அல்லாஹ்வை நோக்கிய பயணம்
”…அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வியாபாரப் பொருள் மிகப் பெறுமதி வாய்ந்தது! அல்லாஹ்வின் வியாபாரப் பொருள் சுவர்க்கமாகும்.” (ஸுனன் திர்மிதி)
மனிதன் இச் சட உலகில் வாழ்பவனே. எனினும் அதனை அவன் கடந்தவன். அவன் இரு பரிமாணங்கள் கொண்டவன். பௌதீக, சடத்துவ விதிகளால் மட்டும் அவனை ஆள முடியாது. மனிதன் பற்றிய இப் புரிதலின் அடிப்படையில் மனித வாழ்வுக்கு ஓர் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொடுக்கிறது
இஸ்லாம். சட உலக வாழ்வின் உள்ளே புகுந்து தன் ஆன்மீகப் பரிமாணத்தைக் காக்கப் போராடி அதனால் உயர்ந்து இப் பிரபஞ்சத்தை ஆளும் மாபெரும் அறிவும், ஆற்றலும் கொண்ட அந்த இறைவனின் திருப்தியைப் பெற வேண்டும் என்பதுவே அந்த அர்த்தமாகும்.
‘மனிதனே உனது இறைவனை நோக்கியே நீ கடுமையாகப் போராடி வருகிறாய். அவனை நீ சந்திப்பாய்’ (ஸுரா இன்ஷிகாக் – 6)
இக்கருத்தை அல்குர்ஆன் கீழ்வருமாறு கூறுகிறது:
‘நீங்கள் அல்லாஹ்விடத்தில் விரையுங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கான தெளிவான எச்சரிக்கையாளனாவேன்.’ (தாரியாத் – 50)
இறை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விளக்குகிறார்கள்:
‘பயந்தவர் அதிகாலையிலேயே புறப்படுவார். அதிகாலையில் புறப்பட்டவர் தங்குமிடத்தை அடைந்து கொள்வார். அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் வியாபாரப் பொருள் மிகப் பெறுமதி வாய்ந்தது! அல்லாஹ்வின் வியாபாரப் பொருள் சுவர்க்கமாகும்.’ (ஸுனன் திர்மிதி)
வாழ்க்கை ஒரு போராட்டம். கஷ்டங்களும், துன்பங்களும் நிறைந்தது. இப்படித்தான் அல்லாஹ் இவ்வுலக வாழ்வை அமைத் துள்ளான். இப்போராட்டத்தில் புகுந்து, கலந்து, விழுந்து, எழுந்துதான் மனிதன் தன்னை, தன் ஆளுமையை, ஆன்மாவை வளர்த்துக் கொள்ள வேண்டும். அத்தொழிற் பாட்டின் இலக்கு, அடிப்படை இறைவனைக் காணலாகும். அவ்விலக்கு நோக்கிய பயணத்தையே மேற்குறிப்பிட்ட வசனங்களில் அல்லாஹ்வும் அவன் தூதர்(ஸல்) அவர்களும் பயணம் என வர்ணித்துள்ளனர். அது பௌதீகப் பயணமன்று. ஆன்மீக, மானசீகப் பயணம். மனித மனோநிலை படிப்படியாகப் பல்வேறு கட்டங்களைத் தாண்டிச் செல்லல், பல வளர்ச்சிக் கட்டங்களை காணல் என்பதை அது குறிக்கிறது.
இக்கருத்தை இஸ்லாமிய ஆன்மீக ஆய்வாளர்கள் ‘ஹால்’ எனக் குறிப்பர். அதாவது ஒரு முஸ்லிம் இஸ்லாமியப் போதனைகளைப் பொறுத்தவரையில் மூன்று செயற்பாடுகளைக் கொண்டவனாகிறான். ‘இல்ம்’-கற்றல், ‘அமல்’- செயற்படல், ‘ஹால்’- உள வாழ்வு நிலை என்பவையே அவையாகும். ஒரு முஸ்லிம் இஸ்லாத்தைக் கற்கிறான். அதனை நடைமுறைப் படுத்துகிறான். அத்தோடு அவன் குறிப்பிட்ட மனநிலைக்கும் வருகிறான். அவனது உள்ளம் வளர்கிறது. ஆன்மா உயர்கிறது. பல்வேறு கட்டங்களை, தரங்களை அது அடைகிறது.
