நீங்கள் திருமணமானவரா? திருமணமாகப்போகிறவரா? உங்களுக்காகத்தான்….!
பெண் ஒரு பொக்கிஷம்
[ கணவன்மார்களே! உங்கள் மனைவி நல்லவளோ, கெட்டவளோ, ஏழையோ, பணக்காரியோ, அழகியோ, குரூபியோ அவள் எப்படிப்பட்டவளாய் இருந்தாலும் அவளை உங்கள்பால் அன்பும், அக்கரையும் கொண்டவளாக மாற்றி விடுங்கள். இது உங்கள் தலையாய பணி. மனைவியின் இதயத்தில் நீங்கள் இடம்பெற்று விட்டீர்களென்றால், அது ஒன்றே போதும். மற்ற நலன்கள் யாவும் தன்னாலேயே உங்களை வந்தடையும்.
அன்பு ஒன்றினால்தான் மனிதன் முழு மனிதனாகின்றான். அவனது உள்ளத்தின் ஆழத்திலே புதைந்து கிடக்கின்ற நீண்ட ஆசைகளை, தேவைகளை நிறைவேற்றக் கூடியது அன்பு மட்டுமே.
பெண்ணின் அன்பு இருக்கிறதே, அதன் பரிமாணங்கள் அளவிடற்கரியவை. பெண்ணின் அன்பு ஒரு சஞ்சீவி மருந்து. இல்லறத்தின் இன்னல்கள் யாவற்றையும் தீர்க்கக்கூடிய மருந்து ஒன்று உண்டென்றால், அது அன்புடைய மனைவி மட்டுமே!
தெரிந்து கொள்ளுங்கள் – அன்பு ஒன்றுதான் அன்பைக் கொண்டு வரும். முதலில் உங்கள் மனைவியை நீங்கள் நேசியுங்கள். உள்ளது உள்ளவாறு அவளை நேசியுங்கள். அவளது உணர்வுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து அவளது தேவைகளுக்கு உகந்த கவனம் தந்து அவலது சிரமங்களைப் புரிந்து கொண்டவராய் அவளை அவளுக்காகவே நேசியுங்கள்.
நீங்கள் உங்கள் மனைவியின்பால் ஒரு மடங்கு அன்பைக் காட்டினீர்கள் என்றால் அவள் உங்கள்பால் நூறு மடங்கு அன்பைப் பொழிவாள். பெண்மைக்கே உள்ள இந்த தாராள மனப்பான்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். பல இல்லங்களில். மனைவியின் காதலுணர்வு விளக்கமில்லாமலேயே வீணாகின்றன. நம்மில் பலர், இறைவன் அளித்துள்ள மகத்தான மனைவி எனும் பொக்கிஷத்தின் மதிப்பை உணராதவர்களாகவே வாழ்ந்து மடிகிறார்கள். இது மிகப்பெரும் கைசேதமல்லவா? சிந்தியுங்கள்! – adm. nidur.info ]
பெண் ஒரு பொக்கிஷம்
இயற்கை அமைப்பிலே பெண்கள் மிக மென்மையானவர்கள். தோற்றத்தின் மென்மையைப் போலவே, உள்ளமும் மென்மை வய்ந்தது. அவர்கள் இதயம் மலரினும் மென்மை உடையது. அன்பு, ஆதரிப்பு, பராமரிப்பு இவையே பெண்ணுக்குரிய வேலைகளாக உள்ளன. இவற்றில் அவள் பெற்ற திறமையை வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் காணலாம். பெண்ணின் மனமும் செயலும், மலரும் மணமும் போலப் பிரிக்க முடியாதபடி ஒன்றாகிவிட்டன.
பெண்களிடம் தாய்மை உணர்ச்சி உண்டு. அந்தச் செயலால் ஆண்கள் வளர்கிறார்கள். அடுத்தாற் போல் இங்கிதம். இங்கிதம் என்பது பெண்களுடன் கூடப்பிறந்த பொக்கிஷமாகும். அவர்களின் உள்ளத்திலே இங்கிதம், பேச்சிலே இனிமை, நடையிலே நளினம், தோற்றத்திலே அழகு – இவை அத்தனையும் பெண்களிடம் உள்ள கலைச் செல்வங்கள். இப்படியொரு அற்புதமான படைப்பை ஆணுக்குத்துணையாகப் படைத்தானே அந்த ஏக இறைவனுக்கு வாழ்நாள் முழுக்க ஆண்வர்க்கம் நன்றி சொன்னாலும் போதாது. (ஆனால் அவர்களில் பலரோ நன்றியிலும் நன்றி கெட்டவர்களாக இறைவன் அளித்துள்ள மகத்தான அந்த பொக்கிஷத்தின் மதிப்பை உணராதவர்களாகவே வாழ்ந்து மடிகிறார்கள்!)
