உடலின் மீதான திருப்தியின்மை!
திருமணம் முடிக்க போகும் ஆண், பெண் இருவருக்கும் உடல் பொருத்தம் இருக்க வேண்டியது மிக அவசியம்.
இருவருக்கும் உடல் அளவில் இருக்கும் வேறுபாடுகள்..
ஒரு பாட்டு கூட உண்டு “ரெட்டை மாட்டு வண்டி வரும்போது நெட்டை குட்டை என்றும் இணையாது…..!” வண்டி ஓடவே இரண்டு மாட்டின் உடல் பொருத்தம் தேவை படும்போது, இந்த வாழ்க்கை வண்டி ஓட கணவன் மனைவி உடல் பொருத்தம் என்பது மிக அவசியம். (ஒரு சிலர் விதிவிலக்கு)
முன்னாடி எல்லாம் பெண்ணையோ பையனையோ வரன் பிடித்து இருக்கிறதா என்று பெற்றோர்கள் கேட்க மாட்டார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, இருவரும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சிருக்கு என்று சொன்ன பிறகு தான் திருமணமே நடக்கிறது. ஆதலால் தங்கள் மனதிற்கும் தங்கள் உடம்பு அமைப்புக்கும் ஏற்றபடி அமைந்திருக்கிறதா துணை என்று பார்ப்பது மிக அவசியம்.
பணம், படிப்பு, அழகு, சொத்து, அந்தஸ்து எல்லாம் திருமணத்தின் ஆரம்ப சில வருடங்களுக்கு மனதிற்கு மகிழ்ச்சியையும், சமூகத்தில் ஒரு மதிப்பையும் கொடுக்கலாம். ஆனால் வருடம் சில கடந்த பின் ஆணோ பெண்ணோ இருவருக்கும் அது மட்டுமே போதுமானதாக இருப்பது இல்லை. துணைக்கு தன் மீதான கவனம் எந்த அளவில் இருக்கிறது, தனக்கு எந்த அளவிற்கு முக்கியத்துவம் துணையிடம் இருக்கிறது என்பதை பொறுத்தே வீட்டிலும் வெளியிலும் அவர்களின் நடவடிக்கைகள் இருக்கும். இச்சூழ் நிலையில் தான் உடல் பற்றிய யோசனைகளும் ஏற்படுகிறது.
உடல் அளவில் பொருத்தமாக இருக்கிறவர்கள் தங்கள் அந்தரங்க வாழ்விலும் பொருத்தமாக இருப்பாங்க என்று சொல்ல இயலாது. தவிரவும் படுக்கையறையில் உடல் பொருத்தம் அவசியமும் இல்லை. நிறம்,அழகு, உயரம், குள்ளம் மற்றும் அந்தரங்க உடல் அமைப்புகள் இப்படிதான் இருக்கணும் என்று எந்த அளவுகோலும் இல்லை.
தன் துணையை படுக்கையில் உற்சாகமாக வைத்து கொள்ளாதவர் எவ்வளவு அழகாக இருந்தாலும் அங்கே திருப்தி கிடைக்காது. இதை முதலில் பிரச்சனைக்குரிய தம்பதிகள் புரிந்து கொள்ளவேண்டும். அந்தரங்கம் இனிமையாக நீடித்த காலத்திற்கு இருப்பதற்கு துணையின் உடலை திருப்தி செய்யணும், ஆனால் இங்கே திருப்தி என்று சொல்வதின் அர்த்தம் உடலுறவு இல்லை. பின்ன வேறு என்ன?
உடலின் மீதான திருப்தியின்மை எப்போது ஏன் எதனால்?
சில சரி செய்துகொள்ளகூடிய காரணங்கள் உடல் சுத்தமாக வைத்துகொள்ளாமை, அதிகபடியான வியர்வை, உடல் பருமன்/ஒல்லி, மனதிற்கு பிடிக்காத மணம் போன்றவை இருக்கலாம் ஆனால் ஒரு ஆச்சரியம் என்னவென்றால் தன் துணையின் அந்தரங்க நடவடிக்கைகள் பிடித்துவிட்டால் இந்த குறைகள் மிக பிடித்தவையாக மாறிவிடக்கூடும்!!
o ஒரு சில நாட்களில் கணவன்/மனைவி யின் மனநிலை உறவிற்கு ஏற்றதாக இல்லாமல் இருக்கலாம். ஒரு சோர்வு, ஆர்வம் இல்லாமை போன்றவை இருக்கும் போது துணை உறவிற்கு வற்புறுத்தினால் சலிப்பு வரும் நாளடைவில் இதே போன்ற வற்புறுத்தல்கள் தொடர்ந்தால் நிச்சயம் வெறுப்பு அதிகமாகி விரிசலில் கொண்டு போய் விட்டுவிடும்.
