இஸ்லாத்தில் சாதிகள் இல்லையடி பாப்பா….!!!
ஷர்மிளா ஹமீத்
“சாதிகள் இல்லையடி பாப்பா!-குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்; நீதி உயர்ந்த மதி, கல்வி-அன்பு நிறை உடையவர்கள் மேலோர்.”
இப்புடி பாடப்புத்தகத்துல அச்சடிச்சு சாதி இல்லன்னு குழந்தைகளுக்கு பாடம் சொல்ற அதே அரசாங்கம்தான் சாதி வாரியா உங்களை பதிஞ்சுக்கங்க அப்போதான் இட ஒதுக்கீடு கெடைக்கும்ன்னும் சொல்றாங்க…!!
சரி நம்ம மார்க்கதுலதான் சாதி இல்லையே எல்லாரையும் முஸ்லிம்ன்னு பதிய சொல்லலாம்ன்னு பார்த்தா பொருளாதாரத்தில பின் தங்கி இருக்கும் சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய இட ஒதுக்கிடு கிடைக்காம போயிடுமே.. சோ அரசாங்கம் பொருளாதார அடிப்படைல பின்தங்கியுள்ள இஸ்லாமியர்கள் அவர்கள் குல தொழில் மற்றும் வம்சாவழி பெயர்களை கொண்டு பிரித்து அறிவித்து உள்ளனர்.
அத முறைப்படி பயன்படுதிக்கோங்க மக்களேன்னு நம்ம ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்த பதிவு எழுதுனா….. இஸ்லாத்த பத்தி எப்போ என்ன தகவல் கெடைக்கும் அத வச்சி அவதூறு பரப்பி இஸ்லாத்த அழிச்சுடலாம்ன்னு (???!!! ) கண்ணுல வெளக்கெண்ணை ஊத்திக்கிட்டு தேடுற ஒரு சிலர் கண்ணுல இந்த விழிப்புணர்வு பிரசார பதிவுகள் பட வெறும் வாய்க்கு அவல் கிடச்ச கதையா “இஸ்லாத்துல ஜாதி இல்லன்னீங்களே? இப்போ நீங்களே சாதிப்படி பிரிச்சு பதிய சொல்ரிங்களே?” அப்புடின்னு என்னமோ உலக மகா ஆதாரம் கெடச்ச மாதிரி வானத்துக்கும் பூமிக்குமா குதிக்க ஆரம்பிச்சுட்டாங்க…!!
இப்போ கூட சொல்றேன் கேட்டுக்கோங்க மக்களே… இஸ்லாத்துல ஜாதின்னு ஒன்னு இல்லவே இல்லங்க……….. !! அந்த காலத்துல அவங்க முன்னோர்கள் செஞ்ச தொழில் அடிப்படையிலும் சிலரோட பரம்பரை பெயர்களின் அடிப்படையிலுமே முஸ்லிம்கள் வகைப்படுத்தப்பட்டு உள்ளனர்…
உதாரணத்துக்கு…
லெப்பை பிரிவை சேர்ந்தவங்க ஹஜ்ரத் வேல செய்றவங்க …
ராவுத்தர் பிரிவினரின் முன்னோர் குதிரை பராமரிப்பு, குதிரை வாணிபம் போன்றவற்றில் ஈடுபட்டவங்க… அவங்களோட வம்சம் ராவுத்தர் என்று சொல்லப்படுது
மரைக்காயர் என்று அழைக்கப்படும் பிரிவினரின் முன்னோர் கடல் வாணிபம் செய்தவர்கள்…
ஷேக், செய்யது போன்ற பிரிவினர் அரபு வம்சாவளிகளை சேர்ந்தவர்கள்…
மாப்பில்லா பிரிவினர் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்ட கேரளா வம்சாவளியினர்…
இந்த அடிப்படைலதான் அரசாங்கம் முஸ்லிம்களை சாதிவாரியா பிரிச்சு இருக்காங்க….. அப்புடியே தொழில் ரீதியாக வம்சாவளி அடிபடைல சில பிரிவுகள் அரசாங்கம் குறிப்பிட்டு இருந்தாலும் யாரும் யார விடவும் உயர்ந்தவங்க இல்ல…! ஒருத்தரோட சாதியசொல்லி அவங்கள கேவலமா நடத்துறதும்,அவமானப்படுதுறதும் இஸ்லாத்துல இல்ல…!! இல்ல… இல்லவே இல்ல…!!!!
இஸ்லாத்த பொறுத்த வர படைத்த இறைவன் முன் அனைவரும் சமமே…!! எப்புடின்னு கேக்க மாட்டிங்களா?
“மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்துக் கொள்ளும் பொருட்டு, பின்னர் உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடைவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக கண்ணியமிக்கவர்” (அல்குர்ஆன் 49:13)
இதிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், உலக மக்கள் அனைவரும் ஒரு தொப்புள் கொடியின் வழியே வந்த வழித்தோன்றல்கள்தான். நம்மில் உள்ள கோத்திரங்கள் அனைத்தும் நாம் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளத்தானே தவிர பிரிவினை பாராட்டி, பிரிந்து போவதற்கன்று என இவ்விறை வசனம் வலியுறுத்துகிறது.
எந்த பிரிவா இருந்தாலும் பள்ளிவாசல்ல தொழுக அனுமதி உண்டு….. நீ இந்த பிரிவை சேர்ந்தவன் நீ பள்ளி உள்ள வந்தா தீட்டு… அதனால நீ வெளிய நின்னுதான் தொழணும்ன்னு சொல்லி படைத்தவன் முன்னாடி கூட அவன ஒதுக்கி வைக்கிற கேவலமான செயல நாங்க ஒருக்காலும் செய்யவே மாட்டோம்…. இது புதிதாய் இஸ்லாத்தை ஏற்கும் (தீண்டத்தகாதவர்கள் என்று நம் சமூகத்தால் கொடுமைப்படுதப்படும்)தலித்களுக்கும் சேர்த்துதான்…
நாட்டையே ஆளும் அரசரா இருந்தா கூட அவருக்குன்னு ராஜ மரியாதை எல்லாம் கெடையாது அவருக்குனு தொழுக தனி இட ஒதுக்கீடு எல்லாம் கெடையாது…
அரசனும் ஆண்டியும் அருகருகே தோளோடு தோளாக நின்று எந்த பாரபட்சமும் இல்லாமல் இறைவனை வணங்கும் சமத்துவம் இஸ்லாத்தை தவிர வேறு எந்த மார்க்கத்தில் உள்ளது??
இதுல ஒரு பிரிவினர் மற்ற பிரிவினரை பார்த்த உடனே சட்டையை கழட்டி கக்கத்துல வச்சு கும்பிடு போட்டு தங்கள் மரியாதையை. (!!??) காட்ட வேண்டிய அவசியம் இல்ல….
தண்ணி கேட்டா தூரமா நின்னுக்கிட்டு ஊத்திவிடுறது இல்ல!
சபைல தான் இருக்கையிலும் தாழ்த்தப்பட்டவன் கோணிப்பை விரித்து மூலையிலும் உக்கார்ரது இல்ல!
சாக்கடை அள்ளுவது மட்டும் தான் உன் தொழில், துணி துவைக்கிறது மட்டும் தான் உன் தொழிலா இருக்கணும்னு யாரும் வற்புறுத்துவதில்ல…
ஊருக்குள்ள நீ செருப்பு போட்டு நடக்க கூடாதுன்னு சொல்ற காட்டு மிராண்டித்தனம் இஸ்லாத்தில இல்ல…
சமதர்மமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் பிரிவினை பார்ப்பதில்ல!
நாங்கள் உண்ணும் பருகும் அதே பாத்திரத்தில் உண்ணவோ பருகவோ அவர்களுக்கு எந்த பிரிவினருக்கும் எந்த தடையும் இல்லை…. நீ தாழ்ந்தவன் அதனால கொட்டங்கச்சில தான் குடிக்கணும்ன்னு சொல்லி மிருகத்த விட கேவலமா ஒரு மனுசன நடத்துற காட்டுமிராண்டித்தனம் இஸ்லாத்துல இல்ல…
எல்லாத்துக்கும் மேல ஒரு மனுஷன் வாழும் போதுதான் சாதி பார்த்து ஏற்றத்தாழ்வு உண்டாக்குறாங்கன்னு பார்த்தா அவன் செத்த அப்பறம் புதைக்க கூட விடாம சாதிய காரணம் காட்டி ஆதிக்க சாதியினர் புதைக்கும் இடத்தில தலித் சமூகத்தாரை புதைக்க விடாமல் கலவரம் பண்ணிய அவலமும் தமிழ் நாட்டில் சில இடங்களில் நடந்துள்ளது..
ஆனால் ஒரு முஸ்லிம் இறந்தால் அவர் எந்த பிரிவை சார்ந்தவர் என்றாலும் புதைப்பதற்கு பொதுவான ஒரே இடம்தான்…
அவருக்கு நான் இறுதி தொழுகை வைக்க மாட்டேன் என்று எந்த இமாமும் சொல்வதில்லை..!!
