Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பர்தா என்ன சாதிக்கவில்லை?

Posted on May 15, 2012 by admin

பர்தா என்ன சாதிக்கவில்லை?

  சகோதரி, ஆமினா முஹம்மத் 

முஸ்லிம் பெண்ணாக இருந்ததால் என்ன விதத்தில் என் வாழ்க்கை குறைந்து விட்டது? எங்கள் வீட்டில் 3 பிள்ளைகள். இரண்டு சகோதரர்களும் நானும். மூவரில் யாருக்கும் பாரபட்சம் பார்த்ததில்லை எங்கள் பெற்றோர். எனினும் என் தந்தைக்கு, எல்லா தந்தைகளையும் போல மகளான என் மீது பாசம் ஜாஸ்திதான். அதனால் இஸ்லாத்தை விட்டுவிட்டாரா? இஸ்லாமில்லாமல் எங்களை ஒதுக்கி வைத்தாரா?!

பள்ளிப்படிப்பில் சிறந்த படிப்பாளி என்று வெள்ளி மெடல் வாங்குவதற்கு நான் கஷ்டப்பட்டேனோ இல்லையோ, என் தந்தை மிகவுமே கஷ்டப்பட்டார். பெண்பிள்ளைக்கு படிப்பு எதற்கு என்றோ, வீட்டு வேலை கற்றுக்கொள் என்றோ பெற்றோர் இருவருமே ஒதுக்க வில்லை.

ஒன்று முதல் 5-வரை தமிழ் மீடியத்திலேயே படித்தாலும் 6-வதை ஆங்கில மீடியத்தில் படிக்க வைக்க வேண்டுமென்று அவர் விரும்பியதால் 5-ஆம் வகுப்பின் முழுப்பரீட்சை லீவ் முழுவதும் என்னை ஆங்கிலம் கற்க ஒரு ஹிந்து வக்கீலின் வீட்டிலேயே விட்டுவிட்டார். அப்பொழுது கஷ்டமாக இருந்தது, இப்பொழுது அதன் பலனை அனுபவிக்கிறேன்.

அந்த வக்கீல் சாரும் அவரின் அண்ணன் பெண்ணையும் என்னையும் ஒன்றாகவே நினைத்தார். நான் முஸ்லிம் என்பதால் தனி சலுகையோ, தனி கண்டிப்போ கிடையாது. அவளுக்கு பழனிப்பிரம்பில் ஒன்று போட்டால் எனக்கும் அதே பிரம்பில் கிடைக்கும். கணக்கு சரியாக வரவில்லை என்றால் பாலில்லாத கடுங்காபி இருவருக்குமே உண்டு…!!!!

10வது எக்ஸாம் முடித்ததுமே என் தாய் என்னை திருமணம் செய்து கொடுத்து விடலாம் என்றுதான் ஆசைப்பட்டார்கள். ஆனால் என் தந்தையோ கல்லூரிப்படிப்பு படிக்க வைத்தே தீருவேன் என்று நின்றார். என்னுடன் உடுமலையில் பள்ளிப்படிப்பை முடித்த ஒரு சிலரும் நானும் மட்டுமே கல்லூரி வரை படித்தோம். 10வது முடித்த பின் நிறைய தோழிகளை எங்கேயும் பார்க்க இயலாமலே போயிற்று. நான் பர்தா போட்டு வீட்டில் முடங்கியதால் அல்ல, அவர்களின் வீட்டில் கட்டுப்பாடு கட்டுப்பாடு என்று டீச்சர் படிப்பு அல்லது வீட்டிலிருந்தே படிப்பு என்று மாற்றிவிட்டதால். நான் படிப்பதை என் பெற்றோரோ, உற்றாரோ, தாத்தா பாட்டியோ யாரும் கண்டித்ததில்லை.

மற்ற வீட்டில் எப்படியோ, என்வீட்டில் ஒவ்வொரு உறவினரும் என்னை ஒவ்வொரு பணியில் வைத்துப் பார்க்க ஆசைப்பட்டனர். அதற்கான புத்தகங்களும் எனக்கு அன்பளிப்பாய் வரும். வக்கீலாக, டாக்டராக, எஞ்சினீயராக என… என் பெரிய மாமா அவர் பெண்ணுக்கு கூட அவ்வளவு என்கரேஜ்மென்ட் செய்திருக்க மாட்டார், என்னை எஞ்சினீயர் ஆக்குவது 100% அவர் ஆசையே. (கவனமாக படியுங்கள். இந்த ஸ்டேஜ் வரை ஒருத்தர் கூட முக்காடு போட்டுக்கொண்டு அது முடியுமா? நம் முஸ்லிம் பெண்ணை அவ்வளவு படிக்க, அவ்வளவு தூரம் அனுப்ப முடியுமா? என கூறவில்லை.) இத்தனைக்கும் நான் பிறந்து வளர்ந்தது கோவை என்றாலும், படித்ததெல்லாம் திருப்பூர், தஞ்சை, பொள்ளாச்சி, உடுமலை, இராமனாதபுரம் என பல்வேறு இடங்களில். இத்தனை தூரம் அனுப்பி வைக்கிறாயே, அதுவும் பெண்ணை, என்று யாரேனும் கேட்டால் என் தந்தை சொல்வார், வெளியிடங்களுக்கு போய் தனியாக பழகினால்தான் அவளுக்கு உலகத்தைப் பற்றிய ஞானம் வரும், தனியே நிற்கும் துணிச்சல் இருக்கும் என.