இந்த மனநிலையே செயல்களுக்கு அர்த்தம் கொடுக்கிறது. உண்மை முஸ்லிம், போலி முஸ்லிம், பலவீன முஸ்லிம், நயவஞ்சகன் என்ற நிலைகளைத் தெளிவுபடுத்துகிறது.
இஸ்லாமிய மனநிலை, குப்ர் மனநிலை எனக் குறிப்பதுவும் இப்பின்னணியைக் கொண்டதே. மனநிலையே அடிப்படை. அதன் விளைவாகவே செயல்கள் உருவாகின்றன. மன சம்பந்தமற்று இயந்திர ரீதியாகவும் மனிதன் தொழிற்படுவதுண்டு. அதற்கு பழக்கப்பட்டுப் போதல், பாரம்பரிய, சடங்கு, சம்பிரதாய நிலைகள் காரணமாக இருக்க முடியும்.
ஆன்மீக ரீதியாக உயரவும், மனநிலைகளை ஆக்கும் நோக்கிலும்தான் இஸ்லாம் குறிப்பாக வணக்க வழிபாடுகள் சிலவற்றை இஸ்லாத்தின் அடிப்படையாக ஆக்கியுள்ளது. இன்னும் பல்வேறு வணக்கங்களை ஸுன்னாவாகவும் ஆக்கியுள்ளது. அந்த வணக்க வழிபாடுகளின் தாக்கத்தால் பௌதீக உலக வாழ்வில் அள்ளுண்டு மனித மனநிலை விட்டு அப்புறப்படுத்தப்படாமல் மனிதன் காக்கப் படுகின்றான். பௌதீக வாழ்வின் போதும் தன் நடத்தைகளை சீர்படுத்தி, நெறிபிறழாது வாழ்ந்து, தன் ஆளுமையை வளர்த்து, ஆன்மீக மனநிலைகளில் உயர்வதுவும் இத்தகைய வணக்க வழிபாடுகளின் தாக்கத்தினாலேயே ஆகும். இத்தகைய ஆன்மீக மனநிலைகளின் படித்தரங்களை இஸ்லாமிய ஆய்வாளர்கள் எவ்வாறு விளக்கியுள்ளார்கள் என்பதைக் கீழே ஓரளவு விளக்குவது இக் கருத்தை மேலும் தெளிவாக விளங்க உதவியாக அமையும்.
இமாம் இப்னுல் கையிம் தமது ‘மதாரிஜ் அஸ்ஸாலிகீன்’ என்ற நூலில் இந்த இஸ்லாமிய ஆளுமைக்கான மனநிலைகளை 66 படித்தரங்களாக வகுத்து விளக்கியுள்ளார். ஷெய்க் முஹம்மத் அல் கஸ்ஸாலி அதனை ஒன்பது படித்தரங்களாக வகுத்து ‘அல் ஜானிப் அல் ஆதிபி’ என்ற தமது நூலில் விளக்குகிறார். அதனை சிறிய விளக்கத்தோடு கீழே தருகிறோம்.
(1) தவ்பா :
இது இஸ்லாமிய ஆளுமை உருவாக்கத்தின் அடிப்படை, முதற் படித்தரம். அல்லாஹ்வை நோக்கி மீளுதல் என்பது இதன் பொருள். அதாவது ஜாஹிலிய்யத் வாழ்வில் இறைவனை விட்டுத் தூரச் சென்ற ஒருவர், அந்த வாழ்விலிருந்து முற்றாக நீங்கி இறைவனை நோக்கி மிகுந்த உறுதியுடன் முதலடியை எடுத்து வைத்தலை இது குறிக்கிறது.