இப்படி நிறைய இல்லைகள் சொல்லிக்கொண்டே போகலாம்…. !!!
தமிழகத்தில் உள்ள 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமை கொடுமை குறித்து மதுரையில் இருந்து செயல்படும் “evidence ” அமைப்பு ஒரு ஆய்வு அறிக்கை வெளியிட்டு உள்ளது . (மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகை,சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர்) இல் 213 கிராமங்களில் நடத்திய ஆய்வு முடிவுகள்.
24 . 09 . 2009 கள்ளகுறிச்சி அருகில் தச்சூர் கிராமத்தை சேர்ந்த தலித் பெண் காசியம்மாள், ஆதிக்க சாதி பெண்ணை தொட்டதால் மானபங்க படுத்தப்பட்டார்.
02 .01 .2011 தேனீ அருகில் உள்ள கூழயநூரில் ராஜி என்கிற பெரியவரின் சடலத்தை பொது சுடுகாட்டில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். 27 .01 .2011 . அன்று சின்னாயி என்கிற தலித் மூதாட்டி பெட்ரோல் வெடி குண்டு வீசி கொல்லப்பட்டார் .
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் 2009ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்கிற தலித் இளைஞர் பொது கிணற்றில் குளித்ததற்காக 30 பேர் கொண்ட ஆதிக்க சாதி கும்பலால் தாக்கப்பட்டார்.
மதுரை கீரிபட்டியை சேர்ந்த தலித் பெண் “வசந்த மாளிகை” என்கிற ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்ட போது, அங்கு இருந்த ஊழியர் கொண்டை ஊசியால் குத்தி சேதப்படுத்தி இருக்கிறார். கருப்பை முற்றிலும் சிதைந்த நிலையில் அகற்றப்பட்டது. சிறுநீரக குழாயில் ஓட்டை விழுந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டிருகிறது.
சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த சூர்யா (25) என்ற தலித் இளைஞர், வேறு சாதிப்பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்பதால் அந்த இளைஞரை தேடிப்பிடித்து, துன்புறுத்தி, அதன் உச்சகட்டமாக ஆவடி காவல் நிலையத்தில் சிறுநீர் குடிக்க வைத்துள்ளார், ஆவடி காவல் நிலைய ஆய்வாளர். – இந்தியன் எக்ஸ்பிரஸ்
2.2.2008 . திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 65 தனி பஞ்சாயத்துகளில் 35 பஞ்சாயத்து தலைவர்கள், தங்கள் கிராமங்களில் சாதி பாகுபாடு பார்க்கப்படுவதாக ஒப்புக்கொண்டுள்ளனர். இரட்டை டம்ளர் முறை, கோயில் நுழைய அனுமதி மறுப்பு, இழிவான வேலைகளை செய்ய கட்டாயப்படுத்துதல் போன்ற பாகுபாடுகள் தங்கள் கிராமங்களில் தொடர்ந்து நீடிப்பதாக இவர்கள் பத்திரப் பேப்பரில் கையெழுத்திட்டு, பத்திரிகைகளுக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்பியுள்ளனர். இதனால் கோபமடைந்த மாவட்ட அரசு அதிகாரிகள், இந்த வாக்குமூலத்தை திரும்பப் பெறச் சொல்லி மிரட்டி வருகின்றனர். – தி இந்து – 10.2.2008
மதுரை மாவட்டத்தில் உள்ள கச்சிராயன்பட்டியில் உள்ள கிராமத்தில் 16 வயது தலித் சிறுமி, மூன்று வாரத்திற்கு முன்னால் அதே கிராமத்தில் உள்ள சாதி இந்துவால் பாலியல் வன்முறைக்கு ஆட்பட்டுள்ளார். இக்குற்றவாளி (சுப்பிரமணி) ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்த பிறகும், உள்ளூர் காவல் துறையினர் அவரை கைது செய்யவில்லை. அங்குள்ள தலித் இயக்கங்களின் போராட்டத்திற்குப் பிறகே காவல் துறையினர் விசாரணையில் இறங்கியுள்ளனர். ஆனாலும் சுப்பிரமணி கைது செய்யப்படவில்லை.