கணவனுக்கு காதல் புரிவது என்பது அவன் வாழ்வில் ஒரு பகுதியே! ஆனால், மனைவிக்கோ வாழ்வு முழுவதும் அதுதான். இன்சொல்லோடு கணவனுடைய கொஞ்சுதலும் கெஞ்சுதலும் மனைவியை இன்பலாகிரியில் ஆழ்த்திவிடும்.
பெண்களை (-மனைவியை) இன்ப ஊற்றாகவே மதிக்கலாம். அதில் தவறு ஒன்றுமில்லை. வெறும் உயிரற்ற பொருளாகக் கருதி அலட்சியப்படுத்தக்கூடாது. மனைவியுடன் பேசும்போது கண்களைக்கூர்மையாக சந்தித்துப் பேச வேண்டும். அதுதான் ரசிப்புத்தன்மை. பெண்களின் அன்பும், அரவனைப்பும் ஆண்களின் கண்களில் பிரதிபலிப்பதைக் காணலாம். பல இல்லங்களில். மனைவியின் காதலுணர்வு விளக்கமில்லாமலேயே வீணாகின்றன.
கணவன்மார்களே! உங்கள் மனைவி நல்லவளோ, கெட்டவளோ, ஏழையோ, பணக்காரியோ, அழகியோ, குரூபியோ அவள் எப்படிப்பட்டவளாய் இருந்தாலும் அவளை உங்கள்பால் அன்பும், அக்கரையும் கொண்டவளாக மாற்றி விடுங்கள். இது உங்கள் தலையாய பணி. மனைவியின் இதயத்தில் நீங்கள் இடம்பெற்று விட்டீர்களென்றால், அது ஒன்றே போதும். மற்ற நலன்கள் யாவும் தன்னாலேயே உங்களை வந்தடையும்.
அன்பு ஒன்றினால்தான் மனிதன் முழு மனிதனாகின்றான். அவனது உள்ளத்தின் ஆழத்திலே புதைந்து கிடக்கின்ற நீண்ட ஆசைகளை, தேவைகளை நிறைவேற்றக் கூடியது அன்பு மட்டுமே.
இல்லற வாழ்விலே, நிறைவை – வெற்றியை – சந்தோஷத்தை அடைய விரும்பும் தம்பதியர் முதலில் தம் வசமாக்கிக் கொள்ள வேண்டியது களங்கமற்ற காதலை மட்டுமே. அதுவும் பெண்ணின் அன்பு இருக்கிறதே, அதன் பரிமாணங்கள் அளவிடற்கரியவை. பெண்ணின் அன்பு ஒரு சஞ்சீவி மருந்து. இல்லறத்தின் இன்னல்கள் யாவற்றையும் தீர்க்கக்கூடிய மருந்து ஒன்று உண்டென்றால், அது அன்புடைய மனைவி மட்டுமே!
தெரிந்து கொள்ளுங்கள் – அன்பு ஒன்றுதான் அன்பைக்கொண்டு வரும். முதலில் உங்கள் மனைவியை நீங்கள் நேசியுங்கள். உள்ளது உள்ளவாறு அவளை நேசியுங்கள். அவளது உணர்வுகளுக்கு உரிய முக்கியத்துவம் கொடுத்து அவளது தேவைகளுக்கு உகந்த கவனம் தந்து அவலது சிரமங்களைப் புரிந்து கொண்டவராய் அவளை அவளுக்காகவே நேசியுங்கள்.
நீங்கள் உங்கள் மனைவியின்பால் ஒரு மடங்கு அன்பைக் காட்டினீர்கள் என்றால் அவள் உங்கள்பால் நூறு மடங்கு அன்பைப் பொழிவாள். பெண்மைக்கே உள்ள இந்த தாராள மனப்பான்மையை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
மனைவியை நேசிப்பது என்றால், “I LOVE YOU, I LOVE YOU” என்று அவளிடம் போய் ஒப்பிப்பதல்ல. உங்கள் அன்பு, நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் வெளிப்பட வேண்டும். உங்களது பார்வையில் அது பிரதிபலிக்க வேண்டும். மிகக் குறிப்பாக, திருமணமான புதிதிலே, பெண்ணுக்கு இத்தகையதோர் அன்பும், கவனிப்பும், கரிசனமும் மிக அதிகமாகத் தேவைப்படுகின்றன.
திருமணமான உடனேயே மனைவியானவள் அனைத்தையும் துறந்துவிட்டு, தனக்கு சேவகம் செய்யத் துவங்க வேண்டும் என்று, பல கணவன்மார்கள் நினைக்கின்றனர். இது பைத்தியக்காரத்தனம்.
