பால்குடி உறவின் காரணமாக கணவன், மனைவியிடையே பிரிவு ஏற்படுதல்
கணவனும் மனைவியும் பால்குடி உறவினால் சகோதர, சகோதரி என்பது தெரிய வந்தால் திருமண உடன்படிக்கை “பஸ்க்” ஆகி (முறிந்து) விடும். இதற்கு பின்வரும் அல்குர்ஆன் வசனம் ஆதாரமாக விளங்குகின்றது.
“உங்களுக்கு (மணமுடிக்க) விலக்கப்பட்டவர்கள் உங்கள் தாய்மார்களும், உங்கள் புதல்வியரும், உங்கள் சகோதரிகளும், உங்கள் தந்தையின் சகோதரிகளும், உங்கள் தாயின் சகோதரிகளும், உங்கள் சகோதரனின் புதல்வியரும், உங்கள் சகோதரியின் புதல்வியரும், உங்களுக்குப் பாலூட்டிய (செவிலித்) தாய்மார்களும், உங்கள் பால்குடி சகோதரிகளும், உங்கள் மனைவியரின் தாய்மார்களும் ஆவார்கள்.
அவ்வாறே, நீங்கள் ஒரு பெண்ணை விவாகம் செய்து அவளுடன் நீங்கள் சேர்ந்துவிட்டால், அவளுடைய முந்திய கணவனுக்குப் பிறந்த உங்கள் கண்காணிப்பில் இருக்கும் மகளை நீங்கள் திருமணம் செய்யக்கூடாது. ஆனால் நீங்கள் ஒரு பெண்ணை மணந்த பின்னர், அவளுடன் வீடு கூடாமலிருந்தால் (அவளை விலக்கி அவளுக்கு முந்திய கணவனால் பிறந்த பெண்ணை விவாகம் செய்து கொள்வதில்) உங்கள் மீது குற்றமில்லை.
உங்களுக்குப் பிறந்த ஆண்மக்களின் மனைவியரையும் நீங்கள் விவாகம் செய்து கொள்ளக்கூடாது. இரண்டு சகோதரிகளை (ஒரே காலத்தில் மனைவியராக) ஒன்று சேர்ப்பது விலக்கப்பட்டது – இதற்கு முன் நடந்து விட்டவை தவிர (அவை அறியாமையினால் நடந்து விட்டமையால்) நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்போனும், கருணையுடையோனுமாக இருக்கின்றான்” (4 : 23)
இந்த வசனம் இறக்கியருளப்பட்டதன் பின்னர் பால்குடி சகோதரியை திருமணம் முடிப்பது ஹராமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலைமைகளில் பால்குடி சகோதரிக்கும் பால்குடி சகோதரனுக்கும் இடையே இரத்த ஒற்றுமை ஏற்பட வாய்ப்புள்ளது.
பால்குடி சகோதர, சகோதரி என அறிந்து, பிரிவு ஏற்பட்ட பெண்ணுக்கான தாபரிப்புச் செலவு வழங்கப்படவேண்டும். மட்டுமன்றி, பிள்ளைகள் பராமரிப்பிலிருந்து விடுபடும் வயதை அடையும் வரை பிள்ளைச் செலவும் முன்னைய கணவனால் வழங்கப்படுவது அவசியமாகும்.
இவ்வாறு பிரிந்துள்ள பெண்ணின் இத்தா தலாக் செய்யப்பட்ட பெண்ணின் இத்தாவைப் போன்றே அமையும். அவர்களின் முன்னைய திருமணத்தின் மூலம் கிடைத்த பிள்ளைகளுக்கு ஷரீஆ ரீதியான உரிமைகள் காணப்படுகின்றன.
ஏனெனில், இந்த பிள்ளைகள் சந்தேகம் கலந்த உறவின் மூலமாக கிடைத்திருக்கின்றனர். பரம்பரை என்ற ரீதியில் பார்க்கின்ற போதும் உறவில் ஈடுபட்டவரோடுதான் கிடைத்த குழந்தை இணைத்துப் பார்க்கப்பட வேண்டும்.
பிள்ளைகள் அவர்களின் தந்தையின் பரம்பரையாகவே கொள்ளப்படுவர். திருமண உறவு துண்டிக்கப்படுவதாயின் ஐந்து தடவைகள் பால்குடித்திருக்க வேண்டும். ஒருவர் நான்கு தடவைகள் அல்லது அதற்கு குறைவான அளவு பால்குடித்திருப்பாராயின் அது எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தமாட்டாது.
அதுபோன்று குழந்தையின் பால்குடி வயதான இரண்டு வருடத்திற்குள்ளேயே இது நிகழ்ந்திருக்கவும் வேண்டும். அல்லாஹ்வே மிக அறிந்தவன்.
– கலாநிதி அஹ்மத் தாஹா றய்யான்
source: www.meelparvai.net/