நூற்றுக்கணக்கான கிராமங்களில் தலித்துகள் பொது சாலைகளில் செருப்புப் போட்டுக் கொண்டு நடக்க உயர் சாதி அனுமதிப்பது இல்லை. மதுரை மாவட்டம் கொடிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாலமுருகன், ‘தலித் பஞ்சாயத்து தலைவர்கள் கூட தங்களுடைய செருப்புகளை கையால் தூக்கிக் கொண்டு தான் நடந்து செல்ல வேண்டும்’ என்று கூறினார். தேனிமாவட்டத்தில் உள்ள நரியூத்து பஞ்சாயத்துத் தலைவரான பழனியம்மாள் கூட அந்த ஊரின் கோயிலுக்குள் நுழைய முடியாது, அவர்களுடைய கிராமத்தின் தேநீர்க்கடைகளில் உள்ள பெஞ்சுகளில் சமமாக உட்கார முடியாது, இரட்டை டம்ளர் முறையும் நீடிப்பதாகக் கூறுகிறார். கடலூர் மாவட்டம் காயல்பட்டு கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் சாதி பாகுபாடு பார்ப்பதால், தலித் குழந்தைகளை அங்குள்ள பக்கத்து ஊருக்கு அனுப்புகின்றனர். ‘எவிடன்ஸ்’ என்ற அமைப்பின் இயக்குநர் கதிர், “அரசு அறிக்கையின்படி தலித்துகளுக்கு எதிராக 538 கிராமங்களில் பாகுபாடு நிலவுகிறது. தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் தீண்டாமை குறித்து ஏழு லட்சம் புகார்கள் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும் இவை குறித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை” என்கிறார். – தி வீக் –
13.1.2008. உத்திரப் பிரதேசத்தில் உள்ள எட்டவா கிராமத்தில் ஒரு மிட்டாய் கடையில் பணிபுரிந்து வந்த தலித் இளைஞன் தொடர்ந்து அந்தக் கடையில் பணி செய்ய மறுத்ததற்காக, அவரை அந்தக் கடை உரிமையாளர் கொதிக்கும் எண்ணெயில் தள்ளி கொன்றுவிட்டார். – தி இந்து – 4.2.2008
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்களான அ. அண்ணாதுரை, பாக்கியம் உள்ளிட்ட ஆறு தனி பஞ்சாயத்து தலைவர்கள் 11.1.08 அன்று செய்தியாளர்களை சந்தித்து, தங்கள் மீது கடுமையான சாதி பாகுபாடு காட்டப்படுவதாகக் கூறினர். இத்தலைவர்கள் யாருக்கும் பஞ்சாயத்து அலுவலகத்தில் உட்கார அனுமதி இல்லை. (பஞ்சாயத்து தலைவருக்கே இந்த கதின்னா??? சாதாரண மக்களுக்கு?? ) – இந்தியன் எக்ஸ்பிரஸ் – 12.1.08
இரட்டை குவளை முறை
இது போன்ற எத்தனையோ விதமான வன்கொடுமைகள் சாதியின் பெயரால் நடக்கும் போது அதை தட்டிக்கேட்காதவர்கள்….
வறியவர் நலன்கருதி உங்களை பிரிவு வாரியாக பதிந்து அரசின் உதவி தொகையை வாங்கி நீங்களும் உங்க குடும்பமும் சந்தோசமா இருங்கன்னு இஸ்லாமிய மக்களுக்கு சொல்ல வந்தா…. அதுலயுமா உங்க இஸ்லாமிய எதிர்ப்பு வெறிய காட்டுவிங்க??? (போங்க பாஸ் போயி புள்ள குட்டியல படிக்க வைக்கிற வேலைய பாருங்க அப்போதான் இனி வர்ற சமுதாயமாச்சும் உருப்படும். அப்படியும் பொழுதுபோகலன்னா நியூஸ்பேப்பர்லாம் வாங்கி படிங்க…)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது இறுதிப் பேருரையின் போது சொன்ன ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனியுங்கள்
பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்!
மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான்.
(அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா 2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
தலைமைக்குக் கீழ்ப்படிவீர்!
மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்!(ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி 1706)
இப்புடி சொல்லி சமூகப் பிளவுக்கும், நிற வெறிக்கும் , சாதி பாகுபாடுகளுக்கும் அன்றே முடிவு தந்து விட்டு சென்றார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிச்சென்ற இந்த வாக்கு ஒன்றே போதும் சமுதாய ஒற்றுமைக்கு..!!
நாம் அனைவரும் இறைவனின் படைப்புகள். நம்மில் எந்தப் பேதமும் ஏற்றத் தாழ்வும் இருக்கக்கூடாது. அதையும் மீறி நிகழும் அநீதிகளுக்குத் திருக்குர்ஆனும், நபி மொழியும் தான் தீர்வே தவிர வேறில்லை.
