சாதனைகளா? வேதனைகளா?
இப்போது சாதனைகள் என்று கூறப்படும் எல்லாமும் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் “காமெடியாக’வே படுகின்றன.
சிலர் கிலோ கணக்கில் பச்சை மிளகாய் தின்கிறார்கள். ஏன் தின்ன வேண்டும்? அதனால் என்ன பயன்? கண்கள் எரிய எரிய, ஆனால், பார்வையாளர்களிடம் சிரித்துக் கொண்டே… அடடா. ஏனப்பா இந்த வேலை?
அப்புறம், முகத்தில் ஓர் இடம் பாக்கியில்லாமல் “கிளிப்பை’ மாட்டிக் கொள்கிறார்கள். அதிக “கிளிப்’ மாட்டிக் கொண்டவர் சாதனை படைத்தவராம். முந்தைய உலக சாதனையை முறியடிக்கிறார்களாம்.
ஏதாவதொரு பொருளை விழாமல் இறுகப் பற்றி வைக்கப் பயன்படும் “கிளிப்’பை முகம் முழுவதும் மாட்டிக் கொள்வதால் பயன் என்னவோ?
குடிக்கப் பயன்படும் உறிஞ்சியை (ஸ்டிரா) நூற்றுக்கணக்கில் ஒட்டுமொத்தமாக வாயில் திணித்துக் கொள்கிறார்கள்.
கிட்டத்தட்ட வாய் கிழிந்துவிடும் போலிருக்கிறது. இப்படித் திணிக்கக் கூடிய இடமா வாய்?
ஒவ்வொன்றாகப் பயன்படுத்த வேண்டிய பொருளை ஒட்டுமொத்தமாக இப்படித் திணித்து அதிலென்ன சாதனை இருக்கிறதோ தெரியவில்லை.
பரிசு பெறுகிறார்கள், பாராட்டப் பெறுகிறார்கள்! சில மேடைகளில் முற்போக்காளர்களும் இவர்களைப் பாராட்டுகிறார்கள்.
இளம் சாதனையாளர்கள் எல்லாம் தங்களின் நோக்கம், செயல் ஒழுங்குபடுத்தாததால் வீணர்களாக மாறிப் போவதுதான் நிஜமாகத் தெரிகிறது. இளம் இசைக் கலைஞர்கள் பெரும்பாலும், 24 மணி நேரம் – 48 மணி நேரம் இசைப்பது, உணவுகூட இல்லாமல் இசைப்பது போன்ற சாதனையைச் செய்ய முற்படுகின்றனர்.
புதிதுபுதிதாக ஏதாவது இசைக்க முற்பட்டு அதில் சாதனை புரிவது, இடையறாது உழைத்து சாதனை புரிவது என்ற இலக்குகள் மாறி, ஒரு மண்டபத்தைப் பிடித்துக் கொண்டு, விடியவிடிய வாசிக்கிறார்கள். அவற்றை விடியோ எடுக்கிறார்கள், படம் எடுக்கிறார்கள், பிறகு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறுகிறார்கள்.
அதைத் தவிர அதில் முன்னேற்றம் என்ன? மீண்டும் ஏற்கெனவே செய்த சாதனையை முறியடித்தார் என்று சொல்கிறார்கள். இவற்றால் என்ன பயன்?
ஏதாவதொரு முதியோர் இல்லம், ஆதரவற்றோர் இல்லம் போன்ற இடங்களுக்குச் சென்று 10 நிமிஷம் வாசித்தால்கூட கேட்பவர்களுக்கு ஆறுதலாகவாவது இருக்கும். கரப்பான் பூச்சிகளை, பல்லிகளை இன்னும் என்னென்னவற்றையோ நூற்றுக்கணக்கில் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவதை தொலைக்காட்சிகளில் காட்டுகிறார்கள். அதுகூட அந்தத் தொலைக்காட்சிகளின் வருமானத்துக்காக அவர்கள் செய்யும் சாகசம் என்று (இதுவும் தவறுதான்!) ஒரு காரணமாவது சொல்லிக் கொள்ளலாம்.
சாதனைகள் என்பது தொடர்பான விதிமுறைகளை முறைப்படுத்தி அதைப் பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். அந்தச் சாதனையால் யாருக்கேனும் ஏதாவது பயன் இருக்க வேண்டும்.
சாதனைகளில் ஏதாவது ஒரு கிடுக்கிப்பிடியை – சமூகத்துக்கு ஏதாவது பயன்படும் ஓர் அம்சத்தைச் சேர்க்க வேண்டும். இல்லாவிட்டால், சாதனைகள் என்று கூறப்படுபவை எல்லாம், யோசிக்க யோசிக்க வேதனைகளாகத்தான் இருக்கும் என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது.
– சா. ஜெயப்பிரகாஷ்
நன்றி: தினமணி