நேர்மை (பிர்ரு) நற்செயல்கள்
எந்தவிதமான பற்றும் பிடிப்பும் இல்லாமல் வைக்கப்படும் நம்பிக்கையை இஸ்லாம் வெறுக்கின்றது. வெற்றுச் சடங்குகளையும் வீண் சம்பிரதாயங்களையும் இஸ்லாம் மறுக்கின்றது. செயலில் வராத நம்பிக்கையை இஸ்லாம் ஏற்றுக் கொள்வதில்லை.
(நேர்மை) – நற்செயல்கள் என்றால் என்ன என்பதை திருக்குர்ஆனின் ஒரு வசனம் தெளிவாக விளக்குகின்றது.
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல், (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல். இன்னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப்பிடித்து, முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்). இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவோரும், (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும்தான் நன்னெறியாளர்கள். இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (திருக்குர்ஆன்: 2:177)
நன்மையை செய்பவர்கள் யார்? நேர்மையானவர்கள் யார்? என்பதை திருக்குர்ஆனின் மேலே எடுத்துத் தந்துள்ள வசனம் தெளிவாக விளக்கியுள்ளது. அவன் இறை வணக்கங்கள் அனைத்தையும் நிறைவாக நிறைவேற்றிட வேண்டும். இறைவனையும், இதர சகோதரர்களையும் அவன் இறைவனின் திருப்தியையும், மகிழ்ச்சியையும் பெறுவதற்காகவே நேசித்திட வேண்டும். இங்கு நான்கு பண்புகள் கவனிக்கப்பட வேண்டும்.
1. நம்முடைய நம்பிக்கை உண்மையாகவும் நேர்மையானதாகவும் இருந்திட வேண்டும்.
2. நமது நம்பிக்கையை, தர்மங்களைத் தருவது, ஏனையோரிடம் அன்பாய் இருப்பது, இவற்றின் வழி செயலில் காட்டிட வேண்டும்.
3. நன்மையையும், நல்லனவற்றையும் செய்கின்ற இயக்கங்களுக்கும், அமைப்புக்களுக்கும் ஆதரவு தருகின்ற நல்ல குடிமக்களாக நாம் இருந்திட வேண்டும்.
4. நாம் கொண்ட கொள்கையில் எந்த சூழ்நிலையிலும் உறுதி தளராமல் துணிந்து நின்றிட வேண்டும்.
நன்மை செய்தல் என்பது உரக்கக் குரல் எடுத்துக் கத்துவதல்ல. அது ஆழமான நம்பிக்கை, தெளிவான செயல் ஆகியவைகளால் ஆனது. நன்மை செய்வதென்பது ஒரு மனிதனின் சிந்தனையுடன் செயலையும் தழுவியது. அது ஒருவனுடைய அகவாழ்வையும் புறவாழ்வையும் தழுவி நிற்பது. அவனது தனிப்பட்ட வாழ்வையும் அவன் அங்கம் வகிக்கும் சமுதாய வாழ்வையும் தழுவி நிற்பது.
இஸ்லாம் சொல்லுகின்ற நற்செயல்கள் – நன்மைகள் – நிலைநாட்டப்பட்டு விடுமேயானால் அது மனிதனுக்கு எல்லாச் சூழ்நிலைகளிலும் அமைதியைப் பெற்றுத்தரும். சமுதாயத்திற்கு எல்லா சூழ்நிலைகளிலும் பாதுகாப்பைப் பெற்றுத்தரும். நன்மையை ஏவி தீமையைத் தடுக்கின்ற இந்த மக்கள் வாழுகின்ற நாடு ஒற்றுமையின் உறைவிடமாகத் திகழும். அவர்கள் வாழுகின்ற பூமி அமைதிப் பூங்காவனமாக ஆகும். இஸ்லாம் சொல்லும் நன்மை அல்லது நேரிய செயல் என்பவை நிலைநாட்டப்படும் பொழுது மக்கள் பெறும் அமைதியும், மகிழ்ச்சியும் எத்துணை மகத்தானது! அகிலங்கள் அனைத்தையும் படைத்த இறைவன் மேல் நம்பிக்கைக் கொள்வதைவிட வாழ்வில் நம்பிக்கைத் தருவது எது?
அடிமைகளாய் அடைபட்டுக் கிடப்பவர்களை விடுதலை செய்து அவர்களின் விடுதலை தாகத்தை தணிப்பதைவிட,
சுரண்டப்படுபவர்களின் துயரங்களை துடைப்பதைவிட திக்கற்றோருக்கு உதவி செய்து அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதைவிட,
உயர்ந்ததொரு மனிதாபிமானம் இருந்திட இயலுமோ?
வாக்குறுதிகளை காத்திருந்து நிறைவேற்றல், பொறுப்புக்களை முறையாக நிறைவேற்றுதல், மனசாட்சியை மாசுபடாமல் வைத்திருத்தல், ஒற்றுமையை பேணுதல் இவற்றை விட முறையான செயல் – முறையான வாழ்க்கை வேறென்ன இருந்திட முடியும்?
இவைகள் அனைத்தையும் இறைநம்பிக்கையின் அடிப்படையிலும், இறைவனுக்காக மட்டுமின்றி, வேறு கைமாறு கருதாது செய்வதைவிட மனிதனுக்கு மகிழ்ச்சி தருவது எது?
வெளியீடு: International Islamic Federation Of Student Organizations
நூல்: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
மூல நூல் ஆசிரியர்: ஹமுத அப்த் அல் அத்தி
தமிழில்: மு. குலாம் முஹம்மத்
http://islamkural.com/home/?p=3896#more-3896
வெளியீடு: International Islamic Federation Of Student Organizations
நூல்: இஸ்லாம் உங்கள் பார்வைக்கு
மூல நூல் ஆசிரியர்: ஹமுத அப்த் அல் அத்தி
தமிழில்: மு. குலாம் முஹம்மத்