புதிய வகை யுத்தம் தொடங்கிவிட்டது!
“மால்வேர்’ யுத்தம்!
நீங்கள் அணுகுண்டு தயாரித்துக் கொண்டிருப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டுகிறதே என்று ஈரான் அதிபர் முகமது அகமதி நிஜாதிடம் சில மாதங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் கேட்டார்கள். அதைக் கேட்டு அவர் கோபப்படவில்லை. “”இந்த உலகம் வேறு எங்கோ போய்க்கொண்டிருக்கிறது. இன்னமும் அணுகுண்டு தயாரிப்பதைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறீர்களே. அதெல்லாம் பழைய கதை” என்றார்.
ஒருவேளை குற்றச்சாட்டை திசை திருப்புவதற்காகவோ அல்லது ராஜதந்திர யுத்தங்கள், ரசாயன ஆயுதங்கள், உயிரிப் போர் பற்றியோ அவர் குறிப்பிட்டிருக்கலாம் என்று அப்போது கருதப்பட்டது. ஆனால், இப்போது நடப்பதையெல்லாம் பார்த்தால், அவர் குறிப்பால் உணர்த்தியது சைபர் யுத்தமாகக் கூட இருக்கலாம்போல தெரிகிறது.
கணினி இல்லாவிட்டால் இன்றைய உலகம் இல்லை. மளிகைக்கடையில் இருந்து விமானம் இயக்குவது வரை எல்லாமே கணினியின் கட்டுப்பாட்டில்.
போக்குவரத்து சிக்னல், ரயில் சேவை, மெட்ரோ ரயில் போன்றவை பெரும்பாலும் ஏதோ ஒருவகையில் கணினியால் இயக்கப்படுபவையே. நிர்வாகம் செய்வது எளிமையாகிவிட்டது என்ற வகையில் இது மிகப்பெரிய நன்மை. ஆனால், கெட்ட நோக்கம் கொண்டவர்களுக்கும் இந்த கணினிமயம் வசதியாகப் போயிருக்கிறது.
ரயிலைக் கவிழ்க்க வேண்டும், விமானப் போக்குவரத்தை நிறுத்த வேண்டும், பங்குச் சந்தையை முடக்க வேண்டுமென்றால் வருங்காலத்தில் தீவிரவாதிகள் மெனக்கெட வேண்டியதில்லை. தங்கள் இடத்தில் இருந்தபடியே கட்டளைகளைப் பிறப்பித்து விட்டு விளைவுகளைத் தொலைக்காட்சியில் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.
நாடுகளுக்கு இடையேயான போர்களும் இப்படித்தான். மின் உற்பத்தி நிலையங்களை முடக்குவது, ஏவுகணைகளைப் பாதை மாறச் செய்வது உள்ளிட்டவற்றுக்கும் கணினித் தொழில்நுட்பம் பயன்படப் போகிறது அல்லது இப்போதேகூட பயன்பட்டுக் கொண்டிருக்கலாம்.
இதுபோல கெட்ட நோக்கத்துக்காக உருவாக்கப்படும் மென்பொருள்களைத்தான் “மால்வேர்’ என்கிறார்கள். பல்கிப் பெருகும் திறன்கொண்ட வைரஸ், நல்லது போல காட்டிக் கொண்டு தீங்கு செய்யும் “ட்ரோஜன் ஹார்ஸ்’, வலையமைப்பைச் சிதைக்கும் “வோர்ம்’, வேவு பார்ப்பதற்கும் தகவல் திருட்டுக்கும் பயன்படும் “ஸ்பைவேர்’, தன்னிச்சையாக விளம்பரங்களைத் திணிப்பதுடன் கண்காணிக்கவும் பயன்படும் “ஆட்வேர்’ போன்றவையெல்லாம் மால்வேரின் சில வகைகள்.
இந்தக் கெட்ட மென்பொருள்கள்தான் வருங்காலத்தின் பயங்கர ஆயுதங்கள். இணையக் குறும்பர்கள், இணையக் குற்றவாளிகள், அரசுகள் போன்றோரால் இவை பயன்படுத்தப்படுகின்றன.
முதல் இரு தரப்பினரும் மால்வேர்களைப் பயன்படுத்துவது ஒன்றும் புதிதல்ல. ஆனால், அரசுகள் இவற்றைப் பயன்படுத்தினால் அதுதான் சைபர் யுத்தம். இப்போது அப்படிப்பட்ட ஒரு பெரிய தாக்குதல் கண்டறியப்பட்டிருக்கிறது. அந்தத் தாக்குதலுக்குப் பயன்பட்ட மால்வேரின் பெயர் “ஃபிளேம்’.