தஞ்சை பாலிடெக்னிக்கில் படிக்கும்போது என்.சி.சியில் அந்த யூனிட்டின் லீடர் பதவி எனது. அவகாசமே தராமல் இரண்டு நாளில் நாக்பூருக்கு போக வேண்டும், டெல்லி போக வேண்டும் என்பார்கள். போவதற்கு முன் பணம் கேட்டு ஒரு போஸ்ட்கார்டு போட மட்டுமே நேரம் இருக்கும் என்னிடம். தந்தையோ தாயோ அதெல்லாம் வேண்டாம் என ஒரு தடவை, ஒரே ஒரு தடவை கூட சொன்னதில்லை. என் அம்மாவின் கவலையெல்லாம் இதைப் பற்றி இராது. பெரியாரின் வழி வந்த பாலிடெக்னிக் என்பதால் ரமதானில் சஹரே செய்யாமல், தண்ணீர் மட்டும் அருந்தி நோன்பு வைப்பதையும், ஹாஸ்டலில் ஹலால் ஹராம் குழப்பங்களால் சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதும்தான் அவர்களின் பெரிய்ய்ய்ய்ய்ய கவலை. :))

இராமனாதபுரத்தில் படிக்கையில் வாழ்க்கையில் அதுவரை நினைக்காத அளவில் எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. டெல்லியில் நடக்கும் குடியரசு தின விழாவில் என்.எஸ்.எஸ் சார்பாக அணிவகுப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பு. தமிழ்நாட்டிலிருந்து 5 பேர் மட்டுமே. 2 ஆண், 3 பெண், அதிலும் என்னை லீடராக போட்டிருந்தனர். ஃபார்ம் எல்லாம் பூர்த்தி செய்து அனுப்பிய பின், அம்மா அப்பாவிற்கு து’ஆ செய்யுங்கள் என ஃபோன் செய்துதான் செய்து சொல்கிறேன். என் கல்லூரியும் இஸ்லாமிய மேனேஜ்மென்ட் தான். யாரும் இதை எதிர்க்கவில்லை, மாறாக என்னை விட அவர்கள் மகிழ்ச்சியானார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் பின்னும் மாநில அளவில் அரசின் விருதுகள் வாங்கியபோதும் அதே இஸ்லாம்தான், அதே முக்காடிட்ட முஸ்லிம்பெண்தான்…..

எங்கள் கல்லூரி படிப்பு முடிந்ததும் பன்னாட்டுக் கம்பெனியில் எங்கள் பேட்சில் முதன் முதலில் வேலை பெற்றிட்டவளும், அடியேனே…. பெரிய நிறுவனம் ஆயிற்றே… முக்காடிட்டு போனால் இன்டர்வியூ செய்வார்களா? வேலை கிடைக்குமா என்று நானும் யோசிக்கவில்லை, அதற்கென என்னை சென்னை வரை தனியாக அனுப்பி வைத்த பெற்றோரும் யோசிக்கவில்லை. இறைவன் நாடியதை மட்டுமே எதிர்பார்த்தோம். அல்ஹம்துலில்லாஹ், பர்தாவை துளி கூட சட்டை செய்யாமல் அறிவுக்கு மதிப்பளித்து எனக்கு அந்த வேலை கிடைத்தது அல்லாஹ்வின் அருளன்றி வேறென்ன?? என்னுடன் மேக்கப்பிட்டு, அழகிய உடலை தெரியப்படுத்தும் இன்னும் அழகிய உடைகளை அணிந்த பெண்களும் வந்திருந்தார்கள், கோவையிலிருந்து, அட்டெண்ட் செய்த ஏழு பேரில் நான் மட்டுமே தேர்வாயிருந்தேன் (ஒரு வேளை பர்தா போட்டதால கிடைச்சிருச்சோ??)