மீண்டும் ஜாஹிலிய்யத் வாழ்வில் வீழ்ந்து விடாதிருக்க சிறு சிறு பிறழல்களின் போதும் தவ்பாவை மேற்கொள்ளும் போக்கு இத்தகையவரிடம் இருக்கும்.
இப்போது பாவமும், தவறுகளும் இவனின் வாழ்வின் விதிவிலக்கான நிகழ்வாகவே இருக்கும். இறைவனை நோக்கி வந்து விட்ட இந்தப் புதிய வாழ்வை இப்போது இம் மனிதன் மிகுந்த அவதானத்துடன் தவ்பா மனப் பாங்குடன் தொடர்வான்.
(2) பேணுதல் :
தீமையிலிருந்து விலக அதனை நெருங்காதிருப்பதுவும் அவசி யமானதாகும். ஹராத்திற்கு அருகாமையில் நடமாடுவது ஹராத்தில் போய் விழக் காரணமாக அமையும். எனவே தீமைக்கு இட்டுச் செல்வதையும் தவிர்ந்து கொள்வது அவசியமாகும்.
தீமையில் வீழ்ந்து விடாதிருக்க சில போது அனுமதிக்கப்பட்ட காரியங்களையும் விடவேண்டி வரலாம். இவ்வாறு தீமைக்கும் தனக்குமிடையே ஒரு தூரத்தை ஏற்படுத்தி வாழும் மனோ நிலையை இது குறிக்கிறது.
இப்படி தீமைகள் பற்றிய மிகுந்த எச்சரிக்கையுடனான வாழ்வு நிலை இறைவனை நோக்கிய பயணத்தின் இரண்டாவது கட்டமாகும்.
(3) திருப்தியும், பற்றற்ற மனோநிலையும் :
உலகப் பொருட்கள் மீது பற்றற்று, தனக்குக் கிடைக்கும் வசதிகளோடு திருப்தியுற்று வாழலே இதன் பொருளாகும்.
பொருட்கள் மீதான பற்றும், ஆடம்பர வாழ்வின் மீதான ஆசையும் அவற்றைத் தேடலுக்கான பாரிய உழைப்பை வேண்டி நிற்கும். இந்த அளவுமீறிய உழைப்பு மனித சக்தியை பாரியளவு உறிஞ்சி விடும். உலகம் சார் வாழ்வு முதன்மைப்பட்டு பொருளை சுற்றி ஓடும் வாழ்வு நிலையாக அது மாறிவிடும்.
அவ்வாறன்றி தன் உழைப்பின் வருமானம், சுயதேவைப் பூர்த்தி என்பவற்றில் திருப்தியுற்று உலக செல்வங்களை வாழ்வுக்கான சாதனங் களாக மட்டும் கண்டு பற்றற்று வாழும் மனநிலையே இங்கு கருதப்படுகிறது.
(4) பொறுமை :
மனித வாழ்வு கஷ்டங்களும், துன்பங்களும், வேதனைகளும் நிறைந்தது. வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் பல வித்தியாசமான சிரமங்களையும், தடை களையும், கஷ்டங்களையும் அவன் எதிர் கொள்ள வேண்டி வருகிறது. நோய், நஷ்டம், தோல்வி, மரணம் என்பவை எல்லாம் அவனை வீழ்த்த முயலும் பயங்கரத் துன்பங்கள்.
இவை அனைத்தும் இறைவன் உலக வாழ்வுக்கென வகுத்துள்ள தவிர்க்க முடியா விதிகள் என்ற உண்மையை உணர்ந்து, மிகுந்த சகிப்புத் தன்மையுடனும், நிலைகுலையா மனதுடனும், நெறிவழுவா ஒழுக்க உணர்வுடனும் இறுதி வரையும் போராடி வாழும் உளநிலையையே பொறுமை என் கிறோம். இது முஸ்லிம் ஆளுமையின் ஒரு பிரதான பண்பு. இப் பண்பை தன்னில் ஆக்கிக் கொள்ளலே இங்கு கருதப்படுகிறது.
(5) நன்றி :
தன்னைப் படைத்த இறைவனுக்கு நன்றி செலுத்தும் மனப்பாங்குடன் இருத்தலையே இது குறிக்கிறது. துன்பங்களையும், கஷ்டங்களையும் சகித்துக் கொள்வது மட்டுமல்ல. இவ்வுலகில் பல இன்பங்களையும் நான் அனுபவிக்கிறேன். என்னை அல்லாஹ் நிரந்தரமான இன்பத்தில் வாழப் படைத்துள்ளான். அம்மாபெரும் அருளுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளமை மிகத் தெளிவு. வணக்கவழிபாடுகள் அவற்றின் ஆழ்ந்த கருத்தில் இவ்வுண்மையையே குறிக்கும்.
(6) பய உணர்வு :
அல்லாஹ்வைப் பற்றிய அறிவே இவ்வுணர்வைத் தருகிறது. பிரபஞ்சத்தை படைத்தாளும் அப்பெரும் படைப்பாளனுக்கு பயப்படாதிருக்க முடியுமா? அவனை நெருங்க நெருங்க கண்ணிய உணர்வும், பயமும் அதிகரிக்குமென்பதில் சந்தேகமில்லை. தனக்கு மேலால் தன்னை அவதானிக்கும் சகல ஆற்றலும் நிறைந்த இறைவன் உள்ளான் என்ற மனம் நிறைந்த உணர்வுடன் வாழும் மனநிலையே இங்கு தரப்படுகிறது.
(7) எதிர்பார்ப்பு வைத்தல் :
இறைவன் கருணையும், இரக்கமும் கொண்டவன். அக்கருணையும், இரக்கமும் மிக விரிந்தது. மிகப் பாரியது. எனவே மன்னிப்பும், சுவன வாழ்வும் தருவான் என்ற எதிர்பார்ப்பு, மனோநிலை ஒரு முஸ்லிமிடம் இருக்கும். பயத்திற்கும், இந்த எதிர்பார்ப்பு மனோநிலைக்கு மிடையில்தான் ஒரு முஸ்லிமின் வாழ்வு அமைந்திருக்கும்.
(8) பொறுப்புச் சாட்டல் :
அல்லாஹ் பௌதீக வாழ்வியக்கத்திற்கு சில விதிகளை ஆக்கியுள்ளான். மனிதனும், பொருட்களும் அந்த அந்த எல்லைகள், வரையறை களினுள்ளேயே வாழ வேண்டும். அப்பௌதீக விதிகள் மாறாதவை, மீறமுடியாதவை.
அந்த விதிகளின் இத்தன்மையில் அவற்றுடனேயே நின்று விடும் நிலையில் மனிதர்களில் நிறையப் பேர் உள்ளனர். அவர்களால் இவ்விதிகளுக்கப்பால் பார்க்க முடிவதில்லை.
ஆனால் ஒரு முஸ்லிம் இந்த விதிகளை வணங்குவதில்லை. அவற்றை மட்டுமே எப்போதும் பார்த்து முடிவுகளுக்கு வருவ துமில்லை.அந்த விதிகளை ஆக்கிய அல்லாஹ்வுடன் அவன் தொடர்பு வைப்பான்.தன் காரியங்கள் நிறைவேற அல்லாஹ்வையே அவன் நோக்குவான். இப்படி ஒரு தவக்குல் – பொறுப்புச்சாட்டல் மனநிலை அவனிடம் காணப்படும்.
(9) அன்பு :
பாராட்டத்தக்க, செய்தற்கரிய காரியங்கள் சாதிக்கப்படும் போது மனிதன் பிரமிப்புக்கும், ஆச்சரியத்திற்கும் உட்படுவான். அக்காரியங்களை சாதித்தவன் மீது பற்றுக் கொள்வதும், அன்பு வைப்பதுவும் மனித இயல்பு. இம் மாபெரும் பிரபஞ்சத்தைப் படைத்து ஆள்கின்றமை கற்பனைக்கு எட்டா மிகப் பெரும் சாதனை. அச்சாதனை படைத்தோனை எண்ணும் போது பயமும், கண்ணிய உணர்வும் தோன்றுவது போன்றே ஒரு வகை அன்புணர்வும் தோன்றும்.
