Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்

Posted on May 17, 2012 by admin

      குர்ஆனை விளக்கும் ஹதீஸ்கள்       

”உங்கள் வீடுகளில் ஓதப்படும் அல்லாஹ்வுடைய வசனங்களையும் (குர்ஆன்) ஞானங்களையும் (ஹிக்ம்) நினைவில் வையுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நுண்ணறிவுடையோனும் (யாவையும்) நன்கறிந்தோனுமாக இருக்கின்றான்.”  (அல்குர்ஆன் 33:34)

மேற்கண்ட இறை வசனத்தில் ‘கிதாப்’ என்ற குர்ஆனைக் குறிக்க இறைவன் கூறிய சொல்லோடு இணைத்து ‘ஹிக்ம்’ என்ற சொல் ஸுன்னாவையே குறிக்கும் என்று எல்லா அறிஞர்களின் முடிவாகும்.

அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந்துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்தில் அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் வசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது.

குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத்தூதரின் வாழ்விலும், செயலிலும் நடைமுறைப் படுத்தப்பட்டன.

அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை பற்றி வினவப்பட்ட போது “அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே விளங்கியது” என அவர்கள் கூறிய பதிலில் குர்ஆனுக்கும் ஸுன்னாவுக்கும் உள்ள பிணைப்பு தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே குர்ஆனும், ஹதீஸும் ஒன்றில் ஒன்று தங்கி நிற்கும் ஒரு முழுமையான அங்கமாகும்.

”நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுள்ள வேதமும் உங்களிடம் வந்திருக்கிறது.” (அல்குர்ஆன் 5:15)

மேற்கண்ட இறை வசனத்தின் பிரகாரம் கூறுவதானால் குர்ஆனை வாசிக்க விளங்க ஒளியான ஸுன்னா தேவை என்பது விளங்குகிறது. ஹதீஸ்களின் துணையின்றி விளங்க முயல்வது ஒரு இருட்டில் வாசிக்க முயல்வது போலாகும். இறைவன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ மூலமாக எவ்வாறு அறிவிக்கப்பட்டதோ அவ்வாறே அவர்கள் அதற்காக கூறும் மார்க்க விளக்கங்களும் வஹீயின் அடிப்படையில் அமைந்தவையாகும். இதையே பின்வரும் வசனம் நமக்கு கூறுகிறது.

”அவர் தம் இச்சைப்படி (எதனையும்) கூறுவதில்லை. அது அவருக்கு வஹீ மூலம் அறிவிக்கப்பட்டேயன்றி வேறில்லை..” (அல்குர்ஆன் 53:3,4)

இன்று ஒரு சிலர் மேலோட்ட எண்ணத்தில் குர்ஆனில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதுவே போதும், ஹதீஸ்கள் பல மாதிரி இருக்கின்றன. பலகீனமான ஹதீஸ்கள் என்கிறார்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் என்கிறார்கள், எனவே குர்ஆனில் கூறப்பட்டிருக்கின்றதா? நான் கட்டுப்படுகிறேன். ஹதீஸைப் பற்றி எனக்கு அக்கறை இல்லைஸ ஆகவே குர்ஆன் மட்டுமே போதும் என்கிறார்கள். அவர்களது சிந்தனைக்கு சிலவற்றை எடுத்துக் கூற நாம் கடமைப்பட்டுள்ளோம்.

”(மூமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்ப்படியுங்கள்.” (அல்குர்ஆன் 24:56)

மேற்கண்ட இறை வசனத்தின் மூலமும் இது போன்ற வேறு வசனங்கள் மூலமும் இறைவன் தொழச் சொல்கிறான். ஜகாத்தைக் கொடுக்கச் சொல்கிறான். ஆனால் குர்ஆனில் எந்த இடத்திலும் எப்படி, எத்தனை ரக்அத்துகள் தொழவேண்டும் என்றோ எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டுமென்றோ விளக்கவில்லை. அதை விளக்கும் கடமையை தன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குக் கொடுத்துள்ளான். இதைத்தான் அந்த வசனத்தின் பிற்பகுதியில் “அவனுடைய தூதருக்கு முற்றிலும் வழிபடுங்கள்” என்று இறைவன் கூறுகின்றான். எனவே, நாம் தொழ வேண்டுமென்றால், ஜகாத் கொடுக்க வேண்டுமென்றால் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னா அடங்கிய ஹதீஸ்களைக் கண்டிப்பாகக் கடை பிடிக்க வேண்டும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

”(நபியே!) மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் உமக்கு இவ்வேதத்தை நாம் அருளினோம்.” (அல்குர்ஆன் 16:44)

என்ற இறைக் கட்டளைக்கேற்ப குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தொழுகை, ஜகாத், ஆண் பெண் உறவு, திருமணம், வியாபாரத் தஒடர்பு, சமூக உறவுகள், வாழ்க்கை நெறி முறைகள் போன்ற பலவற்றையும் வார்த்தைகளால் விளக்கியும், செயல்படுத்தி காட்டியும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்கம் அளித்தார்கள். குர்ஆன் பொதுவாக “தொழுகையை நிறைவேற்றுவீர்களாக!” என்று கட்டளை பிறப்பிக்கிறது. அந்த தொழுகையை நிறைவேற்றும் நேரங்கள், முறைகள், அதன் ரக்அத்துகள், ருகூவு, சுஜூது போன்றவைகள் ஸுன்னாவிலேயே விளக்கப்படுகிறது. அவற்றை ஹதீஸ்களே நமக்கு விளக்கமளிக்கிறது; குர்ஆனல்ல.

நோன்போடு தொடர்புடைய (அல்பகரா 187) திருவசனம் அருளப்பட்ட போது அதீபின்ஹாதிம் ரளியல்லாஹு அன்ஹு என்ற நபித்தோழர் இதில் குறிப்பிடப்படும் கய்துள் அப்யழு (வெள்ளை நூல்) கய்தில் அஸ்வதி (கறுப்பு நூல்) என்பது இரண்டு நூல்களைக் குறிக்கிறது என்ற கருத்தைக் கொண்டிருக்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிடுவது இரவின் இருட்டையும், பகலின் வெளிச்சத்தையுமே என்று விளக்கமளித்தார்கள். (அதாரம்: ஸஹீஹ் புகாரி, கிதாபுத் தஃப்ஸீர்) குர்ஆனில் ஜகாத் வசனம் நூற்றுக்கு மேற்பட்ட இடங்களில் கூறப்படுகிறது. ஒவ்வொரு பொருளிலும் ஜகாத் அளவிடப்படும் முறை, அதன் பங்கீடு பற்றிய விரிவான விளக்கங்களை ஹதீஸ்களிலேயே காண முடிகிறது.

“உங்களுக்கு வியாபாரத்தை அல்லாஹ் அனுமதித்து வட்டியை ஹராமாக்கினான்” என குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் எல்லா வகையான வியாபாரத்தையும் இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பதையும் மதுபானம், பன்றி இறைச்சி, ஏமாற்றி விற்கும் வியாபார முயற்சிகள் ஆகியவைகளை அனுமதிக்கப்படாத வியாபாரங்கள் என்று ஹதீஸ்களே தெளிவு படுத்துகின்றன.

”திருடனோ திருடியோ அவர்கள் சம்பாதித்த பாவத்திற்கு அல்லாஹ்விடமிருந்து தண்டனையாக அவர்களின் கரங்களைத் துண்டித்து விடுங்கள்.” (அல்குர்ஆன் 5:38)

திருட்டுக் குற்றத்திற்காக திருடியவர்களின் கரத்தைத் துண்டித்து விடும்படி குர்ஆன் குறிப்பிடுகின்றது. ஆனால் இதில் வலக்கரம்தான் முதலில் வெட்டப்பட வேண்டும் என்ற விளக்கத்தை ஹதீஸ்களிலேதான் காணப்படுகிறது. ஒரு கவசத்தின் பெருமதியை விட குறைந்த பெறுமதியுள்ள ஒரு பொருளைத் திருடியதற்காக ஒருவரின் கரம் வெட்டப்படக்கூடாது; புத்தி சுவாதீனமற்றவர்கள்; குழந்தைகள் மேலும் பழங்கள், உணவுப் பண்டங்களைத் திருடிய குற்றத்திற்காக ஒருவரின் கரம் துண்டிக்கப்படக்கூடாது. ஒருவரின் கை மணிக்கட்டு வரைதான் துண்டிக்கப்பட வேண்டும்; முழங்கை வரை அல்ல என்ற விவரங்களை ஹதீஸ்களிலே காண முடிகிறது.

குர்ஆனில் அந்நிஸா சூராவில் 11,12,176 வசனங்களில் வாரிசுரிமை பற்றிய விதிகளையும், சூரா பகராவில் 226 முதல் 237 வரையிலும் ஸூரா அத்தலாக்கின் 1 முதல் 5 வரை உள்ள வசனம் விவாகரத்து பற்றிய சட்டங்களை ஹதீஸ்களின் துணையின்றி முறையாக விளங்குவதோ செயல்படுவதோ எந்த வகையிலும் முடியாத ஒன்றாகும். குர்ஆனில் பொதுவாக கூறப்படும் இது போன்ற சட்டங்களையும் கடமைகளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் விளக்கம் நிறைந்த ஹதீஸ்கள் அல்லவா நமக்கு விரிவாக விளக்குகின்றன.

ஃபர்ளு தொழுகைக்கு முன் பின் சுன்னத் தொழுகைகள், தஹிய்யதுல் மஸ்ஜித், பெருநாள் தொழுகை, ஜனாஸா தொழுகை, இஸ்திகாரா, லுஹா போன்ற தொழுகைகளின் குறிப்புகள் குர்ஆனில் இல்லை. இவையெல்லாம் ஹதீஸ்களிலே காணப்படுகிறது. இப்படிஸ குர்ஆனை விளங்க குர்ஆனில் கூறப்பட்ட இறைக்கட்டளையை நிறைவேற்ற ஹதீஸ்களே மிக முக்கியம் என்பதை எடுத்துக் கூறுவதானால் இக்கட்டுரை மிகமிக நீண்டு விடும்.

”(நபியே!) நீர் கூறுவீராக நீங்கள் எனக்கு வழிப்பட்டு நடப்பீர்களேயானால் அல்லாஹ் உங்களுக்கு அழகிய நற்கூலியைக் கொடுப்பான்.” (அல்குர்ஆன் 48:16)

”அல்லாஹ்வுக்கும் (அவனது) தூதருக்கும் வழிபடுங்கள், அன்றியும் நீங்கள் செய்பவற்றை யெல்லாம் அல்லாஹ் நன்கறிந்தவனே.” (அல்குர்ஆன் 58:13, 3:33)

”(மூஃமீன்களே) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜக்காத்தை கொடுங்கள்; மேலும் (அல்லாஹ்வின்) தூதருக்கும் கீழ்படியுங்கள்.” (அல்குர்ஆன் 24:56)

”எவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தியாக நடந்து கொள்கிறார்களோ அவர்கள் நற்பாக்கியம் பெற்றவர்கள்.” (அல்குர்ஆன் 24:52)

மேலும் மார்க்கத்தை விளங்க குர்ஆன் மட்டும் போதும் என்பவர்கள் உண்மையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் பல குர்ஆன் வசனங்களை நிராகரிப்பவர்களாக ஆகிவிடுகிறார்கள் என்பதை உணர வேண்டும். மேலும் ஆதாரபூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்கள் குர்ஆனையே மறுக்கிறார்கள் என்பதே உண்மையாகும்.

மேலும் ஹதீஸ்களில் பலவீனமானை; இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் நுழைந்து விட்டன; யூதர்கள் சதி செய்து நுழைத்து விட்டார்கள்; ஆகவே ஹதீஸ்களை எடுக்க முடியாது என்று கூறி அவற்றை மறுப்பதும் அறிவுக்கு பொருத்தமற்றச் செயலாகும். இறைவனின் பெயரால் பல மூட நம்பிக்கைகளும், அனாச்சாரங்களும், ஏமாற்று வேலைகளும் நுழைந்து விட்டன; இடத்தரகர்களான ஒரு சிரு கூட்டம் பெருங்கூட்டமான மக்களை ஏய்த்துப் பிழைக்க வழி ஏற்பட்டு விட்டது; அதனால் அந்த இறைவனே இல்லை என்று கூறி ஒரே இறைவனையும் மறுக்கும் நாஸ்திகம் பேசும் அரைக் கிணறு தாண்டுகிறவர்களுக்கும், பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக் காரணம் காட்டி ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை மறுப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லை. இவர்களும் அரைக்கிணறு தாண்டுபவர்களே என்பதை உணர வேண்டும்.

இடைத்தரகர்களை ஒழித்துக்கட்டி சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் அமையப் பாடுபடுவது எந்த அளவு அவசியமோ அதே போல் பலவீனமான இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை நிராகரிப்பதோடு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை எடுத்து நடக்க முன்வர வேண்டும்.

UNION ISLAMIQUE D’ENSEIGNEMENT ET DE RECHRCHE, FRANCE

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

50 − 44 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb