புக்கூரும் இறையருளும்
عن صخر الغامدي رضي الله عنه قال:
قال رسول الله صلى الله عليه وسلم
اللهم بارك لأمتي في بكورها
உயிருக்குயிரான உயிரினும் மேலான சத்தியத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியதாக நபித்தோழர் அவர்கள் அறிவிக்கிறார்கள்
யா அல்லாஹ் என் சமூகத்திற்கு புக்கூரின் (அதனுடைய காலை செயல்களில் / ஆரம்ப செயல்களில்) பரக்கத் செய்வாயாக.
மனித வாழ்க்கையில் எப்பொழுதும் “முதலுக்கு” ஒரு தனிச்சிறப்புண்டு.
முதல் வேலை, முதல் சம்பளம், முதல் பயணம், முதல் மதிப்பெண், முதல் தொழில் என எல்லாம் மனதில் நிரம்பி இருக்கும் செய்தி.
அந்த முதல் தான் தனி மனித வாழ்விலும், சமூக வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது.
ஆகையால் தான் FIRST IMPRESSION IS BEST IMPRESSION என்று சொல்லுவார்கள்.
அதுபோன்றே தமிழில் சொல்வார்கள் முதல் கோணல் முற்றிலும் கோணல்.
விளையும் பயிர் முளையிலே தெரியும்.
இவையெல்லாம் நம் தமிழ் மரபுகளிலிருந்து நம்மிடையே இளைமையிலேயே விதைக்கப்பட்ட விஷயங்கள்.
பொதுவாக நபியவர்கள் மனிதவாழ்வில் இம்மை மறுமையில் வளம் சேர்க்கிற விஷயங்களில் தங்கள் சமுதாயத்திற்காக நலத்திற்கும், வளத்திற்கும்
வழிகாட்டுதலும் இறையஞ்சாமல் விடவில்லை.
ஒவ்வொரு வருடத்தின் ஆரம்பதிலும் நாம் நம் வாழ்க்கை மாற்றத்திற்காக சில பல திட்டங்களை வகுக்கிறோம்.
அவற்றில் சில வாழ்வில் வருகிறது, மற்றவை டைரிகளோடு தேங்கிபோகிறது.
ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்த போது குணநல மேம்பாடு குறித்த ஒரு பேச்சு வந்தது, உடன் நான் சொன்னேன்.
”முதலில் என்ன மாற்றம் நம்மிடம் வரவேண்டும் என்ற தெளிவு நமக்கு வேண்டும். ஆகவே, அவற்றை ஒரு பேப்பரில் எழுதவேண்டும்”.
உடனே அந்த நண்பர் சொன்னார், ”ஹஜ்ரத் அப்படி எழுதி வைக்கப்பட்ட இரண்டு, மூன்று டைரிகள் என்னிடம் உண்டு, அதில் நிறைந்த செய்திகளும் உண்டு”.
அப்பொழுது தான் விளங்கியது சும்மா எழுதிவைப்பதால் வேலை நடக்காது வெற்று சட்டியில் கடலை வேகாது என்று,
வருட முதல் நாள், கல்யாண நாள், பிறந்த நாள் மாற்றங்கள் என்பதெல்லாம் நம் சோம்பேரி மனதிற்கு நாமாக தடவிக்கொள்ளும் ஒரு உட்பூச்சு.
அந்த ஒரு நாள் மட்டும் நாம் நம்பிக்கை கொள்வதால் எந்த மாற்றங்கள் நிகழ்கின்றன என்பதை நாம் நம் கண்னொதிரே பார்த்துக்கொண்டுள்ளோம்.
சிறு துளி பெருவெள்ளம் என்பது போல,
பல நாட்களின் தொகுப்புதான் வருடங்கள்
ஆகையால் நாட்களில் தான் வருடங்களுக்கு உரங்கள்.
நகர்கினற நாட்களெல்லாம் நம்மை நகர்த்துகின்ற நாட்கள்.
நாட்கள் நகரவில்லை நாம் தான் நகர்ந்துகொண்டுள்ளோம்.
கிழிகிற காலண்டரின் திகதியில் கிழிந்து போதுவது நாம் வாழ்வே.
நாட்கள் சிறப்பாகிற போது வருடங்கள் சிறக்கின்றன.
வருடங்கள் சிறக்கிற போது வாழ்வே நிம்மதியாகிறது.
ஒரு வழக்கு சொல் உண்டு ” பெரிய மனிதர்கள் என்பவர்கள் பெரும் பெரும் செயல்களை செய்பவர்கள் இல்லை மாறாக, சின்ன சின்ன விசயங்களில் கவனமாக இருப்பவர்கள்.
ஆகையால் தான் நபிபெருமான் அவர்கள் வாழ்க்கையை கவனமாக கழிக்க விரும்புகிறவர் நாட்களில் கவனமாக இருக்கட்டும் என்ற அடிப்படையில்.
தன் உம்மத்தின் காலை நிலமைகளுக்காக தஆ செய்தார்கள்.
காலையில் எழுந்து இறைவனை தொழுதுவிட்டு, நாம் செய்யும் எல்லா செயல்களும் போற்றுதலுக்குரியதாக அமையும் என்று கூறினார்கள்,
இன்னும், காலை வேலையில் தான் இறைவன் தன் அடியார்களுக்கு ரிஜ்க்கை பிரிக்கிற நேரம் என்று கூறினார்கள்.
காலையில் தொழுக்கைப்பின் தூங்குதல் தவிக்கப்படவேண்டிய ஒன்று.
அதிகமாக காலை தொழுகைக்கு பின் தூங்கும் காரியம் நம்மிடையே பழக்கமாகி போன ஒன்று.
இது கண்டிப்பாக மாற்றப்படவேண்டிய ஒன்று.
நபிபெருமான் அவர்கள் படைகளை அனுப்புவதாக இருந்தால் காலை வேலையில் அனுப்புவார்கள்.
சஹர் அல் கா(G)மிதி என்ற மனிதர் ஒரு வியபாரியாக இருந்தார் அவர் தன் வியபார சரக்குகளை காலையில் அனுப்புவர். அதன் மூலம் மிகப்பெரும் செல்வம் ஈட்டினார்.
இந்த ஹதீஸுக்கு விளக்கம் எழுதுகின்ற “துஹ்பதுல் அஹ்வதி” என்ற அரபி விரிவுரையில் ஆசிரியர் அல்லாமா முபாரக்பூரி இவ்வாறு எழுதுகிறார்
“நபியவர்களின் சுன்னாவை பின்பற்றியதன் காரணமாக பெரும் செல்வந்தர் ஆனார், இன்னும் நபியவர்களின் துஆவிற்கு இலக்கானார்” .
இன்னும், இந்த “புக்கூர்” என்ற வார்த்தை எல்லா செயல்களிலும் ஆரம்பத்திற்கு சொல்லப்படும்.
தென்னை மரத்தின் ஆரம்பமாக வருகிற பாலைக்கும் புக்கூர் என்று தான் சொல்லப்படும்.
ஆகையால், இது காலை வேலையில் சோம்பி இருக்காதவருக்கு இறை உதவியைப்பெற்றுத்தருவதோடு.
எந்த ஒரு காரியத்தையும் முதன் முதலில் செய்ய ஆரம்பிப்பவரும் இந்த பிராத்தனைக்கு இலக்காகுவார்.
நபிபெருமான் அவர்கள் பிரயாணத்தை பற்றி குறிப்பிடும் போது
عليكم بالدلجة لان الارض تطوى بالليل
நீங்கள் உங்கள் பிரயாணத்தை அதிகாலையில் ஆக்கிக்கொள்ளுங்கள் ஏனெனில், இரவில் பூமி சுருட்டப்படுகிறது என்று கூறினார்கள்.
இவற்றையெல்லாம் உணர்ந்து தான் சமூகத்திற்கு ஆர்வமூட்டினார்கள்.
என் சமுதாயத்தவரின் கன்னி முயற்ச்சியில் என் இறைவனின் வற்றாத கருணை தவறாமல் பொழிகிறது என்று சொல்லிச்சென்றாகள்.
நம் காலைகளை பாதுகாப்பது கொண்டு நாம் காலங்களை பாதுகாப்போம்.
நம் கன்னி முயற்சியை துவங்குவது கொண்டு இறைவனின் கருணையை நமதாக்குவோம்.
– பேரா. இஸ்மாயில் ஹஸனீ