போதையில் தள்ளாடும் தமிழகம்!
[ அடுத்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் மக்கள் தொகை பெருமளவு குறைய வாய்ப்புள்ளது. மக்கள் தொகை குறைய காரணம் மது. மதுவால் மக்கள் உயிர் இழப்பதுடன், ஆண்மை தன்மை முற்றிலும் அழிந்து குழந்தை பெற இயலாதவர்களாக மாறிவிடும் சூழ்நிலை உள்ளது. சினிமாவில் மது அருந்தும் காட்சிக்கு தடை விதித்தால் நாட்டுக்கு /வீட்டுக்கு நல்லது. வெறும் எச்சரிக்கை பலகை மட்டும் வைத்து மக்களை திருத்த முடியாது. மது குடிக்கும் எண்ணத்தை உருவாக்கும் திரைப்பட கட்சிகளை அறவே ஒழிக்க வேண்டும். ஏன் என்றால் வன்முறையை விட மோசமானது குடி பழக்கம்.
காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றும் நாமம்(பெயர்) கெடகேடும் நோய். இங்கு நாமம் என்பதற்கு தமிழகம் என்று பொருள் கொள்ள வேண்டும் இளம் பெண்கள் உட்பட்ட அனைவரும் குடித்து மகிழ்கிறார்கள் என்று ஒரு வாசகர் ஆதங்கபடுகிறார். அது மகிழ்ச்சி இல்லை, வருங்கலத்தில் குட்டிசுவறாய் போகும் வழி. ரோம சாம்ராஜ்யத்தின் கடைசி நாட்கள் என் நினைவுக்கு வருகிறது. அமெரிக்க கலாச்சாரத்தை எப்படியாவது இங்கு கொண்டு வந்து நம் நாகரிகத்தை சீரழித்து விடவேண்டும் என்று சிலர் உறுதி மொழி பூண்டிருப்பார் போல தெரிகிறது.
கிராமப்புறங்களில் இளம் விதவைகள்; பிழைக்க நாதியற்ற அவர்களுக்கு குழந்தைகள். பல சமயங்களில் கண்கள் கலங்கி இருக்கிறேன். விடியற்காலையில் ஒரு வித தவிப்புடன் குடிக்கப் போவோரை வீதிகளில் காணும் போது வருந்துகிறேன். நண்பகலில் மதிய உணவு வேளையில் டாஸ்மாக்கில் காணும் கூட்டத்தைப் பார்க்கும் போது அவர்தம் பரிதாபத்துக்குரிய குடும்பம் நினைவுக்கு வருகிறது. கல்யாண விருந்திலும் குடியோடு முடிக்கும் கலாச்சாரம் மகா அபத்தம். நாளைய தமிழகம் நினைத்தாலே கசக்கிறது..
கஜானா ரொம்பினால்தான் பல திட்டம் தீட்டி percentage போட்டு சுருட்ட முடியும். கூவம் சுத்தம் செய்ய கூட பல ஆயிரம் கோடி ஒதுக்கி வித்தை செய்யலாம். எல்லாம் சுயநலம். அதன் விளைவு கொடூரம் . தயவு செய்து டாஸ்மாக்கை ஒழிக்க முயல வேண்டும். மது அருந்துவது பஞ்சமா பாதகம் இல்லையா? அரசாங்கமே மக்களை குற்றம் செய்ய ஊக்கப்படுத்துகிறதா? நல்லா குடி, பிறரையும் குடிக்க விடு என்பது அரசின் கொள்கை போல உள்ளதே சில கல்லூரி மாணவர்கள் ஆட்டோவில் சென்று சாக்குப்பையில் சரக்கை வாங்கி செல்கிறார்கள் – தினமணி வாசகர்கள்.]
இது எங்கே போய் முடியும்…?
ப. இசக்கி
இது ஒன்றும் புதிய செய்தி அல்ல பலரும், பல முறை எழுதியாகி விட்டது, பலரும் பல முறை பேசியாகி விட்டது. ஆன்மிக வாதிகள் முதல் அரசியல் வாதிகள் வரை பலரும் பல மேடைகளில் குரல் எழுப்பியாகி விட்டது. ஆனாலும் எழுதாமல் இருக்க முடியவில்லை, பேசாமல் இருக்கவும் முடியாது. காரணம், பலரும், பல முறை பேசியும், எழுதியும் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே செல்கிறது.
