பலதாரமணத்தை ஊக்குவித்தால் என்ன?
கேள்வி : முஸ்லிம் சகோதரர்கள், அல்லாஹ் அனுமதி அளித்த குறைந்தபட்ச 2 திருமணமாவது செய்தால் என்ன?
வரதட்சணை கொடுமையினால் திருமணம் ஆகாமல் பல முதிர் கன்னிகளும், சிறுவயதில் கணவனை இழந்த இளம் விதவைகளும், பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், திருமணம் செய்ய தகுதி படைத்தோர் அப்படி செய்யவும், அப்படி இயலாதோர் பிரச்சாரமாவது செய்தால் என்ன?
இவ்வாறாவது விதவைகளின் வாழ்வில் ஒளியையும், சமுதாய மானத்தையும் காப்பாற்றினால் என்ன?
2-ஆம் திருமணத்தை வலியுறுத்தினால் என்ன? – ஒரு பெண் வாசகி
பதில் : முதல் திருமணம் செய்வதாக இருந்தாலும் அது தேவைக்காகத்தான் செய்ய வேண்டும். இரண்டாவது திருமணம் என்றாலும் அதுவும் தேவைக்காகத் தான் செய்ய வேண்டும்.
பெரும்பாலான ஆண்களுக்கு ஒரு மனைவியே போதும் என்ற நிலைதான் உள்ளது. உடல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இதற்கு சக்தி இருப்பதில்லை. ஒரு மனைவியையே மகிழ்விக்க முடியாமல் மனவிமார்கள் பஞ்சாயத்து வைக்கக் கூடிய அளவுக்குத் தான் இங்கே நிலைமை உள்ளது.
நம் நாட்டில் உள்ள உணவுப் பழக்கமும் ஆண்களுக்கு உகந்ததாக இல்லை. இதன் காரணமாக ஆண்கள் ஒரு மனைவியே போதும் என்று நினைக்கின்றனர். திருமணம் செய்வது மனைவியரை மகிழ்விக்கத்தான். ஆனால் அது நடக்காது என்றால் திருமணத்திற்கு அர்த்தம் இருக்காது.
”எந்த நாடுகளில் பெண்கள் ஆபாசமாக உடை அணிகிறார்களோ, ஆபாசக் காட்சிகளுக்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லையோ அந்த நாடுகளில் உள்ள ஆண்களால் ஒன்றுக்கு மேற்பட்ட பெண்களை மணந்து அவர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்க முடியாது. ஆபாசக் காட்சிகள் தாராளமாகக் கண்களில் படும் போதும், பெண்கள் அரைகுறை ஆடைகளுடன் நடமாடும் போதும் ஆண்களுக்கு அடிக்கடி கிளர்ச்சி ஏற்படுவதால் அவர்களின் ஆண்மைத் தன்மையில் குறைபாடு ஏற்படுகிறது. இவ்வாறு சம கால ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது,” – இது குமுதம் ஏட்டிலும் சில மாதங்களுக்கு முன் வெளிவந்தது.
இன்று உலகெங்கும் தனியாக குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு ஆபாசங்கள் தலைவிறித்தாடும்போது அதிலும் குறிப்பாக நமது நாட்டில் ஆபாசம் மேற்கத்திய நாடுகளைவிட படுமோசம் என்று சொல்லலாம்! அந்த அளவுக்கு டி.வி.யில் வரும் காட்சிகள் ஆபாசத்தை கொட்டுகிற சூழ்நிலையில் வசதியுள்ளவர்களும் வலுவுள்ளவர்களும் இரண்டாம் திருமணம் முடித்துக்கொள்வது தவறொன்றும் இல்லைதான்.
