மிட் நைட் எக்சர்சைஸ்!
நானும் தான் தினமும் மூச்சு வாங்க நடக்கிறேன், மிஷினில் ஏறி வெயிட் பார்த்தால், குறையவே மாட்டேங்குதே, நாள் கணக்கில் ஓடியும், ஒரு கிலோ கூட குறைய மாட்டேங்குதே…” என்று மனதுக்குள் புலம்பும் ரகமா நீங்கள்?
அப்படியானால், நீங்கள் உங்கள் எடை குறைய, பணத்தை கண்டபடி யார் யார் சொல் கேட்டோ, செலவழிக்கிறீர்கள் என்று அர்த்தம்? வேண்டாம், பணத்தை கண்டபடி செலவழிப்பதை விடுங்கள்.
அதுபோல, வெயிட் குறைய, தண்ணீர் குடிக்க கூட பயப்படுவீர்களே, சாப்பிடுவதையும் குறைத்து விடுவீர்கள், சில சமயம், உடற்பயிற்சி செய்வதற்காக மணிக்கணக்கில் வயிற்றை காய வைப்பீர்களே, உண்மை தானே. அதையும் முதலில் விடுங்கள்.
நீங்கள் மட்டுமல்ல, உங்களை போன்றவர்களை ஈர்ப்பது, சமீப காலமாக புற்றீசல் போல பரவி உள்ள பல தனியார் உடற்பயிற்சி மையங்கள் மட்டுமல்ல, சில தவறான வழி சொல்லும் “பம்மாத்து” மருத்துவர்களும் தான். ஏதோ, உங்கள் உடல் எடையை இவர்கள் குறைத்து விடுவது போல, ஏதேதோ வழிகளை சொல்லி, உங்களை வேறு வியாதியில் படுக்க வைத்து விடுவர். அதுதான் இப்போது சிலர் வாழ்க்கையில் அனுபவித்த விஷயம்.
இனியாவது நீங்கள் விழித்துக் கொள்ளுங்களேன். முறைப்படி, அங்கீகரிக்கப்பட்ட மையங்களில் மட்டும் வேண்டுமானால், நீங்கள் உடற் பயிற்சி செய்யப் போகலாம். ஆனால், பணத்தை கறக்க வேண்டும் என்று எண்ணும் சில “போலி” ஆட்களின் வலையில் விழுந்து பணத்தை இழந்தும், உடல் எடை குறையாதது மட்டுமல்ல, வேறு உடல் உபாதைகளில் சிக்கி தவிக்க வேண்டாமே.
டாக்டர் சொல்கிறார் என்பதற்காக நீங்கள் நடக்கலாம். ஆனால், அவர் எதற்காக உங்களை நடக்கச் சொல்கிறார் என்பதை அறிந்து, அதற்கு ஏற்ப, அவர் சொல்படி நடக்க வேண்டும். உடல் எடை குறைய வேண்டும் என்றால், கண்டிப்பாக ஒருவர் 45 நிமிடம் உடற்பயிற்சி செய்தே ஆக வேண்டும். அதற்கு முறைப்படி மருத்துவ ரீதியாக உங்களுக்கு ஆலோசனை கூறும் மருத்துவமனைகளை அணுகலாம்.
“எந்த ஒரு உடற்பயிற்சியும் 45 நிமிடத்துக்கு கீழ் என்றால், அது பலனளிக்காது. எந்த உடற்பயிற்சியிலும், முதல் பத்து, பதினைந்து நிமிடத்தில், இருதயத்துடிப்பு நிமிடத்துக்கு 70 – 80 வரை அதிகரிக்கிறது. தசைகளை உடற்பயிற்சிக்கு தயாராக்குகிறது அது. அதே சமயம், கிளைகோஜன் உற்பத்தி பெருகி, பயிற்சி வேகத்தை கூட்டுகிறது. அப்போது தான் அடுத்த 20 முதல் 25 நிமிடம் வரை, கலோரியை குறைக்கும், அதாவது, எடையை குறைக்கும் பயிற்சியில் நீங்கள் நுழைகிறீர்கள். அப்போது தான் எடை குறைய ஆரம்பிக்கும்” என்கிறார் பிரபல உடல்பயிற்சி நிறுவன வி.எல்.சி.சி.,யின் நிபுணர் டாக்டர் அஞ்சு கெய்.
வெயிட் குறைப்பதை பொறுத்தவரை, குறிப்பிட்ட உடற் பயிற்சிகளை செய்ய வேண்டும். அப்படியில்லாமல், ஒரே மாதிரியான உடற்பயிற்சிகள் பயனளிக்காது. அதுபோல, பயிற்சி செய்யும் போது, தண்ணீர் குடிக்கக்கூடாது என்ற தவறான தகவலும் பரப்பப்படுகிறது. அதுவும் தவறு. உடற்பயிற்சிக்கு முன்பும், பயிற்சி செய்யும் போதும், வியர்வை சிந்தி பயிற்சி முடித்த பின்பும் தண்ணீர் குடிக்கலாம் என்பதும் நிபுணர்களின் கருத்து.
இப்போதெல்லாம், சில கோளாறுள்ள நோயாளிகளுக்கு சாப்பாட்டை கூட ஐந்து முறையாக சிறிய அளவில் எடுத்துக்கொள்ளும்படி கூறுகின்றனர் டாக்டர்கள். அதுபோல, உடற்பயிற்சி செய்வோர், அடிக்கடி அதிக பழங்களை எடுத்துக்கொண்டால், நல்லது என்றும் சிலர் கூறுவது சரியல்ல என்கின்றனர். சென்னையில் அப்பல்லோ மருத்துவமனை சார்பிலான “வெல்னஸ் சென்டர்” டாக்டர் புவனேஸ்வரி கூறுகையில்,” உடலில் எனர்ஜி சீராக இருக்க உடற்பயிற்சிக்கு முன்பும், பயிற்சி செய்வதற்கு இடையேயும், முடித்த பின்பும் கூட தண்ணீர் குடிக்கலாம்” என்கிறார்.
சென்னையாவது பரவாயில்லை, ஆனால், மும்பை, டில்லி போன்ற இடங்களில் “மிட்நைட் எக்சர்சைஸ்” என்ற பெயரில் பணக்காரர்களிடம் பணம் பிடுங்குவதும் நடக்கிறது. நள்ளிரவில், அதிகாலையில், உடற்பயிற்சி செய்யும் கொடுமை நடப்பது அறவே சரியில்லை என்று கூறுகின்றனர் நிபுணர்கள்.
“உடற்பயிற்சி செய்ய ஏற்ற நேரம் என்பது பகல் தான். கண்ட கண்ட நேரத்தில் செய்யவே கூடாது. அதனால் எந்த பலனும் ஏற்படாது” என்கிறார் டில்லியை சேர்ந்த நிபுணர் டாக்டர் அனுப் மிஸ்ரா.
– டாக்டர் அஞ்சு கெய்
நன்றி: கூடல்.காம்