என்ன, உளறிக் கொட்டுவது போன்று தோன்றுகிறதா? பாழாய் போன மதுபானத்தை மூக்குமுட்டக் குடித்தால்தான் உளறல் வருமா என்ன? அது ஏற்படுத்தும் கொடுமையை நினைத்தாலே மனம் பதறுகிறது, நாக்கு சுழல மறுக்கிறது, வாய் உளறுவது போன்றுதான் தோன்றுகிறது.
காந்தி பிறந்த இந்த நன்னாட்டில் வாய்மை பெருக்கெடுத்து ஓட வேண்டும். மாறாக தமிழக வீதிகளில் மதுபானம் பெருக்கெடுத்து ஓடுகிறது. உளறல் ஓசை ஊரையே கூட்டுகிறது. வீதிக்கு வீதி கல்விச் சாலைகளை திறக்க வேண்டிய அரசு மதுக் கடைகளையும், மதுபானக் கூடங்களையும் திறந்து வைத்துக் கொண்டு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது.
கடந்த 2003 வரையில் தனியார் நடத்திக் கொண்டிருந்த மதுபானக் கடையை பின்னர் அரசே ஏற்று நடத்தியது. அன்று மாநிலம் முழுவதும் 7,200 கடைகள். அரசுக்கு ஆண்டு வருவாய் சுமார் ரூ. 3,550 கோடி. இன்றைய கடைகளின் எண்ணிக்கை சுமார் 6,700. ஆனால் வருவாய் சுமார் ரூ. 18 ஆயிரம் கோடி.
தமிழக அரசுக்குக் கணிசமான அளவில் வருவாயைத் தரும் வணிக வரி, விற்பனை வரி, பத்திரப் பதிவு போன்ற முக்கிய வருவாய் இனங்களில் முதலிடத்தைப் பெறுவது இந்த மதுபான வருமானமாகத்தான் இருக்கும். அரசு பொதுமக்களுக்கு வழங்கும் விலையிந்ல்லா அன்பளிப்புகளுக்கு நிதியை அள்ளி அள்ளித் தருவது இந்த மதுபான விற்பனை என்றால் அது மிகையில்லை.
சரி, இது ஒரு புறம் இருக்கட்டும். இந்த இதற்கு வாரி வழங்குபவர்கள் ஏழை கூலித் தொழிலாளி முதல் மாடி வீடுகளில் வசிக்கும் பணம் படைத்தவர்கள்தான். அவர்களிடமே கறந்து அவர்களுக்கே கொடுப்பதால் அதுவும் ஓர் சுழற்சிதான் என்று வாதம் செய்யலாம். அந்த சுழற்சி ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்துதான் கவலை கொள்ள வேண்டியதாக இருக்கிறது.
முன்பெல்லாம் என்றாவது ஒரு நாள் மறைந்து, ஒளிந்து போதை ஏற்றிக் கொண்டவர்கள் எல்லாம் இப்போது வீதிக்கு வீதி மதுபானக் கடை வந்து விட்டதால் அச்சம் மறந்து விருப்பம் போல அருந்தி மகிழ்கின்றனர். கால்யாண வீடு என்றாலும் மது விருந்துதான், இழவு வீடு என்றாலும் மது விருந்துதான். மகிழ்ச்சியானதும், துக்கம் ஆனாலும் பிரதான பானம் மதுதான் என்றாகி விட்ட காலம் இது.
சரி, பெரியவர்கள் மட்டும்தானா பள்ளி, கல்லூரி மாணவர்களும் இப்போது அரசின் அட்சய பாத்திரத்துக்கு வாரி வழங்க வரிசையில் நிற்கின்றனர்.