முஸ்லிம் மனோநிலையின் ஓரம்சம் இது. அல்லாஹ்வோடு இத்தகைய நெருக்கம் ஏற்படவும் இடமுண்டு.
இவையே இஸ்லாமிய அறிஞர்கள் விளக்கும் அல்லாஹ்வை நோக்கிய பயணத்தின் கட்டங்கள். முஸ்லிம் இவ்வுலகில் போராடுகையில் இத்தகைய மனநிலைகளை உருவாக்கிக் கொள்கிறான். இங்கு இரு விடயங்களைக் கவனத்திற் கொள்ள வேண்டும்.
(1) தவ்பா, திருப்தி, பொறுமை, நன்றியுணர்வு போன்றவை எல்லாம் இடைக்கிடை வந்து மறையும் நிலையற்ற உணர்வுகளல்ல. அவை நிலைத்து விட்ட மனப்பண்புகள். முஸ்லிம் ஆளுமை உருவாக்கத்தின் அடித்தளங்கள் அவை. எல்லா முஸ்லிம்களிடத்திலும் இவை வந்து செல்லும் மனநிலைகளாகவோ, அல்லது ஆழமற்ற மேற்போக்கான மனநிலைகளாகவோ இருக்க முடியும். அது இங்கே குறிக்கப்படவில்லை.
(2) இவை கூறப்பட்டிருக்கும் அதே படி முறையில்தான் செல்லும் என்றில்லை. அவை மாறமுடியும். ஒரு படி முறையை விட்டுவிட்டு இன்னொரு படிமுறைக்குச் செல்கிறது என்றுமில்லை. முன்னர் பெற்ற அந்த மனவளர்ச்சியுடனேயே அடுத்த தரத்திற்கும் செல்கிறது என்பதுவே உண்மை அர்த்தமாகும்.
இத்தகைய மனவளர்ச்சி காண்பதே இஸ்லாமிய வாழ்வின் உண்மைப் பொருள். உலக வாழ்வு என்ற இந்தப் போராட்டத்தில் இத்தகைய மனநிலைகளை எய்தவேண்டு மென்றே மனிதன் விடப்பட்டுள்ளான்.
இஸ்லாமிய சட்ட ஒழுங்கு இப்பின்னணியைக் கொண்டே அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வணக்க வழிபாடுகள் இத்தகைய மன வளர்ச்சியை ஆரம்பிக்கவும் வாழ்வுப் போராட்டத்தில் மனிதனைத் தீமையிலிருந்து காத்து தொடர்ந்து அவனை இப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கிலும் வகுக்கப் பட்டுள்ளன.
ஆன்மீகப் பயிற்சி என்பதன் இலக்கு இதுவேயாகும். மேலே விளக்கப்பட்ட தவ்பா, பேணுதல், பொறுமை, நன்றியுணர்வு போன்ற மனநிலைகளை அடையத் தூண்டுவதும் அதற்கு உதவியாக இருத்தலுமே அவற்றின் நோக்கம்.
வணக்க வழிபாடுகள் இறைபயம், தவக்குல், நன்றியுணர்வு, பொறுமை போன்ற மன நிலைகளை ஏற்படுத்த உதவவில்லையாயின் அவற்றிற்கு என்ன பொருளிருக்க முடியும்? வெறும் இயந்திரத்தனமான சடங்கு, சம்பிரதாயமாக மட்டுமே அவை அப்போது அமைந்து விடும்.
