக்கை கூடி வருகிறது. உடலளவில் பெண் பலவீனமானவள் என்ற கருத்தையும் மேரி கோம் போன்ற வீராங்கனைகள் பொய்ப்பித்து வருகிறார்கள்.
சராசரியாக ஆண்களைவிடப் பெண்கள் அதிக நாள் வாழ்கிறார்கள், குறைவான உடல்நலப் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள், குற்றச் செயல்களில் குறைவாக ஈடுபடுகிறார்கள்.
உலக நிர்வாகம் முழுவதையும் பெண்கள் கைப்பற்றிவிடக்கூடிய நாள்கூட வரலாம். யார் கண்டது!
– கே.என். ராமசந்திரன்
நன்றி: தினமணி