o வேறு சிலருக்கு வேலை, வீடு, குடும்பம் போன்றவற்றினால் மன அழுத்தம் இருக்கலாம். உடல் சம்பந்தப்பட்ட உபாதைகளையும் சட்டை பண்ணாமல் உறவிற்கு அழைத்து அதன் பின் ஏற்படக்கூடிய உறவில் நிச்சயம் திருப்தி இருக்காது.
o பெண்களை பொறுத்தவரை வீட்டிற்கு உறவினர்கள் குறிப்பாக தனது பெற்றோர்கள் வந்திருக்கும் போது உறவை விரும்பமாட்டார்கள். குழந்தைகள் சரியாக தூங்கி விட்டார்களா என்று தெரியாதபோது உறவை மனதாலும் நினைக்கமாட்டார்கள்.
o முக்கியமாக மருத்துவ ரீதியாக மட்டுமே, அது மருந்துகளின் மூலம் அல்லது கவுன்செல்லிங் மூலமாகவோ குணபடுத்தக்கூடிய உடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஆண்/பெண்ணுக்கு இருந்தால் அங்கே கண்டிப்பாக உடலின் மீதான திருப்தியின்மை ஏற்படக்கூடும்.
கணவன்/மனைவி அழகாக இருந்து மனதிற்கு பிடித்திருந்தும் ‘உடலுறவில் ஈடுபட இயலாதவர்கள்’ இருக்கிறார்கள் என்ற தகவல் ஆச்சரியமாக இருந்தாலும் அதுதான் உண்மை. வெளி உலகில் வலம் வரவும், திருமணம் ஆன புதிதில் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் பெருமைபட்டுக்கொள்ள உதவிய இந்த அழகு அடுத்து தொடர்ந்து வரும் வருடங்களில் உடலுறவுக்கு உதவுவது இல்லை. அப்போது அங்கே தேவை படுவது வேறு ஒன்று…!
பாதை மாறி சென்று விடாமல் தன் துணையை பிடித்துவைத்துக் கொள்ளும் சூட்சமம் ஒன்று இருக்கிறது, அதுதான் தொடுதல் !!
பரவசம் இதுவே!
ஆண்/பெண் இருவரின் உடலிலும் உணர்ச்சி மிகுந்த சில பகுதிகள் இருக்கின்றன அது நபருக்கு நபர் வேறு படும். ஒருவருக்கு இதழை தொட்டால் பரவசம் ஏற்படும், சிலருக்கு இடுப்பு, கை, கால் பாதம், கழுத்து, காது மடல், நெற்றி இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகும். இதில் தன் துணையின் உணர்ச்சி பகுதிகள் எது என்று தெரிந்து வைத்துக்கொள்வது முழுமையான இல்லறத்திற்கு மிக அவசியம்.
உறவிற்கு உடல், மனம் ஒத்துழைக்காத போது இந்த மாதிரியான இடங்களை தொடுவதின்/வருடுவதின் மூலம் பரவச நிலையை அடையமுடியும். உடலுறவுக்கு தயாராவதற்கு முன்பும் இது மாதிரியான முன்விளையாட்டுகளில் ஈடுபடும் போது உடலுடன், மனமும் உற்சாகமடைந்து பரவசநிலையை எட்டிவிடும், அதன் பின் நடக்கும் உறவே ஒரு முழுமையான உறவாக இருக்கும்.
சில தம்பதிகள் உடலில் வேறு எந்த பிரச்சனையும் இன்றியும் உறவில் ஈடுபட இயலாதவர்களாக இருப்பார்கள். அவர்கள் இந்த மாதிரியான விளையாட்டில் மட்டும் சில நாட்கள் (உறவு கொள்ளாமல்) ஈடுபட வேண்டும். இதிலும் ஒரு முழு இன்பத்தை அடைய முடியும். வெறும் தொடுதலின் மூலம் சில நாட்களை கழித்து விட்டு பின் முழுமையாக உறவில் ஈடுபடும் போது, நிச்சயம் கணவன் மனைவி இருவருக்கும் ஒரு வித்தியாசமான புதுமையான அனுபவமாக இருக்கும்.
சூட்சுமம் எது என்று தெரிந்து, தெளிந்து இல்லறத்தை நல்லறமாக கொண்டு செல்லுங்கள்…..!
source: http://www.kousalyaraj.com/