யாருக்கு இயல்பாகவே உண்மையாகவே இன்னொரு மனைவி அவசியம் என்ற நிலை உள்ளதோ அவர்கள் தாமாகவே அந்த முடிவை எடுத்துக் கொள்ள வேண்டியது தான். அப்படி எடுக்கும் முடிவு தவறானதும் அல்ல. அதே சமயம் மணந்து கொண்ட மனைவிகளிடம் நீதமாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பல ஆண்டுகளுக்கு முன் சமுதாயத்தின் மூத்த ஆலிம் ஒருவர் தனது ஜும்ஆ பயானில் கூறும்போது “எல்லா ஆண்களுக்கும் இரண்டு மனைவிகளை திருமணம் முடித்துக்கொள்ள ஆசைதான். இருந்தாலும் அதற்கான துணிவு அவர்களிடம் இல்லை என்பது மட்டுமின்றி நம் நாட்டிலும் அந்த பழக்கம் இல்லாத காரணத்தால் அது நடைமுறையில் அதிகமில்லை” என்றார்கள்.
எனவே இரண்டாம் திருமணத்தை ஊக்குவிப்பதில் தவறில்லை. இன்னும் சொல்லப்போனால் இன்றைய நிலையில் விதவைகள் தனியாக இருப்பது ஆபத்து என்பது மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்துக்கும் கெடுதல் எனும் மருத்துவ ஆய்வும் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்றே.
கேள்வி : பெண்களை டூவீலரில் அழைத்துச் செல்லலாமா?
பதில் : அந்நியப் பெண்களை அழைத்துச் செல்வது கூடாது என்பது தெளிவானதாகும். உங்கள் மனைவியாக அல்லது திருமணம் முடிக்க தடுக்கப்பட்ட தாய் மகள் சகோதரி போன்ற பெண்களாக இருந்தால் இரு சக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது குற்றமில்லை.
நபிகள் நாயகம் ஸல் அவர்களின் காலத்தில் இரு சக்கர வாகனம் இருந்த்தில்லை. ஆனால் அவர்கள் காலத்தில் வழக்கத்தில் இருந்த ஒட்டகம் என்ற வாகனத்தில் தமது மனைவியை பின்னால் அமர வைத்து அழைத்துச் சென்றுள்ளதற்கு ஆதாரம் உள்ளது. இது டூ வீலருக்கும் பொருந்தக் கூடியது தான்
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் கைபரிலிருந்து (மதீனாவை) நோக்கிப் புறப்பட்டோம். அபூதல்ஹா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சென்று கொண்டிருக்க, அவர்களுக்குப் பின்னால் நான் (வாகனத்தில்) அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது (நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின்) ஒட்டகம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் (அவர்களுடைய வாகனத்தில்) அவர்களின் துணைவியரில் ஒருவர் (ஸஃபிய்யா) அமர்ந்து கொண்டிருந்தார். இடறிவிழுந்தது. நான் (அந்த ஒட்டகத்தில்) பெண் இருக்கிறாரே! என்று சொன்னேன். பிறகு நான் (என் வாகனத்திலிருந்து) இறங்கியதும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இவர் உங்கள் அன்னைஎன்று சொனனார்கள். பிறகு, நான் சேணத்தைக் கட்டினேன். உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் (ஏறிக் கொண்டு) பயணம் செய்யலானார்கள்.
கேள்வி : மனைவி நன்றாக சமைக்க தெரியவில்லை என்பதற்காக அவரை அடிப்பதும் அவருடன் உறவு வைத்துக் கொள்வதை தவிர்ப்பதும் கூடுமா?
பதில் : பொருளாதாரத்தை திரட்டும் வேலை செய்யும் கணவருக்கு நல்ல உணவை சமைத்து கொடுப்பது மனைவியின் கடமை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உட்பட நபித்தோழர்களுக்கு அவர்களின் மனைவியே சமைத்து கொடுத்துள்ளார்கள். மேலும் விருந்தினருக்கு நல்ல உணவை அளித்தும் உள்ளார்கள்.
உணவு சரியாக சமைக்க தெரியாதவர்கள் பக்கத்துவீட்டு பெண்கள் மூலமாகக்கூட நல்ல உணவை சமைத்து தம் கணவருக்கு கொடுத்துள்ளார்கள்.