தாய் அல்லது சகோதரிகளின் பேச்சைக்கேட்டுக் கொண்டு, வேண்டாத சட்ட திட்டங்களை மனைவியின் மீது திணிப்பது, அடக்குமுறைகளைக் கையாண்டு ஆர்ப்பாட்டம் செய்வது போன்றவை அநாகரிகமானவை மட்டுமல்ல, அவற்றால் பயன் விளையாது. மாறாக பாதகங்கள் மட்டுமே எழும்.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமுள்ள “அன்யோன்யம்” உங்கள் இருவரால் மட்டுமே முடிவு செய்யப்படுவதாக இருக்கட்டும். தேவையற்ற குறுக்கீடுகளைத் தடுத்து வெளியேற்றி, நீங்கள் இருவரும் நிறைய மனம் விட்டுப்பேசி, ஒருவர் மற்றவர்பால் உள்ளத்தால் நெருங்கிவரும் சாதகமான சூழ்நிலைகளை நீங்கள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
கல்யாணமான புதிதிலே, தனது பெற்றோர் மீதும், உடன் பிறந்தோர் மீதும், மனைவி எண்ணமிட்டபடி இருப்பதும், பிறந்த வீட்டுக்குச் சென்றுவர அவள் அடிக்கடி விருப்பம் தெரிவிப்பதும் மிகவும் இயற்கை. இதில் தவறேதுமில்லை. சொல்லப்போனால், இயற்கையின் கட்டாயத் தேவையே. ஏனெனில், உயிர் வாழ்க்கை வளமானதாக அமைய வேண்டும் என்பதற்காகத்தான் “இரத்தப் பாசத்தை” பெண்களுக்குக் கொஞ்சம் அதிகமாகவே இறைவன் வழங்கியிருக்கின்றான்.
பிறந்த வீட்டின்பால் மனைவிக்கு ஏற்படும் நாட்டம் வெகு பல குடும்பங்களில் பெரிதுபடுத்தப்பட்டு, விகாரப் படுத்தப்படுகிறது. இது சரியன்று, முறையன்று. பிறந்த வீட்டுக்குச் சென்றுவர மனைவியை அனுமதிப்பதால் தீமை எழுவதில்லை. மாறாக நன்மை மட்டுமே விளைகின்றன.
உங்கள் மனைவி எனும் அந்தஸ்தோடு பிறந்த வீட்டுக்குச் சென்று வரும்போது அவளுக்குள் இரட்டிப்பு பலமும் சந்தோஷமும் எழுகின்றன. அவளுடைய மனதில் உள்ள இறுக்கம் யாவும் தளர்ந்து விலகுகின்றன. அவளுக்குள்ளே மன ஆரோக்கியம் வளரத் தொடங்குகின்றன. அவளுடைய நியாயமான – அடிப்படையான – அதுவும் இயற்கையான உணர்வுகளை நீங்கள் மதிக்கிறீர்கள் என்பதை அவள் உணர்ந்து கொள்கிறாள். அதலால், அவளுடைய உள்ளத்தில் உங்களைப்பற்றிய “நல்லபிப்ராயம்” கிடு கிடுவென உயர்கிறது.
உங்களை உயர்வாக மதிக்கத் துவங்குகிறாள். நன்றி பாராட்டத் தலைப்படுகிறாள். நீங்கள் அறியாமலேயே அவள் உங்களை மிகவும் நெருங்கி வந்து விடுகிறாள். (இதை பல ஆண்கள் உணர்வதே இல்லை.)
பிறந்த வீட்டுக்குச் சென்று வர அவளை சுதந்திரமாக அனுமதித்தீர்களெனில், இந்த அனுமதி ஏற்படுத்தும் அதிசயத்தை நீங்கள் கண்கூடாகக் காண முடியும். ஓரிரு மாதங்களிலேயே இந்த அதிசயம் நிகழ்ந்துவிடும். பிறந்த வீட்டின்பால் அவளுக்குள்ள நாட்டம் தன்னாலேயே குறைந்துவிடும். அடிக்கடி செல்ல மாட்டாள். சென்றாலும், “அவர் காத்துக்கொண்டிருப்பார் – எதிர்பார்த்துக்கொண்டிருப்பார் – கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்” என்றே புலம்பிக் கொண்டிருப்பாள். போனேன் வந்தேன் என்று சுருக்கென்று கிளம்பி வந்து விடுவாள். தனக்கு எல்லாமே தன் கணவன் தான் என்பதை அவள் மனம் முழுமையாக ஏற்றுக்கொண்டிருக்கும். எனவே தடைகளை ஏற்படுத்தி மனைவியைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிப்பது அறிவீனமே!
மனைவிக்கு நீங்கள் அளிக்கும் சிறிதளவேயான சுதந்திரமானது, எல்லையற்ற இல்லற சுதந்திரத்தை – இன்பத்தை உங்களுக்கு வாரி வழங்கப்போகிறது என்பதை நீங்கள் வெகு விரைவில் புரிந்து கொள்வீர்கள்.