முஸ்லிம் பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன?
சகோதரி. ஆயிஷா பேகம்
உலகில் வேறு எந்த மதமோ அல்லது சமுதாயமோ வழங்கிராத சிறப்பும், மதிப்பும், மரியாதையும், கண்ணியமும், உரிமையும், இஸ்லாத்தில் பெண்களுக்கு உண்டு. இதில் கல்வி கற்பது மட்டும் எப்படி விதி விலக்காகும்..?
இங்கு கல்வி கற்பதில் ஆண் என்றும் பெண் என்றும் எந்த பேதமும் இல்லை..! ஆணுக்கு கல்வி கற்க எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவு சம உரிமை பெண்களுக்கும் உண்டு!.
குர்ஆனில் எங்கும் பெண்கல்வியை மறுத்த்தற்கான வசனம் இருக்காது. அதே போல மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் எந்த இடத்திலும் பிரித்து காட்டப்பட வில்லை.
மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே உலக வாழ்க்கைக்கு தேவையான கல்வி தான். இந்த சம உரிமை சட்டம் 7வது நூற்றாண்டிலிருந்தே இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாக்கிவிட்டது.
இஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம்.
அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள்.
பஹ்ரைனில் 73%-மும்,
பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள்.
ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள்.
சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.]
முஸ்லிம் பெண்களுக்கு கல்வி அவசியமா என்ன?
“கல்வி கற்பது முஸ்லிமான ஆண், பெண் அனைவருக்கும் கட்டாயக் கடமையாகும்” (அல் ஹதீஸ், புகாரி)
பொதுவாக இங்கு அனைவரும் கேட்கும் கேள்வி ஏன் உங்கள் மதத்தில் பெண்களை அதிகம் படிக்க வைக்க மாட்டேன் என்று சொல்கின்றீர்கள்? உங்கள் மார்க்கம் உங்களை படிக்க வேண்டாம் என சொல்கிறதா..? இது ஒருவகையில் உங்களை அடிமை படுத்துவது போல் தானே?? என்பது..! இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இருக்க முடியாது என்றே தோன்றுகிறது..! உண்மையில் இஸ்லாத்தில் அப்படி பட்ட கருத்து சொல்ல பட்டு இருக்கிறதா என்றால் இல்லை இல்லை என்ற ஆணித்தரமான பதிலை தான் நாம் தர வேண்டி இருக்கிறது ..
அல்குர்ஆனின் முதல் வசனமே ‘இக்ரஃ’ நபியே நீர் ஓதுவீராக, கற்பீராக என்ற ஆணையுடன்தான் அருளப்பட்டிருக்கிறது என்பதை வைத்தே இஸ்லாம் கல்விக்கு அளித்துள்ள முக்கியத்துவத்தை விளக்கிக்கொள்ளலாம்.
மேலும்..
எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கல்வியின் ஆய்வின் முக்கியத்துவத்தை பல்வேறு ஹதீஸ்கள் மூலம் வலியுறுத்தியுள்ளார்கள். அவற்றில் சிலவற்றை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.
“ஒருவன் கல்வி கற்பதற்காகப் புறப்பட்டு வெளிக்கிளம்பும் போது மலக்குகள் மண்ணில் உள்ளவர்கள், விண்ணிலுள்ளவர்கள் மட்டுமன்றி கடலிலுள்ள மீன்கள் உட்பட அவனுக்காக துஆ பிரார்த்தனை செய்கின்றன. (அபூதாவூத் 3634)
“மறுமையில் நபிமார்களும், அறிஞர்களும் எவ்வித வேறுபாடும் காணப்படாது. நபிமார்களுக்குரிய நபித்துவம் என்று அந்தஸ்தை தவிர” உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும், கல்வி வழங்கப்பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.அல்குர்ஆன் (58 : 11)
அறிவுடை யோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை.அல்குர்ஆன் (2 : 269)
அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நல்லுபதேசம் பெறுவோரெல்லாம் அறிவுடையோரே (அல்குர்ஆன் 39:9)
மேற்காணும் குர்ஆன் வசனங்கள். மற்றும் ஹதீஸ்கள் கல்வியின் சிறப்பையும் அது இரு பாலாருக்கும் பொதுவானது என்பதையும் எந்த சந்தேகத்திற்கும் இடம் இன்றி நிருபிக்கின்றன…!!! மேலும் பத்ரு போர்க்களத்திலே சிறைக்கைதியாகப் பிடிபட்ட ஒவ்வொரு கைதியும் விடுதலையாவதற்கான விலையாக மக்களில் பத்து பேருக்கு கல்வி கற்றுத் தர வேண்டும் என்பது வரலாற்றில் நாம் அறிந்த ஒன்றே!