முதற் கட்டம்
இமாம் இப்னுல் கையிம் தமது ‘மதாரிஜ் அஸ்ஸாலிகீன்’ என்ற நூலில் இப்பயணத்தின் முதற் கட்டமாக ‘ஷஷயகளா’ – உள விழிப்பு நிலையைக் குறிப்பிடுகிறார். கலாநிதி மஜ்தி ஹிலாலி இக் கருத்தை’ஷஷமுதலில் ஈமான் அதனை எப்படி ஆரம்பிக்கலாம்’ என்ற தலைப்பில் தனி ஒரு நூலாக எழுதியுள்ளார். இங்கு நாம் குறிப்பாக இரண்டாவது நூலின் உதவியுடன் ஆனால் தனியான ஒரு பாணியில் இக் கருத்தை விளக்குகிறோம்.
முஸ்லிம்கள் அனைவரும் இறையருளால் ஈமான் கொண்டோரே. எனினும் அந்த ஈமான் பெரும்பாலானோரின் உள்ளங்களில் உறக்க நிலையிலேயே இருப்பதுண்டு. ஆசாபாசங் களிலும், இச்சைகளிலும் மூழ்கி அன்றாட வாழ்வு நெரிசலில் சிக்குண்டு உழன்று வாழ்வின் பொருள் அர்த்தம் பற்றிய கவலை, அக்கறையின்றி வாழ்வோரே அதிகம். அல்குர்ஆன் கூறும் கீழ்வரும் நிராகரிப்பாளர்கள் பற்றிய பண்புகள் இவர்களையும் ஓரளவு பீடித்துள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.
‘அதிகமதிகம் பொருள் தேடும் ஆசை உங்களைப் பராக்காக்கி விட்டது’ (ஸுரா தகாஸுர் – 01)
‘அவர்களுக்கு முன்னாலும், பின்னாலும் சுவரெழுப்பி அவர்களை நாம் மூடி விட்டுள்ளோம். அவர்கள் பார்க்க மாட்டார்கள்’ (ஸுரா யாஸீன் – 09)
‘அவர்களுக்கு உள்ளங்கள் இருக்கின்றன. சிந்திக்கமாட்டார்கள். கண்கள் உள்ளன. பார்க்கமாட்டார்கள். காதுகள் உள்ளன. கேட்கமாட்டார்கள்…’ (ஸுரா அஃராப் – 179)
தொழுகையும் ஏனைய வணக்க வழி பாடுகளும் காணப்பட்டாலும் அவை வெறும் இயந்திரத் தன்மை கொண்டதாக இருக்கும். உயிரிருக்காது உணர்விருக்காது. குறிப்பிட்ட சந்தர்ப்பங்களின் போது மட்டும் ஈமான் சில வேளை இத்தகையோரிடம் விழிப்புறுவதுண்டு. தனக்கு ஏற்படும் பெருத்த அபாயம், வீட்டில் நிகழும் மரணம், ஹஜ்ஜின் போது, நோன்பின் போதான சில சந்தர்ப்பங்கள் என்பவற்றை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம். அந்த விழிப்பு கொஞ்ச நேரம், அல்லது சில நாட்களுக்கே நிலைக்கும். பின்னர் பழைய உறக்க நிலைக்கு மீண்டு விடும். நாம் இங்கு விளக்கும் கருத்தைப் புரிந்து கொள்ள கீழ்வரும் இறை வசனங்களை அவதானிப்போம்.
‘இறை பயமுள்ளோர் அவர்களை ஷைத்தான் தீண்டினால் உடனேயே உணர்வு பெறுவார்கள், அப்போது அவர்களது பார்வை தெளிவாகும்.’ (ஸுரா அஃராப் – 201)
‘அவர்கள் ஒரு மானக்கேடான பாவத்தைச் செய்து விட்டால், அல்லது தமக்குத் தாமே அநியாயம் செய்து கொண்டால் அல்லாஹ்வை நினைவு கொள்வார்கள். தம் பாவங்களுக்கு மன்னிப்புக் கோருவார்கள்’ (ஸுரா ஆல இம்ரான் – 135)
source: http://www.usthazmansoor.com/