அரசின் மதுபானக் கடைக்கும், அதனை ஒட்டியுள்ள மதுபானக் கூடத்திற்குச் செல்லும் கல்லூரி மாணவர்கள், கழுத்தில் தொங்கும் அடையாள அட்டையைக் கூட அசட்டை செய்துவிட்டு பிடித்த பிராண்டை பெயர் சொல்லிக் கேட்கின்றனர். அப்போதைய தேவைக்குப் போக, அடுத்த நாள் தேவைக்கும் இரண்டு பாட்டில்களை வாங்கிக் கால்சட்டைப் பையில் அங்கொன்றும், இங்கொன்றுமாகத் திணித்துக் கொள்கின்றனர்.
முழுக் கால் சட்டை அணிந்த இளைஞர்கள்தான் அப்படி என எண்ண வேண்டாம். பள்ளிச் சீருடையிலேயே சென்று சரக்கு வாங்கிக் கொள்ளும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அது எப்படி? முதலில் குடிகார அப்பாவின் நச்சரிப்பால் அவருக்கு வாங்கிக் கொடுத்த பழக்கம். அடுத்து, நகரத்திற்குச் சென்று வாங்கி வர முடியாத உள்ளூர் அண்ணன்மார்களுக்கு வாங்கிக் கொடுத்த பழக்கம். அப்படியும், இப்படியுமாக அந்தப் பழக்கம் அரைக்கால் சட்டை அணிந்த மாணவர்களையும் தொற்றிக் கொள்கிறது. இப்படி பாழாய் போகிறது இந்த மாணவர் உலகம். வீடுகளில் ஒதுக்குப்பற அறையில் குடும்பத்தின் ஆண்கள் ஒன்றாக அமர்ந்து மதுபானம் அருந்துவது உண்டு. ஆனால் இப்போது நட்சத்திர விடுதிகளின் மதுபானக் கூடங்களில் ஆண், பெண் உறுப்பினர்கள் மட்டுமின்றி இளைஞர்களும், இளம் பெண்களும் கூட குடும்பத்துடன் மதுபானம், குறிப்பாக பீர் அருந்துவது என்பது சகஜமான ஒன்றாகி வருவதை அங்கு ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகளே கண்டு அதிர்ச்சி அடையும் சூழ்நிலை உள்ளது.
மற்ற மதுபானங்களை விட பீரில் குறைந்த அளவே ஆல்கஹால் உள்ளது என்பதால் அதை ஒரு நாகரிகமான பானமாகக் கருதி குடும்பத்துடன் அருந்தும் போக்கு அதிகரித்து வருகிறது. மதுப் பழக்கம் முதலில் பீரில்தான் தொடங்கும் என்பதை அவர்களுக்கு யார் சொல்வது? இது எங்கே போய் முடியப் போகிறதோ?
பிரச்னை இத்துடன் முடிகிறதா அதுதான் இல்லை. மதுவுக்கு அடிமையாகி வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு உண்டாக்குபவர்களைத் தண்டிக்க வேண்டிய அரசு அவர்களுக்கு மேலும், மேலும் வசதிகளைச் செய்து கொடுப்பதுதான் இன்னும் வேதனை.
ஓலை கொட்டகைக்கு கீழே அமர்ந்து சரக்கு அடிக்கும் ஏழைத் தொழிலாளியுடன், காரில் வந்து இறங்கும் பணம் படைத்தவர் அமருவாரா? அதற்குதான் எலைட் பார். அங்கு வசதியும் அதிகம், மதுபானத்திற்குக் காசும் அதிகம். அதனால் அரசுக்கு வருமானமும் அதிகம். அதன்மூலம் விலையில்லா பொருள்களை வாரி வழங்கவும் முடியும். அப்படி போகிறது கதை. நிலைமை கைமீறிச் செல்வது நான்றாகவே தெரிகிறது. கடவுள்தான் காப்பாற்ற வேண்டும்!
மதுவுக்கு அடிமையாகி வீட்டுக்கும்,
நாட்டுக்கும் கேடு உண்டாக்குபவர்களைத்
தண்டிக்க வேண்டிய அரசு அவர்களுக்கு மேலும்,
மேலும் வசதிகளைச் செய்து கொடுப்பதுதான் வேதனை.
நன்றி: தினமணி