இரண்டு ஆண்டுகளுக்கு முன் கண்டறியப்பட்ட “ஸ்டக்ஸ்நெட்’ என்ற மால்வேரைப் போன்றதுதான் இந்த “ஃபிளேம்’. ஆனால், அதைவிடவும் பல வகையிலும் திறன் கொண்டது.
சுமார் 20 மெகாபைட் அளவுள்ள இந்த மால்வேரின் நடமாட்டத்தை ரஷியாவின் “காஸ்பர்ஸ்கை’ நிறுவனம் அண்மையில் கண்டுபிடித்து அறிவித்தது. நமது வீட்டுக் கணினிகளுக்காக ஆன்டி-வைரஸ் மென்பொருளை உருவாக்கித் தருகிறதே அதே நிறுவனம்தான். இதற்கு முன் கிட்டத்தட்ட 5 ஆண்டுகளாக யாராலும் கண்டுபிடிக்கப்படாமல் “ஃபிளேம்’ உலகமெங்கும் உலவி வந்திருப்பதாகவும் காஸ்பர்ஸ்கை கண்டறிந்திருக்கிறது.
உங்கள் வங்கிக் கணக்கில் பணத்தைக் கொள்ளையடிப்பது, படுக்கையறையைக் கண்காணிப்பது போன்ற “உப்புச் சப்பில்லாத’ வேலைகளுக்காக “ஃபிளேம்’ உருவாக்கப்படவில்லை. வேறு எந்த வகையான நிதி ஆதாய நோக்கமும் அதற்குக் கிடையாது. நாடுகளின் அணு ஆயுத ரகசியங்கள், எண்ணெய்க் கிணறுகள் பற்றிய தகவல்களைத் திருடுவதற்காகவே இது பரவவிடப்பட்டிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
“ஃபிளேமின்’ முக்கிய இலக்கு ஈரான், பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள்தான். எகிப்து, லெபனான், சூடான், லிபியா ஆகிய நாடுகளிலும் இந்த மால்வேரின் பாதிப்பு இருப்பதாக காஸ்பர்ஸ்கை தெரிவித்திருக்கிறது.
தாக்குதலுக்கு உள்ளான கணினியின் வெப்கேம், மைக்ரோபோன், ப்ளூடூத் போன்றவற்றை தேவைப்படும்போது இயங்க வைப்பது, அதில் புதிய குறியீடுகளைச் சேர்த்து கண்காணிப்பை அதிகப்படுத்துவது, 20 வகை சர்வர்களைக் கையாளும் திறன் போன்ற வசதிகள் பிளேமில் அடங்கியிருக்கிறதாம். இவை தவிர, வழக்கமாக ஸ்பைவேர்களில் பயன்படுத்தப்படும் விசைப் பலகையைக் கண்காணிக்கும் கீ லாக்கர்கள், திரையைப் படம்பிடித்து அனுப்பும் வசதிகளும் உண்டு.
ஃபிளேமின் அளவு, அதை உருவாக்கப் பயன்படுத்தப்பட்டிருக்கும் சிக்கலான குறியீட்டு மொழி, அதன் இயங்கு திறன் போன்றவற்றையெல்லாம் வைத்து அது தனி நபராலோ குழுவாலோ உருவாக்கப்படவில்லை என்கிற முடிவுக்கு உலகம் வந்துவிட்டது. அது நிச்சயமாக ஒரு நாட்டால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உருவாக்கப்பட்டதுதான்.
உலகில் அரசு சார்ந்த பல கணினி வலையமைப்புகள் இந்த கெட்ட மென்பொருள்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வசதியே இல்லாதவை என்று கருதப்படுகிறது. நமது கணினியிலோ, செல்போனிலோ தகவல் திருட்டு நடந்துவிடக் கூடாது என்பதற்காக இருநூறு முந்நூறு ரூபாய் கொடுத்து வைரஸ், ஸ்பைவேர் தடுப்பு மென்பொருள்களை நிறுவிக் கொள்கிறோம். ஆனால், உலகின் பல அரசு வலையமைப்புகள் இந்த அளவுக்குக்கூட பாதுகாப்பு அம்சங்களைப் பற்றிக் கவலைப்படுவதில்லையாம். இதை எங்கே போய்க் கூறுவது?
இப்போதைக்கு “ஃபிளேம்’ பற்றி யாரும் கவலைப்பட வேண்டியதில்லை. அதை அழிக்கும் எதிர் நிரல் கண்டுபிடித்தாகிவிட்டது. ஆனால், அது சொல்லியிருக்கும் செய்திதான் முக்கியம். புதிய வகை யுத்தம் தொடங்கிவிட்டது.
-புளியங்குடி பூலியன்
நன்றி: தினமணி