என்னை ஸுபைர் பின் அவ்வாம் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் (மக்காவிலிருக்கும்போதே) மணந்துகொண்டார்கள். இந்தப் பூமியில் அவருக்குத் தண்ணீர் இறைக்கும் ஓர் ஒட்டகத்தையும் அவரது குதிரையையும் தவிர வேறு எந்தச் சொத்துபத்துகளும் அடிமைகளும் உடைமைகளும் இருக்கவில்லை. அந்தக் குதிரைக்கு நான் தீனிபோடுவேன்; தண்ணீர் இறைப்பேன்; அவரது தோல் கமலையைத் தைப்பேன்; மாவு குழைப்பேன். ஆனால் எனக்கு நன்றாக ரொட்டி சுடத் தெரியாது. என் அண்டை வீட்டு அன்சாரிப் பெண்களே எனக்கு ரொட்டிசுட்டுத் தருவார்கள். அந்தப் பெண்கள் உண்மையாளர்களாயிருந்தனர். (அறிவிப்பவர்: அஸ்மா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 5224)
உணவு சரியாக சமைக்க தெரியாத பெண்கள் முயற்சி செய்து நல்ல உணவை சமைப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். அதே நேரத்தில் சமைக்க தெரியாது என்பதற்காக அவர்களை அடிப்பதற்கோ அல்லது உறவு கொள்வதை முறித்துக் கொள்வதற்கோ மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. தமக்கு கட்டுப்படாமல் விவாகரத்து ஏற்பட்டுவிடும் என்ற நிலைக்கு பிணக்குகள் ஏற்பட்டால்தான் அடிப்பது மற்றும் உறவு கொள்வதை நிறுத்துவதும் கூடும்.
சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள், பெண்களை நிர்வாகம் செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றை (கற்பை) காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று (மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்! படுக்கைகளில் அவர்களை விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ் உயர்ந்தவ னாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)
கேள்வி : பள்ளிவாசலில் நகைச்சுவையாக சிலர் பயான் செய்கிறார்கள். பள்ளிவாசலில் இப்படி சிரித்துக் கொண்டிருப்பது கூடுமா? என்று சுன்னத் வல்ஜமாஅத்தை சார்ந்தவர்கள் கேட்கிறார்கள். பள்ளிவாசலில் சிரித்து பேசலாமா?
பதில் : பள்ளிவாசலில் நகைச்சுவையாக பேசுவதற்கு எந்த தடையும் இல்லை. அவசியம் ஏற்பட்டால் பள்ளிவாசலில் நாம் நகைச் சுவையாக பேசிக் கொள்ளலாம். ஆனால் தொழுகையாளிகளுக்கு இடையூறு இல்லாதவாறு பார்த்துக் கொண்டால் தவறில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் நபித் தோழர்களும் பள்ளிவாசலில் சிரித்திருக்கிறார்கள். மேலும் நகைச்சுவை பேச்சுகளையும் பேசியுள்ளார்கள்.
முஸ்லிம்கள் திங்கட்கிழமை ஃபஜ்ர் தொழுதுகொண்டிருந்தனர். அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மக்களுக்குத் தொழுவித்துக்கொண்டிருந்தார்கள். (மரணத்தறுவாயிலிருந்த) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறையில் உள்ள திரையை விலக்கி அணிவகுத்து நிற்கும் மக்களைப் பார்த்துச் சிரித்துக்கொண்டே புன்னகைத்தவாறு திடீரென அவர்களிடம் வந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுவிக்க வரப்போகிறார்கள் என்று எண்ணி அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் திரும்பாமல் பின்புறமாக விலகலானார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கண்ட மகிழ்ச்சியினால் மக்களுக்குத் தொழுகையின் கவனம் மாறியது. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “”நீங்கள் தொழுதுமுடியுங்கள்’ என்று தமது கையால் சைகை செய்துவிட்டு அறைக்குள் நுழைந்து திரையைத் தொங்கவிட்டாக்ள். அன்றைய தினமே அவர்கள் இறந்துவிட்டார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1205)
நான் ஜாபிர் பின் சமுரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்திரிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள். (நூல்: முஸ்லிம் 5197)