இஸ்லாத்தை பொறுத்தவரை உயர்ந்தவர் தாழ்ந்தவர்ன்னு யாருமில்லங்க யாரு இறைநம்பிக்கை கொண்டு நல்ல செயல்களை செய்றாரோ அவரே இறைவனிடத்தில் உயர்ந்தவர். பிறப்பாலோ அல்லது செய்யும் தொழிலாலோ ஒருவர் உயர்ந்தவராகவோ அல்லது தாழ்ந்தவராகவோ ஆக முடியாது. .. !! இஸ்லாத்தை பத்தி நான் என்ன சொன்னாலும் உங்களுக்கு கொஞ்சம் டவுட்டு வரும் இல்லையா? முஸ்லிமல்லாத பலர் இஸ்லாத்தின் இந்த சமத்துவம் குறித்து சொன்னவற்றில் சிலவற்றை கீழே சேர்த்து இருக்கிறேன் பாருங்கள்.. 🙂
பிறப்பால் உயர்வு தாழ்வு போக்கி மனிதன் மனிதனாக வாழ வழி செய்த முஹம்மதைப் புகழ என்னிடம் வார்த்தைகள் கிடையாது. – டாக்டர் அம்பேத்கார்.
இறைவன் முன் மனிதர்கள் அனைவரும் சமமே என்ற அடிப்படை சித்தாந்தத்தை நடைமுறை படுத்துவதில் இஸ்லாத்தின் செய்முறையை போன்று வேறேந்த மதமும் – அவற்றின் மத கருத்தோட்டம் எதுவாயினும் சரியே கடைபிடிக்கவில்லை. – டாக்டர் சர். சி. பி. இராமசாமி ஐயர் -[EasternTimes, 22 டிசம்பர், 1944.]
எந்த சகோதரத்துவ அடிப்படையில் புதிய உலகத்தை நிர்மாணிக்க வேண்டுமென்று இன்றைய நாகரிக உலகம் விரும்பி நிற்கிறதோ, அதே சகோதரத்துவத்தை அன்றைக்கே பாலைவனத்தில் ஒட்டகம் ஒட்டிக்கொண்டிருந்த மனிதரால் பிரசாரம் செய்யப்பட்டது. – கவிக்குயில்” sarojini-naidu
இஸ்லாத்தில் ஒரு சிறப்பு, இஸ்லாத்தில் யார் சேர்ந்தாலும் சாதியை மறைத்து விடுகிறது.
தாழ்த்தப்பட்ட மக்களானாலும் சரி, மற்றும் யார் சேர்ந்தாலும் சரி, சாதியை நீக்கிவிடுகிறது இஸ்லாத்தின் கொள்கை. அதனால் அது என்னை மிகவும் ஈர்க்கக்கூடிய கொள்கையாக இருக்கிறது. – அறிஞர் அண்ணா
இஸ்லாம் வழங்கும் சகோதரத்துவம் உலகில் உள்ள எல்லா மனிதர்களுக்குமானதாக இருக்கிறது.
அவர் என்ன நிறத்தில், என்ன கொள்கையில், என்ன கோட்பாட்டில், என்ன இனத்தில் இருந்தாலும். இந்த சகோதரத்துவத்தை நடைமுறைப்படுத்திய ஒரே மதம் இஸ்லாம்தான். முஸ்லிம்கள் இந்த உலகில் எந்த மூலையில் இருந்தாலும், ஒருவரையொருவர் சந்தித்துக் கொள்ளும்போது, தாங்கள் சகோதரர்கள் என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். – ஆர்.எல்.மெல்லமா, ஹாலந்து, மானிடவியலாளர், எழுத்தாளர், அறிஞர்.
இஸ்லாத்துல சாதி இருக்குன்னு தவறான கருத்தை பரப்புற சில விஷமிகளோட கருத்தை படிச்சு இஸ்லாத்த பத்தி தப்பா புரிஞ்சிகிட்ட
எத்தனையோ நல்ல உள்ளம் கொண்ட சகோதரர்கள் இந்நேரம் உண்மைய புரிஞ்சிகிட்டு இருப்பாங்கன்னு நம்புறேன் …. இஸ்லாத்தில் ஜாதிகள் இருக்குன்னு கண்டுபிடிச்சுட்டோம்னு ஆஹோ..ஓஹோ…ன்னு குதுகலமா இருந்தவர்களுக்கும் மூக்குடைபட்டிருக்கும் என நம்புகிறேன் 🙂
என்றும் அன்புடன்
உங்கள் சகோதரி
ஷர்மிளா ஹமீத்
நன்றி- எவிடென்ஸ் அமைப்பு.
source: http://www.islamiyapenmani.com/