அக்காலத்திய இஸ்லாமிய பெண்கள் பற்றி சில :
சஹாபிய பெண்களின் அறிவு திறன் பிரமிக்க வைக்கிறது .அவர்கள் கல்வி கற்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வந்துள்ளார்கள் ..
ஒருமுறை ஒரு சஹாபிய பெண் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து எப்போதும் உங்களை சுற்றி ஆண்களே இருக்கிறார்கள் அதனால் எங்களால் உங்களை நெருங்கி வந்து மார்க்கத்தில் எங்களுக்கு தோன்ற கூடிய சந்தேகத்தை கேட்க முடிய வில்லை என சொன்னதும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்கு என்று வாரத்தில் ஒரு நாளை ஒதுக்கினார்கள் என்பது இஸ்லாம் பெண் கல்வியை தடுக்கிறது என்று கூப்பாடு போடும்… ஒரு சிலருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.. (எப்புடி தெரியும்? இந்த மாதிரி நல்ல விஷயம் எல்லாம் உங்க கண்ணுல படாது.. அப்புடியே பட்டாலும்,.. கண்டும் காணாம.. இஸ்லாதுல வேற எதைபத்திடா குறை சொல்லலாம்னு மட்டும்தானே யோசிப்பீங்க??)
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் கல்வி ஞானத்தின் காரணமாக அவர்கள் மார்க்கம் குறித்த அடிப்படை சட்டங்கள் ஷரியத் சட்டங்கள் ஆகியவற்றை நன்கு அறிந்தவர்களாகவும் ,நல்ல ஆலோசனை சொல்ல கூடியவர்களாகவும் ,நன்கு விவாதம் செய்ய கூடியவர்களாக விளங்கினார்கள்.அவர்கள் மூலமாக நமக்கு கிடைத்த நபி மொழிகளின் எண்ணிக்கை 2210 ஹதீஸ்கள் ஆகும். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் மனைவி கல்வி அறிவில் சிறந்து இருப்பதை தடை செய்யவில்லை.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களது சந்ததியில் வந்த நஃபீஸா எனும் பெண் ஹதீஸ் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தார். அவரின் போதனை வகுப்புகளில் இமாம் ஷாபிஈ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களும் கலந்து கொண்டு அறிவை பெற்றுள்ளார்.
பாக்தாத்தில்வாழ்ந்த ஷெய்கா சுஹதாஅவர்கள் இலக்கியம் அணியிலக்கணம் ,கவிதை,போன்றவற்றில் தேர்ச்சி பெற்று திகழ்ந்தார்.
இது எல்லாவற்றுக்கும் மேலாக பதினெட்டாம் நூற்றாண்டில் நைஜீரியாவில் ஒரு மிகபெரும் கல்வி புரட்சி ஏற்பட காரணமான முஸ்லிம் பெண்களுக்கு தன் வாழ்க்கையை அசத்தலான முன்னுதாரணமாக்கிய நானா அஸ்மா என்ற புரட்சிப்பெண்… !!
இவ்வாறு வாழ்வில் பல்வேறு துறைகளில் கற்று தேர்ச்சி பெற்று ஜெயித்து காட்டிய இஸ்லாமிய பெண்களின் எண்ணிக்கையை வரையறுத்து இவ்வளவு தான் என்று அறிதியிட்டு கூற முடியாது.. கல்வியின் மூலமாக அவர்கள் சமூகத்திலும் அவர்களால் முடிந்த பல்வேறு பணிகளை மார்க்கத்தின் வரைமுறையில் வாழ்ந்து காட்டி உள்ளார்கள்..
