அறிவுச்சுடர் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி
இமாமாவர்கள் தனது பாடத் திட்டத்தை வகைப்படுத்தி, முதலில் குர்ஆன் மற்றும் அதன் விரிவுரை என்றும், அதற்குப் பின் ஹதீஸ் கலை, அதனையடுத்து, இஸ்லாமிய (ஃபிக்ஹு) சட்டக் கலை, அதனை அடுத்து உச்சரிப்பு மற்றும் அரபி மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள். எகிப்தில் இருக்கும் காலத்தில் தனது எழுத்துப் பணியை விடாது செய்து வந்தார்கள், இஸ்லாமியச் சட்டக் கலை மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றியும், இன்னும் அவரது மிகப் பிரபலமான நூலான அல் உம்மு நூலையும் இங்கு வைத்துத் தான் எழுதினார்கள்.
இமாமவர்களின் வாழ்வினை நாம் கூர்ந்து கவனித்தோமென்றால், கல்விக்காக அவர்கள் பல நாடுகள் சென்று, அங்குள்ள மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றதோடு, அதன் மூலம் மார்க்கத்தில் நல்ல புலமையையும் பெற்றுக் கொண்டதைக் காண முடிகின்றது. எனவே தான் மதீனாவில் அவர் பெற்றுக் கொண்ட கல்வியையும், இன்னும் ஈராக்கில் வாழ்ந்த அறிஞர்களின் விவேகத்தையும் இணைத்து, அதன் மூலம் பெற்றுக் கொண்ட அறிவை இஸ்லாமிய உலகுக்கு வழங்க முடிந்தது. அவரது கல்விப் பணியை அடுத்து, அவரது தன்மைகள், நேர்மை, நற்பண்புகள் போன்றவற்றை நாம் காண முடிகின்றது.
இமாம் அவர்களுக்கு அல் குர்ஆனைப் பற்றி எந்த அளவுக்கு ஆழமான விளக்கம் இருந்தது என்பதை நாம் பார்தால் ஒருமுறை சூரா வல்அஸர் அத்தியாயத்தைப் பற்றி சொல்லும்போது இமாம் அவர்கள் சொன்னார்கள், ”அல்லாஹ் திருமறையின் வேறு அத்தியாயங்களை இறக்காமல் இந்த அத்தியாயம் ஒன்றை மட்டும் இறைக்கி இருந்தாலும் இது மனித குலத்துக்குப் போதுமானதாகும்” என்றார்கள்.
”காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்த, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)”. (திருக்குர்ஆன்: 103 : 1,2,3)
அறிவுச்சுடர் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி
ஆசிய மற்றும் ஆப்ரிக்கத் துணைக் கண்டத்தில் இமாம் ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் மத்ஹப் மிகப் பிரபலமானது. அனைவராலும் அறியப்பட்டதொரு மத்ஹபாக இருந்து வருகின்றது. குறிப்பாக எகிப்து, தெற்கு அரேபியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இந்த மத்ஹபை மக்கள் பரவலாகப் பின்பற்றி வருகின்றார்கள்.
இமாம் அஷ்ஷாஃபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் பாலஸ்தீனில் உள்ள காஸா என்ற இடத்தில் ஹிஜ்ரி 150 ல் பிறந்தார்கள். இமாம் அவர்களின் ஏழாவது தலைமுறையினர், இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களினுடைய தலைமுறையும் அப்துல் மனாஃப் என்ற கிளையினரிலிருந்து வந்தவர்கள் என்று அறியப்படுகின்றது.
இமாம் அவர்கள் இளமையிலேயே தனது தந்தையை இழந்து விட்டார்கள், அதன் பின் அவரது தயார் தனது பிறந்தகமான மக்காவுக்கு தனது மகனைக் கொண்டு சென்று, அங்கேயே கல்வி கற்க வைத்தார்கள். இமாம் அவர்கள் தனது ஆரம்பக் கல்வியை, அரபி மொழி, இலக்கியம் போன்வற்றிலிருந்து தான் ஆரம்பித்தார்கள், ஆனால் இமாம் அவர்களின் புத்திசாலித்தனத்தினால் கவரப்பட்ட அறிஞர்கள், அவரை குர்ஆன், ஹதீஸ் கலை மற்றும் ஃபிக்ஹுத் துறையில் கவனம் செலுத்துமாறு அறிவுரை கூறினார்கள்.
மக்காவில் தனது ஆரம்பக் கல்வியை முடித்து விட்ட இமாம் அவர்கள், அதாவது மக்காவில் உள்ள அனைத்து இமாம்களிடம் இஸ்லாமியக் கல்வியைக் கற்று முடித்த பின், மேலும் கல்வியைத் தேடும் ஆவலில் மதீனாவிற்கு – அதாவது அல் முஅத்தா ஹதீஸ் தொகுப்பை எழுதிய இமாம் மாலிக் அவர்களிடம் கல்வி கற்க வேண்டும் என்ற ஆவலில் மதீனா நோக்கிப் பயணப்பட்டார்கள்.
இயல்பிலேயே அனாதையாக ஆகி விட்ட இமாமவர்கள், தனது எழுது பொருட்களாக ஒட்டக எலும்புகளையும், ஈச்ச மர ஓலைகளையும் பயன்படுத்திக் கொண்டார்கள். எனவே, இவ்வளவு பளுவான எழுது பொருட்கள் மற்றும் தனது உடமைகளை எல்லாம் தூக்கிக் கொண்டு, மதீனாவிற்கு பயணப்பட மிகவும் சிரமப்பட்டார்கள். எனவே, தான் இதுவரை எலும்புகளிலும், ஈச்ச ஓலைகளிலும் எழுதி வைத்திருப்பவற்றை தூக்கிக் கொண்டே செல்வதை விட, அவற்றை மனனமிட்டுக் கொண்டால் என்ன என்று அவருக்குத் தோன்றியது.
இன்னும் சிறிய வயது முதற்கொண்டே அதாவது தனது 9 வது வயதிலேயே குர்ஆனை மனனமிட்டு விட்டதனால் ஏற்பட்ட பயிற்சியானது, இதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. எனவே, தான் சேகரித்து வைத்திருந்த இன்னும் தன்னால் குறிப்பு எழுதப்பட்ட அத்தனை தகவல்களையும், தனது அறையை அடைத்துக் கொண்டு மனனமிட ஆரம்பித்து விட்டார்.
இமாம் மாலிக் அவர்களிடம் மாணவராகச் சேர்வதற்கு முன்பாகவே, அவரது அல் முஅத்தா நூலைப் பெற்றுக் கொண்டு, அதன் அநேகப் பகுதிகளையும் மனனமிட்டுக் கொண்டார். அதன் பின் மக்காவின் கவர்னரிடம் சென்று, தான் மதீனாவில் கல்வி கற்பதற்காக வேண்டி, ஒரு பரிந்துரைக் கடிதம் ஒன்றை மதீனா கவர்னருக்கு எழுதித் தருமாறு கேட்டுக் கொண்டார். இமாம் அஷ்ஷாஃபிஈ அவர்களைப் பற்றி நன்கு அறிந்திருந்த மக்காவின் கவர்னர் அவர்கள், ஒரு பரிந்துரைக் கடிதத்திற்குப் பதிலாக இரண்டு கடிதங்களை எழுதினார், அதாவது ஒன்றை மதீனா கவர்னருக்கும், இன்னொன்றை இமாம் மாலிக்கி அவர்களுக்கும் எழுதிக் கொடுத்தார்.
அந்தக் கடிதத்தைப் பார்த்த இமாம் மாலிக் அவர்கள் அதிர்ச்சி அடைந்தவராக, கல்வி கற்பதற்குக் கூடவா இப்பொழுது பரிந்துரைக் கடிதம் தேவைப்படுகின்றது என்று ஆச்சரியத்துடன் கேட்டார்கள். இமாம் மாலிக் மற்றும் இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கிடையேயான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது, இருவரது சந்திப்பும் இனிமையாகவே நடந்தது, மேலும் இமாம் மாலிக் அவர்களுடனான சந்திப்பானது பல வகையிலும் இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு உதவியது.
முதலாவது, அவர் வாழ்ந்த காலத்தில் மிகவும் பிரபலமாக மதிக்கப்பட்ட இமாம் மாலிக் அவர்களிடம், இளைஞரான இமாம் ஷாஃபிஈ அவர்கள் கல்வி கற்கும் நற்பாக்கியம் கிட்டியது.
இரண்டாவதாக, இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பள்ளியில் கல்வி கற்பதெற்கென்றே பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள மார்க்க அறிஞர்களின் அறிமுகம் கிடைத்தது. இவர்களின் பலரது அறிவுக் கூர்மை மற்றும் திறமைகள் மிகவும் பயனுள்ள மார்க்க விளக்கத்தைப் பெற்றத் தந்தன.
இமாம் மாலிக் அவர்கள் தனது மாணவரான ஷாஃபிஈ அவர்களைத் தனது துணை ஆசியராகவே நியமித்துக் கொண்டார்கள் என்று வரலாறு கூறுகின்றது. ஒவ்வொரு நாள் விரிவுரையின் முடிவிலும் மாணவர்களுக்கு அல் முஅத்தாவைப் படித்துக் கொடுக்கும் பொறுப்பு, இமாம் ஷாஃபிஈ அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இமாம் மாலிக் அவர்கள் இறந்த பின்பு, இமாம் ஷாஃபி அவர்களை நஜ்ரான் பகுதிக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, எமன் தேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள்.
எனினும், இமாம் ஷாஃபிஈ அவர்களது எமன் வருகையானது பலருக்கு பிடிக்கவில்லையாதலால், இவர் கலவரக்காரர்களாகப் பார்க்கப்பட்ட அப்பாஸியர்களின் ஆதரவாளர் என்ற முத்திரை இவர் மீது குத்தப்பட்டது. அதன் பின் அப்பொழுது பாக்தாதைத் தலைநகராக வைத்து, இஸ்லாமிய கலீபாவாக ஆண்டு கொண்டிருந்த கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்கள், இமாம் ஷாஃபிஈ அவர்களை பாக்தாதிற்கு வரவழைத்து, அங்கே வைத்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்கள்.
அல்லாஹ்வின் கருணை மற்றும் இமாம் ஷாஃபிஈ அவர்களின் புத்திக் கூர்மை காரணமாக, கொலைத் தண்டனையிலிருந்து தப்பித்தார்.
இமாம் அவர்களின் கல்வித் தகுதி மற்றும் புத்திக் கூர்மையைக் கண்டு, அதனால் கவரப்பட்ட கலீஃபா அவர்கள், அன்னாருக்கு மரியாதை அளித்ததோடு, அவரிடம் தாராளமாக நடந்து கொண்டார். சிறிது காலம் பாக்தாதில் தங்கி இருந்த இமாமவர்கள், அங்கிருந்த அறிஞர்களுடன் கலந்துரையாடல், விவாதம், போன்றவற்றில் ஈடுபட்டதோடு, மக்களுக்குக் கல்வியைப் புகட்டி வந்ததோடு, பல நூல்களையும் எழுதினார். பின் ஹிஜ்ரி 181 ல் மக்காவிற்கு மீண்டும் திரும்பிய இமாமவர்கள், மூன்றாவது முறையாக பாக்தாதிற்குப் பயணமாகும் வரைக்கும், 17 வருடங்கள் மக்காவிலேயே தங்கி விட்டார்கள். எகிப்திற்குச் செல்வதற்காக இமாமவர்கள் பாக்தாதினை விட்டும் கிளம்பிய பொழுது, இரண்டாவது ஹிஜ்ரி நூற்றாண்டு முடிவடையும் தருவாயில் இருந்தது.
இமாமவர்கள் தனது இறுதிக் காலத்தை எகிப்திலேயே கழித்தார்கள், அங்கேயே ஹிஜ்ரி 204 ஆம் ஆண்டு மரணித்தார்கள். எகிப்தில் மிகவும் பிரபல்யமான பள்ளிவாசலாகப் போற்றப்பட்ட அம்ர் இப்னுல் ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் பள்ளியில் வைத்து, காலையில் இருந்து மதியம் வரைக்கும், ஆண்களும் பெண்களுமாக வந்திருந்து இமாமாவர்களிடம் மார்க்கக் கல்வியைக் கற்று விட்டுச் சென்றார்கள்.
இமாமாவர்கள் தனது பாடத் திட்டத்தை வகைப்படுத்தி, முதலில் குர்ஆன் மற்றும் அதன் விரிவுரை என்றும், அதற்குப் பின் ஹதீஸ் கலை, அதனையடுத்து, இஸ்லாமிய (ஃபிக்ஹு) சட்டக் கலை, அதனை அடுத்து உச்சரிப்பு மற்றும் அரபி மொழி ஆகியவற்றைக் கற்றுக் கொடுத்தார்கள். எகிப்தில் இருக்கும் காலத்தில் தனது எழுத்துப் பணியை விடாது செய்து வந்தார்கள், இஸ்லாமியச் சட்டக் கலை மற்றும் அதன் சட்ட திட்டங்கள் பற்றியும், இன்னும் அவரது மிகப் பிரபலமான நூலான அல் உம்மு நூலையும் இங்கு வைத்துத் தான் எழுதினார்கள். இந்த அல் உம்மு என்ற நூல் தான் ஷாபிஈ மத்ஹபின் மிகப் பிரபலமான நூலாகப் போற்றப்படுகின்றது.
இமாமவர்களின் வாழ்வினை நாம் கூர்ந்து கவனித்தோமென்றால், கல்விக்காக அவர்கள் பல நாடுகள் சென்று, அங்குள்ள மார்க்க அறிஞர்களிடம் கல்வி கற்றதோடு, அதன் மூலம் மார்க்கத்தில் நல்ல புலமையையும் பெற்றுக் கொண்டதைக் காண முடிகின்றது. எனவே தான் மதீனாவில் அவர் பெற்றுக் கொண்ட கல்வியையும், இன்னும் ஈராக் கில் வாழ்ந்த அறிஞர்களின் விவேகத்தையும் இணைத்து, அதன் மூலம் பெற்றுக் கொண்ட அறிவை இஸ்லாமிய உலகுக்கு வழங்க முடிந்தது. அவரது கல்விப் பணியை அடுத்து, அவரது தன்மைகள், நேர்மை, நற்பண்புகள் போன்றவற்றை நாம் காண முடிகின்றது.
உதாரணமாக, பாக்தாதில் அவருக்குக் கிடைத்த அந்தப் பரிசுப் பொருட்களை தான் வைத்திருக்காமல், தான் அந்த இடத்தை விட்டும் நகர்வதற்கு முன்பாகவே, அங்குள்ள தொழிலாளர்களுக்கும், தேவையானவர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விடக் கூடியவராக இருந்தார்.
இன்னும், இமாமவர்கள் பாக்தாதிலிருந்து மக்காவிற்கு பயணப்பட்ட பொழுது, தன்னுடன் கொண்டு வந்திருந்த ஆயிரக்கணக்கான தங்க நாணயங்களை, மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பாகவே மக்காவில் வாழ்ந்த மக்களுக்கு தானமாக வழங்கி விட்டார்கள்.
இன்னும், அவரிடம் இரக்கம், நெகிழ்ந்து கொடுக்கும் தன்மை, நற்குணங்கள் ஆகியவை யாவும், அவரை அறிஞராக மட்டுமல்ல, அவரது இந்தக் குணங்களும் அவரது மதிப்பை என்றென்றும் நாம் உதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய வகையில் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னும், இமாம் அவர்களுக்கு அல் குர்ஆனைப் பற்றி எந்த அளவுக்கு ஆழமான விளக்கம் இருந்தது என்பதை நாம் பார்தால் ஒருமுறை சூரா வல்அஸர் அத்தியாயத்தைப் பற்றி சொல்லும்போது இமாம் அவர்கள் சொன்னார்கள், ”அல்லாஹ் திருமறையின் வேறு அத்தியாயங்களை இறக்காமல் இந்த அத்தியாயம் ஒன்றை மட்டும் இறைக்கி இருந்தாலும் இது மனித குலத்துக்குப் போதுமானதாகும்” என்றார்கள்.
”காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்த, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை)”. (திருக்குர்ஆன்: 103 : 1,2,3)
source: www.tamilislam.com