பெண்களின் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகள்!
டாக்டர் கே.எஸ்.ஜெயராணி
பெண்களின் உடலில் இருக்கும் உறுப்புகளில் அவர்களின் அதிக கவனிப்பிற்குரிய உறுப்பாக இருப்பவை, மார்பகங்கள். இவை, பலருக்கு கவலைக்குரிய உறுப்பாகவும் இருக்கிறது. டீன்ஏஜ் பெண்கள் என்றால், ‘சிறிதாக இருக்கிறது என்றும், ஒன்றுக்கொன்று அளவில் மாறுபாடு இருக்கிறதென்றும்’ நினைக்கிறார்கள். திருமணமான பெண்கள் என்றால், ‘சரிந்து, தொங்கி காணப்படுகிறது’ என்று கவலைப்படுகிறார்கள். பெண்களின் இத்தகைய கவலைகள் நீங்க வேண்டுமானால் அவர்கள் மார்பகங்கள் பற்றிய உடலியல் உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
மார்பகங்கள் என்பவை கொழுப்பு திசுக்களால் சூழப்பட்ட பால் சுரப்பு நாளங்களை உள்ளடக்கியவை. செடியைப் பிடுங்கிப் பார்த்தால், அதன் அடியில் எவ்வாறு பல கிளைகளாக வேர்கள் பரவிச் செல்லுமோ அதைப் போன்றுதான் மார்பகக் காம்பின் அடிப்பகுதியில் பெரிதும், சிறிதுமாக எண்ணற்ற பல கிளை நாளங்கள் உள்ளன. இவற்றை சூழ்ந்துதான் மார்பகத் தசை பெருகும்.
மார்பகங்களில் இருக்கும் கொழுப்பை பொறுத்துதான் அதன் அளவும், வடிவமும் அமைகிறது. மார்பகம் பெரிதாக இருந்தால் அதில் அவரது குழந்தைக்காக நிறைய பால் சுரக்கும் என்பதும், மார்பகம் சிறியதாக இருந்தால் குறைந்த அளவே பால் சுரக்கும் என்பதும் தவறானது. மார்பக அளவிற்கும், சுரக்கும் பாலின் அளவிற்கும் சம்பந்தம் இல்லை.
டீன்ஏஜ் பெண்களில் பலர் தங்களது மார்பகங்களில் ஒன்று சிறியதாகவும், இன்னொன்று பெரியதாகவும் இருப்பதாக கருதுகிறார்கள். அது உண்மைதான். நமது கைகளோ, கால்களோ, கண் புருவங்களோகூட இரண்டும் ஒரே அளவில் இருப்பதில்லை. அதுபோலவே மார்பகங்களிலும் லேசான அளவு வித்தியாசம் இருக்கவே செய்யும். அதற்கு காரணம், இரண்டு மார்பகங்களும் ஒரே நேரத்தில் சமமாக வளர்வதில்லை. ஒரு மார்பகம் வளரத் தொடங்கும் காலகட்டத்தில் இன்னொரு மார்பகம் வளர்ச்சியை நிறைவு செய்திருக்கும். அதனால்தான் இந்த சிறிய வித்தியாசம். இதற்கு போய் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை. அளவு, வடிவத்தில் பெரிய அளவில் வித்தியாசம் இருந்தால் மட்டும் டாக்டரை அணுகி ஆலோசனை பெறவேண்டும்.
பொதுவாக இரண்டு மார்பகங்களும் சிறிதாக இருந்தால், அதை பெரிதாக்க ஏதேனும் வழி முறை இருக்கிறதா என்று பல பெண்கள் கேட்கிறார்கள். மார்பகங்கள் கொழுப்பு தசைகளால் ஆனவை என்பதால், நிறைய சத்துணவு சாப்பிட்டால் இயற்கையாகவே அவை பெரிதாக வாய்ப்பிருக்கிறது. விசேஷ பயிற்சிகள் செய்து மார்பகங்களை பெரிதாக்க முடியாது. ஏனென்றால் அதற்கான தனி தசைகள் எதுவும் மார்பகத்தில் இல்லை.
ஹார்மோன் மருந்து மாத்திரைகளால் மார்பகங்களை பெரிதாக்க முடியும். ஆனால் அவை அளவுக்கு மீறி பெருத்து விடும். வலி வரக்கூடும். சீரான அளவில் மார்பகங்கள் இருப்பதுதான் அழகு. சில பெண்கள் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் மார்பகங்களை பெரிதாக்கிக் கொள்கிறார்கள். இந்த அறுவை சிகிச்சையின்போது மார்பகத்தின் அடிப்பகுதியில் திறப்பை உருவாக்கி, அதன் வழியாக சிலிக்கான் பையை செலுத்தி உள்ளே வைத்து தைத்து விடுவார்கள். அதனால் மார்பகங்கள் தொய்வின்றியும், பெரிதாகவும் காணப்படும். ஆனால் குழந்தைகளுக்கு பாலூட்ட முடியாது.
இயற்கையாகவே மார்பகங்கள் பெரிதாக அமையப்பெற்ற பெண்கள், அதனால் பெரும் அவஸ்தைப்படுவதுண்டு. சிறிதாக்க வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். சிறிதாக்கும் அறுவை சிகிச்சைகள் உள்ளன. முதுகுவலியை உருவாக்கும் அளவிற்கு மார்பகங்கள் பெரிதாக இருந்தால், சிறிதாக்கும் முயற்சியில் ஈடுபடலாம். இல்லாவிட்டால் பொருத்தமான பிராக்களை அணிந்து, அவஸ்தைகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.
இளம் பெண்களில் பலரும் மார்பகங்கள் விரைத்த நிலையிலே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அவர்களின் விருப்பத்திற்கு மாறாக அவை கீழ் நோக்கி சரிந்து விடுகின்றன. கொழுப்பு அடிப்பகுதியில் சேருவதால்தான் மார்பகங்கள் கீழ்நோக்கி இழுக்கப்பட்டு சரிகின்றன. காம்புகள் மேல் நோக்கி நிற்கும் அளவிற்கு தோன்றினால், அது சரியாத விரைப்பு மார்பகமாய் காட்சியளிக்கும். மாடலிங் தொழில் செய்யும் பெண்கள் பொதுவாக தங்கள் கைகளை தூக்கியவாறும், தோள்பட்டையை பின்னோக்கி இழுத்த நிலையிலும் காட்சி தருவார்கள். அதற்கு காரணம், அவர்கள் மார்பகங்கள் விரைத்த நிலையில் சரியாமல் காட்சி தரவேண்டும் என்பதுதான்!
‘சில மாடல் அழகிகளின் போட்டோக்களை பார்க்கும்போது அவர்களது மார்பக காம்புகள் விரைப்பாக இருக்கிறதே, எங்களுக்கு அப்படியில்லையே’ என்று சில பெண்கள் கேட்கிறார்கள். அந்த போட்டோக்கள் எடுக்கப்படுவதற்கு முன்பு மாடல் அழகிகள் காம்புகளில் ஐஸ் துண்டுகளை வைத்து விடுவார்கள். குளிரில் அது சுருங்கி, விரைத்து நிற்கும். அந்த விரைப்பு அதிக நேரம் நிலைக்காது. மார்பகங்கள் தாய்மையின் சின்னங்கள். அதனால் அவை ஆரோக்கியமாய் பராமரிக்கத் தகுந்தவை.
நன்றி: கூடல்.காம்