உலகில் வேறு எந்த மதமோ,அல்லது சமுதாயமோ வழங்கிராத சிறப்பும், மதிப்பும், மரியாதையும், கண்ணியமும், உரிமையும், இஸ்லாத்தில் பெண்களுக்கு உண்டு. இதில் கல்வி கற்பது மட்டும் எப்படி விதி விலக்காகும்..? இங்கு கல்வி கற்பதில் ஆண் என்றும் பெண் என்றும் எந்த பேதமும் இல்லை..! ஆணுக்கு கல்வி கற்க எந்தளவுக்கு உரிமை இருக்கிறதோ அதே அளவு சம உரிமை பெண்களுக்கும் உண்டு!. குர் ஆனில் எங்கும் பெண்கல்வியை மறுத்த்தற்கான வசனம் இருக்காது. அதே போல மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் எந்த இடத்திலும் பிரித்து காட்டப்பட வில்லை.மார்க்கத்தில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்துமே உலக வாழ்க்கைக்கு தேவையான கல்வி தான். இந்த சம உரிமை சட்டம் 7வது நூற்றாண்டிலிருந்தே இஸ்லாம் ஒவ்வொருவருக்கும் கட்டாயக் கடமையாக்கிவிட்டது.
ஓதுவீராக! மேலும் உன் இறைவன் எத்தகைய மாபெரும் அருட்கொடையாளன் எனில்,அவனே எழுதுகோலின் மூலம் கற்றுக் கொடுத்தான்;மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்று கொடுத்தான்!” (96;3-5)
இந்த வசனத்தில் ஓதுவீராக என சொன்னது ஆண் பெண் என இருவருக்கும் தான் .மார்க்கத்தில் பொதுவாக எது ஒன்றையும் குறிப்பிட்டு சொன்னால் அது இரு பாலாரையும் குறிக்கும்..ஆணுக்கு என்றும் அல்லது பெண்ணுக்கு என்றும் என தனித்தனியாக சொல்ல வேண்டும் என்றால் அது பிரத்தியேகமாக குறிப்பிட பட்டிருக்கும்.கல்வி கற்பதில்ஆணுக்கு ஒரு சட்டம் பெண்ணுக்கு ஒரு சட்டம் என எதுவும் கிடையாது..ஆனால் பெண் என்பதால் அவளின் பாதுகாப்பு கருதி மார்க்கம் அனுமதிக்க பட்ட விதத்தில் கல்வி கற்க வேண்டும். கோ-எஜுகேஷன்! இதை மட்டும் தவிர்த்து கொள்ள வேண்டும்… இதை தவிர அவர்களுக்கு வேறு எந்த நிபந்தனையும் விதிக்கப்பட வில்லை.. !!
மார்க்கத்தில் சொல்ல பட்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் எந்த ஒரு விஷயத்தையும் நன்கு ஆராய்ந்து பார்த்து முடிவெடுங்கள் என்பது..
அதன் படி நாம் சரியான ஒன்றை தேர்ந்தெடுத்து தெளிவு பெறுவதற்கு ஒவ்வொருவருக்கும் கட்டாயம் கல்வி அறிவு அவசியம்.இதில் எந்த வித பேதமும் இல்லை. நன்கு கல்வி கற்ற ஒருவரால் தான் சரி எது தவறு எது என்பதை நன்கு சீர் தூக்கி பார்க்க முடியும். ஆக பெண்கல்வியை மறுத்து அறிவை மழுங்க செய்ய வேண்டிய அவசியம் இஸ்லாத்தில் இல்லை.ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எப்படி நம் இபாதத்துகளை நிறைவேற்றுவது கட்டாய கடமையோ அதே போல கல்வி கற்று தன் அறிவை மேம்படுத்தி கொள்வது கட்டாய கடமை ஆகும்..!!
எந்த ஒரு சமூகமும் அதன் தனித் தன்மையோடு மேலே எழும் போது அங்கு ஆண் பெண் சார்ந்த பணிகள், கடமைகள், தேவைகள் அவசியமான ஒன்று. இதற்கு அடிப்படையாக இருந்து அதை மேம்படுத்தி செம்மைபடுத்துவதற்க்கு கல்வி அறிவு அவசியம் ..இதில் எந்த ஆண் பெண் விதிவிலக்கில்லை. அதிலும் எந்த சமுதாயத்தில் பெண்கள் அறிவோடும் பண்பாடோடும் செயல்பாடோடும் இருகின்றார்களோ அந்த சமுதாயம் மிக நல்லதொரு சமுதாயமாக விளங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை..!! தன் பிள்ளைகளை நல்ல ஒழுக்கத்தோடு சரி தவறுகளை எடுத்து சொல்லி வளர்க்க வேண்டிய மிக பெரிய பொறுப்பு ஆண்களை விட பெண்களிடம் தான் உள்ளது…! எனவே பெண்கல்வி அவசியம் என்பதை இஸ்லாத்தில் பல இடங்களில் உணர்த்தப்பட்டு உள்ளது..!
முஸ்லிம்களில் பெண்கள் மட்டும் இல்லை ஆண்களுமே கூட சரியான முறையில் மேற்கல்வியை தொடர்வதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை..!!!
ஏன் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் கல்வி கற்க வில்லை என்றால் அவர்களின் அறியாமையையும் கல்வி பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாததும் தான் காரணமே தவிர இதற்கு மார்க்கம் ஒருநாளும் காரணமாக இருக்க முடியாது.. !!!
மேலும் பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் காரணத்தினால் கல்விபயிலும் வயதிலேயே கல்வியை தூர தூக்கியெறிந்து குடும்ப சுமையை ஏற்கவேண்டியிருந்தது. ஆண்களின் குறைவான கல்விதகுதியை காரணம் காட்டி பெண்கல்வியை மறுத்ததன் விளைவே இன்றைய இஸ்லாமிய சமூகம் கல்வியில் பின் தங்கிய நிலைக்கு காரணமாக அமைகிறது. அது போக பழமையின் பிற்போக்குதனத்தில் ஊறிய முந்தைய தலைமுறைகள் சமுதாயத்தோடு ஒன்றாய் கலந்துவிட்ட பெண்ணடிமைத்தனத்தை இஸ்லாத்திலும் இஸ்லாத்தின் பெயரை கொண்டு ஒடுக்க நினைத்தனர். அதன் விளைவாக பெண்கல்வி மறுக்கப்பட்டிருந்தது. அந்த காலகட்டத்தில் தமிழ் குர்ஆனும் படிப்பதும் அரிது, மார்க்க கல்வியை சரியாய் செயல்படுத்துபவர்களும் குறைவு. எனவே பெண்கல்வி மறுப்பு என்பது தட்டிகேட்கப்படாமலேயே இருந்தது. ஆனால் இன்று காலம் மாறிவிட்டது. 1986க்கு பிறகு தமிழகத்தில் ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சிக்கு பின் கல்வி கற்றவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பெண்களின் கல்வி விகிதமும் கூடிக்கொண்டே வருகிறது. ஒவ்வொரு முஸ்லிமும் தன் சமுதாயத்தை கொஞ்சம் சீர்தூக்கி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறனர் என்பதே நிதர்சன உண்மை….!!
மார்க்க கல்வி என்றும் உலக கல்வி என்றும் தனி தனியாக ஒன்று இல்லை என்பதையும் இதில் ஒன்று இருந்து ஒன்று இல்லையென்றால் நாம் இதன் பொருட்டு இழப்புக்குள்ளாவோம் என்பதையும் ஆண் பெண் இருவருமே தங்கள் கல்வி அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் உறுதியாக வலியுறுத்துகிறது. இதை உணர்ந்து அதை சொல் செயல் இரண்டிலும் நிலைநாட்டி நல்லதொரு சமுதாயம் உருவாக நாம் முயற்சிக்க வேண்டும் அதற்கு நமக்கு கருணை காட்டி நம் அனைவரையும் ஈருலகிலும் வெற்றி பெற்ற மக்களாக எல்லாம் வல்ல இறைவன் நாடுவானாக.. ஆமீன்..
டிஸ்கி : கல்வியை இஸ்லாம் வலியுறுத்தும் அளவுக்கு வேறு எந்த மதமும் வலியுறுத்தியதில்லை . கல்வி கற்பவர்களை ஆண் பெண் பேதமின்றி இஸ்லாம் பாராட்டுகிறது. ஆயினும் ஆண்களும்,பெண்களும் சேர்ந்து கல்வி கற்கும் முறையை மட்டுமே இஸ்லாம் எதிர்க்கிறது… அதுவும் பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே தவிர வேறில்லை…!!!!!
– சகோதரி. ஆயிஷா பேகம்.
பின்வரும் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளுங்கள்….
சில ஆண்டுகளுக்கு முன்பு முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளின் அறிவியல் முன்னேற்றம் குறித்து “புதிய அறிவியல் பொற்காலம்?” என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிட்ட பாரம்பரியமிக்க அமைப்பான ராயல் கழகம், முஸ்லிம் பெண் கல்வி குறித்து பின்வருவதை தெரிவிக்கின்றது:
முஸ்லிம் பெண்கள் என்றாலே அவர்கள் அணியும் உடைக்கு தான் ஐரோப்பிய பார்வையாளர்கள் முக்கியத்துவம் கொடுப்பதாகவும், ஆனால், இஸ்லாமிய உலகின் பெண்களின் நிலையானது இந்த தலைப்புச்செய்திகள் சித்தரிப்பதை காட்டிலும் வித்தியாசமானது என்று குறிப்பிடுகின்றது ராயல் கழகம். இதற்கு காரணங்கள் இல்லாமலில்லை.
இஸ்லாமிய உலகின் 13 நாடுகளின் பெண் அறிவியல் பட்டதாரிகளின் சராசரி, அமெரிக்க சராசரியை (41%) விட மிக அதிகம். அல்ஜீரியாவின் அறிவியல் பட்டதாரிகளில் 71% பேர் பெண்கள். அதுபோல பஹ்ரைனில் 73%-மும், பாலஸ்தீனில் 49%-மும் பெண்கள்.
ஈரானின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களில் 70% பேர் பெண்கள். சவூதி அரேபியாவின் மாணவர்களில் 58% பேர் பெண்கள்.
அக்காலத்திலேயே பெண்களுக்கு கல்வியில் அளிக்கப்பட்ட சுதந்திரமும் பெண்களின் கல்வி அறிவும் வியக்க வைக்கிறது.
இடைபட்ட காலத்தில் சிலர் பெண்கல்வியை மறுத்தனர் என்பது வேதனைக்குரிய விஷயம். அதற்கு அவர்கள் கூறிய காரணமும் வேதனைக்குரியதே! எல்லாத்தையும் இஸ்லாம் மேல் பழிபோட்டு “எங்க இஸ்லாத்தில் பெண்கள் அதிகம் படிக்க கூடாது” என சொன்னவர்கள் உண்டு!
நீங்கள் சொன்னது போல் ஆணின் படிப்பறிவை காரணம் காட்டி பெண்கல்வியை மறுத்து வந்தனர். இப்போது நிலமை மாறிவிட்டது. பலரிடையே இஸ்லாமிய விழிப்புணர்வு ஏற்ட்டுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.
நம் தலைமுறையில் பெண்கள் கல்விகற்க தேவையில்லை என்ற மாறி வருகிறது. பல இஸ்லாமிய தொண்டு நிறுவனங்களும் வெளிநாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் படிக்க வசதியில்லாத ஏழைகுடும்பத்து மாணவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர். அடுத்த தலைமுறை 100 சதவீதம் கல்வி பயின்றவர்களாக ஆக்க பாடுபடுவோம். இன்ஷா அல்லாஹ்.
source: http://www.islamiyapenmani.com/search