அத்துடன் நிற்கவில்லை என் கற்கும் ஆர்வமும், என் தந்தையின் ஆதரவும், கோவை நகரில் பர்தா போட்டு ஸ்ப்லென்டர் ஓட்டிய ஒரே பெண் நானாகத்தான் இருக்க முடியும். அதுவும் எனக்கு சங்கோஜமாக இருந்ததால் நிகாப் போட்டு ஓட்டுவேன்…!!!!! இதனால் ஸ்ப்லென்டர் வர மாட்டேன் என்று சொல்லி விட்டதா அல்லது லைசன்ஸ் தரமாட்டேன் என்றுவிட்டார்களா?? நாகப்பட்டினத்தில் சுனாமி தாக்கிய போதும் தனியே என்னவருடன் போய் நிவாரண பணிகளை செய்திருக்கிறேன். அதே பர்தாவுடன், கம்யூனிச தோழிகளுடன் இணைந்து….. பர்தாவை கண்டதும் மீண்டும் சுனாமி வரவில்லையே??

இதில் எந்த இடத்தில் பர்தா பிரச்சினையாகிவிட்டது? என் புகுந்த வீட்டில் உள்ளோர் அனைவரும் இன்றும் பிராமணர்தான். அவர்களும் இது வரை பர்தாவை பிரச்சினையாக்கியதில்லை. இருந்த போதிலும் என் கணவர் அழகாய் எடுத்துச் சொல்லி புரிய வைத்தார்.

இன்றும் அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்திலேயே பணி புரிகிறேன். ஆம், ஒரு முடி தெரியாத வண்ணம் போடப்பட்ட பர்தாவுடன்தான் பணிபுரிகிறேன். என்னுடைய குழுவில் இருப்பவர்கள் முதற்கொண்டு மேனேஜர் வரை யாரும் இது வரை இதை பிரச்சினையாக சொன்னதில்லை. எனக்கு தெரிந்து டிரெஸ் விஷயத்தில் மிக மிக கடினமாக இருப்பது எங்கள் அலுவலகமே. கோடைக்காலம் வந்தாலும் கால் தெரியும் ஸ்லிப்பரோ, முழங்காலுக்கு மேலான ஆடையோ, தோள்பட்டை இல்லாத உடையோ யாருக்கும் அனுமதியில்லை. (ஜீன்ஸ் கூட ஏதாவது ஒரு சமயத்தில் மெயில் அனுப்பி வைப்பார்கள். இன்ன காரணத்தை முன்னிட்டு இந்த தேதி ஜீன்ஸ் அணியலாம் என…!!!!) இப்படி இந்த எதிலும் பர்தா ஒரு பிரச்சினையாக யாரும் எடுக்காத நிலையில், அன்பர். திரு.தியாகராஜனுக்கு மட்டும் ஏன் ஃபேர் அன்ட் லவ்லி போட்ட மாதிரி ஆகிறது என்று புரியவில்லை…. ஒரு வேளை இப்படி இருந்தால் இன்னும் பலரை ரசிக்க முடிவதில்லையே, மனக்கோட்டையில் டூயட் பாட முடிவதில்லையே என்று இருக்குமோ??

இங்கே, அமெரிக்காவில் வேலைக்கான விசா கிடைத்ததும் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் கன்சல்டன்ஸி அனுப்புமே என்று கவலையுறும்போதும் என் கணவர் சொன்னது, என் அப்பாவின் வாக்கையே. “தனியாக ஒரு ஆறு மாதமாவது வேலை செய்தால்தான் அமெரிக்க நிறுவனங்களின் கல்ச்சர் புரியும், தனியே எங்கும் செல்ல, எதிர்கொள்ள துணிச்சல் கிடைக்கும் என”. ஆக இதுவரை எனக்கு இது வித்தியாசமானதாகவோ, பிரச்சினையாகவோ தெரியவில்லை. இது தடையாக தெரிபவர்களுக்கு அடி மனதில் ஆசைகள் வேறு விதம் என்றுதான் புரிகிறது.

இப்பொழுதும் இதே பர்தாவுடன் என் கணவரின் தாவாஹ் வேலைகளுக்கும் மஸ்ஜித் வேலைகளுக்கும் உதவுகிறேன். என் பிள்ளைகளின் வளர்ச்சியை மற்றவர் மெச்சும் வகையில்தான் வைத்துள்ளேன். அல்ஹம்துலில்லாஹ். இதெல்லாம் பர்தா இல்லாமலும் செய்யலாமே என்று கேட்டால் என் பதில் ஒன்றே ஒன்றுதான். தன்னைப் படைத்தவனிடம் நேர்மையில்லாத எவரும் மற்றெவருக்கும் நேர்மையாய் இருக்க முடியாது. என் நேர்மை, என்னைப் படைத்த இறைவனின் வாக்குகளை மதிப்பதில் உள்ளது. அப்ப உங்களுக்கு???

உங்கள் சகோதரி,

ஆமினா முஹம்மத்

source: http://www.islamiyapenmani.com/

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb