அல்லாஹ்வின் நண்பர் .
அல்லாஹ்வுக்கு நண்பரா? ஆச்சர்யமாக இருக்கிறதா! அல்லாஹ்வின் பண்புகளில் ஒன்று, அவன் தனித்தவன், அவனுக்கு இணை துணை ஒன்றுமே இல்லை. அவனுக்கு தாயும் இல்லை, தந்தையும் இல்லை, மனைவியும் இல்லை, மகனும் இல்லை, மகளும் இல்லை, எந்தவித சொந்தங்களும் இல்லை.
ஆனாலும், ஆம்! இப்ராஹீம் நபியை தனது நண்பராக அல்லாஹ் எடுத்துக் கொண்டான். இதை அல்லாஹ் திருக்குர்ஆனில் 4:125 ல் சொல்கிறான்.
‘இன்னும் அல்லாஹ் இப்ராஹீமை உற்ற நண்பராக எடுத்துக் கொண்டான்’.
ஏனென்றால், சொந்தம் என்பது வேறு, நண்பர் என்பது வேறு, என்பதை சொல்லவும் வேண்டுமா?
சுமார் 4,000 வருடங்களுக்கு முன்பு ஈராக் நாட்டில் உள்ள உர் என்ற ஊரில் இப்ராஹீம் நபி பிறந்தார்.
அவர் அன்புள்ளம் கொண்டவராகவும், இளகிய மனம் கொண்டவராகவும், கலப்பற்ற நம்பிக்கை கொண்டவராகவும் திகழ்ந்தார்.
அவர் சிறுவராக இருக்கும் பொழுதே அல்லாஹ் அவருக்கு அறிவு ஞானத்தை வழங்கி இருந்தான்.
இப்ராஹீமை அல்லாஹ் மிகவும் விரும்பினான், அதனால் அவரை தனது நண்பராக ஆக்கிக் கொண்டான்.
ஒருநாள் அவர் உண்மை இறைவனை தெரிந்து கொள்ள விரும்பினார்.
இரவில் மின்னும் ஒரு நட்சத்திரத்தை கண்ட போது, ‘இது எனது இறைவன்’ என்றார். பகலில் அது மறைந்த போது, ‘மறையக் கூடியதை நான் விரும்ப வில்லை’ என்று கூறினார்.
அடுத்து, அவர் ஒளிரும், பளபளக்கும், வெள்ளியால் செய்யப்பட்டதைப் போன்ற சந்திரனைக் கண்டார். ‘இது எனது இறைவன்’ என்று சந்தோசமாகக் கூறினார். அது மறைந்த போது, ‘நான் மறையக் கூடியதை விரும்ப மாட்டேன்’ என்றார்.
பின்னர் சூரியன் உதயமாவதைக் கண்டார், ‘இது எனது இறைவன், இது எல்லாவற்றிலும் பெரியது’ என்று கூறினார். அதுவும் மறைந்த போது, ‘எனது சமூகத்தாரே! நீங்கள் இணை வைத்து வணங்கும் எல்லாவற்றையும் விட்டு விலகி விட்டேன்’ என்று கூறினார். இவை அத்தனையும் வணங்கத் தகுதி அற்றவை என்று அவருக்கு விளங்கியது.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் காலத்தில் மக்கள் கற்களையும் சிலைகளையும் வணங்கினார்கள். சிறுபிள்ளையாக இருக்கும் போதே ஏன் இவ்வாறு செய்கிறார்கள் என்று வியந்தார்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தந்தை ஆஜர் கூட சிலை வணக்கத்தை நம்புவராக இருந்தார். இப்ராஹீம் தனது தந்தையிடம், ‘ஏன் நீங்கள் ஏதும் பேசாத பொருட்களை வணங்குகிறீர்கள்?’ என்று கேட்ட போது, ஆஜர் மிகவும் கோபப்பட்டார்.
ஒருநாள் ஆஜரும், அந்த ஊர் மக்களும் ஊரில் இல்லாத போது, அவ்வூர் கோவிலிலுள்ள பெரிய சிலையை தவிர, மற்ற சிலைகளை எல்லாம் இப்ராஹீம் தனது கோடரியால் உடைத்தார்.
உடைக்கப்பட்ட சிலைகளை மக்கள் கண்ட போது, ‘இதை யார் செய்தது’ என்று இப்ராஹீமிடம் கேட்டார்கள். ‘அந்த பெரிய சிலையிடம் கேளுங்கள்’ என்று அமைதியாக பதில் கூறினார். ‘பேசாத, நடக்காத, எதையும் புரிந்து கொள்ள முடியாத இவைகளை நீங்கள் ஏன் வணங்குகிறீர்கள்?’ என்று இப்ராஹீம் கேட்ட போது, எதுவும் பேசாமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்து விட்டனர். ஆனாலும் அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். அவரை கொல்ல முயன்றார்கள்.
அவர்களின் கடவுள்களை அவமதித்து விட்டதால், அவரை உயிருடன் எரிக்க வேண்டும் என்று முடிவு செய்தார்கள். அவர்கள் நெருப்புக் குண்டத்தை மூட்டினார்கள். ‘இப்ராஹீம் தொலைந்தார், அவரை நெருப்பில் போடுங்கள்’ என்று கூடியிருந்தவர்கள் கத்தினர்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்ககளை நெருப்பில் இட்டு பொசுக்குவது தான் அவர்களின் ஆன்மாவை சுத்தப்படுத்தும் என்றும் தீங்கிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும் என்றும் அவர்கள் நினைத்தார்கள்.
நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கண் முன்னே பெரும் நெருப்பு மூட்டப்பட்டது. அது கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது. ஆனால் நபி இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் முகத்தில் எந்த வித அச்ச உணர்வும் தென்பட வில்லை. ஏனெனில் அவர் அல்லாஹ்வை நம்பியவர். இந்த மனிதர்கள் செய்வது மிகப்பெரும் தவறு என்பதை நன்கு அறிந்திருந்தார்.
நெருப்பு நன்கு கொளுந்து விட்டு எரியும் போது, அவர்கள் இப்ராஹீமை பிடித்து அந்த நெருப்பில் எரிந்தார்கள். ஆனால் அல்லாஹ் அவரோடு இருந்தான். அல்லாஹ் அந்த நெருப்புக்கு, ‘நெருப்பே! இப்ராஹீமுக்கு குளிர்ச்சியை கொடு, அமைதியைக் கொடு’ என்று கட்டளையிட்டான்.
அதிசயம் நிகழ்ந்தது. நெருப்பு அவரை சுடுவதற்கு பதிலாக, குளிர்ச்சியாகவும், பாதுகாப்பான இடமாகவும் மாறியது.
அதனைப் பார்த்தவர்கள் அவர்களது கண்களையே நம்ப முடியவில்லை. பயத்தினால் அவர்களால் பேச முடியாமலும் அசையாமலும் சிலையைப் போல நின்றார்கள்.
அல்லாஹ்வை உறுதியாக நம்புவது மட்டும் தான் ஒரு முஃமினை இவ்வுலகிலும் மறுவுலகிலும் காப்பாற்றும் என்பது இதன் மூலம் நமக்குக் கிடைக்கும் படிப்பினையாகும்.
தொகுப்பு: நெய்னா முஹம்மது